வைதேகி காத்திருந்தாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைதேகி காத்திருந்தாள்
சுவரொட்டி
இயக்கம்ஆர். சுந்தர்ராஜன்
தயாரிப்புதூயவன்
கதைஆர். சுந்தர்ராஜன்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
ரேவதி
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புஎம். சீனிவாசன்
பி. கிருட்டிணகுமார்
சண்டைப் பயிற்சிஹயாத்
கலையகம்அப்பு மூவீஸ்
விநியோகம்கே. ஆர். என்டர்பிரைசஸ்[1]
வெளியீடுஅக்டோபர் 23, 1984
ஓட்டம்140 நிமிடங்கள்
நீளம்4144 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வைதேகி காத்திருந்தாள் (Vaidehi Kathirunthal) 1984-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், ரேவதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் கதையானது இளையராஜா உருவாக்கிய பாடல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. எதிர் காலத்தில் ஏதாவது ஒரு படத்தில் பயன்படுத்தும் எண்ணத்தில் இப்பாடல்கள் உருவாக்கப்பட்டன. இத்திரைப்படம் 23 அக்டோபர் 1984 அன்று வெளியிடப்பட்டது. வணிக ரீதியில் வெற்றிப் படமாக அமைந்தது. விஜயகாந்த்தின் திரை வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இது தெலுங்கில் மஞ்சி மனசுலு (1986) மற்றும் கன்னடத்தில் பிரீத்தி நீ இல்லடே நா கெகிராலி (2004) என்ற பெயர்களில் மீண்டும் தயாரிக்கப்பட்டது.

கதைச் சுருக்கம்[தொகு]

பரட்டைத் தலை, தைத்துப் போடப்பட்ட அழுக்கு உடை மற்றும் தாடியுமாக இருக்கும் வெள்ளைச் சாமி ஓர் ஆதரவற்ற மனிதன் ஆவான். எவருடனும் வாய் திறந்து பேசாதவன். அந்தக் கிராமத்தில், தாகத்துக்கு தண்ணீரை தோளில் சுமந்து ஊர் மக்களுக்குத் தருவது அவனுக்கு ஒரு பழக்கம். கோயிலும், குளத்தாங்கரையுமே அவனுக்கு இருப்பிடம். ஆனால், அவனுக்கு பிறர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பாடும் திறன் இருந்தது. இரவாகிவிட்டால் பாடுவான். அது அந்த ஊரையே தாலாட்டும், மகிழ வைக்கும், மனதை வருடும் மற்றும் மயக்கும். வைதேகி என்பவள் தன்னுடைய சோகமான, குடிகாரத் தந்தையுடன் அக்கிராமத்தில் வாழ்ந்து வந்த ஓர் இளம் விதவை ஆவாள். வைதேகியின் திருமணத்திற்குப் பிறகு சில நிமிடங்களிலேயே மாப்பிள்ளையும், அவனது பெற்றோரும் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்ததால் பரிசல் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். அவளுக்கு நடனத் திறமை இருந்தது. எனினும், இந்நிகழ்வால் கிராமமானது அவளை தனிமைப்படுத்தியது. நடனம் பயில அவளை அனுமதிக்கவில்லை. செல்வந்தராக இருந்த போதும், தன் மகளின் முடிவைக் கண்டு அவளின் தந்தை குடிகாரராக மாறினார்.

ஒரு நாள் கோயிலின் சுவர்களில் வைதேகியின் பெயரை வெள்ளைச் சாமி கிறுக்குவதை சில கிராமத்துக்காரர்கள் கண்ட போது, இவர்கள் இருவரையும் பற்றிய வதந்தி பரவுகிறது. துன்புற்ற வைதேகி வெள்ளைச் சாமியை அணுகி, தன் பெயரை ஏன் சுவர்களில் எழுதுகிறான் என்று கேட்கிறாள். அவன் தன் கதையைக் கூறுகிறான். வைதேகி என்ற பெயரை தானும் கொண்டிருந்த, தன் விருப்பத்திற்குரிய பெண்ணை எவ்வாறு இழந்தான் என்பதைக் கூறுகிறான்.

வெள்ளைச் சாமியும், அவனது விதவைத் தாயும் தங்களது அரிசி ஆலையை நிர்வகித்துக் கொண்டு மற்றொரு கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். தன்னுடனேயே வளர்க்கப்பட்ட, தன் முறைப் பெண்ணான வைதேகியை மணந்து கொள்ளும் எண்ணம் அவனுக்கு இருந்தது. எண்ணம் இருந்த போதும், வேடிக்கைக்காக வெள்ளைச் சாமி அவளைப் புறக்கணிப்பதாக நடித்து வந்தான். வைதேகிக்காக திருமண நகைகளை வங்கியதற்குப் பிறகு, தனக்கு மற்றொரு பெண் நிச்சயிக்கப்பட்டிருப்பதாகக் கூறி கடைசியாக அவளிடம் குறும்பு செய்கிறான். கலங்கிய வைதேகி அரளி விதைகளை உண்கிறாள். அவளைக் காப்பாற்ற முயன்ற போது, அவளுக்குக் கொடுக்க நீர் இல்லாததால் அவள் வெள்ளைச் சாமியின் கைகளிலேயே இறக்கிறாள். சில வாரங்களிலேயே வெள்ளைச் சாமியின் தாயும் இறக்கிறார். சொத்து சுகம், வீடு வாசல் என சகலத்தையும் விட்டு விட்டு எங்கோ புறப்படுகிறான். தற்போதைய கிராமத்திற்கு வந்து வாழ ஆரம்பிக்கிறான்.

ஒரு குடிகலம் தண்ணீர் இல்லாததால் அவள் இறந்தாள், அதனால் தான் அந்த ஊருக்கே தண்ணீர் கொடுத்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறான். ஆறு முழுவதும் தண்ணீர் இருந்ததால் தன் வாழ்க்கை இவ்வாறு ஆனதையும் தற்போதைய வைதேகி குறிப்பிடுகிறாள். இருவரும் எதிரும், புதிருமான தங்களுடைய துயர வாழ்வுகள் மீது பரற்பரம் மரியாதை கொள்கின்றனர். நடராஜ் மற்றும் செங்கமலம் என்ற இருவரை சேர்த்து வைக்க தாங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்கின்றனர். ஒட்டு மொத்த கிராமத்தின் உக்கிரத்திலிருந்து, குறிப்பாக செங்கமலத்தின் இரக்கமற்ற அண்ணன் வெள்ளிக் கிழமை ராமசாமியிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணுகின்றனர். தொடர்ந்து நடந்த சண்டையில் ராமசாமியின் ஆட்கள் வெள்ளைச் சாமியைக் கொல்கின்றனர். நடராஜ் மற்றும் செங்கமலம் இணைகின்றனர். வைதேகி தனித்து விடப்படுகிறாள்.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

மூன்று நாட்களுக்கு என திட்டமிடப்பட்டிருந்ததற்கு முன்னதாகவே அரை நாளிலேயே காக்கிசட்டை (1985) திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் முடித்ததற்குப் பிறகு இளையராஜா தான் அந்நேரத்தில் ஓய்வாக இருந்ததால் பிற பாடல்களையும் உருவாக்கத் தொடங்கினார். இவ்வாறாக ஆறு பாடல்களை உருவாக்கினார். எதிர்காலத்தில் ஏதாவது ஒரு திரைப்படத்தில் இவற்றைப் பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் உருவாக்கினார். பயன்படுத்தப்படாத இளையராஜாவின் பாடல்களைக் கேட்கும் பழக்கம் கொண்டிருந்த தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியரான பஞ்சு அருணாசலம் அவற்றில் தான் விரும்பியவற்றை தனது எதிர்காலத் திரைப்படங்களுக்காகத் தேர்ந்தெடுக்கும் பழக்கம் கொண்டிருந்தார். வைதேகி காத்திருந்தாள் என பின்னாட்களில் உருவான திரைப்படத்திற்காக இந்த ஆறு பாடல்களில் ஒரு பாடலைப் பயன்படுத்த விரும்பினார். ஆனால், அனைத்து ஆறு சுருதிகளையுமே அவர் கேட்க வேண்டுமென இளையராஜா அறிவுறுத்தினார். தயாரிப்பாளரும் அவ்வாறே செய்தார். இவற்றை அடிப்படையாகக் கொண்டு வைதேகி காத்திருந்தாள் திரைக்கதையானது உருவாக்கப்பட்டது.[6][7]

மூன்று தெய்வங்கள் (1971) திரைப்படத்தில் வரும் "வசந்தத்தில் ஓர் நாள்" என்ற பாடலின் ஒரு வரியிலிருந்து இத்திரைப்படத்தின் தலைப்பானது பெறப்பட்டது. அப்பாடல் "வசந்தத்தில் ஓர் நாள் மணவறையோரம் வைதேகி காத்திருந்தாளோ" என்று வரும்.[8] இத்திரைப்படமானது ஆர். சுந்தர்ராஜனால் எழுதப்பட்டு, இயக்கப்பட்டது. அப்பு மூவீஸ் என்ற பெயரின் கீழ் தூயவன் இதைத் தயாரித்தார். அதே நேரத்தில் இதை வழங்குவதாக அருணாச்சலத்தின் பெயர் குறிப்பிடப்பட்டது. இப்படத்திற்கு ராஜராஜன் ஒளிப்பதிவு செய்தார். எம். சீனிவாசன் மற்றும் பி. கிருட்டிணகுமார் ஆகியோர் இப்படத்தை தொகுப்பு செய்தனர்.[5] அந்நேரத்தில் பல அதிரடித் திரைப்படங்களில் நடித்து விஜயகாந்த் ஒரு அதிரடிக் கதாநாயகனாக பெயர் பெற்றிருந்தார். இச்சமயத்தில் ஒரு "மென்மையான கதாபாத்திரத்தில்" நடிக்க விஜயகாந்த் ஒப்புக் கொண்டார்.[9] இத்திரைப்படத்தின் கதாநாயகியாக நடிக்க தொடக்கத்தில் அனிதா குப்புசாமிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. நடிப்பில் ஆர்வமில்லை என்று அவர் கூறியதால் அக்கதாபாத்திரமானது ரேவதிக்கு வழங்கப்பட்டது.[10] கன்னட நடிகை பிரமிளா ஜோஷை (பரிமளம் என்ற கதாபாத்திரத்தில்),[11] டி. எஸ். இராகவேந்திரா (ராகவேந்தர் என்ற கதாபாத்திரத்தில்) மற்றும் சிவன் குமார் ஆகியோர் இத்திரைப்படத்தில் அறிமுகமாயினர்.[2] இத்திரைப்படத்தில் காட்சிகள் பெரும்பாலும் நொய்யல் ஆற்றின் கரைகளில் எடுக்கப்பட்டன.[12]

பாடல்கள்[தொகு]

இத்திரப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார்.[13] இத்திரைப்படத்தின் "ராசாத்தி உன்னை" பாடல் நடபைரவி இராகத்திலும், "காத்திருந்து காத்திருந்து" பாடல் சிவரஞ்சனி இராகத்திலும்,[14] "அழகு மலராட" எனும் பாடல் சந்திரகௌன்சு இராகத்திலும்,[15] மற்றும் "இன்றைக்கு ஏன் இந்த" எனும் பாடல் ஆபோகி இராகத்திலும் அமைந்துள்ளது.[16] ஒய். ஜி. மகேந்திரனின் மனைவி சுதா இளையராஜாவின் மேலாளரால் இத்திரைப்படத்தில் பாட தொடர்பு கொள்ளப்பட்டார். ஆனால் இதை ஒரு குறும்பு தொலைபேசி அழைப்பு என்று தவறாக அவர் கருதியதால் இத்திரைப்படத்தில் பாட மறுத்து விட்டார்.[17] கம்பத்தில் உள்ள ஒரு திரையரங்கில் வைதேகி காத்திருந்தால் திரையிடப்பட்ட ஒவ்வொரு நாளும் "ராசாத்தி உன்னை" பாடலானது காட்டு யானைகளின் கவனத்தை ஈர்த்தது. அவை திரையரங்கின் அருகில் வரும். இப்பாடல் முடியும் வரை அங்கிருந்து விட்டு பிறகு காட்டுக்குள் செல்லும். இப்பாடல், "காத்திருந்து காத்திருந்து" மற்றும் "இன்றைக்கு ஏன் இந்த" ஆகிய மூன்று பாடல்களையும் பாடிய பாடகர் பி. ஜெயச்சந்திரன் மூன்று பாடல்களுமே ஒரு நாளுக்குள்ளாகவே பதிவு செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார்.[18]

எண் பாடல் இராகம் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 ராசாத்தி உன்னை நடபைரவி பி. ஜெயச்சந்திரன் வாலி 05:36
2 அழகு மலராட சந்திரகௌன்சு எஸ். ஜானகி, டி. எஸ். இராகவேந்திரா வாலி 05:31
3 ராசாவே உன்னை நடபைரவி பி. சுசீலா வாலி 03:25
4 மேகம் கருக்கயிலே அரிக்காம்போதி இளையராஜா, உமா ரமணன் பஞ்சு அருணாசலம் 04:28
5 இன்றைக்கு ஏன் இந்த ஆபோகி பி. ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் கங்கை அமரன் 04:29
6 காத்திருந்து சிவரஞ்சனி பி. ஜெயச்சந்திரன் வாலி 04:23
மொத்த நீளம்: 27:52

வெளியீடும், வரவேற்பும்[தொகு]

வைதேகி காத்திருந்தாள் 23 அக்டோபர் 1984[19] அன்று தீபாவளி தினத்தில் வெளியிடப்பட்டது.[20] தமிழ் பருவ இதழான ஆனந்த விகடன் அதன் 2 திசம்பர் 1984ஆம் தேதி பதிப்பில் இத்திரைப்படத்தைக் கண்ட பல்வேறு மக்களின் பார்வைகளை வெளியிட்டது. இப்பத்திரிகையின் குழுவானது இந்த விமர்சனங்களை அடிப்படையாகக் கொண்டு 100க்கு 44 என்ற மதிப்பீட்டை இத்திரைப்படத்திற்கு வழங்கியது. விமர்சனமானது இளையராஜாவின் இசையைப் பாராட்டியும், பல்வேறு கதைகள் ஒன்றிணைக்கப்பட்டு இருந்ததை விமர்சித்தும் குறிப்பிட்டிருந்தது.[21] கல்கி இதழின் விமர்சனமும் இதே போன்ற ஒரு பார்வையைக் கொண்டிருந்தது. இசையைப் பாராட்டியது. ஆனால், இப்படத்தில் பல பாராட்டுக்குரிய விசயங்கள் இருந்த போதிலும் கதை நன்முறையில் இல்லாத காரணத்தால் திரைப்படம் நன் முறையில் இல்லை என்று விமர்சித்திருந்தது.[22] நல்லவனுக்கு நல்லவன் மற்றும் மை டியர் குட்டிச் சாத்தான் என்னும் மலையாள மொழித் திரைப்படத்தின் தமிழ் பதிப்பு[20] போன்ற பிற தீபாவளி வெளியீடுகளிடமிருந்து வந்த போட்டியை எதிர்கொண்ட போதிலும் இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடைந்தது. திரையரங்குகளில் 100 நாட்களுக்கும் மேல் ஓடியது.[19] இத்திரைப்படம் தெலுங்கில் மஞ்சி மனசுலு (1986)[23] மற்றும் கன்னடத்தில் பிரீத்தி நீ இல்லடே நா கெகிராலி (2004) என்ற பெயர்களில் மீண்டும் தயாரிக்கப்பட்டது.[24]

மரபு[தொகு]

வைதேகி காத்திருந்தாள் விஜயகாந்தின் திரை வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.[25] திரைத் துறை பத்திரிக்கையாளர் சிறீதர் பிள்ளையின் கூற்றுப் படி, விஜயகாந்தை "கிராமப்புறம் மற்றும் புற நகர்ப் பகுதிகளின் இராஜாவாக" ஆக்கிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.[26] இத்திரைப்படம் படமாக்கப்பட்ட அருவியானது இத்திரைப்படத்திற்குப் பிறகு வைதேகி அருவி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[27] இத்திரைப்படத்தில் "பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?" என்று கவுண்டமணியின் கதாபாத்திரம் பேசும் வசனமானது தமிழ் நாட்டில் ஒரு பிரபலமான சொற்றொடராக உருவானது. ஒன்றை குறிப்பாக வேண்டுதல் மற்றும் தொடர்ந்து கேட்பதைக் குறிப்பிட இது பயன்படுத்தப்படுகிறது.[28] அரண்மனை (2014) திரைப்படத்தில் இதே பெயரையுடைய ஒரு பாடலுக்கு அகத் தூண்டுதலாக இது அமைந்துள்ளது.[29] சென்னையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சட்டைக் கடை இவ்வசனம் பொறிக்கப்பட்ட சட்டைகளை வெளியிட்டது. அக்கடையில் சிறப்பாக விற்பனையாகிய சட்டைகள் இவையாகும்.[30][31][32] கவுண்டமணியின் கதாபாத்திரப் பெயரான ஆல் இன் ஆல் அழகு ராஜா 2013ஆம் ஆண்டின் ஒரு திரைப்படத்திற்கு தலைப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.[33][34] அதே நேரத்தில் 2019ஆம் ஆண்டு திரைப்படமான பெட்ரோமாக்ஸ் இவ்வசனத்தில் இருந்து அதன் தலைப்பைப் பெற்றுள்ளது.[35]

மேற்கோள்கள்[தொகு]

 1. "சோதனைகளை வென்று 'மை டியர் குட்டிச்சாத்தான்' மகத்தான வெற்றி!" (in ta). மாலை மலர். 19 August 2013 இம் மூலத்தில் இருந்து 9 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140209124632/http://cinema.maalaimalar.com/2013/08/19232152/my-dear-kuttichathan-kr-cinema.html. 
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 ராம்ஜி, வி. (25 August 2018). "வைதேகி காத்திருந்தாள் – அப்பவே அப்படி கதை!". Kamadenu. Archived from the original on 25 March 2019. Retrieved 25 March 2019.
 3. நியூட்டன், ஷாலினி (14 February 2020). "நான்...செந்தில்" [I...Senthil]. Kungumam. https://web.archive.org/web/20200926044751/http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16565&id1=3&issue=20200214 from the original on 26 September 2020. Retrieved 26 September 2020. {{cite web}}: |archive-url= missing title (help)
 4. "நடிகை மேக்னாராஜ் திருமணம்: கிறிஸ்தவ, இந்து முறைப்படி நடந்தது". தினமலர். 3 May 2018 இம் மூலத்தில் இருந்து 15 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180615114426/http://cinema.dinamalar.com/tamil-news/68746/cinema/Kollywood/actress-mekna-raj-married-chiranjeevi-sarja.htm. 
 5. 5.0 5.1 Vaidehi Kathirunthal (motion picture). Appu Movies. 1984. Opening credits, from 0:00 to 2:44.
 6. Ramanujam, Srinivasa (31 May 2018). "The Ilaiyaraaja interview: 'Why should filmmakers know about music creation?'". தி இந்து இம் மூலத்தில் இருந்து 15 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180615113301/http://www.thehindu.com/entertainment/movies/tamil-film-composer-ilayaraaja-interview-on-his-75th-birthday/article24045311.ece. 
 7. "கற்பனையால் ரசிகர்களை வியக்க வைப்பதே வெற்றி; எல்லாவற்றையும் தாண்டிய இசை ஒன்று இருக்கிறது!: இசைஞானி இளையராஜா சிறப்பு நேர்காணல்" (in ta). இந்து தமிழ் திசை. 2 June 2018 இம் மூலத்தில் இருந்து 22 August 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190822082513/https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/131027-.html. 
 8. ராம்ஜி, வி. (23 October 2020). "'பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?'வுக்கு 36 வருடம்; 'ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு' காதலின் கீதம்; கேரக்டர் நடிகராக கேப்டன் அசத்திய 'வைதேகி காத்திருந்தாள்'!" (in ta). இந்து தமிழ் திசை இம் மூலத்தில் இருந்து 1 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201101070440/https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/594155-36-years-of-vaidhehi-kaatthirundhal.html. 
 9. Umashanker, Sudha (13 October 2000). "Settled in an invincible slot". தி இந்து இம் மூலத்தில் இருந்து 15 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180615113303/http://www.thehindu.com/2000/10/13/stories/09130226.htm. 
 10. "'வைதேகி காத்திருந்தாள்' படத்தில் ரேவதிக்கு பதில் இவரா நடிக்க வேண்டியது?.. மிஸ் பண்ண சோகத்தில் பிரபல பாடகி!". CineReporters. 2023-02-28. https://web.archive.org/web/20230328015947/https://cinereporters.com/anitha-kuppusamy-has-to-act-for-revathi-in-vaidehi-kaathirunthal-movie/ from the original on 28 March 2023. Retrieved 2023-12-29. {{cite web}}: |archive-url= missing title (help)
 11. வினோத், இரா. (6 October 2020). "மறைந்த கணவரின் 'கட் அவுட்'டுடன் வளைகாப்பு: கண்ணீரில் நனைந்த நடிகை மேக்னா ராஜ் குடும்பத்தார்". இந்து தமிழ் திசை. https://web.archive.org/web/20210905153710/https://www.hindutamil.in/news/cinema/south-cinema/587569-meghna-raj-family.html from the original on 5 September 2021. Retrieved 16 October 2020. {{cite web}}: |archive-url= missing title (help)
 12. "வைதேசி காத்திருந்தாள்... வைதேகி நீர்வீழ்ச்சி...!". Newstm. 19 January 2019. https://web.archive.org/web/20200926045230/https://newstm.in/tamilnadu/special-article/waitheshi-was-waiting-vaidegi-falls/c77058-w2931-cid302835-su6272.htm from the original on 26 September 2020. Retrieved 26 September 2020. {{cite web}}: |archive-url= missing title (help)
 13. "Vaidhegi Kaathirunthal (1984)". Raaga.com. Archived from the original on 3 December 2013. Retrieved 28 November 2013.
 14. Sundararaman 2007, ப. 138.
 15. Charulatha Mani (8 November 2013). "Of love and longing". தி இந்து இம் மூலத்தில் இருந்து 25 March 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190325071313/https://www.thehindu.com/features/friday-review/music/of-love-and-longing/article5329771.ece. 
 16. Charulatha Mani (2 March 2012). "A Raga's Journey – Arresting Abhogi". தி இந்து இம் மூலத்தில் இருந்து 6 October 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181006235026/https://www.thehindu.com/features/friday-review/music/a-ragas-journey-arresting-abhogi/article2954010.ece. 
 17. Rajinikanth-க்கு கல்யாணம் பண்ணி வச்சதே நாங்கதான்! - YG Mahendran & Sudha Reveals Unknown Stories. BehindwoodsTV. 9 February 2020. Event occurs at 18:28. https://web.archive.org/web/20220531110533/https://www.youtube.com/watch?v=yz0EV8JVZUI from the original on 31 May 2022. Retrieved 31 May 2022 – via YouTube. {{cite AV media}}: |archive-url= missing title (help)
 18. "Ilaiyaraaja's song attracts elephants to a theatre". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2 June 2020 இம் மூலத்தில் இருந்து 29 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20200929081123/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/when-ilaiyaraajas-song-attracted-elephants-to-a-theatre/articleshow/76153802.cms. 
 19. 19.0 19.1 "சிவாஜி, கமல், ரஜினி படங்களுக்கு வசனம் எழுதிய தூயவன்" (in ta). மாலை மலர். 17 July 2017 இம் மூலத்தில் இருந்து 15 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180615095920/https://www.maalaimalar.com/Cinema/CineHistory/2017/07/17221034/1096877/cinima-history-thuyavan.vpf. 
 20. 20.0 20.1 Menon, Vishal (12 November 2018). "My Dear Kuttichathan: The Unforgettable Story of India's First 3D Film". அனுபமா சோப்ரா. https://web.archive.org/web/20201125075043/https://www.filmcompanion.in/features/malayalam-features/my-dear-kuttichathan-the-unforgettable-story-of-indias-first-3d-film/ from the original on 25 November 2020. Retrieved 14 July 2019. {{cite web}}: |archive-url= missing title (help)
 21. "சினிமா விமர்சனம்: வைதேகி காத்திருந்தாள்" [Movie Review: Vaidehi Kaathirundhal]. ஆனந்த விகடன். 2 December 1984. https://archive.today/20200220151609/https://www.vikatan.com/arts/nostalgia/43389--2 from the original on 20 February 2020. Retrieved 21 September 2019. {{cite web}}: |archive-url= missing title (help)
 22. "வைதேகி காத்திருந்தாள்". Kalki. 25 November 1984. p. 28. https://archive.today/20230221055322/https://archive.org/details/kalki1984-11-25/page/n29/mode/2up from the original on 21 February 2023. Retrieved 21 February 2023. {{cite magazine}}: |archive-url= missing title (help)
 23. Atluri, Sri (16 September 2005). "Mohan Gandhi – Interview". Telugucinema.com. Archived from the original on 5 January 2006. Retrieved 7 November 2013.
 24. "Preethi Nee Illade Naa Hegirali (ಪ್ರೀತಿ ನೀ ಇಲ್ಲದೆ ನಾ ಹೇಗಿರಲಿ)". Chiloka. https://web.archive.org/web/20220531134229/https://chiloka.com/movie/preethi-nee-illade-naa-hegirali-2004 from the original on 31 May 2022. Retrieved 31 May 2022. {{cite web}}: |archive-url= missing title (help)
 25. "Captain comes under attack". IndiaGlitz. 29 December 2011. Archived from the original on 15 October 2013. Retrieved 7 November 2013.
 26. Pillai, Sreedhar (30 October 2002). "Still the 'Captain'". தி இந்து இம் மூலத்தில் இருந்து 21 August 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030821122103/http://www.thehindu.com/thehindu/mp/2002/10/30/stories/2002103000220200.htm. 
 27. "Top 4 Places to Visit in Coimbatore with Family". லெமன் ட்ரீ ஹோட்டல்கள். 15 May 2018. https://web.archive.org/web/20200205203620/http://blog.lemontreehotels.com/coimbatore-visiting-places-with-family/ from the original on 5 February 2020. Retrieved 26 September 2020. {{cite web}}: |archive-url= missing title (help)
 28. "Filmi dialogues used in everyday lingo". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 17 August 2013 இம் மூலத்தில் இருந்து 7 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20131107220502/http://articles.timesofindia.indiatimes.com/2013-08-17/news-interviews/41417948_1_mankatha-superstar-rajinikanth-sivaji. 
 29. M, Serena Josephine (30 July 2016). "Light goes out of petromax lamps". தி இந்து இம் மூலத்தில் இருந்து 22 August 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20190822083601/https://www.thehindu.com/news/national/tamil-nadu/Light-goes-out-of-petromax-lamps/article14516677.ece. 
 30. Vijayan, Naveena (26 August 2013). "Flaunt the Tamizhan in you". தி நியூ இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 9 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131109004208/http://newindianexpress.com/cities/chennai/Flaunt-the-Tamizhan-in-you/2013/08/26/article1751730.ece. 
 31. Parthasarathy, Anusha (16 March 2012). "A 'Tee' kadai!". தி இந்து இம் மூலத்தில் இருந்து 9 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131109010217/http://www.thehindu.com/features/metroplus/a-tee-kadai/article3002543.ece. 
 32. Krishnakumar, Anupama (5 May 2012). "A Melange of Inspiring Measures". Spark இம் மூலத்தில் இருந்து 17 June 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190617083755/https://www.sparkthemagazine.com/a-melange-of-inspiring-measures/. 
 33. "Cracker of a Diwali". Bangalore Mirror. 29 October 2013 இம் மூலத்தில் இருந்து 21 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230221054725/https://bangaloremirror.indiatimes.com/entertainment/south-masala/diwali-release-south/articleshow/24830096.cms. 
 34. "City Times – Comic caper". Khaleej Times. 31 October 2013 இம் மூலத்தில் இருந்து 9 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131109014022/http://www.khaleejtimes.com/citytimes/inside.asp?xfile=%2Fdata%2Fcitytimes%2F2013%2FOctober%2Fcitytimes_October234.xml&section=citytimes. 
 35. "Tamannaah's next with Athe Kangal-fame Rohin Venkatesan titled Petromax; Title look revealed". சினிமா எக்ஸ்பிரஸ். 3 July 2019 இம் மூலத்தில் இருந்து 6 August 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190806065054/https://www.cinemaexpress.com/stories/news/2019/jul/03/tamannaahs-next-with-athe-kangal-fame-rohin-venkatesan-titled-petromax-12716.html. 

நூல்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைதேகி_காத்திருந்தாள்&oldid=3875938" இலிருந்து மீள்விக்கப்பட்டது