உள்ளடக்கத்துக்குச் செல்

சிக்கந்தர் லௌதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்கந்தர் லௌதி
தில்லி சுல்தானகத்தின் சுல்தான்
லௌதி வம்சம்
சிக்கந்தர் லௌதியின் கல்லறை
30வது தில்லி சுல்தான்
ஆட்சி17 சூலை 1489 – 21 நவம்பர் 1517
முடிசூட்டு விழா17 சூலை 1489
முன்னிருந்தவர்பஹ்லுல் லௌதி
பின்வந்தவர்இப்ராகிம் லௌதி
வாரிசு(கள்)இப்ராகிம் லௌதி
அரச குலம்லௌதி வம்சம்
தந்தைபஹ்லுல் லௌதி
பிறப்பு17 சூலை 1458
இறப்பு21 நவம்பர் 1517 (வயது 59)
அடக்கம்லோதி தோட்டங்கள், தில்லி
சமயம்இசுலாம்

சிக்கந்தர் லௌதி (Sikandar Lodi; இறப்பு 21 நவம்பர் 1517), நிஜாம் கான் என்றப் பெயரில் பிறந்த இவர், பொ.ச.1489 - 1517க்கும் இடையில் தில்லி சுல்தானகத்தின் [1] [2] [3] பஷ்தூன் சுல்தான் ஆவார் . சூலை 1489இல் இவரது தந்தை பஹ்லுல் லௌதியின் மரணத்திற்குப் பிறகு இவர் லௌதி வம்சத்தின் ஆட்சியாளரானார். தில்லி சுல்தானகத்தின் லௌதி வம்சத்தின் இரண்டாவது மற்றும் மிகவும் வெற்றிகரமான ஆட்சியாளரான இவர் பாரசீக மொழிக் கவிஞராகவும் இருந்தார். மேலும், 9000 வசனங்களைக் கொண்ட ஒரு நூலையும் தயாரித்தார். [4] ஒரு காலத்தில் தில்லி சுல்தானகத்தின் ஒரு பகுதியாக இருந்த இழந்த பிரதேசங்களை மீட்டெடுக்க இவர் முயற்சி செய்தார். லௌதி வம்சத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தை விரிவாகினார்.

சுயசரிதை[தொகு]

குதுப் மினாரின் மேல் இரண்டு மாடிகள் சிக்கந்தர் லௌதியால் பளிங்கு கற்களால் புனரமைக்கப்பட்டது

இவர், லௌதி சுல்தானகத்தின் பஷ்தூன் ஆட்சியாளரான சுல்தான் பஹ்லுல் லௌதியின் இரண்டாவது மகனாவார். [5]

சிக்கந்தர் ஒரு திறமையான ஆட்சியாளராக இருந்தார். இவர் தனது பிராந்தியத்தில் வர்த்தகத்தை ஊக்குவித்தார். இவர் லௌதி பிரதேசத்தை குவாலியர் மற்றும் பீகார் பகுதிகளுக்கு விரிவுபடுத்தினார். இவர் அலாவுதீன் உசைன் ஷா மற்றும் அவரது வங்காள இராச்சியத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். 1503-இல், இவர் இன்றைய ஆக்ரா நகரத்தின் கட்டிடமைப்பை ஆரம்பித்தார். ஆக்ரா இவரால் நிறுவப்பட்டது.[6]

சிக்கந்தர் லௌதியின் கல்லறை

குவாலியர் கோட்டையை ஐந்து முறை கைப்பற்ற சிக்கந்தர் லௌதி மேற்கொண்ட முயற்சி நிறைவேறாமல் போனது. ஒவ்வொரு முறையும் மான் சிங்கால் தோற்கடிக்கப்பட்டார்.

மானசிம்ம தோமருடன் மோதல்[தொகு]

குவாலியர் கோட்டையில் உள்ள மான் சிங் (மானசிம்மன்) அரண்மனை

குவாலியரில் புதிதாக முடிசூட்டப்பட்ட மானசிம்மன் தில்லியின் படையெடுப்பிற்குத் தயாராக இல்லை. மேலும் பஹ்லுல் லௌதிக்கு 800,000 டாங்காக்கள் (காசுகள்) காணிக்கை செலுத்துவதன் மூலம் போரைத் தவிர்க்க முடிவு செய்தார். [7] 1489-இல், சிக்கந்தர் லௌதி, பஹ்லுல் லௌதிக்குப் பிறகு தில்லியின் சுல்தானானார். 1500 ஆம் ஆண்டில், சிக்கந்தர் லௌதியை வீழ்த்துவதற்கான தில்லியில் இருந்து சதியில் ஈடுபட்டிருந்த சில கிளர்ச்சியாளர்களுக்கு மானசிம்மன் புகலிடம் அளித்தார். சுல்தான், மானசிம்ம்மனைத் தண்டிக்க விரும்பி, தனது எல்லையை விரிவுபடுத்த, குவாலியருக்கு எதிராக போரைத் தொடங்கினார். 1501-இல், இவர் குவாலியரின் சார்புடைய தோல்பூரைக் கைப்பற்றினார். அதன் ஆட்சியாளரான விநாயகதேவன் குவாலியருக்கு தப்பி ஓடினார். [8]

சிக்கந்தர் லௌதி பின்னர் குவாலியர் நோக்கி அணிவகுத்துச் சென்றார். ஆனால் சம்பல் ஆற்றைக் கடந்த பிறகு, அவரது முகாமில் ஒரு தொற்றுநோய் ஏற்பட்டதால், அவரது அணிவகுப்பை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மானசிம்மன்லௌதியுடன் சமரசம் செய்துகொண்டார். மேலும் அவரது மகன் விக்ரமாதித்தனை சுல்தானுக்கான பரிசுகளுடன் லௌதி முகாமுக்கு அனுப்பினார். தோல்பூரை விநாயகதேவனுக்கு திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், கிளர்ச்சியாளர்களை தில்லியிலிருந்து வெளியேற்றுவதாக அவர் உறுதியளித்தார். லௌதி இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு வெளியேறினார். விநாயக தேவன் தோல்பூரை இழக்கவே இல்லை என்று வரலாற்றாசிரியர் கிஷோரி சரண் லால் கருதுகிறார்: இந்த கதை தில்லி வரலாற்றாசிரியர்களால் சுல்தானின் முகஸ்துதிக்காக உருவாக்கப்பட்டது என்கிறார். [9]

1504 இல், சிக்கந்தர் தோமர்களுக்கு எதிரான தனது போரை மீண்டும் தொடங்கினார். முதலில், குவாலியரின் கிழக்கே அமைந்துள்ள மந்த்ராயல் கோட்டையைக் கைப்பற்றினார்.[9] பின்னர் மந்த்ராயலைச் சுற்றியுள்ள பகுதியைக் கொள்ளையடித்தார். ஆனால் இவரது வீரர்கள் பலர் அடுத்தடுத்த தொற்றுநோய்களில் தங்கள் உயிரை இழந்தனர். இதனால் இவர் தில்லிக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[6] சிறிது காலம் கழித்து, லௌதி குவாலியருக்கு அருகில் இருந்த புதிதாக நிறுவப்பட்ட ஆக்ரா நகருக்கு தனது தளத்தை மாற்றினார். இவர் தோல்பூரைக் கைப்பற்றினார். பின்னர் குவாலியருக்கு எதிராக அணிவகுத்தார். இந்த பயணத்தை ஒரு ஜிகாத் என்று வகைப்படுத்தினார். செப்டம்பர் 1505 முதல் மே 1506 வரை, லௌதி குவாலியரைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களைச் சூறையாட முடிந்தது. ஆனால் மானசிம்மனின் தாக்குதல் தந்திரங்களால் குவாலியர் கோட்டையைக் கைப்பற்ற முடியவில்லை. லௌதி பயிர்களை அழித்ததன் விளைவாக ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையும் முற்றுகையைக் கைவிடச் செய்தது. ஆக்ராவுக்குத் திரும்பியபோது, மானசிம்மன் தனது படையை ஜாத்வார் அருகே பதுங்கியிருந்து தாக்கி, படையெடுப்பாளர்களுக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தினார்.[10]

குவாலியர் கோட்டையைக் கைப்பற்றத் தவறியதால், குவாலியரைச் சுற்றியுள்ள சிறிய கோட்டைகளைக் கைப்பற்ற லௌதி முடிவு செய்தார். இந்த நேரத்தில் தோல்பூர் மற்றும் மந்த்ராயல் ஏற்கனவே இவரது கட்டுப்பாட்டில் இருந்தன. பிப்ரவரி 1507 இல், இவர் நார்வார் - குவாலியர் வழித்தடத்தில் இருந்த உதித்நகர் (உத்கிர் அல்லது அவந்த்கர்) கோட்டையைக் கைப்பற்றினார்.[11] செப்டம்பர் 1507 இல், இவர் நார்வாருக்கு எதிராக அணிவகுத்துச் சென்றார். இவருடைய ஆட்சியாளர் (தோமாரா குலத்தைச் சேர்ந்தவர்) குவாலியரின் தோமராக்களுக்கும் மால்வா சுல்தானகத்திற்கும் இடையே தனது விசுவாசத்தை ஏற்ற இறக்கத்துடன் வைத்திருந்தார். ஓராண்டு முற்றுகைக்குப் பிறகு கோட்டையைக் கைப்பற்றினார்.[12] திசம்பர் 1508 இல், லௌதி நார்வரைக் கைப்பற்றி இராஜ் சிங் கச்வாகா என்பவரை பொறுப்பாளராக நியமித்தார். மேலும் குவாலியரின் தென்கிழக்கில் அமைந்துள்ள இலஹருக்கு (இலஹேயர்) அணிவகுத்தார். இவர் சில மாதங்கள் இலஹரில் தங்கியிருந்தார். அப்போது இவர் கிளர்ச்சியாளர்களிடமிருந்த சுற்றுப்புறத்தைக் கைப்பற்றினார்.[12] அடுத்த சில ஆண்டுகளில், லௌதி மற்ற மோதல்களில் தீவிரமாக இருந்தார். 1516-இல், இவர் குவாலியரைக் கைப்பற்ற ஒரு திட்டத்தைத் தீட்டினார். ஆனால் ஒரு நோய் இவரை அவ்வாறு செய்வதைத் தடுத்தது.[12] மானசிம்மன் 1516-இல் இறந்தார். மேலும் நோய் நவம்பர் 1517 இல் சிக்கந்தர் லௌதியின் மரணத்திற்கு வழிவகுத்தது.

மதம்[தொகு]

முஸ்லிம்களான லௌதி சுல்தான்கள் , அவர்களின் முன்னோடிகளைப் போலவே, முஸ்லிம் உலகில் அப்பாசியக் கலீபகத்தின் அதிகாரத்தை ஒப்புக்கொண்டனர். சிக்கந்தரின் தாயார் ஒரு இந்துவாக இருந்ததால், இவர் தனது இசுலாமிய பரம்பரையை நிரூபிக்க முயன்றார். இவர் இந்து கோவில்களை அழித்தார். மேலும், இந்து மதம் இசுலாம் போலவே உண்மையானது என்று அறிவித்த ஒரு பிராமணரை உலமாக்களின் அழுத்தத்தின் கீழ், தூக்கிலிட அனுமதித்தார். முஸ்லிம் புனிதர்களின் சமாதிகளுக்கு பெண்கள் செல்வதையும் இவர் தடை செய்தார். மேலும் புகழ்பெற்ற முஸ்லிம் தியாகி சலார் மசூதின் வருடாந்திர ஊர்வலத்தையும் தடை செய்தார்.

சிக்கந்தரின் காலத்திற்கு முன்பு, சிறிய கிராமங்களிலும் நகரங்களிலும் நீதித்துறை கடமைகள் உள்ளூர் நிர்வாகிகளால் செய்யப்பட்டன. அதே சமயம் சுல்தான் இசுலாமிய சட்ட அறிஞர்களிடம் ஆலோசனை செய்தார். சிக்கந்தர் பல நகரங்களில் இசுலாமியச் சட்ட முறைமை நீதிமன்றங்களை நிறுவினார். காஜிகள் இசுலாமியச் சட்டத்தை அதிக மக்களிடம் கொண்டு செல்ல உதவினார். கணிசமான முஸ்லிம் மக்கள்தொகை உள்ள பகுதிகளில் இத்தகைய நீதிமன்றங்கள் நிறுவப்பட்டாலும், சொத்து தகராறுகள் போன்ற மதசார்பற்ற விஷயங்கள் உட்பட, முஸ்லிமல்லாதவர்களுக்கும் அவை திறக்கப்பட்டன.

சான்றுகள்[தொகு]

 1. Chandra, Satish (2005). Medieval India: From Sultanat to the Mughals Part - II (in ஆங்கிலம்). Har-Anand Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-241-1066-9. The first of these was the death of the Afghan ruler, Sikandar Lodi, at Agra towards the end of 1517 and the succession of Ibrahim Lodi . The second was the conquest of Bajaur and Bhira, by Babur in the frontier tract of north - west Punjab in ...
 2. Sengupta, Sudeshna. History & Civics 9. Ratna Sagar. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788183323642. The Lodi dynasty was established by the Ghilzai tribe of the Afghans
 3. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-38060-734-4.
 4. Ram Nath Sharma, History Of Education In India, Atlantic (1996), p. 61
 5. Lodī dynasty - Encyclopædia Britannica
 6. 6.0 6.1 Kishori Saran Lal 1963, ப. 176.
 7. Kishori Saran Lal 1963, ப. 155.
 8. Kishori Saran Lal 1963, ப. 174.
 9. 9.0 9.1 Kishori Saran Lal 1963, ப. 175.
 10. Kishori Saran Lal 1963, ப. 177.
 11. Kishori Saran Lal 1963, ப. 177-178.
 12. 12.0 12.1 12.2 Kishori Saran Lal 1963.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கந்தர்_லௌதி&oldid=3388005" இலிருந்து மீள்விக்கப்பட்டது