அப்துல் கலாம் தேசிய நினைவகம்
அப்துல் கலாம் மணிமண்டபம் என்பது தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் தீவில் பேக்ரும்பு என்ற இடத்தில் அமைந்துள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு நினைவு மண்டபமாகும்.[1] இது சுமார் மூன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது இதன் தோற்றம், டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையை பிரதிபலிப்பது போன்று அமைந்துள்ளது.
கட்டுமானம்[தொகு]
இந்த மணிமண்டபமானது இந்திய ஒன்றிய அரசால் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. மணிமண்டபத்தைக் கட்டப் பயன் படுத்தப்பட்ட மஞ்சள் நிற பளிங்கு கற்கள், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்தும், சிவப்பு நிற கற்கள் ஆக்ராவில் இருந்தும் கொண்டுவரப்பட்டன. கிருஷ்ணகிரியில் இருந்து கொண்டு வரப்பட்டு தரையில் பதிக்கப்பட்டுள்ள கிரனைட் கற்கள் 150 மி.மீ. தடிமன் கொண்டவையாக உள்ளன. இதனால் ஆண்டுக்கணக்கில் தினந்தோறும் 3 ஆயிரம் பார்வையாளர்கள் வந்தாலும் தேயாத வகையில் தரை உருவாக்கப்பட்டுள்ளது.
மண்டபத்தின் அமைப்பு[தொகு]
மணிமண்டபத்தின் நுழை வாயில் இந்தியா கேட் தோற்றத்தில் உள்ளது. வாயிலை அலங்கரிக்கும் முகப்பு கதவுகள் ஒவ்வொன்றும் 250 கிலோ வீதம், 500 கிலோ எடையுடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கதவுகள் மலேசிய தேக்கைப் பயன்படுத்தி, காரைக்குடி செட்டிநாடு தச்சர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மண்டபத்தில் இடம்பெற்றவை[தொகு]
இதில் உள்ள கூடம் நான்கு பிரிவுகளாக உள்ளன அவை, அதில் அப்துல் கலாம் விஞ்ஞானி யாகப் பணியாற்றிய காலம், கண்டுபிடிப்புகளை உருவாக்கிய காலம், அறிவியல் ஆலோசகராக பணியாற்றிய காலம், குடியரசுத் தலைவராக பணியாற்றிய காலம் என உள்ளன. மேலும் கலாம் வீணை வாசிப்பது, குடியரசுத் தலைவராக பதவியேற்றபோது குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் வருவது, சகோதரர் முத்து மீரா மரைக்காயர், உலகத் தலைவர்கள் மற்றும் குழந்தைகளுடன் கலாம் இருக்கும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன கலாம் தொடர்பான ஓவியங்கள், ஒளிப்படங்கள், கலாம் கண்டுபிடிப்பின் மாதிரிகள், கலாம் பயன்படுத்திய பொருட்கள், நூல்கள், உடைகள் உள்ளிட்டவை இந்த மணிமண்டபத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகளுடன் கலாம் விளையாடுவது, குழந்தைகளுடன் கிரகங்களை பார்வையிடுவது, குழந்தைகளை புத்தகங்கள் படிக்கத் தூண்டுவது, குழந்தை களை கைத் தூக்கி உதவுவது உள்ளிட்ட 4 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கலாம் சமாதியை ஒட்டி வட்ட வடிவில் சிறப்பு பிரார்த்தனை கூடமும், கலாம் பயன்படுத்திய உடைகள், புத்தகங்கள், 200 அரிய வகை புகைப்படங்கள், கலாம் நினைவிடத்தின் பின்புறம் அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவமும் நிறுவப்பட்டுள்ளன. விரைவில் நினைவிடம் அருகிலேயே அறிவுசார் மையம், கலையரங்கம், கோளரங்கம், வாகனம் நிறுத்தும் இடம் ஆகியவையும் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மணிமண்டபம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியால் 2017 சூலை 27 அன்று திறந்துவைக்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "ராமேஸ்வரம் மணிமண்டபத்தில் மக்கள் ஜனாதிபதி கலாமின் காலத்தால் அழியாத ஓவியங்கள் Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/a-dream-mission-working-kalam-memorial-290734.html". கட்டுரை. ஒன் இந்தியா. 29 சூலை 2017 அன்று பார்க்கப்பட்டது. External link in
|title=
(உதவி) - ↑ "அப்துல் கலாம் நினைவிடத்தை திறக்க பிரதமர் மோடி ராமேசுவரம் வருகை: தென் மண்டல ஐ.ஜி நேரில் ஆய்வு". செய்தி. தி இந்து. 29 சூலை 2017 அன்று பார்க்கப்பட்டது.