கீழடி, சிவகங்கை மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீழடி
Keezhadi
ஊராட்சி
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சிவகங்கை
ஊராட்சி ஒன்றியம்திருப்புவனம்
அரசு
 • நிர்வாகம்கிராமம்
ஏற்றம்123 m (404 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்5,140
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
PIN630207
Telephone code04577
மக்களவைத் தொகுதிசிவகங்கை

கீழடி கிராமம் (Keezhadi) தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம் வட்டத்தில் உள்ள திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தின், கீழடி ஊராட்சியில் உள்ள கிராமம் ஆகும்.[1]. மதுரை நகரிலிருந்து 11 கி.மீட்டர் தொலைவில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.

அகழ்வாராய்ச்சி[தொகு]

இந்தியத் தொல்லியல் ஆய்வகம் சார்பில் இந்த ஊரில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் சங்க காலப் பாடல்களில் (சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்றவற்றில்) குறிப்பிடப்பட்டிருந்த பல பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக, இங்கு 40இற்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டன. இதுவே தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட பெரிய அகழ்வாராய்ச்சி ஆகும்.

முத்துமணிகள், பெண்களின் கொண்டை ஊசிகள், தாயக்கட்டைகள், சதுரங்கக் காய்கள், சுடுமண் பொம்மைகள், சில்லுகள், நூல் நூற்கும் தக்ளி போன்றவை இங்கு கிடைத்துள்ளன.

வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு, மேற்கூரைகள் ஓடுகள் வேயப்பட்டிருந்திருக்கலாம் என்பதையும், வீடுகளின் அருகே பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இருந்திருக்கலாம் என்பதனையும் இங்குக் கிடைத்துள்ள சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன. வீடுகளில் குளியலறைகள் இருந்ததற்கான சான்றும் கிடைத்துள்ளது. தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு நிறங்களிலான ஏறத்தாழ 1000 கிலோகிராம் திணிவுடைய மண் ஓடுகள் அகழ்வாராய்ச்சியின் பொழுது கிடைத்திருக்கின்றன.[2]

கண்டெடுக்கப்பட்டவைகள்[தொகு]

இதுவரை இங்கு 5,820 பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. மேலும் இந்த இடத்தில் சுட்ட செங்கல்லால் ஆன சுவர்கள், உறைக்கிணறுகள், பானை செய்யும் தொழில் கூடங்கள், வெறும் கையால் அமுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட வடி நீர் கால்வாய்கள், கூரை ஓடுகள் போன்ற பல அமைப்புகள் காணப்பட்டன.

மேலும் தங்கத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள், யானை தந்தத்தில் செய்யப்பட்ட ஆபரணங்கள், விளையாட்டுப் பொருட்கள், சுடுமண் விளையாட்டுப் பொருட்கள், இரும்பு கருவிகள்[3], தந்தத்தால் செய்யப்பட்ட சீப்புக்கள், இரத்தின கற்களால் ஆன ஆபரணங்கள், கற்களால் செய்யப்பட்ட ஆபரணங்கள், சுடு மண் மணிகள், வட்ட சில்லுக்கள், காதணிகள், தக்களிகள், மனித மற்றும் விலங்குகளின் வடிவில் பொம்மைகள், கருப்பு மற்றும் சிவப்பு நிற உடைந்த பானை ஓடுகள் மற்றும் ரோமானியா சின்னம் பொறிக்கப்பட்ட பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நாகரிகம்[தொகு]

கீழடி வைகை நதிக்கரைக்கு மிக அருகில் இருப்பதால் நகர நாகரிகத்தில் சிறந்த விளங்கியதர்கான தெளிவு கிடைத்துள்ளது. செங்கல் கட்டுமானத்தில் வீடுகள், வடிகால் அமைப்புகள், தொழில் கூடங்கள் மற்றும் வணிகம் ஆகியவற்றை பார்க்கும் போது இரண்டாம் நகர நாகரிகம் கங்கை சமவெளி பகுதிகளில் தோன்றும்போது அல்லது அதற்க்கு முன்னதாகவே இங்கு இரண்டாம் நகர நாகரிகம் தோன்றி இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது (கிமு 6 ஆம் நூற்றாண்டு)[4].

தமிழக-உரோம வர்த்தக உறவுகள் குறித்த சான்றின் மூலம் அந்தக்கால மக்களின் வணிகத் தொடர்பை அறிந்துகொள்ள முடிகின்றது.[5]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-06-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-09-15 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2200 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால நகரம் மதுரை அருகே கண்டுபிடிப்பு!
  3. "அகழப்பட்ட பொருட்கள்".
  4. "கீழடி நாகரிகம்".
  5. "கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்". செப்டம்பர் 15, 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]