உள்ளடக்கத்துக்குச் செல்

அழகன்குளம் தொல்லியல் களம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அழகன்குளம் தொல்லியல் களம், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அழகன்குளம் கிராமத்தில் உள்ளது. தற்போது அழகன்குளம் தொல்லியல் களத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது.

அழகன்குளம் தொல்லியல் களம், வைகை ஆற்றின் கரையில், வங்காள விரிகுடா கடற்கரையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அழகன்குளம் கிராமத்தில் 1980களில் முதன் முறையாக சிறிதளவில் அகழ்வாய்வு செய்ததில், இவ்விடத்தில் தொல்லியல் எச்சங்கள் இருப்பதை உறுதி செய்தனர்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா, அழகன்குளத்தில் முறையாக அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைக்கு 1 செப்டம்பர் 2016 அன்று ஆணையிட்டார். [1]

அழகன்குளம் தொல்லியல் களத்தில் முதலில் பத்தடி நீளம், பத்தடி அகலம், இருபதடி ஆழம் கொண்ட ஐந்து பள்ளங்கள் தோண்டப்பட்டதாக தமிழகத் தொல்லியல் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அழகன்குளம் அகழ்வாராய்ச்சியில், கிமு 375க்கு முந்தைய, மத்தியதரைக்கடல் ஒட்டிய நாடுகளில் புழங்கப்பட்ட மண் ஓடுகள், மட்பாண்டங்களின் சில்லுகள் மற்றும் ஜாடித் துண்டுகள் கிடைத்துள்ளது.

கிமு முதல் நூற்றாண்டுக் காலத்திய தமிழ் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்ட சிவப்பு நிற ஓடுகள் கிடைத்துள்ளது. பிற தொல்பொருட்களான மணிகள், துளையிடப்பட்ட ஓடுகள், பல அளவுகளால் ஆன செங்கற்கள் இங்கு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[2]

அழகன்குளம் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த நாணயங்களின் முன்புறத்தில் உரோமானிய மன்னரின் முகமும், பின்புறத்தில் உரோமானியர்களின் வெற்றிக்கான தேவதையின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்நாணயங்களை, கிமு 375ல் உரோமைப் பேரரசை கிமு 375 – 392 முடிய ஆண்ட இரண்டாம் வாலெண்டைன் (Valentinian II) வெளியிட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதன் மூலம் பாண்டியர்களுக்கும், உரோமானியர்களுக்கு இடையே நடந்த கடல் வணிகம் அறியப்படுகிறது.[3]

சங்க காலத்திய அழகன்குளம் பகுதி, கிமு 300 முதல் கிபி 300 முடிய பாண்டியர்களின் வணிக நகரமாகவோ அல்லது துறைமுக நகரமாகவோ இருந்திருக்கலாம் எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[4]

மேலும் ஏழாவது சுற்றில் நடைபெற்ற அகழாய்வில், உரோமனியர்களுடான வணிகம் மற்றும் உரோமானிய மற்றும் மத்தியதரைக்கடல் நாடுகளின் வணிகர்களின் வணிகக் குடியிருப்புகள் அழகன்குளத்தில் கண்டறியப்பட்டுள்ளது.[5]

அகழாய்வு அறிக்கை

[தொகு]

அகழாய்வு தொடங்கி 30 ஆண்டுகளாகியும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யாததது ஏன்? சென்னை உயர் நீதிமன்றம் என்ற கேள்வி எழுப்பியது. அதற்கு தொல்லியல் துறை அழகன்குளம் அகழாய்வின் முதல் கட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என்றும், இறுதி அறிக்கை தயாராகி வருகிறது எனக் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், அழகன்குளம் அகழாய்வு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது.[6]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Excavation begins at Alagankulam archaeological site
  2. "Alagankulam". Archived from the original on 2012-09-23. பார்க்கப்பட்ட நாள் 2017-08-12.
  3. Major excavations at Tamil Nadu's Alagankulam to discover more on historical trade links with Rome
  4. Excavation to discover Tamil Nadu's trade link with Rome begins
  5. Azhagankulam was in the big league
  6. அழகன்குளம் 7 கட்ட அகழாய்வு: அறிக்கை தாக்கல் செய்ய தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

வெளி இணைப்புகள்

[தொகு]