பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில்

ஆள்கூறுகள்: 11°28′39″N 77°27′22″E / 11.47750°N 77.45611°E / 11.47750; 77.45611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில்
திருக்கோவில் கோபுரம்
அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில் is located in தமிழ் நாடு
அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில்
அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில்
Location within Tamil Nadu
ஆள்கூறுகள்:11°28′39″N 77°27′22″E / 11.47750°N 77.45611°E / 11.47750; 77.45611
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:ஈரோடு
அமைவு:பாரியூர், கோபிச்செட்டிபாளையம்
கோயில் தகவல்கள்
மூலவர்:அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன்
சிறப்பு திருவிழாக்கள்:தேர்த்திருவிழா, பொங்கல், நவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிட கலை
இணையதளம்:www.pariyurkondathukaliamman.tnhrce.in

அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில் இந்தியா நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற இந்து கோவில் ஆகும். இந்த கோவில் கோபிச்செட்டிப்பாளையம் நகரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் பாரியூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இதன் முதன்மை தெய்வம் கொண்டத்துக் காளியம்மன் ஆகும்.

வரலாறு[தொகு]

இந்த கோவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது.[1] தற்போது இருக்கும் கோவில் 1950ல் புனரமைக்கப்பட்டு கட்டப்பட்டது.[2] இந்த இடம் புராண காலத்தில் பாரபுரி என்று அழைக்கப்பட்டது. கொண்டத்துக் காளியம்மன் ஆற்றுப்படை என்ற பழைமையான ஓலைச்சுவடி இத்தலச்சிறப்பினை விளக்குகிறது. இதற்கு முன் இவ்விடம் அழகாபுரி/ பாராபுரி என வழங்கப்பட்டு வந்தது. இங்குள்ள அம்மன் கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குலதெய்வம் என நம்பப்படுகிறது. எனவே, "பாரியூர்" என்று பெயர் மாற்றம் பெற்றது. அருள்மிகு கொண்டத்து மாரியம்மன் ஊரின் வளமைக்கு முக்கியக் காரணமாக இருந்தாள் என்று கூறப்படுகிறது.

கோபிசெட்டிபாளையம் முன்பு வீரபாண்டி கிராமம் என அழைக்கப்பட்டது. கோபிசெட்டிப்பிள்ளான் என்பவர் இப்பகுதியில் பெரும் வள்ளலாகத் திகழ்ந்ததால் கோபிசெட்டிபாளையம் என பெயர் பெற்றது. அவர் ஒருமுறை வறியோருக்குக் கொடுக்கத் தன்னிடம் பொருளின்றி வருந்தி கொண்டத்துக் காளியம்மனிடம் முறையிட்டு புலிப்புதருக்குச் சென்று உயிர்விடத் துணிந்து அதன் உள்ளே குதித்தார். அந்த நேரத்தில் அந்த புதருக்குள் மறைந்து தாங்கள் களவாடிய பொருட்களை பங்குபோட்டுக் கொண்டிருந்த ஒரு திருடர் கூட்டம் புலி என்றெண்ணி அப்பொருட்களை அங்கேயே விட்டு விட்டு ஓடியது. அந்த பொருட்களை எடுத்து ஏழைகளுக்கு கொடுத்தார் என்று வரலாறு.

இத்திருக்கோயிலின் துணைக்கோயிலான அமரப்பணீஸ்வரர் கோயிலிலிருந்து கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. பாரியூர் முன்பு சிறப்பான நகரமாக இருந்ததாம். பின்பு நடந்த அந்நியப் படையெடுப்பால் மக்கள் புலம்பெயர்ந்து சென்றனர். புலம்பெயர்ந்து சென்ற இடங்கள் இன்றும் பாரியூர் வெள்ளாளபாளையம் என்றும் பாரியூர் நஞ்சகவுண்டன்பாளையம் என்றும் அறியப்படுகிறது. படையெடுப்பின் போது அம்மன் சிலையைப் பகைவர்களால் ஏதும் செய்ய இயலவில்லை. பின் தடப்பள்ளி வாய்க்கால் வெட்டப்பட்டு பாரியூர்ப் பகுதி வயல்வெளியானது. வெகுநாட்களாக சிறு கோயிலாக இருந்து பின் திருப்பணிச்செம்மல் தங்கமணிமுத்துவேலப்பக் கவுண்டர் அவர்களின் பெருமுயற்சியாலும் அறநிலையத்துறையின் ஒத்துழைப்பாலும் தற்போதுள்ள பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் திருக்கோயில் கரும்பளிங்குக் கற்களால் கட்டப்பட்டது. இத்திருக்கோயிலின் பிற வரலாற்றுத் தகவல்கள் காலவெள்ளத்தில் அழிந்து விட்டன.

கோவில் கட்டமைப்பு மற்றும் தெய்வங்கள்[தொகு]

கோவில் முன்னர் ஐந்து அடுக்கு ராஜ கோபுரம் கம்பீரமாக காட்சி அளிக்கின்றது. அம்பாள் உடன் விநாயகர், மகா முனியாப்பன், கன்னிமார், பொன்காளியம்மன் மற்றும் இதர தெய்வங்களுக்கும் சந்நிதிகள் உண்டு. இக்கோவிலின் பிரதான கோபுரம் தெற்கு மூலையில் அமைந்து உள்ளது. கருவறையைச் சுற்றி கருப்பு பளிங்குக்கற்களால் ஆன வெளி மண்டபம் அமைந்துள்ளது. கோவிலின் தூண்களில் மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று, ஒரு சிங்கத்தின் வாயில் காணப்படும் பந்து வடிவிலான ஒற்றைக்கல். அம்மனின் பிராதன வாகனமாக சிங்கம் கருதப்படுகிறது. அம்மனின் தலையில் நெருப்பிலான கிரீடமும் காலடியில் ஒரு அரக்கனை மிதித்துக்கொண்டிருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அம்மனின் தலையில் ருத்ரன் உள்ளதாக நம்பப்படுகிறது. இக்கோவிலில் ஸ்ரீ பொன் காளியம்மன், சித்தி விநாயகர் மற்றும் ஏழு கன்னிமார் சிலைகளும் கானப்படுகின்றன. அது தவிர ஸ்ரீ மகா முனியப்பனின் மாபெரும் சிலை ஒன்றும் காணப்படுகின்றது. இவர் குழந்தை வரம் அளிப்பதோடு அல்லாமல், பயத்திலிருந்தும் தீய சக்திகளிடத்திலிருந்தும் மக்களைக் காப்பாற்றி வருவதாக நம்பப்படுகிறது. இரு சந்நிதிகளிலிருந்தும் அளிக்கப்படும் தாயத்துகள் மக்களை தீய சக்திகளிடத்திலிருந்தும் நோய்களிலிருந்தும் காப்பாற்றுவதாக நம்பப்படுகிறது. இவற்றைத் தவிர காவல் தெய்வம், பிரம்மா மற்றும் இன்னும் பல சிலைகள் காணப்படுகின்றன. இக்கோவிலில் பிராமினி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்னவி, மஹேந்த்ரி மற்றும் சாமுண்டி ஆகியோரது சிலைகளும் காணப்படுகின்றன. "சின்ன அம்மன்" என்று அழைக்கப்படும் உற்சவர் சிலையும் இங்கு உள்ளது.

மேலும், அருகில் வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட அருள்மிகு அமரபநீஸ்வரர் திருக்கோவில், அருள்மிகு ஆதிநாரயனபெருமாள் திருக்கோவில் மற்றும் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில்களும் அமைந்துள்ளன.[1]

பூஜை அட்டவணை[தொகு]

காலை ஆறு மணி முதல் மதியம் ஒரு மணி வரையும் மாலை நான்கு மணி முதல் எட்டு மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும். காலை 6.15 மணி, 11.15 மணி மற்றும் மாலை 5 மணி ஆகிய நேரங்களில் அம்மனுக்கு அபிஷேகம் நடை பெரும். 7 மணி, 9 மணி, 10.30 மணி, 12 மணி, 5 மணி, 7 மணி என்று 6 கால பூஜைகள் நடைபெறுகிறது.

திருவிழா மற்றும் சிறப்பு வழிபாடுகள்[தொகு]

இந்த திருகோவிலின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இது ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும். பல லட்சம் பக்தர்கள் இங்கு வந்த பூ மிதிப்பர். குண்டத்திற்கு அடுத்துவரும் வெள்ளிக்கிழமை அன்னை ராஜராஜேஸ்வரியாக புஷ்பத்தேரிலும் சனிக்கிழமை முத்துப்பல்லக்கிலும் ஊர்வலமாக எழுந்தருள்வாள், திருவிழாவில் சிறப்பம்சம் இதுவே. மேலும் நவராத்திரி திருவிழாவின் போது ஒன்பது நாட்களும் அம்பாள் வெவ்வேறு உருவங்களில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். சித்திரை திருவிழா மற்றும் பொங்கல் விமர்சிகையாக கொண்டாடப்படும் மற்ற பண்டிகைகள் ஆகும். முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு மக்கள் அம்மனிடம் "வாக்கு கேட்டல்" முறையைக் கடைபிடிக்கின்றனர். அம்மன் சிலையின் இரு பக்கங்களிலும் பூக்கள் வைத்து எப்பக்கத்திலிருந்து பூ கீழே விழுகின்றது என்பதைப் பொறுத்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன. சிறப்பு நாட்களில் அம்மனைச் சந்தனம் அல்லது மஞ்சள் பூசி அலங்கரிக்கின்றனர்.வியாழக்கிழமை நாளில் திருவிழாவில் குண்டம் இறங்குதல் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

தங்கத்தேர் மற்றும் திருப்பணி[தொகு]

கோவில் கும்பாபிசேகம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். மேலும், தினமும் அம்பாள் தங்க தேரில் ஊர்வலம் செல்வார்.[3][4] மேலும் இரண்டு மரத்தேர்கள் மற்றும் ஒரு தங்க கவசம் அம்பாளுக்கு உரித்தானது ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில்". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 2013-09-27.
  2. "கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில் வரலாறு". பார்க்கப்பட்ட நாள் 2013-09-27.
  3. "தமிழ்நாடு அரசு திருப்பணி விவரம்". 
  4. "பாரியூர் தங்கத்தேர் ஊர்வலம் பலஆயிரம் பேர் கண்டுகளித்தனர்". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 2013-09-27.