மலாயா பொதுவுடைமை கட்சி
மலாயா பொதுவுடைமை கட்சி Malaya Communist Party | |
சுருக்கக்குறி |
|
---|---|
குறிக்கோளுரை | உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபடுங்கள் |
தொடக்கம் | ஏப்ரல் 1930 |
கலைப்பு | 2 டிசம்பர் 1989 |
செய்தி ஏடு | மின் செங் பாவ் (Min Sheng Pau) |
துணை இராணுவப் பிரிவு |
|
உறுப்பினர் (1939) | 40,000 |
கொள்கை | கம்யூனிசம் மார்க்சிசம் லெனினிசம் மாவோயிசம் |
அரசியல் நிலைப்பாடு | இடதுசாரி கருத்தியல் |
நிறங்கள் | சிகப்பு |
கட்சிக்கொடி | |
மலாயா பொதுவுடைமை கட்சி அல்லது மலாயா கம்யூனிஸ்டு கட்சி (மலாய்: Parti Komunis Malaya; ஆங்கிலம்: Communist Party of Malaya; சீனம்: 马来亚共产党) என்பது மலேசியாவில் அதிகாரப்பூர்வமாக அறியப்பட்ட கட்சி. 1930-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தக் கட்சி மார்க்சிசம்; லெனினிசம்; மாவோயிசம் கொள்கைகளை முன்னெடுத்த கட்சி. அதே வேளையில் ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்த அரசியல் கட்சியும் ஆகும்.
இந்தக் கட்சி மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம்; மலாயா தேசிய விடுதலை இராணுவம் ஆகிய இரண்டு இராணுவங்கள் தோன்றுவதற்கு மூல காரணமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின் போது சப்பானியர்கள் மலாயாவை ஆக்கிரமிப்பதற்கு எதிராக இந்தக் கட்சி எதிர்ப்பு முயற்சிகளை மேற்கொண்டது.
பின்னர் மலாயா அவசரகாலத்தின் போது பிரித்தானிய பேரரசிற்கு எதிராக தேசிய விடுதலைப் போரை நடத்தியது. 1957-ஆம் ஆண்டில் மலாயா கூட்டமைப்பில் இருந்து பிரிட்த்தானியக் காலனித்துவம் வெளியேறியது. அதற்கு முன்னர் மலாயாவில் ஒரு சோசலிச அரசை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது.[2]
மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக இந்தக் கட்சி பற்பல கொரில்லா பிரசாரங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டது. 1989-ஆம் ஆண்டில் இந்தக் கட்சி கலைக்கப்பட்டது. அதற்கு முன்னர் கட்சியில் இருந்த அனைவரும் சரண் அடைந்தார்கள்.
வரலாறு
[தொகு]உருவாக்கம்
[தொகு]1930 ஏப்ரல் மாதம் தென் கடல் பொதுவுடைமை கட்சி (South Seas Communist Party) கலைக்கப்பட்டது. இந்தக் கட்சி சிங்கப்பூரில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கி வந்தது. இதற்குப் பதிலாக மலாயா பொதுவுடைமை கட்சி தோற்றுவிக்கப்பட்டது.[3]
மலாயா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளும், மலாயா பொதுவுடைமை கட்சியின் முதன்மை இலக்காக இருந்தன. என்றாலும் தாய்லாந்து மற்றும் கிழக்கிந்திய டச்சு நிலப்பகுதிகளிலும், மலாயா பொதுவுடைமை கட்சி தீவிரமாக இருந்தது.
வளர்ச்சி
[தொகு]மலாயா பொதுவுடைமை கட்சி, பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் காலத்தில் ஒரு சட்டவிரோத அமைப்பாகச் செயல்பட்டது. 1930 ஏப்ரல் 29-ஆம் தேதி சிங்கப்பூர் நாசிம் சாலையில் காலியாக இருந்த ஒரு வீட்டில் சிங்கப்பூர் போலீசார் அதிரடிச் சோதனை நடத்தினார்கள்.
இந்தச் சோதனை மலாயா பொதுவுடைமை கட்சியை கிட்டத்தட்ட ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது. ஏனெனில் அந்தக் கட்சியின் அசல் நிறுவன உறுப்பினர்கள் எட்டு பேர் கைது செய்யப் பட்டார்கள்.[4]
1931 ஜூன் முதல் டிசம்பர் வரை கட்சி உறுப்பினர்கள் பலர் கைது செய்யப் பட்டனர். பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கட்டத்தில் மலாயா பொதுவுடைமை கட்சிக்கு 1,500 உறுப்பினர்களும்; 10,000 அனுதாபிகளும் இருந்தனர்.[5]
பத்து ஆராங் நிலக்கரி சுரங்க வேலைநிறுத்தம்
[தொகு]இப்படிச் சிற்சில பின்னடைவுகள் இருந்த போதிலும், தொழிற்சங்க இயக்கங்களின் செயல்பாடுகளில் மலாயா கம்யூனிஸ்டு கட்சி தன்செல்வாக்கைப் பெற்று வந்தது. அந்த வகையில் பல வேலைநிறுத்தங்களுக்கு ஏற்பாடுகள் செய்தது. குறிப்பாக 1935-ஆம் ஆண்டில் பத்து ஆராங் நிலக்கரி சுரங்கத்தில் நடந்த வேலைநிறுத்தம்.
மலாயா பொதுவுடைமை கட்சி, சில பணியிடங்களில் தொழிலாளர் குழுக்களையும் அமைத்தது. இந்தத் தொழிலாளர் குழுக்கள் வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டன. இருப்பினும் அந்தத் தொழிலாளர் குழுக்களும் வேலைநிறுத்தங்களும் அரசாங்கத்தால் உடனடியாக நசுக்கப்பட்டன.
மலாயா சீனர்களின் ஜப்பானிய எதிர்ப்பு உணர்வு
[தொகு]வேலைநிறுத்தங்களுக்குத் தூண்டுகோலாக இருந்த சீனர்கள் பலர் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். அங்கு சீன தேசியவாத அரசாங்கத்தால் கம்யூனிஸ்டுகள் எனும் பெயரில் சிலர் தூக்கிலிடப் பட்டனர்.[6]
1937-ஆம் ஆண்டில் சீனா மீது ஜப்பான் படையெடுத்தது. அதன் பிறகு மலாயாவில் இருந்த கொமிந்தாங் (Malayan Kuomintang) பிரிவினருக்கும் மலாயா கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே ஒரு நல்லிணக்கம் ஏற்பட்டது.
கொமிந்தாங் பிரிவின் கீழ், மலாயா கம்யூனிஸ்டு கட்சி மேலும் எளிதாகச் செயல்பட முடிந்தது. அந்தக் கட்டத்தில் மலாயாவில் வாழ்ந்த சீனர்களிடையே ஜப்பானிய எதிர்ப்பு உணர்வு மேலோங்கி நின்றது.
அதனால் மலாயா கம்யூனிஸ்டு கட்சி, கூடுதலாக உறுப்பினர்களைச் சேர்க்க முடிந்தது. சீனாவின் பாதுகாப்பு வளையம் தங்களிடம் உள்ளது எனும் பார்வையின் கீழ், தங்களின் கட்சிக்கு நிதி திரட்ட நல்ல ஒரு வாய்ப்பும் கிடைத்தது.[7]
பிரித்தானிய அரசாங்கத்தின் உளவாளி
[தொகு]இந்தக் கட்டத்தில், 1939 ஏப்ரல் மாதம் இலாய் டெக் (Lai Teck)[8] அல்லது Phạm Văn Đắc[9] என்பவர் மலாயா பொதுவுடைமை கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்குத் தேர்வு செய்யப் பட்டார். வியட்நாம் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்.[10] இவர் மலாயா பிரித்தானிய அரசாங்கத்தின் உளவாளி என்பது பின்னர் தெரிய வந்தது. இவர் ஏற்கனவே வியட்நாமில் பிரெஞ்சுக்காரர்களின் உளவாளியாக இருந்தவர்.
லாய் டெக்கை வியட்நாமில் இருந்து மலாயாவுக்கு இரகசியமாகக் கொன்டு வந்ததே மலாயா பிரித்தானிய அரசாங்கம் தான். மலாயா பொதுவுடைமை கட்சிக்குள் வேரூன்றச் செய்ததும் அதே மலாயா பிரித்தானிய அரசாங்கம் தான்.[11]
இருப்பினும் இலாய் டெக் பற்றிய இரகசியங்கள் தெரியாமலேயே கட்சி தொடர்ந்து திறம்பட செயல்பட்டு வந்தது. உறுப்பினர் எண்ணிக்கையும் அதிகரித்தது. 1939-ஆம் ஆண்டில் மலாயா பொதுவுடைமை கட்சியில் சுமார் 40,000 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் பாதி பேர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள்.
மத்திய செயற்குழு
[தொகு]மலாயா பொதுவுடைமை கட்சிக்கு 12 முதல் 15 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மத்திய செயற்குழு தலைமை தாங்கியது. மத்திய செயற்குழு அமர்வில் இல்லாத போது கட்சியை நடத்துவற்கு ஓர் அரசியல் பிரிவு (Politburo) இருந்தது. அதற்கு 6 பேர் நியமிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில மத்திய செயற்குழு இருந்தது, ஒவ்வொரு மாநிலமும் பல மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. கட்சிக் கூட்டங்கள் அவ்வப்போது நடத்தப்பட்டன.
மலாயா பொதுவுடைமை கட்சிக்கு 12 முதல் 15 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மத்திய செயற்குழு தலைமை தாங்கியது. மத்திய செயற்குழு அமர்வில் இல்லாத போது கட்சியை நடத்துவற்கு ஓர் அரசியல் பிரிவு (Politburo) இருந்தது. அதற்கு 6 பேர் நியமிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில மத்திய செயற்குழு இருந்தது, ஒவ்வொரு மாநிலமும் பல மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. கட்சிக் கூட்டங்கள் அவ்வப்போது நடத்தப்பட்டன.
இரண்டாம் உலக போர்
[தொகு]1941 டிசம்பர் 8-ஆம் தேதி சப்பானிய அரசு மலாயா மீது படையெடுத்தது. இந்தச் சமயத்தில், வேறுவழி இல்லாமல் பிரித்தானிய காலனித்துவ அதிகாரிகள் மலாயா பொதுவுடைமை கட்சியின் இராணுவ ஒத்துழைப்பை ஏற்றுக் கொண்டனர். ஒரு காலத்தில் பரம விரோதிகளாக இருந்தவர்கள். ஆபத்து வந்தது. நண்பர்களாகி விடார்கள்.
இடதுசாரி அரசியல் கைதிகள்
[தொகு]அடுத்தக் கட்டமாக 1941 டிசம்பர் 15-ஆம் தேதி மலாயாவிலும் சிங்கப்பூரிலும் இருந்த இடதுசாரி அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப் பட்டார்கள். இவர்களில் பெரும்பாலோர் மலாயா பொதுவுடைமை கட்சியின் ஆதரவாளர்களாகும்.
1941 டிசம்பர் 20-ஆம் தேதி, பிரித்தானிய இராணுவத்தினர், சிங்கப்பூரில் அவசரம் அவசரமாக 101-ஆவது இராணுவச் சிறப்புப் பயிற்சி பள்ளியை (101st Special Training School) அமைத்தார்கள். மலாயா பொதுவுடைமை கட்சி உறுப்பினர்களுக்கு கொரில்லா போரில் பயிற்சி அளிக்கத் தொடங்கினார்கள்.
101-ஆவது இராணுவச் சிறப்புப் பயிற்சி பள்ளி
[தொகு]இந்தப் பயிற்சியாளர்கள், இந்தப் பயிற்சிக்கு முன்னர் மிகக் குறைந்த ஆயுதங்களைக் கொண்டு பிரித்தானியரையே எதிர்த்தவர்கள். சிங்கப்பூரில் சப்பானியருக்கு எதிரான பிரித்தானிய பாதுகாப்பு அரண் சரிவதற்கு முன்னர் ஏறக்குறைய 165 மலாயா பொதுவுடைமை கட்சி உறுப்பினர்கள், கொரில்லா போரில் பயிற்சி பெற்று விட்டனர்.
இந்தப் போராளிகள், அவசரம் அவசரமாகக் கலைந்து சென்று, சப்பானிய இராணுவத்தை எதிர்க்க முயன்றனர். 1942 பிப்ரவரி 15-ஆம் தேதி, சிங்கப்பூர் ஜப்பானியர்களிடம் விழுவதற்குச் சில தினங்களுக்கு முன்னர், மலாயா பொதுவுடைமை கட்சி, ஜொகூர் மாநிலத்தில் ஆயுத எதிர்ப்பிற்கு ஏற்பாடு செய்தது.
'அதன் பின்னர் நான்கு ஆயுதப் படையணிகளை மலாயா பொதுவுடைமை கட்சி உடனடியாக உருவாக்கியது. ஏற்கனவே 101-ஆவது இராணுவச் சிறப்புப் பயிற்சி பள்ளியில் பயின்றவர்கள் அந்தப் படையணிகளுக்குத் தலைமை தாங்கினார்கள்.
மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம்
[தொகு]அந்த நான்கு ஆயுதப் படையணிகள் தான் பின்னர் காலத்தில் மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம் (MPAJA - Malayan People's Anti-Japanese Army) என்று அழைக்கப்பட்டது. 1943 மார்ச் மாதத்தில் இந்தப் படையினர் சப்பானியர்களுக்கு எதிராகத் தாக்குதல்களைத் தொடங்கினார்கள்.
இந்தக் குழுக்கள் மறைந்து இருந்து தாக்கியதால் சப்பானியர்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு சப்பானியர்கள் ஒரு மாற்றுவழியைக் கண்டுபிடித்தனர். மலாயா சிங்கப்பூரில் வாழ்ந்த சாதாரண சீனர்களைப் பழிவாங்கத் தொடங்கினார்கள். அதுதான் சப்பானியர்களுக்கு அப்போது தெரிந்த எளிய மாற்றுவழி.
சீனர்கள் பழிவாங்கப் பட்டனர்
[தொகு]ஏராளமான மலாயா சீனர்கள் சப்பானியர்களால் தொடர்ந்து பழிவாங்கப் பட்டனர். அதனால் பெரும்பாலான சீனர்களுக்குப் பொருளாதார சிரமங்கள். நகரங்களை விட்டு வெளியேறினார்கள். அவர்கள் வன விளிம்புகளில் குழுக்களாக வாழத் தொடங்கினார்கள்.
அங்கு அவர்கள் சப்பானிய எதிர்ப்பு இராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு, உணவு மற்றும் பிற உதவிகள் வழங்குவதில் முக்கியப் பின்னணியாக மாறினார்கள்.
பெண்களின் பங்களிப்பு
[தொகு]1942-ஆம் ஆண்டின் நடுப் பகுதியில், மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவத்தின் வலிமை கூடியது. முதல் படையணியில் ஏறக்குறைய 100 பேர்; இரண்டாம் படையணியில் ஏறக்குறைய 160 பேர்; மூன்றாம் படையணியில் ஏறக்குறைய 360 பேர்; நான்காம் படையணியில் ஏறக்குறைய 250 பேர்.[12]
இந்தக் கட்டத்தில் 5-ஆவது; 6-ஆவது; மற்றும் 7-ஆவது படையணிகளும் உருவாக்கப்பட்டன. ஒரு கூடுதலான தகவல். மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம் பெண்களையும் உள்ளடக்கியது. சீனப் பெண்கள் அதிகமாக இருந்தனர்.
மாவோயிச வழிகளில் இந்த இராணுவம் செயல்பட்டது. பெண்களின் பங்களிப்பு இருந்ததால், இந்த மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம், ஒரு பெரிய அரசியல் சக்தியாகவும் விளங்கியது.
பத்துமலை குகையில் இரகசிய மாநாடு
[தொகு]1942 பிப்ரவரி 15-ஆம் தேதி சப்பானியர்களிடம் சிங்கப்பூர் வீழ்ந்தது. மலாயா பொதுவுடைமை கட்சியின் பொதுச் செயலாளர் இலாய் தெக் கைது செய்யப்பட்டார். சப்பானியர்களின் ஆதரவாளராக மாறிய இலாய் தெக், மலாயா கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம் பற்றிய தகவல்களை சப்பானியர்களுக்கு வழங்கும் இரட்டை முகமாக மாறினார்.
1942 செப்டம்பர் 1-ஆம் தேதி கோலாலம்பூருக்கு வடக்கே பத்துமலை குகைகளில் ஒன்றில் மலாயா பொதுவுடைமை கட்சித் தலைவர்கள்; மற்றும் மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவத் தலைவர்களின் இரகசிய மாநாடு நடைபெற்றது. ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டுத் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். இலாய் தெக் மூலமாக சப்பானியர்களுக்கு அந்த இரகசியம் தெரிய வந்தது.
ஜப்பானியர்களின் அதிரடித் தாக்குதல்
[தொகு]விடியல் காலையில் ஜப்பானியர்கள் அதிரடித் தாக்குதல் நடத்தினார்கள். அந்தத் தாக்குதலில் கம்யூனிஸ்டு தலைவர்கள் பெரும்பாலோர் கொல்லப் பட்டார்கள். உயர்மட்டத் தலைவர்களின் இழப்பு, ஜப்பானிய எதிர்ப்பு இராணுவத்தைப் பெரிதும் பாதித்தது.
கட்சியின் இராணுவத் தளபதிகளாக இருந்தவர்கள் படைப் பிரிவுகளின் தலைவர்களாக மாற்றம் செய்யப் பட்டார்கள்.[13] இந்தப் பின்னடைவைத் தொடர்ந்து, மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம் தன் ஈடுபாடுகளைத் தவிர்த்தது. கட்சியின் ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்தியது, 1943-ஆம் ஆண்டு இடைப் பகுதியில் அந்த இராணுவத்தில் 4,500 வீரர்கள் இருந்தார்கள்.[14]
தென்கிழக்கு ஆசியா இராணுவக் கூட்டணி
[தொகு]மே 1943 மே மாதம் தொடங்கி, பிரித்தானிய அதிரடிப்படை கமாண்டோக்கள் மலாயாவில் ஊடுருவினார்கள். மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவத்துடன் தொடர்பு கொண்டார்கள்.
1944-ஆம் ஆண்டின் முற்பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே ஓர் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது. அதன் மூலம் தென்கிழக்கு ஆசியா இராணுவக் கூட்டணியின் (Allied South East Asia Command) கட்டளைகளை மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம் ஏற்றுக் கொண்டால், ஆயுதங்களையும் பொருட்களையும் வழங்குவது எனும் உடன்படிக்கை.
அந்த வகையில் 1945-ஆம் ஆண்டு தொடக்கத்தில் மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவத்திற்கு ஆயுதங்கள் கிடைக்கத் தொடங்கின.
ஜப்பான் சரண் அடைந்தது
[தொகு]1945 ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஜப்பான் சரண் அடைந்தது. ஜப்பானிய படைகள் கிராமப் புறங்களில் இருந்து பின்வாங்கின. மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவத்திற்கு அதிர்ச்சி கலந்த வியப்பு. எதிர்பாராத முடிவு. 1945 செப்டம்பர் 3-ஆம் தேதி வரையில் பிரித்தானிய துருப்புகள் மலாயா; சிங்கப்பூருக்கு வந்து சேரவில்லை. செப்டம்பர் 8-ஆம் தேதி தான் வந்தது.
ஜப்பானிய படைகள் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தின. அந்த இடத்தை மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம் நிரப்பியது. பல இடங்களில், குறிப்பாக சீனப் பகுதிகளில், ம.ம.ஜ.எ.இ. (மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம்) வீரர்கள் காட்டில் இருந்து வெளிவந்த போது அவர்களைப் போது மக்கள் ’ஹீரோ’க்களாக வரவேற்றனர். ம.ம.ஜ.எ.இராணுவத்தின் அதிகாரத்தை ஆங்கிலேயர்கள் அங்கீகரித்தனர்.
இதற்கிடையில், ம.ம.ஜ.எ.இராணுவத்தினர் ஜப்பானிய ஆயுதங்களைக் கைப்பற்றினார்கள். சுதந்திரமாக ஆட்சேர்ப்பு செய்தார்கள். தங்கள் இராணுவத்தில் 8-ஆவது படைப் பிரிவை உடனடியாக உருவாக்கினார்கள். 6,000 க்கும் அதிகமானோர் ம.ம.ஜ.எ.இராணுவத்தில் சேர்ந்து கொண்டார்கள்.[15] அதே நேரத்தில் ம.ம.ஜ.எ.இராணுவத்தினர் மலாயா போலீஸ் படையில் உள்ள கூட்டுப் பணியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் எதிராக பழிவாங்கல்களைத் தொடங்கினர்.[15][16]
கோலாலம்பூரில் பிரித்தானிய இராணுவ நிர்வாகம்
[தொகு]1945 செப்டம்பர் 12-ஆம் தேதி கோலாலம்பூரில் பிரித்தானிய இராணுவ நிர்வாகம் (British Military Administration) நிறுவப்பட்டது.[17] அந்த ஆண்டின் பிற்பகுதியில் மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம் தயக்கத்துடன் தன் இராணுவத்தைக் கலைக்க ஒப்புக்கொண்டது. ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன.[18]
ஜப்பானிய எதிர்ப்பு இராணுவ வீரர்கள் 6800 பேர் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப் பட்டனர். ஆனால் ஆயுதங்களில் கைத்துப்பாக்கிகளை மட்டும் அவர்கள் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள்.[19] மலாயா கம்யூனிஸ்டு கட்சி சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் பிரித்தானிய இராணுவ நிர்வாகத்தின் அடக்குமுறை இல்லாமல் செயல்பட முடிந்தது.
வேலைநிறுத்தங்கள்; ஆர்ப்பாட்டங்கள்
[தொகு]மலாயா கம்யூனிஸ்டு கட்சி ஒரு 'தேசிய முன்னணி' கொள்கையை ஏற்றுக் கொண்டது. சட்டபூர்வமான வழிகளில் தேசிய சுதந்திரத்திற்காகப் பணியாற்ற ஒப்புக் கொண்டது. மோசமான பொருளாதார நிலைமைகள் காரணமாக, மலாயா சிங்கப்பூரில் பற்பல வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
இதில் மலாயா கம்யூனிஸ்டு கட்சியும் ஒரு தீவிரமான பங்கைக் கொண்டு இருந்தது. அந்தக் கட்சியைச் சேர்ந்த சிலர் அரசாங்க ஆயுதப்படையால் சுட்டுக் கொல்லப் பட்டனர். மற்றும் சிலர் நாடுகடத்தப்பட்டனர்.
மலாயா மக்களாட்சி மன்றம் (Malayan Democratic Union) மற்றும் மலாய் தேசியவாதக் கட்சி (Malay Nationalist Party) போன்ற நாடாளுமன்றக் கட்சிகள் மூலமாக மலாயா கம்யூனிஸ்டு கட்சி தன் செல்வாக்கை நிலை நிறுத்தி வந்தது.[20]
பொதுச் செயலாளர் மீது அவநம்பிக்கை
[தொகு]1946-ஆம் ஆண்டில், மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைத்துவத்தின் மீது கட்சி உறுப்பினர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. பொதுச் செயலாளர் லாய் டெக் துரோகம் செய்து இருக்கலாம் எனும் வதந்திகள் பரவத் தொடங்கின. ஆக அது குறித்து விசாரணைகள் தொடங்கின.[21]
1946-ஆம் ஆண்டு மார்ச் மாதம் விசாரணைக்கு நாள் குறிக்கப் பட்டது. ஆனால் அதற்குள் அவர் கட்சி நிதிகளுடன் நாட்டை விட்டு ஓடி விட்டார். லாய் டெக் தப்பி ஓடிய விசயத்தை மத்திய செயற்குழு ஒரு வருட காலம் இரகசியமாக வைத்து இருந்தது.
லாய் டெக்கிற்குப் பதிலாக 26 வயதான சின் பெங் புதிய பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் பேராக் மாநிலத்தில் இயங்கிய மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவத்தின் 5-ஆவது படைப் பிரிவில் ஒரு மூத்த அதிகாரியாகப் பணியாற்றியவர்.
மலாயா அவசரகாலம்
[தொகு]1948 ஜூன் மாதம் 16ஆம் தேதி பேராக், சுங்கை சிப்புட்டில் மூன்று ஐரோப்பிய தோட்ட நிர்வாகிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அன்று காலை 8.30க்கு சுங்கை சிப்புட், எல்பில் தோட்டத்தின் நிர்வாகி ஏ.இ.வால்கர் (Arthur Walker (வயது 50); அவருடைய அலுவலக அறையில் சுட்டுக் கொல்லப் பட்டார்.
அதற்கு அடுத்து, முப்பது நிமிடங்கள் கழித்து இரண்டு கி.மீ. தொலைவில் இருந்த பின் சூன் தோட்ட நிர்வாகி ஜே.எம்.எலிசன் (John Allison (வயது 55) என்பவரும், அவருடைய துணை நிர்வாகி இயான் கிறிஸ்டியன் 9Ian Christian) என்பவரும் சுட்டுக் கொல்லப் பட்டனர்.[22] இந்த அசம்பாவிதங்கள் மலாயாவை ஆட்சி செய்த பிரித்தானியர்களை நிலை தடுமாறச் செய்தது. அதைத் தொடர்ந்து பிரித்தானியர்கள் அவசரகாலத்தைப் பிரகடனம் செய்தனர்.
மலாயா கம்யூனிஸ்டு கட்சிக்குத் தடை
[தொகு]அவசரகாலம் பிரகடனம் செய்யப்பட்டதும் மலாயா கம்யூனிஸ்டு கட்சி முற்றாகத் தடை செய்யப்பட்டது. அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உதவிகள் செய்த பொதுமக்களும் கைது செய்யப்பட்டனர். விசாரனைகள் இல்லாத கைது நடவடிக்கை தீவிரமாக அமல் படுத்தப்பட்டது.[23]
அதன் பின்னர் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்கள் கிராமப்புறப் பகுதிகளில் அடைக்கலம் அடைந்தனர். மலாயா கம்யூனிஸ்டு கட்சி என்பது இந்தக் கட்டத்தில் மலாயா மக்கள் விடுதலைப் படை (Malayan Peoples Liberation Army) என்று மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும் கிராமப்புற மக்களின் வாழ்வில் சித்ரவதைகளும் தொல்லைகளும் தொடர்ந்தன.[24]
மலாயா விடுதலை அடைந்தது
[தொகு]1957 ஆகஸ்டு மாதம் 31ஆம் தேதி மலாயா சுதந்திரம் அடைந்தது. மறு ஆண்டில் பேராக், தெலுக் இந்தானில் கம்யூனிஸ்டு கொரில்லாக்கள் கடைசியாக ஒரு தாக்குதல் நடத்தினர். அதுதான் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் கடைசி தாக்குதல்.
அந்தத் தாக்குதலில் வெற்றி பெற முடியாமல் போகவே, தாக்குதல் நடத்திய அனைவரும் அரசாங்கக் காவல் துறையிடம் சரண் அடைந்தனர். மலாயாவில் ஆங்காங்கே எஞ்சியிருந்த கம்யூனிஸ்டு கொரில்லாக்கள் தென் தாய்லாந்து எல்லையில் தஞ்சம் அடைந்தனர். 1960 ஜுலை 31-இல் அவசரகாலம் முடிவிற்கு வந்ததாக மலாயா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதன் பின்னர் சின் பெங், தென் தாய்லாந்தில் இருந்து சீனா, பெய்ஜிங்கிற்குச் சென்றார். அவருடன் முக்கியமான சிலரும் சென்று சீனாவில் அடைக்கலம் அடைந்தனர்.[25]
மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் இறுதி நாட்கள்
[தொகு]1989-ஆம் ஆண்டில், மலாயா கம்யூனிஸ்டு கட்சி இறுதியாக தன் போராட்டங்களை நிறுத்திக் கொண்டது. 1989 டிசம்பர் 2-ஆம் தேதி, தெற்கு தாய்லாந்தில் உள்ள ஹாட் யாய் நகரில், சின் பெங்; ரசீட் மைடின்; அப்துல்லா சிடி ஆகியோர் மலேசிய - மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்தார்கள்.[26]
இரு அரசாங்கங்களுக்கும் இடையில் தனித் தனியாக அமைதி ஒப்பந்தங்கள் செய்து கொண்டார்கள். அத்துடன் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் சகாப்தம் ஒரு முடிவிற்கு வந்தது.
மேற்கோள்
[தொகு]- ↑ Lee, T. H. (1996). The Basic Aims or Objectives of the Malayan Communist Movement. In T. H. Lee, The Open United Front: The Communist Struggle in Singapore (pp. 2-29). Singapore : South Seas Society.
- ↑ The passing of Chin Peng in Bangkok on 16 September 2013 brings to an end one of the longest of Asian political biographies.
- ↑ O'Ballance, p. 23. மலாயா கம்யூனிஸ்டு கட்சி தோற்றுவிக்கப்பட்டது
- ↑ "SOUTH SEAS "REDS" IN MALAYA". eresources.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 2021-01-10.
- ↑ O'Ballance, p. 24. மலாயா பொதுவுடைமை கட்சிக்கு 1,500 உறுப்பினர்களும்; 10,000 அனுதாபிகளும் இருந்தனர்.
- ↑ O'Ballance, p. 25. வேலைநிறுத்தங்களுக்குத் தூண்டுகோலாக இருந்த சீனர்கள் பலர் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
- ↑ O'Ballance, p. 28. அந்தக் கட்டத்தில் மலாயாவில் வாழ்ந்த சீனர்களிடையே ஜப்பானிய எதிர்ப்பு உணர்வு மேலோங்கி நின்றது.
- ↑ Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் Volume 83, Part 2, September 2010, No. 299 E- பன்னாட்டுத் தர தொடர் எண் 2180-4338 Print பன்னாட்டுத் தர தொடர் எண் 0128-5483 எஆசு:10.1353/ras.2010.0005
- ↑ லாய் டெக் மலாயா பொதுவுடைமை கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்குத் தேர்வு செய்யப் பட்டார்.
- ↑ Lai Teck was believed to have served the French as a spy in Indo-China but been uncovered. It was subsequently alleged that he was recruited by the British security services and brought to Singapore in 1934 to infiltrate the Communist Party of Malaya.
- ↑ Cheah Boon Kheng (1992). From Pki to the Comintern, 1924-1941. SEAP Publications. pp. 26–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87727-125-9.
- ↑ O'Ballance, p. 44. மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம் பெண்களையும் உள்ளடக்கியது. சீனப் பெண்கள் அதிகமாக இருந்தனர்.
- ↑ O'Ballance, p. 49. விடியல் காலையில் ஜப்பானியர்கள் அதிரடித் தாக்குதல் நடத்தினார்கள். அந்தத் தாக்குதலில் கம்யூனிஸ்டு தலைவர்கள் பெரும்பாலோர் கொல்லப் பட்டார்கள்.
- ↑ O'Ballance, p. 50. 1943-ஆம் ஆண்டு இடைப் பகுதியில் அந்த இராணுவத்தில் 4,500 வீரர்கள் இருந்தார்கள்.
- ↑ 15.0 15.1 O'Ballance, p. 61. (மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம்) வீரர்கள் காட்டில் இருந்து வெளிவந்த போது அவர்களைப் போது மக்கள் ’ஹீரோ’க்களாக வரவேற்றனர்.
- ↑ See Cheah, pp. 252, 253, 261, 262. Cheah, Boon Kheng (2003). Red Star over Malaya: resistance and social conflict during and after the Japanese occupation of Malaya, 1941–1946.
- ↑ O'Ballance, p. 63. கோலாலம்பூரில் பிரித்தானிய இராணுவ நிர்வாகம்
- ↑ O'Ballance, p. 65. மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம் தன் இராணுவத்தைக் கலைக்க ஒப்புக்கொண்டது.
- ↑ Short, p. 36. ஆயுதங்களில் கைத்துப்பாக்கிகளை அவர்கள் வைத்துக் கொண்டார்கள்.
- ↑ Cheah, p. 248. மலாயா சிங்கப்பூரில் பற்பல வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள்
- ↑ Short, p. 39. பொதுச் செயலாளர் லாய் டெக் துரோகம் செய்து இருக்கலாம் எனும் வதந்திகள்
- ↑ "The British Colonial government declared a State of Emergency after the murder of three European planters on 16 June 1948". Archived from the original on 11 டிசம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 25 மே 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ A long bitter campaign was fought in the jungles of the Malay Peninsular, with people relocated into fortified villages to deny support to the rebels. The Emergency officially ended 31 July 1960.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "The communists started to realise that their policy of terrorizing supplies from the local population was just breeding hostility, facing renewed military opposition they pulled back into the deep jungles and stopped the random attacks". Archived from the original on 2011-12-25. பார்க்கப்பட்ட நாள் 2021-05-25.
- ↑ Benjamin, Roger W.; Kautsky, John H.. Communism and Economic Development, in The American Political Science Review, Vol. 62, No. 1. (Mar. 1968), pp. 122.
- ↑ Chin Peng, My Side of History, pp. 466–469, 499.
நூல்கள்
[தொகு]- Cheah, Boon Kheng (2003). Red Star over Malaya: resistance and social conflict during and after the Japanese occupation of Malaya, 1941–1946. Singapore: Singapore University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9971-69-274-2.
- Chin, C. C., and Karl Hack. eds., Dialogues with Chin Peng: New Light on the Malayan Communist Party. (2004) Singapore: Singapore University Press, 2004 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9971-69-287-2
- Chin, Peng (2003). Alias Chin Peng: My Side of History. Singapore: Media Masters. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-04-8693-8.
- O'Ballance, Edgar (1966). Malaya: The Communist Insurgent War, 1948–1960. Hamden, Connecticut: Archon Books.
- Rashid, Maidin (2009). Memoirs of Rashid Maidin: From Armed Struggle to Peace. Petaling Jaya, Malaysia: Strategic Information and Research Development Centre. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-3782-72-7. Archived from the original on 11 July 2011. பார்க்கப்பட்ட நாள் 8 December 2010.
{{cite book}}
: More than one of|archivedate=
and|archive-date=
specified (help); More than one of|archiveurl=
and|archive-url=
specified (help) - Singh Sandhu, Kernial (1964). "The Saga of the 'Squatter' in Malaya". Journal of South East Asian History (Cambridge, England: Cambridge University Press). http://journals.cambridge.org/action/displayAbstract;jsessionid=727F718F97C7788A5FC3E88F38B3696A.tomcat1?fromPage=online&aid=5862332.
- Short, Anthony (1975). The Communist Insurrection in Malaya, 1948–1960. London: Frederick Muller. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-584-10157-0.