குத்புத்தீன் ஐபக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குதுப்புத்தீன் ஐபாக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குத்புத்தீன் ஐபக்
லாகூரின் அனார்கலி பசாரில் குத்புத்தீன் ஐபக்கின் சமாதி
தில்லியின் முதல் சுல்தான்
ஆட்சிக்காலம்25 சூன் 1206 – 14 நவம்பர் 1210
முடிசூட்டுதல்25 சூன் 1206, கசரே உமாயூன், லாகூர்
முன்னையவர்கோரின் முகம்மது
பின்னையவர்ஆராம் ஷா
பிறப்பு1150
துருக்கிசுத்தான்
இறப்பு14 நவம்பர் 1210 (அகவை 60)
லாகூர், தில்லி சுல்தானகம் (தற்கால லாகூர், பாக்கித்தான்)
புதைத்த இடம்
அனார்கலி பசார், லாகூர்

குத்புத்தீன் ஐபக் (Qutb ud-Din Aibak) (பாரசீக மொழி: قطب‌الدین ایبک‎), (1150 – 14 நவம்பர் 1210) என்பவர் கோரி சுல்தான் முகம்மது கோரியின் ஒரு தளபதி ஆவார். வட இந்தியாவில் கோரி நிலப்பரப்புகளுக்கு இவர் பொறுப்பேற்று இருந்தார். 1206இல் முகம்மது கோரியின் அரசியல் கொலைக்குப் பிறகு இவர் தில்லி சுல்தானகத்தை (1206–1526) நிறுவினார். அடிமை அரசமரபை தொடங்கினார். இது சுல்தானகத்தை 1290 வரை ஆண்டது.

துருக்கிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இவர் குழந்தையாக இருந்த போது அடிமையாக விற்கப்பட்டார். ஈரானின் நிசாபூரில் ஒரு நீதிபதியால் இவர் விலைக்கு வாங்கப்பட்டார். அங்கு இவர் வில்வித்தை, குதிரை ஏற்றம் போன்ற திறமைகளை கற்றார். காசுனியில் முகம்மது கோரியிடம் இவர் மீண்டும் ஒரு முறை இறுதியாக விற்கப்பட்டார். அரசரின் குதிரை லாயத்தில் அதிகாரி என்ற நிலைக்கு அங்கு இவர் உயர்ந்தார். குவாரசமிய-கோரி போர்களின் போது சுல்தான் ஷாவின் ஒற்றர்களால் இவர் பிடிக்கப்பட்டார். கோரி வெற்றிக்கு பிறகு இவர் விடுதலை செய்யப்பட்டார். முகம்மது கோரி இவருக்கு அதிக ஆதரவு அளித்தார்.

1192இல் இரண்டாம் தரைன் போரில் கோரி வெற்றிக்குப் பிறகு இந்திய நிலப்பரப்புக்கு பொறுப்பாளராக ஐபக்கை முகம்மது கோரி நியமித்தார். சௌகான்கள், ககதவாலர், சாளுக்கியர், சந்தேலர் மற்றும் பிற இராச்சியங்களில் உள்ள பல்வேறு இடங்கள் மீது ஊடுருவல் நடத்தியது மற்றும் வென்றது ஆகியவற்றின் மூலம் வட இந்தியாவில் கோரி அரசமரபின் சக்தியை ஐபக் விரிவாக்கினார்.

மார்ச் 1206இல் முகம்மது கோரியின் அரசியல் கொலைக்குப் பிறகு வட மேற்கு இந்தியாவில் கோரி நிலப் பரப்புகளின் கட்டுப்பாட்டுக்காக மற்றொரு முன்னாள் அடிமை தளபதியான தாசல்தீன் இல்திசுவுடன் ஐபக் சண்டையிட்டார். இந்த சண்டையின் போது இவர் காசுனி வரை முன்னேறினார். எனினும், பிறகு பின் வாங்கினார். தன்னுடைய தலைநகரை லாகூரில் அமைத்தார். முகம்மது கோரிக்கு பின் பதவிக்கு வந்த கியாசுதீன் மகுமூதுவின் முதன்மை நிலையை இவர் பெயரளவுக்கு ஏற்றுக் கொண்டார். இந்தியாவின் ஆட்சியாளராக ஐபக்கை மகுமூது அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தார்.

ஐபக்கிற்கு பிறகு ஆராம் ஷா பதவிக்கு வந்தார். பிறகு ஐபக்கின் முன்னாள் அடிமையும், மருமகனுமான இல்த்துத்மிசு பதவிக்கு வந்தார். இந்தியாவின் கட்டிறுக்கமற்ற கோரி நிலப்பரப்புகளை ஒரு சக்தி வாய்ந்த தில்லி சுல்தானகமாக இல்த்த்துமிசு மாற்றினார். தில்லியில் குதுப் மினாரைக் கட்டும் பணியை தொடங்கி வைத்ததற்காக ஐபக் அறியப்படுகிறார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

ஐபக் அண். 1150ஆம் ஆண்டு பிறந்தார்.[1] இவரது பெயரானது "குத்பல்தீன் அய்பெக்",[2] "குத்புத்தீன் ஐபெக்",[3] மற்றும் "குத்பல்தீன் அய்பக்"[4] என பலவாறாக ஒலி பெயர்க்கப்படுகிறது. இவர் துருக்கிஸ்தானிலிருந்து வந்தவர் ஆவார். ஐபக் என்று அழைக்கப்பட்ட ஒரு துருக்கிய பழங்குடியினத்தை சேர்ந்தவர் ஆவார். "நிலா" (அய்) மற்றும் "பிரபு" (பெக்) ஆகியவற்றைக் குறிக்கும் துருக்கிய வார்த்தைகளிலிருந்து இவரது பெயரான ஐபக் உருவானது என்று கருதப்படுகிறது. ஒரு குழந்தையாக இவர் தன்னுடைய குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டார். பிறகு நிசாபூரில் இருந்த அடிமை சந்தைக்கு கொண்டு சென்று குபி என்பவரிடம் விற்கப்பட்டார்.[5]

குபி அல்லது அவரது மகன்களில் ஒருவர் ஐபக்கை ஒரு வணிகரிடம் விற்றனர். அவ்வணிகர் காசுனியில் கோரி சுல்தான் முகம்மது கோரியிடம் ஐபக்கை விற்றார். சுல்தானின் அடிமை வீட்டிற்கு ஐபக் அனுப்பப்பட்டார். தன்னுடைய அடிமைகளுக்கு பரிசுகளை சுல்தான் வழங்கிய போது ஒரு முறை ஐபக் தன்னுடைய பங்கை பணியாளர்களுக்கு பிரித்து அளித்தார். இச்செயலால் மதிப்புணர்வு கொண்ட சுல்தான் இவரை உயர் நிலைக்கு உயர்த்தினார்.[5]

ஐபக் பிறகு முக்கிய பதவியான அரசரின் குதிரை லாயத்தின் அதிகாரி (அமீர்-இ அகுர்) என்ற பதவிக்கு உயர்ந்தார்.[5] குவாரசமிய ஆட்சியாளரான சுல்தான் ஷாவுடன் கோரிக்களுக்கு ஏற்பட்ட சண்டையின் போது குதிரைகளை பேணும் பொதுவான பணியின் பொறுப்பை ஐபக் ஏற்றிருந்தார். மேலும், அவற்றின் தீவனம் மற்றும் பொருட்களுக்கான பொறுப்பையும் ஏற்றிருந்தார்.[6] ஒரு நாள் குதிரைகளுக்கான தீவனத்தை சேகரித்து கொண்டிருந்த போது சுல்தான் ஷாவின் ஒற்றர்கள் இவரை பிடித்தனர். ஓர் இரும்புக் கூண்டில் இவரை வைத்தனர். இதற்கு பிறகு கோரிக்கள் சுல்தான் ஷாவை தோற்கடித்தனர். ஐபக் விடுதலை செய்யப்பட்டார். பிறகு கோரி ஐபக்கிற்கு பெருமளவு ஆதரவு அளித்தார். 1191-1192இல் இந்தியாவில் சண்டையிடப்பட்ட முதலாம் தரைன் யுத்தம் வரை ஐபக்கிற்கு பிறகு வழங்கப்பட்ட பதவிகள் குறித்து எந்த வித தகவல்களும் இல்லை.[7]

கோரித் தளபதியாக[தொகு]

குத்புத்தீன் ஐபக் is located in South Asia
குத்புத்தீன் ஐபக்
குத்புத்தீன் ஐபக்
சிலாகரர்
கங்கலின் கடம்பர்
குகே
மரியுல்
மக்ரான்
சுல்தானகம்
இந்தியத் துணைக் கண்டத்தின் மீதான கோரிப் படையெடுப்புக்கு முன்னர் 1175இல் தெற்காசியாவின் முதன்மையான அரசியல் அமைப்புகள் (ஆரஞ்சு கோடு:1175 முதல் 1205 வரை கோரின் முகம்மது வென்ற பகுதிகள்).[8]

சௌகான்களுக்கு எதிரான படையெடுப்பு[தொகு]

இந்தியாவில் முதலாம் தரைன் போரில் செளகான் ஆட்சியாளர் பிருத்திவிராச் சௌகானின் படைகளால் தோற்கடிக்கப்பட்ட கோரி இராணுவத்தின் தளபதிகளில் ஐபக்கும் ஒருவராவார்.[9] இரண்டாம் தரைன் யுத்தத்தில் கோரிக்கள் வெற்றி பெற்றவர்களாக உருவாயினர். கோரி இராணுவத்தில் தனது பொதுவான பொறுப்பை ஐபக் ஏற்றிருந்தார். சுல்தான் முகம்மது கோரிக்கு அருகிலேயே நின்று போரிட்டார். கோரி ஐபக்கை இராணுவத்தின் மையப்பகுதியில் நிறுத்தினார்.[10]

தரைனில் இவரது வெற்றிக்கு பிறகு முகம்மது கோரி முந்தைய சௌகான் நிலப்பரப்பை ஐபக்குக்கு கொடுத்தார். இந்தியாவின் பஞ்சாப்பின் தற்போதைய குராம் என்ற இடத்தில் ஐபக் நிறுத்தி வைக்கப்பட்டார்.[11][4] இவருக்கு எந்த விதமான பணி கொடுக்கப்பட்டது என்பது தெளிவாக தெரியவில்லை. மின்ஹஜ்ஜின் கூற்றுப்படி வரி வசூலிக்கும் பணி, பக்ரி முதபீர் தளபதி பதவி என்கிறார், அசன் நிசாமி குராம் மற்றும் சமனாவின் ஆளுநராக ஐபக் பணியமர்த்தப்பட்டார் என்கிறார்.[2]

பிருத்திவிராச்சின் இறப்பிற்கு பிறகு கோரிக்களுக்கு திறை செலுத்தியவராக பிருத்திவிராச்சின் மகன் நான்காம் கோவிந்தராசனை ஐபக் நியமித்தார். சில காலத்திற்கு பிறகு பிருத்திவிராச்சின் சகோதரர் அரிராஜன் ரந்தம்பூர் மீது படையெடுத்தார். இப்பகுதியை தன்னுடைய அதிகாரி கவாமுல் முல்க்கின் கீழ் ஐபக் கொடுத்திருந்தார். ரந்தம்பூர் நோக்கி ஐபக் அணி வகுத்தார். ரந்தம்பூர் மற்றும் முன்னாள் சௌகான் தலை நகரமான அஜ்மீர் ஆகிய இடங்களிலிருந்து அரிராஜன் பின் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.[11]

சாத்வானுக்கு எதிரான படையெடுப்பு[தொகு]

செப்டம்பர் 1192இல் சாத்வான் என்ற பெயருடைய ஒரு கிளர்ச்சியாளர் முந்தைய சௌகான் நிலப்பரப்பில் இருந்த, நுசுரதுத்தீனால் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த அன்சி கோட்டையை முற்றுகையிட்டார்.[12] ஐபக் அன்சியை நோக்கி அணி வகுத்தார். இது சாத்வான் பகாருக்கு பின் வாங்கும் நிலையை ஏற்படுத்தியது. பகாரில் நடந்த யுத்தத்தில் சாத்வான் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.[12]

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சாத்வானின் கிளர்ச்சி குறித்த தகவலானது சமகால எழுத்தாளர் அசன் நிசாமியிடம் இருந்து பெறப்படுகிறது. எனினும், 17ஆம் நூற்றாண்டின் பெரிஷ்தா என்ற வரலாற்றாளர் இந்த கிளர்ச்சி 1203ஆம் ஆண்டு நடந்ததாகக் குறிப்பிடுகிறார். தன்னுடைய தோல்விக்கு பிறகு குசராத்து எல்லைக்கு சாத்வான் பின்வாங்கியதாக குறிப்பிடுகிறார். ஐபக் குசராத்து மீது படையெடுத்த போது சாளுக்கிய மன்னன் இரண்டாம் பீமனின் ஒரு தளபதியாக சாத்வான் பின்னர் கொல்லப்பட்டார் என்று குறிப்பிடுகிறார்.[13] வரலாற்றாளர் தசரத சர்மாவின் கூற்றுப்படி குசராத்தின் எல்லைக்கு அருகில் உள்ள பகார் என்ற மற்றொரு இடத்துடன் சாத்வான் கொல்லப்பட்ட பகார் பகுதியை பெரிஷ்தா குழப்பிக் கொண்டிருக்கலாம் என்று குறிப்பிடுகிறார். மற்றொரு பகுதியானது பான்ஸ்வாரா மற்றும் துங்கர்பூருக்கு அருகில் உள்ளது.[14] வரலாற்றாளர் எ. கே. மசூம்தார் சாளுக்கிய மன்னர் பீமனை பீமசிம்மாவுடன் பெரிஷ்தா குழப்பிக் கொண்டிருக்கலாம் என்று குறிப்பிடுகிறார். கரதர கச்சா பட்டவலி என்ற நூல் பீமசிம்மா 1171ஆம் ஆண்டு அன்சியின் ஆளுநராக இருந்தார் என்று குறிப்பிடுகிறது. இவ்வாறாக சாத்வான் பீமசிம்மாவின் ஒரு தளபதியாக இருந்திருக்கலாம் மற்றும் தன்னுடைய எசமானருக்காக கோட்டையை மீண்டும் பெற முயற்சித்து இருக்கலாம் என்று குறிப்பிடப்படுகிறது.[15]

என்றி மியர்சு எல்லியட் என்ற வரலாற்றாளர் சாத்வானை ஜாட் இன மக்களின் ஒரு தலைவர் என்று எண்ணுகிறார். பிந்தைய எழுத்தாளர்களாலும் இது குறிப்பிடப்படுகிறது.[16] நிசாமி இதை குறிப்பிடவில்லை. சாத்வான் மற்றும் ஜாட் ஆகிய சொற்களுக்கிடையே உள்ள ஒற்றுமை மற்றும் கிளர்ச்சி நடந்த இடம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எல்லியட் குறிப்பிடுகிறார் என்று தோன்றுகிறது.[17] எஸ். எச். கோடிவாலா என்ற வரலாற்றாளாரின் கூற்றுப் படி, சாத்வான் என்பது நூல்களில் உள்ள சகவான் என்ற சொல்லுடன் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது என்கிறார். இந்த கிளர்ச்சியாளர் ஒரு வேளை பிருத்திவிராஜனின் தளபதியான ஒரு சௌகானாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[18][15] ரீமா கூஜா என்பவர் சைத்ரா என்ற பெயரின் மருவிய ஒரு வடிவமாக இது இருந்திருக்கலாம் என்று குறிப்பிடுகிறார்.[19]

தோவாப்பில் தொடக்கப் படையெடுப்புகள்[தொகு]

சாத்வானை தோற்கடித்ததற்கு பிறகு இவர் குராமுக்கு திரும்பி வந்தார். தோவாப் மீது படையெடுக்க ஆயத்தங்களை மேற்கொண்டார். 1192இல் மீரட் மற்றும் பரன் (தற்போதே புலந்தசகர்) ஆகியவற்றின் கட்டுப்பாட்டை இவர் பெற்றார். அங்கிருந்து பின்னர் ககதவால இராச்சியத்திற்கு எதிராக தாக்குதல்களை தொடங்கினார்.[12] 1192இல் தில்லியின் கட்டுப்பாட்டை பெற்றார். தொடக்கத்தில் தில்லியின் தோமர மன்னரை ஒரு திறை செலுத்தியவராக இவர் விட்டுச் சென்றார். 1193இல் துரோகக் குற்றம் சாட்டி தோமர மன்னரை இவர் பதவியிலிருந்து நீக்கினார். தில்லியின் நேரடி கட்டுப்பாட்டை பெற்றார்.[20]

காசுனியில் தற்காலிகமாக தங்குதல்[தொகு]

1193இல் கோரி தலைநகரான காசுனிக்கு ஐபக்கை சுல்தான் முகம்மது கோரி வருமாறு அழைத்தார்.[21] கிட்டத்தட்ட சமகால வரலாற்றாளரான மின்ஹஜ் ஏன் என்று விளக்கவில்லை. ஆனால், 14ஆம் நூற்றாண்டு வரலாற்றாளர் இசாமி ஐபக்கின் விசுவாசம் குறித்து சுல்தானுக்கு சிலர் சந்தேகத்தை தூண்டியதாக குறிப்பிடுகிறார். வரலாற்றாளர் கே. எ. நிசாமி, இசாமியின் குறிப்பை ஏற்கத்தக்கதல்ல என்று குறிப்பிடுகிறார். இந்தியாவில் மேற்கொண்ட கோரி விரிவாக்கத்திற்கு திட்டமிடுவதற்காக ஐபக்கின் உதவியை பெறுவதற்காக சுல்தான் அழைத்திருக்கலாம் என்ற கோட்பாட்டை முன் வைக்கிறார்.[21]

இந்தியாவுக்கு திரும்புதல்[தொகு]

ஐபக் காசுனியில் சுமார் ஆறு மாதங்களுக்கு தங்கினார். 1194இல் இந்தியாவிற்கு திரும்பிய பிறகு யமுனை ஆற்றைக் கடந்தார். தோர் இராபுத்திரர்களிடமிருந்து கோலியை (தற்போதைய அலிகர்) கைப்பற்றினார்.[21][22]

இதே நேரத்தில், இந்தியாவில் ஐபக் இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அரிராஜா முந்தைய சௌகான் நிலப்பரப்பின் ஒரு பகுதியின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றார்.[11] தில்லிக்கு இவர் திரும்பியதற்குப் பிறகு அரிராஜாவுக்கு எதிராக ஐபக் இராணுவத்தை அனுப்பினார். தோல்வி உறுதி என்ற நிலையில் அரிராஜா தற்கொலை செய்து கொண்டார்.[23] அஜ்மீரை ஒரு முஸ்லிம் ஆளுநருக்கு கீழ் இறுதியாக ஐபக் கொடுத்தார். கோவிந்தராஜனை ரந்தம்பூருக்கு இடம் மாற்றினார்.[12]

ககதவாலர்களுக்கு எதிரான போர்[தொகு]

1194இல் முகம்மது கோரி இந்தியாவுக்கு திரும்பி வந்தார். 50,000 குதிரைகளைக் கொண்ட ஓர் இராணுவத்துடன் யமுனை ஆற்றைக் கடந்தார். சந்தவார் போரில் ககதவால மன்னர் ஜெயச்சந்திரனின் படைகளை தோற்கடித்தார். ஜெயச்சந்திரன் போரில் கொல்லப்பட்டார். யுத்தத்திற்குப் பிறகு முகம்மது கோரி கிழக்கு நோக்கிய தனது முன்னேற்றத்தை தொடர்ந்தார். ஐபக் இந்த இராணுவத்தில் முன் வரிசை படையில் இருந்தார். வாரணாசியானது (காசி) கைப்பற்றப்பட்டது.[24][25][26] புத்த நகரமான சாரநாத்தும் இந்நேரத்தில் சூறையாடப்பட்டது என்று பொதுவாகக் கருதப்படுகிறது.[26][27] கோரிக்கள் ககதவால இராச்சியம் மீதான முழுமையான கட்டுப்பாட்டை பெறாத போதிலும், இந்த வெற்றியானது அப்பகுதியில் இருந்த பல இடங்களில் இராணுவ நிலையங்களை நிறுவ இவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கியது.[21]

பிற படையெடுப்புகள்[தொகு]

தில்லியின் குதுப் மினார். 1199ஆம் ஆண்டு குத்புத்தீன் ஐபக்கால் இவை தொடங்கி வைக்கப்பட்டன. 1220இல் இவரது மருமகன் இல்த்துத்மிசால் இவை முடிக்கப்பட்டன. அடிமை அரசமரபின் வேலைப் பாடுகளுக்கு இது ஓர் உதாரணமாக திகழ்கிறது.

சந்தவார் வெற்றிக்கு பிறகு கோலியில் தனது நிலையை வலுப்படுத்துவதை நோக்கி ஐபக் தன்னுடைய கவனத்தை திருப்பினார். [21]முகம்மது கோரி காசுனிக்கு திரும்பிச் சென்று இருந்தார். ஆனால், 1195-96இல் இந்தியாவுக்கு திரும்பி வந்தார். அப்போது பயானாவின் பாடி ஆட்சியாளரான குமாரபாலனை தோற்கடித்தார். பிறகு குவாலியர் நோக்கி அணி வகுத்துச் சென்றார். அங்கு உள்ளூர் பரிகர ஆட்சியாளரான சல்லகணபாலன் இவரது முதன்மை நிலையை ஏற்றுக் கொண்டார்.[28]

இதே நேரத்தில், அஜ்மீருக்கு அருகில் வாழ்ந்த மேர் பழங்குடியினங்கள் கோரி ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். தெற்கே குசராத்தை ஆண்ட சாளுக்கியர்களால் ஆதரவளிக்கப்பட்ட மேர்கள் அப்பகுதியில் ஐபக்கின் கட்டுப்பாட்டிற்கு ஒரு கடினமான அச்சுறுத்தலாக விளங்கினர். இவர்களுக்கு எதிராக ஐபக் அணி வகுத்தார். ஆனால், அஜ்மீருக்கு பின் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அஜ்மீருக்கு கோரி தலைநகரான காசுனியிலிருந்து வலுவூட்டல் படைகள் வந்ததற்கு பிறகு பின் வாங்கும் நிலைக்கு மேர்கள் தள்ளப்பட்டனர்.[12]

1197இல் அபு மலையில் சாளுக்கிய இராணுவத்தை ஐபக் தோற்கடித்தார். கிட்டத்தட்ட இரு தசாப்தங்களுக்கு முன்னர் கசரதா யுத்தத்தில் முகம்மது கோரியின் தோல்விக்கு இவ்வாறாக இவர் பழி வாங்கினார் என்று கூறப்படுகிறது.[29] ஐபக்கின் இராணுவமானது பிறகு சாளுக்கிய தலை நகரான அன்கில்வாராவுக்கு அணி வகுத்தது. தற்காப்பில் ஈடுபட்டிருந்த மன்னரான இரண்டாம் பீமன் நகரத்திலிருந்து வெளியேறினார். நகரமானது படையெடுப்பாளர்களால் சூறையாடப்பட்டது.[28] அன்கில்வாரா மீதான ஐபக்கின் ஊடுருவலை "குசராத்தை வென்றதாக" மின்ஹஜ் குறிப்பிடுகிறார். ஆனால், இந்நிகழ்வு கோரி பேரரசுடன் குசராத்து இணைக்கப்படுவதற்கு இட்டுச் செல்லவில்லை.[29] 16ஆம் நூற்றாண்டு வரலாற்றாளரான பெரிஷ்தா இப்பகுதியில் கோரி சக்தியை நிலை நிறுத்த ஒரு முஸ்லிம் அதிகாரியை ஐபக் நியமித்தார் என்று குறிப்பிடுகிறார். அதே நேரத்தில், இப்னு-இ அசீர் புதிதாக கைப்பற்றப்பட்ட நிலப்பரப்பை திறை செலுத்திய இந்துக்களுக்கு ஐபக் கொடுத்தார் என்று குறிப்பிடுகிறார். எது எவ்வாறாயினும், இப்பகுதி மீதான கோரிக்களின் கட்டுப்பாடானது நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. தங்களது தலை நகரத்தின் கட்டுப்பாட்டை சீக்கிரமே சாளுக்கியர்கள் மீண்டும் பெற்றனர்.[28]

1197-98இல் தற்போதைய உத்தரப் பிரதேசத்தில் இருந்த பதாவுனை ஐபக் வென்றார். கோரி கட்டுப்பாட்டிலிருந்து தவறியிருந்த முன்னாள் ககதவால தலைநகரமான வாரணாசியின் கட்டுப்பாட்டையும் மீண்டும் பெற்றார். 1198-99இல் சந்தர்வல் மற்றும் கன்னோசி ஆகிய இடங்களை இவர் கைப்பற்றினார். சந்தர்வல் என்பது எந்த இடம் என்று அடையாளப்படுத்தப்படவில்லை. இது ஒரு வேளை சந்தவார் என்ற இடத்தை குறிப்பிடப்பட்ட சொல்லாக இருந்திருக்கலாம். பிறகு இவர் சிரோகை கைப்பற்றினர். இது ஒரு வேளை இராசத்தானின் நவீன சிரோஹியாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பாரசீக வரலாற்றாளர் பக்ரி முதாபீரின் (அண். 1157-1236) கூற்றுப் படி, 1199-1200இல் தற்போதைய மத்திய பிரதேசத்தில் இருந்த மால்வாவையும் ஐபக் கைப்பற்றினார். எனினும், வேறு எந்த ஒரு வரலாற்றாளரும் இத்தகைய படையெடுப்பு நடந்ததாக குறிப்பிடவில்லை. எனவே மால்வா மீது வெறுமனே ஊடுருவலை மட்டும் ஐபக் நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[28]

இதே நேரத்தில், மற்றொரு முக்கிய கோரி அடிமை தளபதியான பகாவல்தீன் தொக்ரில்[30] (இவரது பெயர் பகாவுத்தீன் துக்ரில் என்றும் ஒலி பெயர்க்கப்படுகிறது) குவாலியர் கோட்டையை முற்றுகையிட்டார்.[31] மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட பிறகு தற்காப்பாளர்கள் ஐபக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோட்டையை ஐபக்கிடம் சரணடைய வைத்தனர்.[32]

1202இல் ஐபக் நடு இந்தியாவின் சந்தேல இராச்சியத்தின் ஒரு முக்கியமான கோட்டையாக திகழ்ந்த கலிஞ்சரை முற்றுகையிட்டார். சந்தேல ஆட்சியாளரான பரமார்த்தி ஐபக்குடன் பேச்சுவார்த்தைகளை தொடங்கினார். ஆனால், ஓர் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் முன்னரே பரமார்த்தி இறந்து விட்டார். சந்தேல முதலமைச்சரான அஜயதேவன் எதிர்ப்புகளை மீண்டும் தொடங்கினார். ஆனால், கோட்டைக்கு நீர் வழங்கும் வழிகளை கோரிக்கள் வெட்டிவிட்ட பிறகு பேச்சுவார்த்தை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டார். அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சந்தேலர்கள் அஜய்கருக்கு இடம் மாறும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இவர்களது முந்தைய வலுவூட்டல் பகுதிகளான கலிஞ்சர், மகோபா, மற்றும் கஜுராஹோ ஆகியவை கோரிக்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. இவை அசன் அர்னலால் ஆளப்பட்டன.[33]

இதே நேரத்தில், கோரி தளபதியான பக்தியார் கல்ஜி கிழக்கு உத்தர பிரதேசம் மற்றும் பீகார் பகுதிகளில் இருந்த சிறு ககதவால தலைவர்களை அடிபணிய வைத்தார்.[34] புத்த மடாலயங்களை அழித்ததையும் உள்ளடக்கியிருந்த தன் பீகார் படையெடுப்புக்கு பிறகு கல்ஜி பதாவுனுக்கு வந்தார். ஐபக்கை சந்தித்தார். அப்போது தான் கலிஞ்சர் மீதான தனது வெற்றிகரமான படையெடுப்பை ஐபக் முடித்திருந்தார். 23 மார்ச் 1203 அன்று கல்ஜி ஐபக்கிற்கு போரில் கொல்லப்பட்ட பொருட்களை கொடுத்தார். இதில் 20 பிடிக்கப்பட்ட யானைகள், ஆபரணங்கள் மற்றும் பணம் ஆகியவை அடங்கியிருந்தன.[35] பக்தியார் சுதந்திரமாக செயல்பட்டார்.[36][29] 1206இல் அவரது இறப்பின் போது ஐபக்கிற்கு கீழ் பணியாற்றும் ஒரு தளபதியாக அவர் இல்லை.[37]

தனது அதிகாரத்திற்கு வந்த பல்வேறு சவால்களை தொடர்ந்து 1204இல் குவாரசமியர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளிடம் அந்த்குத் யுத்தத்தில் முகம்மது கோரி தோல்வியடைந்தார். லாகூர் பகுதியில் கோகர் தலைவர்களால் நடத்தப்பட்ட ஒரு கிளர்ச்சியை ஒடுக்க ஐபக் கோரிக்கு உதவி புரிந்தார். பிறகு தில்லிக்கு திரும்பினார்.[38] 15 மார்ச் 1206இல் முகம்மது கோரி அரசியல் கொலை செய்யப்பட்டார். பல்வேறு நூல்கள் இச்செயலுக்கு காரணமாக கோகர்கள் அல்லது இசுமாயிலிகளை பலவாராக குறிப்பிடுகின்றன.[39]

உயர்ச்சி மற்றும் தாக்கம்[தொகு]

தனது சொந்த இடமான கோர் என்னும் சிறிய பகுதியில் தொடங்கிய முகம்மத் கோரி, இன்றைய ஆப்கானிசுத்தான், பாகிசுத்தான், வட இந்தியா ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். 1193 இல் அவர் டில்லியைக் கைப்பற்றினார். இப்பகுதிகளில், அரசு வரிகள்; சட்டத்தின் ஆட்சி; நியாயமான நிலப் பகிர்வு; தனக்குக் கீழ் உள்ள பிரபுக்களுக்கு வருமானம்; உள்ளூரில் தெரிவு செய்யப்பட்டவர்கள், நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் ஆகியவர்களைக் கொண்ட உள்ளூர் நிர்வாகம் ஆகியவற்றின் மூலம் இவர் முதல் முறையாக முசுலிம் நிர்வாகத்தை அறிமுகப்படுத்தினார்.

இந்தப் பின்னணியில், குதுப்-உத்-தீன், சுல்தான் கோரியின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக உயர்ந்தார். கோரியின் பெரிய வெற்றிகள், குதுப்-உத்-தீன் கோரியின் நேரடியான கட்டுப்பாட்டிலும், வழிகாட்டலிலும் இருந்தபோதே கிடைத்தன. வட இந்தியாவில் சுல்தான் கோரியின் படையெடுப்புக்களை நிறைவேற்றுவதிலும், வெற்றிகளை உறுதிப்படுத்துவதிலும் குதுப்-உத்-தீன் பெரும் பங்காற்றினார். 1192 ஆம் ஆண்டுக்குப் பின்னர், சுல்தான் கோரி, நடு ஆசியாவில் கூடுதல் கவனம் செலுத்தியதால், இந்தியப் படையெடுப்புக்களிலும், இப் பகுதிகளில் வரி அறவிடுவதிலும் குதுப்-உத்-தீன் சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்கப்பட்டார்.

டில்லி சுல்தானகத்தின் தோற்றம்[தொகு]

முகம்மத் கோரியே வட இந்தியாவில் முதன் முதலாக முசுலிம் ஆட்சியை ஏற்படுத்தியவர். 1206 ஆம் ஆண்டில் சுல்தான் கோரி இறந்ததும், ஏற்பட்ட குறுகிய கால அதிகாரப் போட்டியைத் தொடர்ந்து, குதுப்-உத்-தீன் ஐபக் ஆப்கானிசுத்தான், பாகிசுத்தான், வட இந்தியா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பேரரசுக்கு ஆட்சியாளராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். கோரியின் நடு ஆசியப் பகுதிகளை மங்கோலியப் போர்த்தலைவனான கெங்கிசு கான் கைப்பற்றிக் கொண்டார்.

குதுப் மினார். டில்லியில் உள்ள உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றான இது குதுப்-உத்-தீனின் காலத்தில் கட்டப்பட்டது.

குதுப்-உத்-தீனின் ஆட்சியின் கீழ் வந்த பகுதிகளில் அவருக்கு ஏற்கெனவே அதிகாரம் இருந்தது. கோரியின் ஆட்சிக்காலத்திலேயே இப் பகுதிகளில் கோரியின் திறை அறவிடுதல் முதலியவற்றுக்குப் பொறுப்பாகக் குதுப்-உத்-தீன் பெருமளவு அதிகாரத்தைக் கொண்டிருந்தார். அதனால், இவரின் முறைப்படியான ஆட்சி நான்கு ஆண்டுகளே ஆயினும், இவரது கட்டுப்பாடு முன்னரும் சில ஆண்டுகள் இப்பகுதியில் இருந்தது. இது, நிர்வாக முறைகளை உறுதிப்படுத்துவதற்கு வாய்ப்பாக அமைந்தது. குதுப்-உத்-தீன் முதலில் லாகூரில் இருந்து ஆட்சி நடத்தினார். பின்னர் தனது தலைநகரை டில்லிக்கு மாற்றினார். இதனால் இவரே தெற்காசியாவின் முதல் முசுலிம் ஆட்சியாளராகக் கருதப்படுகிறார்.

டில்லியில் கட்டப்பட்ட முதல் முசுலிம் நினைவுச்சின்னங்கள் இவராலேயே தொடங்கப்பட்டன. குவ்வாத்-உல்-இசுலாம் மசூதி, குதுப் மினார் போன்றவை இவற்றுள் அடங்கும்.

இறப்பு[தொகு]

1210 ஆம் ஆண்டில், குதுப்-உத்-தீன் குதிரையில் ஏறி ஒரு விளையாட்டில் கலந்து கொண்டிருந்தபோது இடம்பெற்ற விபத்தில் இறந்தார். லாகூரில் உள்ள அனார்க்கலி பசார் என்னும் இடத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார். துருக்கிய மரபினரும், இன்னொரு முன்னாள் அடிமையும், குதுப்-உத்-தீனின் மகளை மணந்தவருமான சம்சு-உத்-தீன் இல்துத்மிசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. J. Babb (25 May 2018). A World History of Political Thought. Edward Elgar Publishing. பக். 473. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-78643-553-8. https://books.google.com/books?id=GsxaDwAAQBAJ&pg=PT473. 
  2. 2.0 2.1 Jackson 2003, ப. 24.
  3. Nizami 1992, ப. 191.
  4. 4.0 4.1 Jackson 1982, ப. 546.
  5. 5.0 5.1 5.2 Nizami 1992, ப. 204.
  6. Nizami 1992, ப. 204-205.
  7. Nizami 1992, ப. 205.
  8. Schwartzberg, Joseph E. (1978). A Historical atlas of South Asia. Chicago: University of Chicago Press. பக். 37, 147. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0226742210. https://dsal.uchicago.edu/reference/schwartzberg/pager.html?object=074. 
  9. Nizami 1992, ப. 162.
  10. Nizami 1992, ப. 164.
  11. 11.0 11.1 11.2 Nizami 1992, ப. 166.
  12. 12.0 12.1 12.2 12.3 12.4 Nizami 1992, ப. 167.
  13. Majumdar 1956, ப. 142.
  14. Sharma 1959, ப. 100.
  15. 15.0 15.1 Majumdar 1956, ப. 144.
  16. Majumdar 1956, ப. 143-144.
  17. Singh 1964, ப. 213.
  18. Hodivala 1979, ப. 179.
  19. Hooja 2006, ப. 291.
  20. Nizami 1992, ப. 167-168.
  21. 21.0 21.1 21.2 21.3 21.4 Nizami 1992, ப. 168.
  22. Satish Chandra (historian) (2004). Medieval India:From Sultanat to the Mughals-Delhi Sultanat (1206-1526). 1. Har-Anand Publications. பக். 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8-12411-064-5. https://books.google.com/books?id=L5eFzeyjBTQC&pg=PA27. "The areas of Meerut, Baran (modern Buland sher) and Koli (modern Aligarh) in upper doab had been under the control of Dor Rajputs, had been occupied by the Turks shortly after the battle of Tarain" 
  23. Nizami 1992, ப. 166-167.
  24. Chandra 2007, ப. 71: "In 1194, Muizzuddin returned to India. He crossed the Jamuna with 50,000 cavalry and moved towards Kanauj. A hotly contested battle between Muizzuddin and Jaichandra was fought at Chandawar near Kanauj. We are told that Jaichandra had almost carried the day when he was killed by an arrow, and his army was totally defeated. Muizzuddin now moved on to Banaras which was ravaged, a large number of temples there being destroyed"
  25. Mohammad Habib (1981). Politics And Society During The Early Medieval Period Vol. 2. People's Publishing House. பக். 116. https://archive.org/details/in.ernet.dli.2015.99172/page/n145/mode/2up. "In the winter of A.D. 1194-1195 Shihabuddin once more marched into Hindustan and invaded the Doab. Rai Jai Chand moved forward to meet him....then description of Chandwar struggle (...) Shihabuddin captured the treasure fort of Asni and then proceeded to Benaras, 'where he converted about thousand idol-temples into house for the Musalmans." 
  26. 26.0 26.1 Asher, Frederick M. (25 February 2020) (in en). Sarnath: A Critical History of the Place Where Buddhism Began. Getty Publications. பக். 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-60606-616-4. https://books.google.com/books?id=JMHEDwAAQBAJ&pg=PA11. "And then, in 1193, Qutb-ud-din Aibek, the military commander of Muhammad of Ghor's army, marched towards Varanasi, where he is said to have destroyed idols in a thousand temples. Sarnath very likely was among the casualties of this invasion, one all too often seen as a Muslim invasion whose primary purpose was iconoclasm. It was of course, like any premodern military invasion, intended to acquire land and wealth" 
  27. Asher, Frederick M. (25 February 2020) (in en). Sarnath: A Critical History of the Place Where Buddhism Began. Getty Publications. பக். 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-60606-616-4. https://books.google.com/books?id=JMHEDwAAQBAJ&pg=PA74. 
  28. 28.0 28.1 28.2 28.3 Nizami 1992, ப. 169.
  29. 29.0 29.1 29.2 Jackson 2003, ப. 12.
  30. Jackson 2003, ப. 27.
  31. Nizami 1992, ப. 170-171.
  32. Nizami 1992, ப. 171.
  33. Nizami 1992, ப. 170.
  34. Nizami 1992, ப. 172.
  35. Nizami 1992, ப. 173.
  36. Nizami 1992, ப. 173-174.
  37. Nizami 1992, ப. 198.
  38. Nizami 1992, ப. 178.
  39. Nizami 1992, ப. 179.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குத்புத்தீன்_ஐபக்&oldid=3793666" இருந்து மீள்விக்கப்பட்டது