தபாகத்-இ நசீரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தபாகத்-இ நசீரி என்பது ஒரு வரலாற்று நூல் ஆகும். இதை மின்ஹஜ்-இ சிராஜ் ஜுஸ்ஜனி என்பவர் 1260ஆம் ஆண்டு பாரசீக மொழியில் எழுதி முடித்தார். இவர் ஆப்கானித்தானின் கோர் நகரத்தில் பிறந்து தில்லியில் வாழ்ந்தார். இவர் இந்நூலை சம்சுத்தீன் இல்த்துத்மிசின் மகனான தில்லி அடிமை வம்சச் சுல்தான் நசீருத்தீன் மகமுது ஷாவிற்காக எழுதினார். இந்நூல் மொத்தம் 23 பாகங்களைக் கொண்டுள்ளது. இந்நூலின் 23ஆம் பாகம் செங்கிஸ் கான் குவாரசமியாவைத் தாக்கிய நிகழ்வுகளைக் குறிப்பிடுகிறது. செங்கிஸ் கானின் உடல் தோற்றத்தை நேரில் கண்டதாகக் கூறி எழுதிய இரண்டு வரலாற்றாளர்களில் இவரும் ஒருவர் ஆவார். அரசமரபுகளின் வரலாறுகளை எழுத இவர் இந்நூலில் பயன்படுத்திய எழுதும் முறை பின்வந்த நூற்றாண்டுகளில் பின்பற்றப்பட்டது. இந்நூலை எச். ஜி. ராவெர்ட்டி என்பவர் ஆங்கில மொழிக்கு 1873ஆம் ஆண்டு "ஆசியாவின் முகமதிய வம்சங்களின் பொதுவான வரலாறு" என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்.[1]

பாகம் 23[தொகு]

முகலாயன் சிங்கிஸ் கானின் எதிர்பாராத கிளர்ச்சி[தொகு]

குவாரசமிய ஷா அலாவுதீனுக்கு சின் அரசமரபை வெல்லும் ஆசை இருந்தது. அடிக்கடி அந்நாட்டைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார். அங்கிருந்து வருபவர்களிடமும் அடிக்கடி அந்நாட்டின் எல்லைகளைப் பற்றி விசாரித்தார். அந்நாட்டைப் பற்றி அறிய அவர் சயித் மற்றும் பகாவுதீன் என்ற இருவரை அனுப்பி வைத்தார். சயித் மற்றும் பகாவுதீன் பின்வருமாறு கூறினர், "நாங்கள் தோம்கச்சின் எல்லைகளுக்குள் வந்தபோது, தங்கக் கானின் அரசின் அமைவிடத்திற்கு அருகில் குறிப்பிடத்தக்க அளவு தூரத்தில் ஒரு உயரமான வெள்ளை மேடானது கண்களுக்குத் தெரிந்தது. அது இருந்த இடத்திற்குத் தூரம் அதிகமாக இருந்தது. எங்களுக்கும் அந்த உயரமான குன்றுக்கும் இடையில் இரண்டு அல்லது மூன்று பங்கு தூரம் அல்லது அதற்கு அதிகமாகவும் இருக்கலாம். குவாரசமிய ஷாவின் அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட நாங்கள், அந்த வெள்ளை மேடானது ஒரு பனிக் குன்றாக இருக்கலாம் என்று கருதினோம். எங்களுடன் வந்த வழிகாட்டியிடம் அதைப் பற்றி கேட்டோம். அங்கு இருந்த மக்கள் பின்வருமாறு பதில் கூறினர், "அந்த மேடானது முழுவதுமாக, கொல்லப்பட்ட மனிதர்களின் எலும்புகளால் ஆனது" என்றனர். நாங்கள் ஒரு பங்கு தூரத்தை கடந்தபோது, நிலமானது வளவளப்பாக மனிதக் கொழுப்பால் கருப்பு நிறத்தில் இருந்தது. இன்னும் மூன்று பங்கு தூரத்திற்கு அதே சாலையில் நாங்கள் செல்ல வேண்டியிருந்தது. அதற்குப் பிறகே மீண்டும் சாதாரண தரை தென்பட்டது. தரையில் மிதித்ததன் காரணமாக, எங்களது குழுவில் சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிலர் இறந்தனர்.

நாங்கள் திரும்பியபோது, சிங்கிஸ் கான் ஏராளமான அரிய பொருட்கள் மற்றும் பரிசுகளை சுல்தான் முகமது குவாரசமிய ஷாவிடம் கொடுக்குமாறு கொடுத்தனுப்பினார். குவாரசமிய ஷாவிடம் கூறுங்கள்,

நான் சூரியன் உதிக்கும் நாட்டின் மன்னன். நீங்கள் சூரியன் மறையும் நாட்டின் மன்னன். நமக்கு இடையில் உறுதியான நட்புறவு மற்றும் அமைதி உருவாகட்டும். வணிகர்களும், வணிக வண்டிகளும் நமது இரு நாடுகளுக்கிடையிலும் வந்து செல்லட்டும். எனது நாட்டிலுள்ள விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் சரக்குப் பொருட்கள் உங்கள் நாட்டுக்கு வரட்டும். அதே போல் உங்கள் நாட்டில் உள்ள பொருட்களும் என்னுடைய நாட்டிற்கு வரட்டும்.

சிங்கிஸ் கான்

சிங்கிஸ் கான், சுல்தான் முகமது குவாரசமிய ஷாவிற்கு அனுப்பிய விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்களில், ஒட்டகத்தின் கழுத்து அளவிற்கு பெரியதாக இருந்த சுத்தப் பொற்கட்டி. இதை அவர்கள் சிங்கிஸ் கானுக்குத் தோம்கச்சின் மலைப்பகுதியிலிருந்து கொண்டு வந்து கொடுத்திருந்தனர். இதன் காரணமாக அந்தப் பொற்கட்டியை ஒரு வண்டியில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் எங்களுடன் சிங்கிஸ் கான் 500 ஒட்டகங்களில் பொன், வெள்ளி, பட்டு, மற்றும் சின் மற்றும் தோம்கச்சில் இருந்த அழகான பொருட்கள், மற்றும் அவரது வணிகர்களை அனுப்பி வைத்தார். இதில் பெரும்பாலான ஒட்டகங்கள் தங்கம் மற்றும் வெள்ளியைச் சுமந்து வந்தன. இந்தக் குழுவானது உற்றார் நகரை அடைந்த பொழுது, உற்றார் நகரின் கதிர் கான்  நம்பிக்கையற்ற முறையில் நடந்து கொண்டார். பெருமளவிலான தங்கம் மற்றும் வெள்ளி மீது தனக்கு ஏற்பட்ட தகாத பேராசை காரணமாக சுல்தான் முகமது குவாரசமிய ஷாவிடம் அனுமதி பெற்று அந்த மொத்த வணிகர்கள், பயணிகள் மற்றும் சிங்கிஸ் கானின் தூதுவர்களைக் கொன்றார். இவ்வாறாக அவர்களில் ஒருவர் கூட தப்பவில்லை. ஒரே ஒரு ஒட்டகக் காரன் மட்டும் குளித்துக்கொண்டிருந்தான். இந்நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அங்கிருந்த புகை போக்கி வழியாக ஏறித் தப்பித்தான். தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் பிறகு பாலைவனம் வழியாக சின் மற்றும் தோம்கச் பகுதிகளுக்குத் திரும்பி வந்தான்.  

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தபாகத்-இ_நசீரி&oldid=3451300" இலிருந்து மீள்விக்கப்பட்டது