சமணம் எனத் தமிழகத்தில் பரவலாக அறியப்படும் சைனமதம் ஒரு பண்டைய இந்திய மதமாகும். அகிம்சை (உயிர்க்குறுகண் செய்யாமை), அநேகாந்தவாதம் (பல்முனைக் கொள்கை) மற்றும் அபரிக்கிரகம் (பற்றின்மை) ஆகிய மூன்றும் சமணத்தின் முக்கிய தூண்களாகும். துறவு என்பது இம்மதத்தின் முக்கிய கொள்கையாகும்.
சமணர்கள் ஐந்து முக்கிய உறுதிமொழிகளை எடுக்கின்றனர். அவையாவன: அகிம்சை (உயிர்க்குறுகண் செய்யாமை), சத்தியம் (உண்மை), அசுதேயம் (கள்ளாமை), பிரம்மச்சரியம் (பாலியல் இச்சை அடக்கல்) மற்றும் அபரிக்கிரகம் (பற்றின்மை) என்பனவாகும். இக் கொள்கைகள் சமணப் பண்பாட்டைச் செதுக்குவதில் பெரும்பங்காற்றியுள்ளன. எடுத்துக்காட்டாக, சமணர்கள் பெரும்பாலும் மரக்கறியுணவு உண்போராக உள்ளனர். பரசுபரோபகாரோ சீவானாம் (ஒருவருக்கொருவர் உதவி புரிவதே உயிர்களின் கடமை) என்பது இச் சமயத்தின் குறிக்கோளாகும். இச் சமயத்தின் மிகப்பொதுவான மற்றும் அடிப்படையான வழிபாடு நமோகார மந்திரமாகும்.
சமணத்தின் அகநிலை சார்ந்த எண்ணங்களும் அதன் வரலாறும், தீர்த்தங்கரர்கள் என அழைக்கப்படும், வழி வழியாக வந்த இருபத்து நான்கு தலைவர்களை அடியொற்றி உருவானதாகும். தற்போதைய காலச் சுழற்சியின் முதல் தீர்த்தங்கரர் ரிசபதேவர் ஆவார். சமண நம்பிக்கைகளின் படி, இவர் மில்லியன்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்துள்ளார். இருபத்து மூன்றாம் தீர்த்தங்கரர் பார்சுவநாதர் ஆவார். வரலாற்றாய்வாளர்களின் கூற்றுப்படி, இவர் பொ.ஊ.மு. 9ம் நூற்றாண்டில் வாழ்ந்துள்ளார். இருபத்து நான்காவது தீர்த்தங்கரரான மகாவீரர் பொ.ஊ.மு. 600 அளவில் வாழ்ந்துள்ளார். சமண மதம் என்றுமுள்ள மதமாகக் கருதப்படுகிறது. அண்டத்தின் ஒவ்வொரு காலச் சுழற்சியின்போதும் தீர்த்தங்கரர்கள் வந்து உலகை வழிப்படுத்துவர்.
சமணம், தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் உலகின் பழைமையான மதங்களில் ஒன்றாகும். திகம்பரர் மற்றும் சுவேதாம்பரர் என்போர் இம் மதத்தின் இரு முக்கிய பிரிவினராகும். துறவு வழிமுறைகள், பால்நிலை மற்றும் புனித நூல்கள் போன்றவை பற்றி இரு பிரிவுகளும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளன. இவ்விரு பிரிவுகளிலும் துறவிகள் உள்ளனர். துறவிகள், இல்லறத்தோரால் (சிராவகன் மற்றும் சிராவிகை) பேணப்படுகின்றனர். சுவேதாம்பரப் பிரிவில் மேலும் மூன்று துணைப்பிரிவுகள் உண்டு. அவையாவன: மந்திர்வாசி, தேராபந்தி மற்றும் இசுத்தானகவாசி என்பனவாகும். இம் மதத்தைப் பின்பற்றுவோர் சமணர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களின் மக்கள் தொகை நான்கிலிருந்து ஐந்து மில்லியன் வரை உள்ளதோடு, இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவில் வாழ்கின்றனர். இந்தியாவுக்கு வெளியில், கனடா, ஐரோப்பா மற்றும் ஐக்கிய அமெரிக்காவிலும் குறிப்பிடத்தக்களவு சமணர்கள் வாழ்கின்றனர். சப்பானில் இம்மதத்துக்கு மாறுவோர் தொகை உயர்ந்து வருகிறது. பர்யுசனா மற்றும் தாசு லட்சணா, அட்டனிகா, மகாவீர் சென்ம கல்யாணக், அட்சய திருதியை மற்றும் தீபாவளி என்பன சமணர்களின் முக்கிய விழாக்களாகும்.
மகாவீரர் என்பவர் சமண சமயத்தின் மையக் கருத்துக்களை பரப்பிய வர்த்தமானர் என்றும் அறியப்படும் இந்திய துறவியாவார். சமண மத மரபு வரலாற்றில் அவர் 24ஆவதாகவும் கடைசியாகவும் தோன்றிய தீர்த்தங்கரர் ஆவார். பீகார் மாநிலத்தில் சமுயி மாவட்டத்தில் இருந்த லச்சுவார் என்ற முன்னாள் அரசாட்சியின் "சத்திரியகுண்டா" என்ற இடத்தில் மகாவீரர் சித்தார்த்தன் என்னும் அரசனுக்கும் திரிசாலா என்ற அரசிக்கும் இந்திய நாட்காட்டியில் சைத்ர மாதம் வளர்பிறை பதின்மூன்றாம் நாள் (கிரெகொரியின் நாட்காட்டியில்ஏப்ரல் 12) அன்று பிறந்தார். உலகெங்கும் உள்ள சமணர்கள் அவரது பிறந்தநாளை மகாவீரர் செயந்தி எனக் கொண்டாடுகின்றனர். 12 ஆண்டுகள் ஆன்மீகத் தேடலுக்குப் பின்னர் சமண சமயத்திற்கு புத்துயிர் ஊட்டி இந்தியாவெங்கும் பரப்பினார்.
ஆச்சாரியர் குந்தகுந்தர், சமணத்தின் பிரிவான திகம்பரத் துறவியும், ஆச்சாரியரும் மற்றும் மெய்யியல் அறிஞரும் ஆவார். இவர் சமயச்சாரம், நியாயசாரம், பஞ்சசுதிதிகாயசாரம், பிரவசனசாரம் போன்ற சமண சமயத் தத்துவ நூல்களை இயற்றியவர். இவர் ஆந்திரப்பிரதேசத்தின் கொண்டகுந்தா கிராமத்தில் பிறந்தவராக கருதப்படுகிறார்.
தத்துவார்த்த சூத்திரம், திகம்பரர்கள் மற்றும் சுவேதாம்பரர்களால் தமது நூல்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் சுவேதாம்பரர்கள் இதனை ஒழுங்குமுறைப்பட்ட நூலாக வகைப்படுத்துவதில்லை.
உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளில் மூன்று வரிகளுக்கும் மேல் குறுங்கட்டுரைகளாகவாவது இயன்றவரை உருவாக்கலாம். தக்க ஆதாரங்களை இணைத்து சிறப்பான கட்டுரையாக்குதல் மேலும் சிறப்பு.
விக்கித் திட்டம் சமணத்தில் பங்களிப்பாளர்களுக்கு வழிகாட்டுதலையும், சிறப்பான செயல்பாடுகளுக்காக பயனர்களுக்கு பதக்கங்கள் கொடுத்து ஊக்கத்தினையும் செய்யலாம்.