திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
திருவாடானை ஆதிரத்தினேசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருஆடானை
பெயர்:திருவாடானை ஆதிரத்தினேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருவாடானை
மாவட்டம்:ராமநாதபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஆதிரத்தினேசுவரர், அஜகஜேஸ்வரர், ஆடானை நாதர்
தாயார்:சினேகவல்லி, அம்பாயி அம்மை
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:சூரிய புஷ்கரிணி
சிறப்பு திருவிழாக்கள்:வைகாசி விசாகத்தில் வசந்த விழா 10 நாள், ஆடிப்பூரத்திருவிழா 15 நாள், நவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி.
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
வரலாறு
அமைத்தவர்:மீள் கட்டுமானம் - நாட்டுக்கோட்டை நகரத்தார்

திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் தமிழ்நாடு மாநிலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை ஊரில் அமைந்துள்ளது.[1] இவ்வூரினை திருஆடானை என்றும் அறிவர்.

இறைவன், இறைவி[தொகு]

இங்குள்ள இறைவன் ஆதிரத்தினேசுவரர் என்றும் இறைவி சினேகவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர்.[1] இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வ மரமும், தீர்த்தமாக சூரியனால் உருவாக்கப்பட்ட சூரிய புஷ்கரிணி(நீராவி தீர்தம்) தீர்த்தம் கோயிலுக்கு உள்ளேயும், கோவிலுக்கு முன்பு வருணன் தீர்த்தமும் (தெப்பகுளம்) , கோவிலுக்கு மேற்கே வாருணி தீர்த்தமும் (மங்கல நாதன் குளம்), கோவிலுக்கு தெற்கே அகத்தியர் தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், மற்றும் மணிமுத்தாறு(மணிமுத்தா நதி) என்று ஆறு தீர்த்தங்கள் உள்ளன. வருண பகவானின் மகன் வாருணி சாப விமோசனம் பெற்று முனிவராக பிறப்பெடுத்து உருவான இடம். வாருணியின் மகனே நவகிரகங்களில் ஒருவரான சுக்கிரன்.இங்குள்ள ஆதி ரத்தின லிங்கத்தை பிரதிஷ்டை செய்தவர் சூரியபகவான், மகாபாரத காலத்திற்கு முன்பு கிருஷ்ணர் ராமராக அவதாரம் எடுத்த பொழுது ராமர் ராவணனுடன் போர் செய்ய போவதற்கு முன்பு இங்குள்ள இறைவனை வணங்கி சிவபெருமானிடம் அதற்கான உபதேசத்தை பெற்றார். ராமாவதார காலத்தில் இறைவனிடமிருந்து தான் கற்ற இந்த உபதேசத்தை தனது கிருஷ்ண அவதாரத்தின் போது கீதையாக, கிருஷ்ணன் மகாபாரதப் போரில் அர்ஜுனனுக்கு உபதேசித்தார். மார்க்கண்டேயர், காமதேனு, சூரியன், அகத்தியர், திருஞானசம்பந்தர் ஆகியோர் அவரவர் வாழ்ந்த காலங்களில் பல யுகங்களில் தொடர்ந்து இங்குள்ள இறைவனை பலர் வழிபட்டு வந்துள்ளனர்.

நம்பிக்கை[தொகு]

இத்தலத்தில் வருணன் மகன் வாருணி துருவாச முனிவரின் சாபத்தினால் ஆனை உடலும் ஆட்டுத்தலையுமாய் இருந்து வழிபட்டு விமோசனம் பெற்றான் என்பது தொன்நம்பிக்கை.

விழாக்கள்[தொகு]

இக்கோயிலில் வைகாசி விசாகத்தில் வசந்த விழா, ஆடிப்பூரத் திருவிழா, நவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி உள்ளிட்ட பலவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.[1]

திருப்பணிகள்[தொகு]

இக்கோயில் ஆதியில் பாண்டியர்களால் கட்டப்பட்டுள்ளது. பின்னர் நாயக்கர்கள் கோயிலை விரிவுபடுத்தியுள்ளனர். தற்போது உள்ள கோயில் 19ஆம் நூற்றாண்டில் சேதுபதி மன்னர் தலைமையில் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் கட்டப்பெற்றது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 அருள்மிகு ஆதிரத்தினேரீஸ்வரர் கோயில், தினமலர் கோயில்கள்
  2. பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் (1953). நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு. p. 245,246.

வெளி இணைப்புக்கள்[தொகு]

படத்தொகுப்பு[தொகு]