உள்ளடக்கத்துக்குச் செல்

பரதச் சக்கரவர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரதச் சக்கரவர்த்தி
பரதச் சக்கரவர்த்தி
சந்திரகிரிக் குன்று, சிரவணபெளகோளாவிலுள்ள துறவிக் கோலத்திலுள்ள பரதரின் சிலை
அதிபதிமுதலாவது சக்கரவர்த்தி (அகிலத்தின் ஆட்சியாளர்)
சகோதரன்/சகோதரிபாகுபலி மற்றும் 98 ஆண் உடன்பிறப்புக்கள்
குழந்தைகள்மரீச்சி, அர்க்ககீர்த்தி

பரதர் என்பவர் சமண மரபின் படி தற்போதைய அவசர்ப்பிணியின் (சமண அண்டவியலின் படி தற்போதைய அரைக் காலச் சுழற்சி) முதற் சக்கரவர்த்தியாக (அகிலத்தின் பேரரசர் அல்லது சக்கரத்தின் உடைமையாளர்) ஆவார். இவர், சமண மதத்தின் முதற் தீர்த்தங்கரரான ரிசபநாதரின் மூத்த மகனாவார். இவரின் பெயரை அடியாகக் கொண்டே இந்தியாவின் பண்டைய பெயர் "பாரதவர்ச" அல்லது "பாரத" அல்லது "பாரத-பூமி" என அழைக்கப்படுகிறது. இவரது முதன்மை அரசியான சுபத்திரை மூலமாக அர்க்ககீர்த்தி மற்றும் மரீசி ஆகிய இரு மகன்கள் இவருக்குண்டு. இவர் உலகின் ஆறு திசைகளையும் வெற்றி கொண்டதாகவும், எஞ்சியிருந்த இறுதி நகரைக் கைப்பற்றுவதற்காகத் தனது உடன்பிறந்தவரான பாகுபலியுடன் போரிட்டதாகவும் கூறப்படுகிறது.

சமண மதத்தின் திகம்பரப் பிரிவின் படி, இவரது இறுதிக்காலத்தில் இவர் உலக இன்பங்களைத் துறந்து துறவு வாழ்க்கை வாழ்ந்து கேவலஞானத்தை (முற்றறிவு) அடைந்தார். சுவேதாம்பரப் பிரிவினரின் படி, இவர் கேவலஞானத்தை அடைந்த பின் உலகைத் துறந்தார். எமது உடல்களில் அழகு என்பது எதுவும் கிடையாது என்பதை உணர்ந்த போது இவர் கேவலஞானம் பெற்றார். பின்பு கேவலஞானியாக உலகைத் துறந்து அதன் பின்பு மோட்சம் அடைந்தார்.

சமண மரபின் படியான வாழ்க்கை வரலாறு

[தொகு]

துவக்க வாழ்வும் குடும்பமும்

[தொகு]

சமண மரபுக் கதைகளின் படி, ரிசபநாதரின் ( முதற் சமணத் தீர்த்தங்கரர்) மூத்த அரசியான யசசுவதி தேவி, ஓர் இரவில் நான்கு நற்குறி காட்டும் கனவுகளைக் கண்டார். அவர் தம் கனவில் கதிரவன் மற்றும் நிலவு, மேரு மலை, அன்னங்கள் நிறைந்த குளம் மற்றும் புவி மற்றும் கடல் ஆகியவற்றைக் கண்டார். ரிசபநாதர் அவரது கனவுகளின் பொருளை விளக்கி முழு உலகையும் வெற்றி கொள்ளப்போகும் ஒரு சக்கரவர்த்தி தமக்குப் பிறக்கப்போவதாகத் தெரிவித்தார்.[1] பின்னர், சைத்ர மாதத்தின் தேய்பிறைப் பகுதியின் ஒன்பதாம் நாளன்று அவர்களுக்கு பரதன் பிறந்தார். [2][3][4] அவர், இக்சுவாகு மரபில் ஒரு சத்திரியராகப் பிறந்தார்.[5] இவர் தமது கல்வியில் சட்டம் மற்றும் மன்னர்களின் ஆட்சிமுறை அறிவியல் ஆகியவற்றை முதன்மையாகக் கற்றார். மேலும், ஆடல் மற்றும் வரைதல் போன்றவற்றிலும் பரதர் ஆர்வம் காட்டினார்.[6] தமது உலகை வெற்றிகொள்ளும் முயற்சிகளின் போது பரதர் பல இளவரசிகளை மணந்து கொண்டார். இவரது முதன்மை அரசி சுபத்திரையாவார்.[7][8] இவருக்குப் பின், இவரது மகனான அர்க்க கீர்த்தி (சூரியவம்சத்தின் நிறுவுனர்) மன்னனானார்.[9] பரதருக்கு மரீசி எனும் இன்னொரு மகனும் இருந்தார். அவர் இருபத்து நான்காவது தீர்த்தங்கரரான மகாவீரரின் முற்பிறவியாவார்.[10]

வெற்றி கொள்ளலும் நிர்வாகமும்

[தொகு]
பரதன்-பாகுபலி இடையே நடைபெற்ற சமரின் சித்தரிப்பு
சக்கரவர்த்தியின் 14 ரத்தினங்கள்

பரதர், சமண அண்டவியலின் தற்போதைய அரைச் சுழற்சியின் முதற் சக்கரவர்த்தியாகக் (ஆட்சியாளர்களின் ஆட்சியாளர்) நம்பப்படுகிறார்.[11][12] சமண மரபின்படி, ரிசபநாதர் தாம் ஒரு முனியாக (சமணத் துறவி) மாறிய வேளை தமது அரசை தம்முடைய நூறு புதல்வர்களிடையே பகிர்ந்தளித்தார். இதன்போது, பரதர் விநித நகரத்தைப் (அயோத்தியா) பெற்றதாகவும், பாகுபலி போதனாபூர் நகரைப் (போதன்) பெற்றதாகவும் கூறப்படுகிறது.[13] மேலும், முடிசூட்டிக்கொண்ட பின் பரதர் உலகை வெற்றி கொள்வதற்கான நீண்ட பயணத்தை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. தமது திக்குவிசயத்தின் போது (அனைத்துத் திசைகளிலுமுள்ள உலகின் ஆறு பிரிவுகளையும் வெற்றிகொள்ளல்) இவர் ஒன்பது நிதிகளையும் (மிகவும் பெறுமதி வாய்ந்த செல்வங்கள்) பதிநான்கு ரத்தினங்களையும் (மணிகள்) அடைந்ததாக நம்பப்படுகிறது. தமது உலக வெற்றிப் பயணத்தை நிறைவு செய்த பின், அவர் தமது பாரிய படையுடனும், இறைநிலை பொருந்திய சக்கர-ரத்தினத்துடனும் (பற்களுடைய விளிம்புடைய சுழலும், வட்டத்தட்டுப்போன்ற பெருங்கருவி) தமது தலைநகரான அயோத்தியை நோக்கி ஊர்வலமாகச் சென்றதாகக் கூறப்படுகின்றது.[14]

தலைநகரின் நுழைவாயிலில் சக்கர-ரத்தினம் சுழலாமல் நின்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம், பரதரின் ஆணைக்குக் கட்டுப்பட மறுத்த 99 உடன்பிறப்புக்களை வெல்லவேண்டுமென்பதை அது குறிப்பால் உணர்த்தியது. அவர்களுள் 98 உடன்பிறப்புக்கள் துறவிகளாக மாறி தமது அரசுகளைப் பரதருக்குக் கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.[15] பாகுபலி அவருக்கு அடிபணிய மறுத்து அவருடன் சண்டையிடுமாறு அறைகூவல் விடுத்தார்.[16] பரதருக்கும் பாகுபலிக்குமிடையில் மூன்று விதமான போட்டிகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அவையாவன, கண்-சமர் (ஒருவரையொருவர் கண்கொட்டாமல் பார்த்தல்), சல-யுத்த (நீர்ச்சண்டை) மற்றும் மல்ல-யுத்த (மற்போர்) என்பனவாகும். பாகுபலி இம்மூன்று போட்டிகளிலுமே வென்றதாகக் கூறப்படுகின்றது. இறுதிப் போரில், பாகுபலி பரதரை நிலத்தில் தூக்கியெறிவதற்குப் பதிலாக தமது தோள்களில் ஏற்றிக்கொண்டார். அதற்குப் பதிலாக, அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக பாகுபலி பரதரை நிலத்தில் மெதுவாக அமர்த்தினார் எனக்கூறப்படுகிறது. அவமானமும் சினமும் பொங்கிய பரதர் தமது சக்கர-ரத்தினத்தை அழைத்ததாக நம்பப்படுகிறது. பாகுபலிக்குத் தீங்கு விளைவிக்காத அப் போர்ப்படை பாகுபலியை சுற்றி வலம் வந்துவிட்டு அமைதியடைந்ததாக நம்பப்படுகிறது. இவ்வாறான இறைதன்மை பொருந்திய போர்க்கருவிகள் சமண மரபின் படி, தமது உரிமையாளரின் நெருங்கிய உறவினர்களை எதிர்கொள்ளும்போது தமது வலுவை இழந்துவிடுவதாகக் கருதப்படுகிறது.[17] இதன் பின்னர், பாகுபலி துறவு பூணும் எண்ணம் கொண்டு தமது அரசை விடுத்துத் துறவியானார்.[18]

சமண மரபின் படி, பரதர் தற்போதைய அரைச்-சுழற்சிக் காலத்தின் முதலாவது சட்டவாக்குனராகக் கருதப்படுகிறார்.[19] ரிசபநாதரால் உருவாக்கப்பட்ட, சத்திரியர் (போர்வீரர்கள்), வைசியர் (வணிகர்) மற்றும் சூத்திரர் (வேலையாட்கள்) ஆகியோரைக் கொண்ட மூன்றடுக்கு வர்ண-முறைமையில் நான்காவது வர்ணத்தவரான பிராமணரைச் சேர்த்தவர் இவரே எனக் கூறப்படுகிறது.[11][20][21] மரபுகளில் கூறப்பட்டுள்ளபடி, பிராமணருக்கான கடமைகள், தியானித்தல், கற்றல், கற்பித்தல் மற்றும் அறிவைத் தேடுதல் என்பனவாகும்.[22]

துறவு

[தொகு]

திகம்பர நூல்களின் படி, பரதர் தமது தலையில் ஒரு வெள்ளை முடியைக் கண்டு தாம் வயதாவதாக அறிந்துகொண்டதும், உடனடியாகவே தாம் ஒரு சமணத் துறவியாக முடிவு செய்தார். ஆண்டாண்டு காலமாக தமது துறவின் கூடும் வலிமையால், இவர் தமது கொடிய கர்மாக்களை ஒரு அந்தரமுகூர்த்தத்தினுள் (நாற்பத்தெட்டு நிமிடங்களுக்குள்) ஒழித்து, கேவலஞானத்தை (முற்றறிவு) அடைந்தார்.[23] சுவேதாம்பர மரபுச் செய்திகள் இவரது துறவு வாழ்வைப் பற்றிய தகவல்களை மறுதலித்து, இவர் தமது தந்தையின் இறப்பின் பின்னர் முற்றறிவு பெற்றார் எனக் கூறுகின்றன.[12]

முற்பிறப்புக்கள்

[தொகு]

தமது முற்பிறப்பொன்றில், இவர் சுவார்த்த சித்தி எனும் சுவர்க்க உலகத்திலுள்ள தேவனின் (சுவர்க்க வாழி) அகமிந்திரவாக, அதாவது நண்பராக இருந்தார். அந்தத் தேவன் தமது மறுபிறப்பில் ரிசபநாதராகப் பிறந்தார். இவரது ஏனைய முற்பிறப்புக்கள், மதிவர (மன்னன் பசுரசங்கனின் அமைச்சர்), அதிகிருத (சம்புத்துவீபத்தின் கிழக்கு விதேகத்திலுள்ள வத்சகாவதியின் மன்னன்), நான்காவது நரகத்தில் ஒரு சிங்கம் மற்றும் இரண்டாம் சுவர்க்கத்தில் ஒரு தேவன் என்பனவாகும்.[3]

மரபுப்பெருமையும் வழிபாடும்

[தொகு]

பாரதவர்ச

[தொகு]
பரதரின் நற்குறி காட்டும் கனவுகள்

இவரது பெயரால், இந்தியா, "பாரதவர்ச" அல்லது "பாரத" அல்லது "பாரத-பூமி" என அழைக்கப்படுகிறது.[24][7] இந்துமத நூலான இசுக்கந்த புராணத்தில் (37ம் படலம்), "நாபி ராசனின் மகனான ரிசபநாதருக்கு பரதர் எனும் மகன் இருந்தார். இவரது பெயரால் இந்நாடு பாரத-வர்ச என அறியப்படுகிறது" எனக்குறிபிடப்பட்டுள்ளது.[25] பாகவத புராணத்திலும் பரதரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.[26]

கோவில்கள்

[தொகு]

சிரவணபெளகோளா உள்ளிட்ட சில சமணக் கோவில்களில் பரதரைச் சமணத் துறவியாகக் காட்டும் உருவப் படங்கள் உள்ளன. கேரளாவிலுள்ள கூடல்மாணிக்கியம் கோயில் உண்மையில் பரதரை முதன்மைக் கடவுளாகக் கொண்ட சமணக் கோயிலாகும். மே 2017ல், மங்களகிரி (சிறீ சேத்திர பரத் கா பரத்), சாகர், மத்தியப் பிரதேசம், இந்தியாவில் 45 அடி உயரமும்(உடல் 35 அடி + மேடை 12 அடி), 50 தொன் நிறையுமுடைய கடவுள் பரதரின் மிகவும் உயரமான சிலை எழுப்பப்பட்டது. துவக்கத்தில் 57 அடியுடைய (உடல் 45 அடி + மேடை 12 அடி) ஒரே கல்லினாலான 100 தொன் நிறையுடைய சிலையை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், உருவாக்கத்தின் போது அது உடைந்ததால், திட்டமிடப்பட்டதிலும் சிறிய சிலை உருவாக்கப்பட்டு எழுப்பப்பட்டது.[27]

இலக்கியங்கள்

[தொகு]

10ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண நூலான ஆதிபுராணம், முதற் தீர்த்தங்கரரும், ஆதிநாதர் என அறியப்படுபவருமான ரிசபநாதரின் பத்துப் பிறவிகள் பற்றியும் அவரது இரு மகன்களான பரதர் மற்றும் பாகுபலி ஆகியோரைப் பற்றியும் குறிப்புகளைக் கொண்டுள்ளது.[28][29] பரதச் சக்கரவர்த்தியின் கதையை விவரிக்கும் பரதேச வைபவ அல்லது பரதேசுவர சரித எனவும் அறியப்படும் நூல் 16ம் நூற்றாண்டில் ரத்னகரவருணி என்பவரால் எழுதப்பட்டது.[சான்று தேவை]

மேலும் பார்க்க

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பரதர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Champat Rai Jain 1929, ப. 89.
  2. Champat Rai Jain 1929, ப. 66.
  3. 3.0 3.1 Champat Rai Jain 1929, ப. 90.
  4. Umakant P. Shah 1987, ப. 112.
  5. Champat Rai Jain 1929, ப. 92.
  6. Champat Rai Jain 1929, ப. 93.
  7. 7.0 7.1 Umakant P. Shah 1987, ப. 72.
  8. Champat Rai Jain 1929, ப. 141.
  9. Champat Rai Jain 1929, ப. 106.
  10. Champat Rai Jain 1929, ப. 118.
  11. 11.0 11.1 Jaini 2000, ப. 341.
  12. 12.0 12.1 Wiley 2004, ப. 54.
  13. Titze 1998, ப. 8.
  14. Vijay K. Jain 2013, ப. x.
  15. Vijay K. Jain 2013, ப. x-xi.
  16. Champat Rai Jain 1929, ப. 143.
  17. Vijay K. Jain 2013, ப. xi.
  18. Champat Rai Jain 1929, ப. 145.
  19. Jain 2008, ப. 110.
  20. von Glasenapp 1999, ப. 352–353.
  21. Natubhai Shah 2004, ப. 16-17.
  22. Natubhai Shah 2004, ப. 17.
  23. Vijay K. Jain 2013, ப. xii.
  24. Champat Rai Jain 1929, ப. 159.
  25. Sangave 2001, ப. 106.
  26. Doniger 1993, ப. 243.
  27. Mahamastakabhishek being done daily in Lord Mangalgiri, Lord Bharat, Dainik Bhaskar, May 11, 2017
  28. "History of Kannada literature", kamat.com
  29. Students' Britannica India, vol. 1–5, Popular Prakashan, 2000, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85229-760-2

மூலங்கள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பரதச்_சக்கரவர்த்தி&oldid=4058772" இலிருந்து மீள்விக்கப்பட்டது