செஞ்சுருள் விரைவுவண்டி
செஞ்சுருள் விரைவுவண்டி (Red Ribbon Express) என்பது இந்திய இரயில்வேயின் எச்.ஐ.வி / எயிட்சு விழிப்புணர்வு பிரச்சார தொடருந்தாகும். இந்த செஞ்சுருள் விரைவுவண்டியின் குறிக்கோள் "வாழ்க்கையின் பயணத்தைத் தொடங்குதல்" என்பதாகும்.[1]
வரலாறு
[தொகு]இந்தியாவில், செஞ்சுருள் விரைவுவண்டியானது உலக எயிட்சு நாளான திசம்பர் 1, 2007 அன்று தொடங்கப்பட்டது. ஏழு பெட்டிகள் கொண்ட இந்த தொடருந்தினை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.[2] செஞ்சுருள் விரைவுவண்டி எச்.ஐ.வி/எயிட்சு பற்றிய தகவல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்திய ரயில்வேவின் ரயில் சேவையாகும்.[3] தொடருந்து மூலம் எச்.ஐ.வி/எயிட்சு விழிப்புணர்வு, ரயிலின் ஆரம்ப பேச்சு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டது.[4]ராஜீவ் காந்தி அறக்கட்டளை, தேசிய எயிட்சு கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் நேரு யுவ கேந்திரா சங்காதன் அமைப்பின் சார்பில் இந்த யோசனை உருவாக்கப்பட்டது.[4]
செஞ்சுருள் விரைவுவண்டி 'இரண்டாவது கட்ட பயணம் 2009ஆம் ஆண்டு உலக எயிட்சு தினத்தன்று சோனியா காந்தியால் தொடங்கி வைக்கப்பட்டது.[5] இந்த இரண்டாம் கட்டம் பயணம் கிராமப்புற ஏழைகளின் பெரும் பகுதியைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டது. இதன் மூலம் அதிகமான மக்கள் பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவார்கள் என்று அரசாங்கம் திட்டமிட்டது.[6] இந்த தொடருந்தினை ஜெ. டபுள்யூ. டி. (டெல்லி அலுவலகம், இந்தியா) வடிவமைத்தது. தேசிய எயிட்சு கட்டுப்பாட்டு அமைப்பின் தமன் அஹுஜா (தேசிய பொறுப்பாளர்- களத் திட்டமிடல்) நாடு முழுவதும் இதன் இயக்கத்தின் மூன்று கட்டங்களிலும் சமூக அணிதிரட்டல் பகுதியை ஒருங்கிணைத்துச் செயல்பட்டார்.
பிரச்சாரம்
[தொகு]செஞ்சுருள் தொடருந்து எச்.ஐ.வி/எயிட்சு பற்றிய விழிப்புணர்வைப் பரப்பவும், பாதுகாப்பான உடலுறவினை ஊக்குவிக்கவும், இந்தியாவில் குறிப்பாகக் கிராமப்புறங்களில் உள்ள எயிட்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான பாகுபாட்டைக் குறைக்கவும் முயல்கிறது. தென்னாப்பிரிக்கா (5.7 மில்லியன்) மற்றும் நைஜீரியாவிற்கு (2.6 மில்லியன்) அடுத்து, உலகளவில் எச்.ஐ.வி/எயிட்சால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவில் உள்ளனர். (2007-ல் 2.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்).[7]
கண்காட்சிகள், தெரு நாடகங்கள் மற்றும் விளக்கவுரை போன்ற நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சிகிச்சை மற்றும் ஆலோசனை சேவையும் வழங்கப்பட்டன.
இளைஞர் குழுக்கள், மகளிர் குழுக்கள், மாணவர் சமூகங்கள், நகர்ப்புற குடிசைவாசிகள் மற்றும் விவசாயிகள் முதலியோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது நோக்கமாக இருந்தது.[4]
முதல் கட்டத்தில் இந்த ரயில் 27,000 கி. மீ. 180 நிலையங்கள் வழியே 50,000க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சென்றடைந்தது. முக்கிய நிலையங்களிலிருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்ல, பேருந்து மற்றும் மிதிவண்டிகள் பயன்படுத்தப்பட்டன.
செஞ்சுருள் விரைவுவண்டி, அதன் இரண்டாம் கட்டத்தில், பொதுச் சுகாதாரம், சுகாதாரம் மற்றும் பன்றிக்காய்ச்சல், காசநோய் மற்றும் இனப்பெருக்க மற்றும் குழந்தை சுகாதார சேவைகள் உள்ளிட்ட தொற்று நோய்களுக்கான தகவலையும் வழங்குகிறது.[1]
செஞ்சுருள் விரைவுவண்டி மூன்றாம் கட்டத்தை ஜனவரி 12 ஆம் தேதி புதுதில்லியில் அரசாங்கம் தொடங்கியுள்ளது, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் செஞ்சுருள் விரைவுவண்டி IIIஐத் துவக்கிவைத்தார்.
பங்கேற்பாளர்கள்
[தொகு]செஞ்சுருள் விரைவுவண்டி எச் ஐ வி/எயிட்சு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள விளம்பர/பங்குதாரர்களாக நேரு யுவ கேந்திரா சங்காதன், தேசிய எயிட்சு கட்டுப்பாட்டு அமைப்பு, இந்திய ரயில்வே, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கங்கள், தேசிய கிராமப்புற சுகாதார பணி, இந்திய இரயில்வே அமைச்சகம் (இந்தியா), இந்துஸ்தான் லேடெக்ஸ் குடும்பக் கட்டுப்பாடு மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ஆகியோர் உள்ளனர்.[1]
வரவேற்பு
[தொகு]செஞ்சுருள் விரைவுவண்டி தொடங்கப்பட்டதிலிருந்தே பொதுமக்களின் வரவேற்பு ஏற்ற இறக்கமாகவே உள்ளது.
நவம்பர் 2008-ல், இந்தியன் எக்சுபிர்சு, செஞ்சுருள் விரைவுவண்டி இரண்டு நாள் சண்டிகர் பயணம் அதிக மக்களை ஈர்த்ததாகத் தெரிவித்தது.[8] சண்டிகரில் 10,000 பேர் இந்த தொடருந்தினை பார்வையிட்டனர். இது நவம்பர் 2008-ல் எந்த ஒரு பெருநகரப் பகுதியையும் விட அதிகமாக இருந்தது. கண்காட்சி தொடருந்தில் உள்ள ஆலோசகர்களின் வழிகாட்டுதலை 1000க்கும் அதிகமானோர் பெற்றனர். [8]
2008-ல் குண்டூரில் சிறப்பான வரவேற்பு கிடைத்ததாகப் பாம்பே நியூஸ் தெரிவித்தது.[9]
இருப்பினும், எண்டிடிவியின் தகவலின்படி திசம்பர் 2, 2009 வரை, செஞ்சுருள் விரைவுவண்டி எதிர்பார்த்த அளவுக்கு அதிக வரவேற்பைப் பெறவில்லை என்பதாகும்.[6] செஞ்சுருள் விரைவுவண்டி எயிட்சு பிரச்சாரத்தில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்க, இந்திய அரசாங்கம் நிலையங்களில் மருத்துவ சேவைகளையும் வழங்கத் தொடங்கியது.
மேலும் பார்க்கவும்
[தொகு]- இந்திய ரயில்களின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Citizen News Service - CNS: Red Ribbon Express: On track to good health
- ↑ Red Ribbon Express flagged off
- ↑ "Sonia to flag off Red Ribbon express to promote AIDS awareness - News Oneindia". Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2022-01-27.
- ↑ 4.0 4.1 4.2 The Hindu : New Delhi News : Finally, it’s green signal for Red Ribbon Express
- ↑ Red Ribbon Express chugs into state with AIDS awareness message - The Times of India
- ↑ 6.0 6.1 Red Ribbon Express: Reaching out | NDTV.com
- ↑ Data பரணிடப்பட்டது 2009-08-31 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 8.0 8.1 Its work done, Red Ribbon Express leaves city - Indian Express
- ↑ "Bombay News - Bombay News Updates | Daily Coverage from Bombay News.Net". Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2022-01-27.
வெளி இணைப்புகள்
[தொகு]- [1] எய்ட்ஸ் விழிப்புணர்வை பரப்ப ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ்