இராமநாதபுரம் அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இராமநாதபுரம் அரண்மனை, இராமலிங்க விலாசம்

இராமநாதபுரம் அரண்மனை என்பது இந்தியாவின் தமிழ் நாட்டில் இராமநாதபுரம் நகரில் அமைந்துள்ள அரண்மனை ஆகும். 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த அரண்மனையில் இருந்துதான் சேதுபதிகள் சேது நாடு என அந்நாளில் அழைக்கப்பட்ட (தற்போதைய இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள்) நிலப்பரப்பை தன்னுரிமை பெற்று ஆண்டு வந்தனர்.

இராமநாதபுரம் அரண்மனை - ஆங்கிலேயர் வரைந்த ஓவியம்

பாண்டியர் காலம்[தொகு]

தென்னாட்டை பாண்டியர்கள் ஆண்ட 12ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரம் நகரைச் சுற்றி சிறிய மண்கோட்டை இருந்தது. அக்கோட்டைக்குள் மன்னர் தங்கும் இடம் இருந்தது. [1]

நாயக்கர் ஆட்சிக் காலம்[தொகு]

17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரையை ஆண்ட நாயக்கர்கள் இராமேசுவரம் கடற்கரையைக் காக்கவும் அவ்வூர் கோயிலுக்குச் சென்றுவரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் விரும்பினர். எனவே, இராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள புகழூரை ஆண்ட ரெகுநாத சேதுபதி என்னும் சடைக்கத் தேவருக்கு கி.பி.1601ஆம் ஆண்டில் அப்பணியை நிறைவேற்றும் பொறுப்பை வழங்கினர். [2] அதனால் இராமநாதபுரம் நகரும் அதனுள் இருந்த மன்னர் தங்கும் மாளிகையும் நகரைச் சுற்றி இருந்த மண்கோட்டையும் சேதுபதியின் ஆளுகையின் கீழ் வந்தன.

கிழவன் சேதுபதி காலம்[தொகு]

ரெகுநாத கிழவன் சேதுபதி

சேதுபதி அரசர்களிலேயே புகழ்பெற்றவரான கிழவன் சேதுபதி என்னும் ரெகுநாத சேதுபதி கி.பி. 1679 ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இவர் சேதுநாட்டின் தலைநகரை புகலூரில் இருந்து இராமநாதபுரத்திற்கு மாற்றினர். அந்நகரைச் சுற்றி இருந்த மண்கோட்டையை அகற்றி, வலிமையான கற்கோட்டையைக் கட்டினார். [3] அக்கோட்டைக்குள் இராமலிங்க விலாசம் என்னும் அரசவை மண்டபம் (தர்பார் மண்டபம்), ஆயுதக்கிடங்கு, குடியிருப்புக் கட்டிடங்கள், நிலவறை, தனியறைகள் [4] கெளரி விலாசம் என்னும் விருந்தினர் மாளிகை உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை உடைய அரண்மனையை ரெகுநாத கிழவன் சேதுபதி கட்டினார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலம்[தொகு]

19ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியினர் செய்த முடிவின்படி 18031804 ஆம் ஆண்டுகளில் இராமநாதபுரம் அரண்மனையைச் சுற்றி இருந்த கற்கோட்டை இடித்துத் தள்ளப்பட்டது. [3] அரண்மனையின் சில பகுதிகள் ஆங்கிலேயர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன.

தற்காலம்[தொகு]

இராமநாதபுரம் அரசுக் கல்லூரியும் இராமநாதபுரம் அரசு பெண்கள் கல்லூரியும் வெவ்வேறு காலகட்டங்களில் சிறிதுகாலம் இங்கே செயற்பட்டன. தற்பொழுது அரண்மனையின் முகப்புப் பகுதியில் பல்வேறு வணிக நிறுவனங்கள் இயங்குகின்றன. உள்ளே ஒருபகுதியில் சேதுபதி குடும்பத்தினர் வாழ்கின்றனர். பெரும்பாலான பகுதிகளில் தமிழக அரசின் பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

1784 ஆம் ஆண்டில் இராமநாதபுரம் அரண்மனையின் முகப்புத் தோற்றம்

இவற்றையும் காண்க[தொகு]


வெளி இணைப்பு[தொகு]

Jaishankar C., Ramnad Palace: well preserved building

சான்றடைவு[தொகு]

  1. வேதாசலம் முனைவர் வெ., இராமநாதபுரம் அரண்மனை அருங்காட்சியகக் கையேடு, தமிழ்நாடு அரசு தொல்லியில் துறை சென்னை, 2007, பக்.7,8
  2. வேதாசலம் முனைவர் வெ., இராமநாதபுரம் அரண்மனை அருங்காட்சியகக் கையேடு, தமிழ்நாடு அரசு தொல்லியில் துறை சென்னை, 2007, பக்.5
  3. 3.0 3.1 வேதாசலம் முனைவர் வெ., இராமநாதபுரம் அரண்மனை அருங்காட்சியகக் கையேடு, தமிழ்நாடு அரசு தொல்லியில் துறை சென்னை, 2007, பக்.8
  4. Jaishankar C., Ramnad Palace: well preserved building, The Hindu dated 2009/06/11