அடையார் கே. லட்சுமணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அடையார் கே. லட்சுமணன்
Adyar K. Lakshman
தேசியம்இந்தியர்
கல்விகலாசேத்திரா
அறியப்படுவதுபரதநாட்டியம், இந்திய பாரம்பரிய இசை
குறிப்பிடத்தக்க படைப்புகள்அலாரிப்பு (நடனம்), புஷ்பாஞ்சலி
விருதுகள்பத்மசிறீ (1989)
சங்கீத நாடக அகாதமி விருது (1991)

அடையார் கே. லட்சுமணன் (டிசம்பர் 16, 1933 - ஆகத்து 19, 2014) ஓர் இந்திய பரதநாட்டியக் கலைஞரும், நடன ஆசிரியரும் ஆவார். இவர் பத்மஸ்ரீ விருது, சங்கீத நாடக அகாதமி விருதுகளைப் பெற்றுள்ளார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

லட்சுமணனின் சொந்த ஊர் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் ஆகும். இவரது தந்தை கிருஷ்ணராஜ ராவ் ஆசிரியராகப் பணியாற்றியவர். பி. டி. துரைசாமி ஐயர் என்பவர் லட்சுமணன், மற்றும் இவரது தமையன் ராமராவ் ஆகியோரின் திறமைகளை அறிந்து அவர்களை ருக்மிணி தேவி அருண்டேல் உருவாக்கிய அடையாறு கலாசேத்திரா நாட்டியப் பள்ளியில் சேர்த்து விட்டார்.[1]

1944 ஆம் ஆண்டில் தனது 11 வது அகவையில் கலாசேத்திராவில் சேர்ந்தார் இலட்சுமணன். வாய்ப்பாட்டு, பரத நாட்டியம், மிருதங்கம், நட்டுவாங்கம் ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தி பிரபலமான ஆசிரியர்களிடம் பயிற்சி பெற்றார். ருக்மிணி தேவி அருண்டேலிடம் நேரடியாகப் பயிற்சி பெறும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. மேலும், மைலாப்பூர் கௌரி அம்மாள், கே. தண்டாயுதபாணி பிள்ளை, எஸ். சாரதா, டைகர் வரதாச்சாரி, பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள், டி. கே. ராமசுவாமி ஐயங்கார், மைசூர் வாசுதேவாச்சாரியார், தஞ்சாவூர் ராஜகோபால ஐயர், வி. விட்டல், கமலாராணி, .காரைக்குடி முத்து ஐயர் போன்ற பெரிய வித்வான்களோடு சேர்ந்து பணியாற்றியுள்ளார். 1954 ஆம் ஆண்டில் இவர் பரதநாட்டியம், கருநாடக இசை, நட்டுவாங்கம் ஆகிய துறைகளில் சிறப்புப் பட்டம் பெற்றார். பின்னர் இந்திய அரசின் புலமைப் பரிசில் பெற்று 1956 ஆம் ஆண்டில் பட்டப்பின் டிப்புளோமா பட்டம் பெற்றார். பின்னர் அவர் கதகளி நடனத்தை அம்பு பணிக்கர், சந்து பணிக்கர் ஆகியோரிடம் கற்றார்.[2]

பணி[தொகு]

வைஜெயந்திமாலாவின் நாட்டியாலயா பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி பல அரங்கேற்றங்களை இவர் நடத்தியுள்ளார். திருப்பாவை, அழகர் குறவஞ்சி, சந்தாலிக்க, சங்கத் தமிழ் மாலை ஆகிய நாட்டிய நாடகங்களைத் தயாரிக்க உதவியிருக்கிறார். 1969 ஆகத்து 22 இல் பரதசூடாமணி அக்காதமி என்ற நாட்டியப் பள்ளியை நிறுவி, அதன் மூலம் பல நாட்டியக் கலைஞர்களை உருவாக்கினார். "வருணபுரி குறவஞ்சி", "ஆய்ச்சியார் குரவை" போன்ற பல நாட்டிய நிகழ்ச்சிகளைத் தயாரித்தளித்தார்.[2][3]

விருதுகள்[தொகு]

மறைவு[தொகு]

அடையாறு கே. லட்சுமணன் சிறிது காலம் நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில், 2014 ஆகத்து 19 இரவு 8:30 மணியளவில் தனது 80வது அகவையில் சென்னையில் காலமானார்.[5] இவருக்கு வசந்தா லட்சுமணன் என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் இந்துவதனா மாலியும் ஒரு பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடையார்_கே._லட்சுமணன்&oldid=3291319" இருந்து மீள்விக்கப்பட்டது