சுப்ரமணியபுரம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுப்ரமணியபுரம்
சுப்ரமணியபுரம் விளம்பரக்காட்சி
இயக்கம்சசிகுமார்
தயாரிப்புகம்பனி புரொடக்சன்ஸ்
கதைசசிக்குமார்
இசைஜேம்ஸ் வசந்தன்
நடிப்புஜெய்
சுவாதி
சசிகுமார்
கஞ்சா கறுப்பு
சமுத்திரக்கனி
ஒளிப்பதிவுஆர். கதிர்
வெளியீடுஇந்தியா 2008
ஓட்டம்160 நிமிடம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சுப்ரமணியபுரம், 2008ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். அறிமுக இயக்குநர் சசிகுமார் இயக்கி ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கறுப்பு ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். அறிமுக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இயல்பான கதை, நடிப்புக்காக இத்திரைப்படம் பேசப்பட்டது.

கதை[தொகு]

எச்சரிக்கை: கதை அல்லது கதையின் முடிவு பின் வரும் பத்தியில் உள்ளது

படித்த வேலையில்லாத இளைஞர்கள் அரசியல்வாதிகளின் தன்னலத்துக்காகப் பயன்படுத்தப்பட்டு வீணாவது, காதல்-நட்பில் உள்ள துரோகம் குறித்து கதை நகர்கிறது.

20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வெளிவரும் காசி (கஞ்சா கறுப்பு), கத்திக்குத்துக்கு உள்ளாகிறான். அங்கிருந்து காட்சிகள் பின்னோக்கிச் செல்கின்றன.

1980களில் மதுரை நகரில் அழகர் (ஜெய்), பரமன் (சசிகுமார்), காசி (கஞ்சா கருப்பு), சித்தன், டும்கான் ஆகியோர் நண்பர்களாகச் சுற்றித் திரிகிறார்கள். சித்தன் மட்டும் ஒலிபெருக்கிக் கடை வைத்திருக்கிறார். இவர்கள் சிறு குற்றங்கள் செய்து காவலர்களிடம் சிக்கும் போது, உள்ளூர் அரசியல்வாதி சோமுவின் தம்பி கனகு (சமுத்திரக்கனி) ஆதரவாக இருந்து உதவுகிறார். இந்த நன்றியில் அழகரும் பரமனும் சேர்ந்து சோமுவின் அரசியல் எதிரி பழனிச்சாமியைக் கொல்கின்றனர். இதற்கிடையில் கனகின் அண்ணன் மகள் துளசியும் (சுவாதி) அழகரும் நெடுநாளாகவே காதல் மயக்கத்தில் இருக்கிறார்கள். சோமு, இக்கொலைக்குப் பிறகு கட்சியில் மாவட்டத்தலைவர் பொறுப்பு பெறுகிறார். ஆனால், சிறைக்குச் சென்ற அழகரையும் பரமனையும் வெளியே எடுக்காமல் ஏமாற்றி விடுகின்றனர். சிறையில் உள்ள இன்னொரு கைதியின் உதவியோடு வெளியே வரும் நண்பர்கள் அக்கைதிக்கு உதவியாக அவருடைய எதிரியைக் கொல்ல, பதிலுக்கு அந்த எதிரியின் நண்பர்கள் இவர்களைத் துரத்த, அவர்களையும் கொல்கிறார்கள்.

தங்களை ஏமாற்றிய கனகுவைக் கொல்ல நேரம் பார்த்து அழகரும் பரமனும் ஒளிந்து வாழ்கிறார்கள். ஒரு முறை கனகுக்கு வைத்த குறி தவறி கனகுவின் அண்ணனைக் காயப்படுத்துகிறது. இதைச் சுட்டிக் காட்டி, அழகர் உயிரோடு இருந்தால் தங்கள் குடும்பத்தில் அனைத்து ஆண்களையும் கொன்று விடுவான் என்று சொல்லி கனகு துளசியை மூளைச் சலவை செய்கிறான். துளசி-அழகர் காதலை அறியும் கனகு, துளசி மூலம் அழகரை வஞ்சகமாகத் தனியிடத்துக்கு வரச் செய்கிறான். தன் காதலியே தனக்குச் சாவு அழைப்பு விடுத்து ஏமாற்றியதை அறிந்த அழகர், எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல் செத்து மடிகிறான். நண்பன் அழகரின் கொலைக்குப் பழியாக பரமன் கனகுவைக் கொடூரமாகத் தலையை அறுத்துக் கொல்கிறான். இத்தனை நாள் உடனிருந்த நண்பன் காசி, பரமனைக் காட்டிக் கொடுத்துக் கொன்று விடுகிறான்.

இறுதிக் காட்சியில், நல்ல நண்பர்களுக்குத் துரோகம் செய்த காசி வாழத் தகுதியற்றவன் என்று சொல்லி டும்கான் காசியைக் கொல்கிறான்.

நடிப்பு[தொகு]

வரவேற்பு[தொகு]

இயல்பான கதை, நடிப்புக்காக இப்படம் பெரும் வரவேற்பும் வணிக வெற்றியும் பெற்றது. 1980களில் உள்ள மதுரை, வாழ்க்கை முறைகளைச் சரியாகப் படம் பிடித்தமைக்காக கலை இயக்கம் பெரிதும் பாராட்டப்பட்டது. ஜேம்ஸ் வசந்தன் இசையில் கண்கள் இரண்டால் பாடல் பெரும் வரவேற்பு பெற்றது[1]. படத்தின் பிற்பகுதியில் கூடிய-வன்முறை இருப்பது விமர்சனமாக முன்வைக்கப்பட்டது.

விமர்சனங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. The song Kangal Irandal… from the film set to music by James Vasanth has become 2008's largest selling download as caller tune, and is a chartbuster! - http://sify.com/movies/tamil/fullstory.php?id=14722965

வெளி இணைப்புகள்[தொகு]