நைத்திரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நைத்திரேட்டு அயனி. அயனியின் நிகர மின்னேற்றம் 1.

நைத்திரேட்டு (Nitrate) என்பது NO
3
என்னும் மூலக்கூற்று வாய்பட்டைக் கொண்ட ஒரு பல்லணு அயனி ஆகும். இதன் மூலக்கூற்றுத் திணிவு 62.0049 கி/மோல். நைத்திரிக் அமிலத்தின் இணைப்பு மூலமான இது நடுவில் ஒரு நைதரசன் அணுவையும், சுற்றிலும் முக்கோணத் தள அமைப்பில் உள்ள மூன்று ஒட்சிசன் அணுக்களையும் கொண்டது. ஒவ்வொரு ஒட்சிசனும் −23 மின்னேற்றத்தையும், நைதரசன் +1 மின்னேற்றத்தையும் கொண்டிருப்பதால், நைத்திரேட்டு அயனியின் முறையான மின்னேற்றம் எதிரேற்றம் ஆகும். இது உடனிசைவுக்கு எடுத்துக்காட்டாகப் பயன்படுகிறது. ஒத்த இலத்திரன் எண்ணிக்கை கொண்ட காபனேட்டு அயனியைப் போல, நைத்திரேட்டு அயனியையும் உடனிசைவு அமைப்பாகக் குறிக்கலாம்.

நைத்திரேட்டு அயனியின் பிணைப்புக் குறுக்கிடா உடனிசைவு அமைப்பு

நியம வெப்பநிலை அமுக்கங்களில் எல்லாக் கனிம நைத்திரேட்டுக்களும் நீரில் கரையக்கூடியவை. கனிம நைத்திரேட்டு உப்புக்கான பொதுவான எடுத்துக்காட்டாகப் பொட்டாசியம் நைத்திரேட்டைக் குறிப்பிடலாம்.

கரிம வேதியியலில் (அசேதனவுறுப்பு இரசாயனம்), நைத்திரேட்டு என்பது RONO2 என்னும் பொது வேதியியல் வாய்பாட்டினால் குறிக்கப்பெறும் ஒர் வினைத்தொகுதி ஆகும். இதில் R என்பது ஏதாவது கரிம எச்சத்தைக் குறிக்கக்கூடும். இவை நைத்திரிக் அமிலம், அல்ககோல்என்பவற்றினால் உருவாகும் எசுத்தர்கள் ஆகும். நைத்திரிக் அமிலமும், மெத்தனாலும் (மெதனோல்) சேர்ந்து உருவாகும் மீதைல் நைத்திரேட்டு,[1] தாத்தாரிக் அமிலத்தின் நைத்திரேட்டு,[2] உண்மையில் ஒரு கனிம நைத்திரேட்டும் பிழையான பெயரில் வழங்கப்படுவதுமான நைத்திரோகிளிசரின் என்பவற்றை இதற்கு எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம்.

கரிம நைத்திரோ சேர்வைகளைப் போல கனிம நைத்திரேட்டுக்களும், கரிம நைத்திரேட்டுக்களும் உந்து எரிபொருட்களாகவும், வெடிபொருட்களாகவும் பயன்படத் தக்கவை. பொதுவான வெடிமருந்து இதற்கு எடுத்துக்காட்டு. இப்பயன்பாடுகளில், நைத்திரேட்டின் வெப்பப் பிரிகையினால் மூலக்கூற்று நைதரசன் வளிமமும், பெருமளவு வேதியியல் ஆற்றலும் வெளிப்படுகின்றன. சிறப்பாகக் கனிம நைத்திரேட்டுக்களில் நைத்திரேட்டு ஒட்சிசன்களினால் ஏற்படும் ஒட்சியேற்றமும் ஆற்றல் உருவாக்கத்தின் முக்கிய வழிமுறைகளில் ஒன்றாகும்.

தொடர்புடைய வேதிப்பொருட்கள்[தொகு]

நைத்திரசு அமிலத்தின் உப்பான நைத்திரைட்டு (NO
2
), நைத்திரேட்டிலிருந்தும் வேறானது. நைத்திரேட்டுக்களைப் போன்ற வாய்பாடும் அமைப்பும் கொண்டனவும், ஆனால், O களில் ஒன்று நைத்திரோ வினைத் தொகுதியினால் பதிலிடப்பட்டுள்ளதுமான கரிமச் சேர்வைகள் நைத்திரோ சேர்வைகள் எனப்படுகின்றன. நைத்திரோ மீதேனும், பெயர்பெற்ற டி.என்.டி எனப்படும் முந்நைத்திரோ தொலுயீனும் இவ்வகைச் சேர்வைகளுக்கு எடுத்துக்காட்டுகள்.

மனித உடல்நலத் தாக்கங்கள்[தொகு]

குடலீரல் வளர்சிதைமாற்றத்தின் ஊடாக நைத்திரேட்டு அமோனியாவாக மாறுவதால் மனிதரில் நைத்திரேட்டு நச்சேற்ற நோய் ஏற்படுகிறது. இதில் நைத்திரைட்டு ஒரு இடைவிளைவாக உள்ளது.[3] நைத்திரைட்டுக்கள், இரத்தப் புரதத்தில் உள்ள இரும்பை பெரசு (2+) அயனிகளில் இருந்து பெரிக்கு (3+) அயனிகளாக மாற்றுகிறது. இதன் மூலம் இது ஒட்சிசனை எடுத்துச் செல்ல இயலாததாக ஆகிறது.[4] இது உறுப்புக்களின் இழையங்களில் ஒட்சிசன் பற்றாக்குறையை எற்படுத்துவதால் "குருதி இரும்புக்கனிமக்குறை" (methemoglobinemia) எனப்படும் ஆபத்தான நிலைமை ஏற்படுகிறது. இந்நிலையை மீதைலீன் நீலம் எனப்படும் சேர்வையைக் கொண்டு குணப்படுத்த முடியும். இது பாதிக்கப்பட்ட குருதியில் காணப்படும் பெரிக்கு வடிவில் உள்ள இரும்பைப் பழையபடி பெரசு இரும்பாக மாற்றுகிறது.

குழந்தைப்பருவ வளர்ச்சிக் கட்டத்தில் நைத்திரேட்டு வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிளிசரைட்டுகள் அதிக செறிவில் இருப்பதால், குழந்தைகள் குருதி இரும்புக்கனிமக்குறை நோயினால் தாக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். குழந்தைகளில் காணப்படும் குருதி இரும்புக்கனிமக்குறை, நீலக் குழந்தைக் கூட்டறிகுறி (blue baby syndrome) எனப்படும். தற்காலத்தில், நீலக் குழந்தைக் கூட்டறிகுறிக்கும், குடிக்கும் நீரில் காணப்படும் நைத்திரேட்டுக்கும் தொடர்புகள் உள்ளனவா என்பது பற்றிக் குறிப்பிடத்தக்க அளவில் அறிவியல் ஐயங்கள் உள்ளன.[5][6] இப்போது, நீலக் குழந்தைக் கூட்டறிகுறி பல காரணிகளின் விளைவாக ஏற்படக்கூடும் என எண்ணுகிறார்கள். வயிற்றுக் குழப்பத்தை உண்டுபண்ணும் காரணிகள், அடர் உலோக நச்சுத்தன்மை என்பன இவ்வாறான காரணிகளாக இருக்கலாம் என்றும் நைத்திரேட்டு இதில் மிகச் சிறிய பங்களிப்பையே செய்கிறது என்றும் கருத்து நிலவுகிறது. நைத்திரேட்டும் ஒரு காரணியாக இருக்கலாம் என்று ஐயப்படக்கூடிய இடங்களில், அதிக நைத்திரேட்டுச் செறிவுள்ள நீரைக் குடிப்பதால் ஏற்பட்டிருக்கக்கூடும். தவிர, கூடிய நைத்திரேட்டுக்கள் காணப்படும் காய்கறிகளை உண்பதனாலும் மனித உடலில் நைத்திரேட்டுகள் உட்செல்லக்கூடும். "லெட்டியூசு" எனப்படும் கீரை வகையில், அது வளரும்போதுள்ள நிலைமைகளைப் பொறுத்து நைத்திரேட்டு அளவு கூடுதலாக இருக்கலாம். குறைவான சூரிய ஒளி; மொலிப்டினம், இரும்பு போன்ற நுண்ணூட்டங்கள் போதாமை; நைத்திரேட்டுக்களைத் தாவரம் தன்வயப்படுத்துவதில் குறைபாடு என்பன காய்கறிகளில் நைத்திரேட்டு அளவு கூடுதலாகக் காணப்படுவதற்குக் காரணங்கள் ஆகலாம். நைத்திரேட்டு உரங்களைக் கூடிய அளவில் இடுவது மூலமும், அறுவடை செய்யும் காய்கறிகளில் நைத்திரேட்டு அளவு கூடுதலாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் உண்டு.[7]

கடல் நச்சூட்டம்[தொகு]

கடல் மேற்பரப்பு நைத்திரேட்டு அளவு குறித்த பெருங்கடல் வரைபடம்.

நன்னீர்நிலைகளில் அல்லது கழிமுகச் சூழல்களில் நிலத்துக்கு அண்மையான பகுதிகளில் நைத்திரேட்டுக்களின் அளவு கூடுதலாகி மீன்கள் போன்ற உயிரினங்கள் இறப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு. நைத்திரைட்டுக்கள், அமோனியா போன்றவற்றிலும் பார்க்க நைத்திரேட்டுக்கள் குறைவான நச்சுத்தன்மை கொண்டவையெனினும்,[8] மில்லியன்களில் 30 பகுதிகள் (ப/மில் - ppm) அளவுக்கு நைத்திரேட்டு நீரில் இருக்குமானால், இது சில நீர்வாழ் இனங்களின் வளர்ச்சியைக் குறைக்கவும், நோய்த்தடுப்பு வல்லமையைக் குறைக்கவும் கூடுமெனக் கருதப்படுகிறது.[9] ஆயினும், தீவிர நைத்திரேட்டு நஞ்சாதல் சோதனைகள் தொடர்பான நடபடிகளில் உள்ள குறைபாடுகள் தெரிய வந்திருப்பதால், நைத்திரேட்டு நச்சுத்தன்மையின் அளவு பற்றிய விடயம் இப்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.[10]

நீர்சார் சூழல்களில் அளவுக்கு மீறிய நைத்திரேட்டுச் செறிவு காணப்படும் பெரும்பாலான தருணங்களில், அளவுக்கு அதிகமான நைத்திரேட்டு உரங்கள் பயன்படுத்தப்பட்ட வேளாண்மை நிலங்களில் இருந்தும், நிலத்தோற்றப் பகுதிகளில் இருந்தும் வடியும் நீரின் காரணமாகவே இது ஏற்படுகிறது.

நைத்திரேட்டு மேலோட்டம்[தொகு]

நைத்திரேட்டு அயனியின் உப்புகள், சக பிணைப்பு கிளைப் பொருள்கள்


குறிப்புகள்[தொகு]

  1. Alvin P. Black and Frank H. Babers, "Methyl nitrate", Org. Synth. ; Coll. Vol. 2: 412 
  2. Snyder, H. R.; Handrick, R. G.; Brooks, L. A. (1943), "Imidazole", Org. Synth., http://www.orgsyn.org/orgsyn/orgsyn/prepContent.asp?prep=cv3p0471 ; Coll. Vol. 3: 471 
  3. "Nitrate and Nitrite Poisoning: Introduction". The Merck Veterinary Manual. பார்த்த நாள் 2008-12-27.
  4. Kim-shapiro, D.B.; Gladwin, M.T.; Patel, R.P.; Hogg, N. (2005). "… between nitrite and hemoglobin: the role of nitrite in hemoglobin-mediated hypoxic vasodilation". Journal of Inorganic Biochemistry 99 (1): 237–246. doi:10.1016/j.jinorgbio.2004.10.034. பப்மெட்:15598504. http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0162013404003411 
  5. T.M Addiscott & N Benjamin 2004 Nitrate and human health
  6. A A Avery Infant Methemoglobemia - reexamining the role of drinking water nitrates
  7. Marschner H 1999 Mineral nutrition of higher plants. Academic Press, London. 889
  8. Romano, N.; Zeng, C. (2007). "Acute toxicity of sodium nitrate, potassium nitrate and potassium chloride and their effects on the hemolymph composition and gill structure of early juvenile blue swimmer crabs (Portunus pelagicus, L. 1758) (Decapoda, Brachyura, Portunidae)." Environmental Toxicology and Chemistry 26: 1955–1962.
  9. Nitrates in the Aquarium
  10. Romano N., Zeng, C. (2007). "Effects of potassium on nitrate mediated changes to osmoregulation in marine crabs". Aquatic Toxicology 85 (3): 202–208. doi:10.1016/j.aquatox.2007.09.004. பப்மெட்:17942166. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைத்திரேட்டு&oldid=2699291" இருந்து மீள்விக்கப்பட்டது