கீழடி அகழாய்வு மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அகழ்வாய்வில் வெளிக்கொணரப்பட்ட கட்டிடத் தொகுதிகள்

கீழடி தொல்லியல் களம் என்பது இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழாய்வு செய்யப்பட்டு வரும் ஒரு சங்க கால வசிப்பிடம் ஆகும். இந்த அகழாய்வு மையம் தமிழ்நாட்டில் மதுரைக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில், சிவகங்கை மாவட்டத்தில் கீழடி என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வு இதுவேயாகும்[1].

அமைவிடம்[தொகு]

மதுரையிலிருந்து இராமநாதபுரத்தின் - அழகன்குளம் துறைமுகத்துக்குச் செல்லும் பண்டைய வணிகப் பாதையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி என்ற ஊரின் கிழக்கே சுமார் ஒரு கி.மீ தொலைவில், மணலூர் கண்மாயின் மேற்கரையில் உள்ள பள்ளிச்சந்தைத் திடல் என்ற பெயரிலான மண்மேட்டில் இவ்வகழாய்வு தொடங்கப்பட்டது. இவ்விடத்தைச் சுற்றி நிலத்தை உழும்போது பல்வேறு தொல்லியல் எச்சங்கள் கிடைத்துவந்த நிலையில், தரைமட்டத்திலிருந்து இரண்டரை மீட்டர் உயரத்தில் அவ்வளவாக பாதிப்புக்குள்ளாகாது இருந்த இம்மேடு ஆய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது[2].தற்பொழுது அகழாய்வு செய்யப்பட்டுவரும் இடம் 3.5 கி.மீ சுற்றளவுடன் 80 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. தொன்மையான ஊர்களான கொந்தகை, மணலூர் ஆகியவையும் இப்பகுதியோடு தொடர்ச்சியுற அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது[1].

களத்தின் காலம்[தொகு]

முதற்கட்டமாக, இந்க் களம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்த வசிப்பிடமாக கணிக்கப்பட்டது. மேலதிக உறுதிப்படுத்தல்களுக்காக இந்த அகழ்வாயில் இருந்து இரண்டு மாதிரிகள் (samples) கரிமத் தேதியிடல் முறையில் பகுப்பாய்வு செய்ய அனுப்பட்டது. சூலை 2017 இல் வெளிவந்த இதன் முடிவுகள் இந்த மையம் சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன்னையது என்பதை உறுதிசெய்துள்ளன.[3][4]

ஆய்வின் பின்புலமும், தற்போதைய நிலையும்[தொகு]

வைகையாறு தோன்றும் தேனி மாவட்டம் தொடங்கி கடலில் கலக்கும் இராமநாதபுரம் மாவட்டம் வரை வைகை ஆற்றங்கரையின் அருகமை பகுதிகளில் 2013-14இல் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின்போது தொல்லியல் எச்சங்கள் உள்ள 293 பகுதிகள் கண்டறியப்பட்டன. இவை களஞ்சியங்கள், வணிகத் தலங்கள், துறைமுகங்கள், வாழிடங்கள், கோயில்கள் என்ற வகையிலானவை. வருசநாட்டிலும், அழகங்குளத்திலும் சிறிய அளவிலான அகழாய்வுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் பெரிய அளவிலான அகழாய்வுகள் இதுவரை நடந்திருக்கவில்லை. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வு துறையின் அகழாய்வு பிரிவு-6, மார்ச் 2015 தொடங்கி இப்பகுதியில் ஆய்வு நடத்திவருகிறது. தற்போதைய கட்டம் செப்டெம்பர் 2015இல் நிறைவுபெற்றுவிடும் என்றாலும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கியத்துவம் கருதி ஆய்வை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது[2][5].

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு ஆர்வம் காட்டவில்லை எனவும், எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை எனவும் இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறை அகழாய்வு பிரிவின் கண்காணிப்பாளர், கி. அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.[6]

ஆய்வாளர்கள்[தொகு]

கீழடி அகழாய்வினை இந்தியப் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் அகழாய்வுப் பிரிவு முன்னெடுக்கின்றது. அப் பிரிவினைச் சார்ந்த கி. அமர்நாத் ராமகிருஷ்ணன் கண்காணிப்பு தொல்பொருளியலாளராகத் தலைமை தாங்குகிறார். மேலும் கிருஷ்ணகிரி அரச கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை இந்த ஆய்வில் பங்கெடுக்கின்றார்கள். துணைப் பேராசிரியர் பி. வெங்டேசுவரன், கே. வடிவேல், கே. வசந்தகுமார். டி பாலாஜி, ஆர். மஞ்சுநாத், ஜி. கார்த்திக் ஆகியோரைக் கொண்ட வல்லுனர் குழுவிற்கு தலைமை தாங்குகின்றார்.[7]

கல்வெட்டியலாளர் வி. வேதாச்சலம் துறைசார் வல்லுராகக் (Subject Matter Expert) கடைமைபுரிகிறார்.[7]

கண்டுபிடிப்புகள்[தொகு]

கிட்டத்தட்ட 48 சதுரக் குழிகள் வெட்டப்பட்டு உறைகிணறுகள், செங்கற் சுவர்கள், கூரை ஓடுகள், மண்பாண்டங்கள், மிளிர்கல் அணிகலன்கள், எலும்புக் கருவிகள், இரும்பு வேல், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகள் எனப் பல்வேறு தொல்லெச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இலக்கியத்தில் குறிப்பிடப்படும் பாண்டியர்களின் தொல்நகரான "பெருமணலூர்" இதுவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது[5].

கட்டிடங்கள்[தொகு]

கீழடியில் 10 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு வளர்ச்சியடைந்த நகரமாக இது திகழ்ந்ததற்கு இது வலுவான சான்றாக உள்ளது. "சங்க காலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழ்வாய்வு மாற்றியமைத்துள்ளது".[8]

சுடுமண் குழாய், கழிவுநீர் தொகுதிகள்[தொகு]

நீர் வழங்கலும், கழிவுநீர் அகற்றலும் நாகரிக வளர்ச்சியின் முக்கிய மைல்கல்களாகக் கருதப்படுவன. கீழடியில் "சுடுமண் குழாய் மூலம் உருவாக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கட்டிடங்கள் இருந்தது கண்டறியப் பட்டுள்ளன."[8]

உறை கிணறுகள்[தொகு]

இங்கு பழங்கால சுடுமண் உறைகிணறுகள் [9] [10][11] கண்டறியப்பட்டுள்ளன. இவை பட்டினப்பாலை கூறும் 'உறைகிணற்றுப் புறச்சேரி' என்ற தொடருக்குச் சான்று பகர்வனவாகவும், ஆற்றங்கரைகளிலும், பெரிய குளக்கரைகளிலும் இவ்வாறு உறைகிணறுகள் அமைத்து நீரெடுக்கும் தமிழரின் பண்டைய வழக்கத்தை எடுத்துக்காட்டுவனவாகவும் உள்ளதாகத் தொல்லியல் அறிஞர் வெ. வேதாச்சலம் குறிப்பிடுகிறார்[12].

செங்கற்சுவர்கள்[தொகு]

அகழ்வாய்வில் கண்ட செங்கற்சுவர்

வரலாற்றின் தொடக்க காலத்திய செங்கல் கட்டிடச் சான்றுகள் கிடைப்பது மிகவும் அரிதாகக் கருதப்படும் நிலையில் இங்கு பெருமளவில் செங்கல் கட்டிடங்கள் உள்ளது ஆய்வாளர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது[13].

மண்பாண்டங்கள்[தொகு]

மண்பாண்டம்

ரோமப் பேரரசுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பை மெய்ப்பிக்கும்படியான, வணிகர்களால் கொண்டுவரப்பட்ட ரௌலட் (rouletted), அரிட்டைன் (arretine) வகை மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. அழகங்குளத்திலும் இத்தகைய பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் வரலாற்றின் தொடக்ககாலத்தைச் சேர்ந்தவையான கருப்பு, சிவப்பு மண்பாண்டத் துண்டுகள், வெள்ளை வண்ணம் பூசப்பட்ட கருப்பு, சிவப்பு மண்பாண்டத் துண்டுகள், செம்பழுப்பு நிற கலவை பூசப்பட்ட மண்பாண்டத் துண்டுகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. தமிழகத்தில் செம்பழுப்பு நிற ரசட் (russet) கலவை பூசப்பட்ட பாண்டங்கள் இதுவரை கொங்குப் பகுதியிலேயே கிடைத்திருப்பதைக் கொண்டு இப்பகுதி கொங்குப் பகுதியுடனும் வாணிபத் தொடர்பிலிருந்ததாகக் கருதப்படுகிறது[2][13].

தமிழி எழுத்துக்கள்[தொகு]

'ஆதன்', 'உதிரன்', 'திசன்' போன்ற தனிநபர்களின் பெயர்களைக் குறிப்பிடும் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன[2][5].

அணிகலன்கள்[தொகு]

இங்கு சூது பவளம், பளிங்கு, அகேட் மணிகள், பச்சை, மஞ்சள், நீல நிறக் கண்ணாடி மணிகள் ஆகியவையும் கிடைத்துள்ளன[13]. யானைத் தந்தத்தினாலான தாயக்கட்டைகள், தாமிரத்தாலான கண் மை தீட்டும் கம்பி ஆகியவையும் கிடைத்துள்ளன[14].

அரிய தொல்பொருட்கள்[தொகு]

இரும்பாலான அம்பு முனைகள், எழுத்தாணி, சுடுமண் முத்திரை கட்டைகள், தந்தத்தால் ஆன தாயக் கட்டைகள், சுடுமண் பொம்மைகள் உட்பட்ட பல்வேறு அரிய தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.[8]

கீழடி அகழாய்வின் கால வரிசை[தொகு]

முதல் கட்டம்[தொகு]

கீழடியில் சூன், 2015 ஆம் ஆண்டு வைகை ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் கி. அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு முதல் கட்ட அகழ்வாய்வைத் தொடங்கியது.

இரண்டாம் கட்டம்[தொகு]

2 சனவரி 2016 ஜனவரி அன்று இரண்டாம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இதில் மருத்துவ குடுவைகள், பழங்கால உறை கிணறுகள், தொழிற்சாலை, அரசு முத்திரை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கிடைத்தன.

இரண்டாம் கட்ட அகழாய்வின் முடிவில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்தன. இவற்றை ஆய்வுக்கு உட்படுத்தியபோது 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தைச் சேர்ந்தவை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்டம்[தொகு]

மூன்றாம் கட்ட அகழாய்வு சனவரி, 2017 முதல் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் தலைமையில் நடைபெறுகிறது. இப்பணி 30 செப்டம்பர் 2017ல் முடிகிறது. மூன்றாம் கட்டப் பணியில் 400 சதுர மீட்டர் அளவுக்கு 16 குழிகள் தோண்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.[15]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 எஸ். அண்ணாமலை (ஜூன் 18, 2015). "அகழ்ந்தெடுக்கப்பட்டது: பாண்டிய-ரோம வணிகத் தொடர்பு (ஆங்கிலத்தில்)". தி இந்து (ஆங்கிலம்). http://www.thehindu.com/news/national/tamil-nadu/archaeological-excavationin-sivaganga-uncovers-pandyaroman-trade-links/article7328683.ece. பார்த்த நாள்: செப்டம்பர் 12, 2015. 
 2. 2.0 2.1 2.2 2.3 ப.சூரியராஜ் (ஜூன் 16, 2015). "2200 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால நகரம் மதுரை அருகே கண்டுபிடிப்பு!". விகடன்.காம். http://www.vikatan.com/news/article.php?aid=49553. பார்த்த நாள்: செப்டம்பர் 12, 2015. 
 3. Dennis S. Jesudasan (July 28, 2017). "Carbon dating confirms Keezhadi site is from Sangam era". thehindu.com. பார்த்த நாள் 28 சூலை 2017.
 4. 2200 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால நகரம் மதுரை அருகே கண்டுபிடிப்பு!
 5. 5.0 5.1 5.2 ஏ. ஸ்ரீகுமார் (ஆகத்து 19, 2015). "உயிரூட்டம் கொண்ட சிற்றூரின் கீழே புதையுண்ட நகரம் (ஆங்கிலத்தில்)". தி இந்து (ஆங்கிலம்). http://www.thehindu.com/features/metroplus/society/keezhadi-archaeological-excavation/article7557728.ece. பார்த்த நாள்: செப்டம்பர் 12, 2015. 
 6. "கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க அரசு ஆர்வம் காட்டவில்லை". dinamalar.com (19 மார் 2016). பார்த்த நாள் 5 சூன் 2016.
 7. 7.0 7.1 "Digging up Madurai’s Sangam past/article8183616.ece". frontline.in (February 19, 2016). பார்த்த நாள் 5 சூன் 2016.
 8. 8.0 8.1 8.2 "நகர நாகரிகம் இருந்ததற்கான ஆதாரம்: சிவகங்கை அருகே புதையுண்டுள்ள ஏராளமான சங்க காலக் கட்டிடங்கள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுப்பு/article8663028.ece தமிழகத்தில் நகர நாகரிகம் இருந்ததற்கான ஆதாரம்: சிவகங்கை அருகே புதையுண்டுள்ள ஏராளமான சங்க காலக் கட்டிடங்கள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுப்பு". tamil.thehindu.com (May 29, 2016). பார்த்த நாள் 29 மே 2016.
 9. உறைகிணறு
 10. RING WELLS IN ANCIENT INDIA
 11. Ringwell
 12. சுப.ஜனநாயகச்செல்வம் (ஆகத்து 14, 2015). "திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதூரில் சங்ககால மக்களின் சுடுமண் உறைகிணறுகள் கண்டெடுப்பு". தி இந்து (தமிழ்). http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7538252.ece. பார்த்த நாள்: செப்டம்பர் 12, 2015. 
 13. 13.0 13.1 13.2 சுப. ஜனநாயகச்செல்வம் (ஜூலை 26, 2015). "சங்க காலத்திலேயே வெளிநாடுகளோடு வர்த்தகம்: வணிகப் பெருவழிப் பாதையில் அமைந்த நகரம்". தி இந்து (தமிழ்). http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article7466768.ece. பார்த்த நாள்: செப்டம்பர் 12, 2015. 
 14. "தலைநகராக இருந்த கீழடி அழிந்தது எப்படி? - புத்தக காட்சியில் தொல்லியல் ஆய்வாளர் தெரிவித்த புதிய தகவல்". தி இந்து (தமிழ்). செப்டம்பர் 8, 2015. http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/article7629038.ece. பார்த்த நாள்: செப்டம்பர் 12, 2015. 
 15. கீழடியில் மூன்றாம் கட்ட ஆய்வுப் பணி துவக்கம்!

வெளி இணைப்புகள்[தொகு]

11 அக்டோபர் 2016இல் களத்தில் எடுத்த புகைப்படங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழடி_அகழாய்வு_மையம்&oldid=2456102" இருந்து மீள்விக்கப்பட்டது