எல். கே. துளசிராம்
Appearance
ராஷ்ட்ரபந்து துளசிராம் (L. K. Thulasiram) (14 சனவரி 1870 - 4 சனவரி 1952) சௌராட்டிர சமூகத்தில் லகுடுவா. குப்பைய்யர்-மீனாட்சி அம்மாள் தம்பதியருக்கு 14-01-1870இல் பிறந்தார். பள்ளிக் கல்வியை மதுரையில் முடித்து, கல்லூரிக்கல்வியை, சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்று 1883ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார். சௌராட்டிரர் சமுகத்தில் கே. வி. இராமாச்சாரிக்கு அடுத்தபடியாக துளசிராம் இரண்டாவது பட்டதாரி ஆவார். சட்டம் பயின்றவர். சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். ஆத்திகம், அரசியல், சட்டத்துறை, சமூகசேவை, தொழில், கல்வி ஆகிய பல்வேறு துறைகளில் புகழீட்டியவர். சௌராட்டிர சமுக மக்களுக்கு கல்வி மற்றும் அரசியலின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்களுக்குப் பயிற்சியளித்தவர். [1]
ஆற்றிய பொதுநலப் பணிகள்
[தொகு]அரசியல் இயக்கப் பணியில்
[தொகு]- நீதிக்கட்சித் தலைவர் சர். பிட்டி. தியாகராயருக்கு பக்கபலமாக இருந்து சென்னை மாகாண அரசியலில் பல சீர்திருத்தங்களை நிறைவேற்றினார். பின் 1924இல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சத்தியமூர்த்தியின் தலைமையில் இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டார்.
- 1928ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வருகை தந்த சைமன் கமிசனுக்கு எதிராக திரளான தொண்டர்களுடன் மதுரை, திருமலை நாயக்கர் அரண்மனை வரை ஊர்வலமாக சென்று, இந்திய மக்களின் எதிர்ப்பை, இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர் அரசுக்கு எதிராக காட்ட, கருப்புக் கொடிகளுடன் ”இந்தியாவை விட்டு வெளியேறு” உரத்த ஒலி எழுப்பினர்.
- 1926இல் அன்றைய சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக மதுரை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1928இல் ஆங்கிலேய அரசு தடை விதித்த தடையை மீறி, பாரதியார் இயற்றிய பாடல்களை சட்டசபையில் பாடி இந்திய விடுதலை உணர்ச்சியை மக்கள் அறிய பரப்பினார்.
- 1904ஆம் ஆண்டு முதல் 1940ஆம் ஆண்டு முடிய மதுரை நகராட்சியில் 36ஆண்டுகள் உறுப்பினராகவும், இரண்டு முறை மதுரை நகர் மன்றத் தலைவராகவும் பணியாற்றினார் (1921-1923 மற்றும் 1930).
கூட்டுறவு இயக்கப் பணியில்
[தொகு]- சௌராட்டிர சமுக மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, 1918ஆம் ஆண்டில் மதுரை சௌராட்டிர கூட்டுறவு வங்கியை நிறுவியதன் மூலம் கூட்டுறவு இயக்கத்திற்கு முன்னோடியாக விளங்கினார்.
கல்விப் பணியில்
[தொகு]- பத்திரப்பதிவு துறையின் சார் பதிவாளர் பதவியை துறந்து கல்விப்பணியில் தன்னை முழுமையாக அர்பபணித்தார். செள்ராட்டிர மக்களின் கல்வி முன்னேற்றதிற்காக மதுரையில் 1904ஆம் ஆண்டில் சௌராட்டிர மேல்நிலைப்பள்ளி உருவாக்க அரும்பாடுபட்டவர்.
- 1911ஆம் ஆண்டில் சௌராஷ்ட்ர உயர்நிலைப் பள்ளி கௌன்சில் எனும் தனி அமைப்பை தொடங்கினார். பள்ளியின் முதன்மை கல்கட்டிடம் கட்டி முடிக்க (1917 முதல் 1929 முடிய) 12 ஆண்டுகள் தனது முழு நேரத்தை செலவழித்தார். மேலும் அப்பள்ளியின் தலைவராகவும், செயலராகவும் 1898ஆம் ஆண்டு முதல் 1940ஆம் ஆண்டு முடிய 42ஆண்டுகால பதவிக் காலத்தில், பள்ளியின் முன்னேற்றத்தில் சிறப்பாக பங்காற்றினார்.
- மதுரையில் தொழில் நுட்பப்பள்ளி (அரசு பாலிடெக்னிக்) துவங்கக் காரணமாக இருந்தார். மதுரை தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து தமிழ்மொழி வளர்சிக்காக உழைத்தார். சேதுபதி தங்கபதக்கம் வென்றார். புதிய தமிழ் நூலகளை பதிப்பித்தார். துளசிராம், தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசுவதில் ஆற்றல் படைத்தவர்.
சமுதாயப் பணியில்
[தொகு]- சட்டத்துறையிலும் சிறந்து பணியாற்றினார். தனது சட்ட நுட்பத்தின் வாயிலாக சமுதாய மக்களின் குறைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று சமுதாய நலன்களை காத்தார்.
- 1919ஆம் ஆண்டில் இலண்டன் சென்று இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி சௌராஷ்ட்ர சமுகத்திற்கு பிற்பட்ட வகுப்பிற்கான தகுதி மற்றும் சலுகைகளை வாதாடிப் பெற்று, அதற்கான அரசாணை பெற்று கொடுத்தார்.
- சமுக மக்களின் முன்னேற்றதிற்காக மதுரையில் 1895ஆம் ஆண்டில் சௌராஷ்ட்ர சபையையும், 1906ஆம் ஆண்டில் சௌராஷ்ட்ர கிளப்பையும், 1918ஆம் ஆண்டில் சௌராஷ்ட்ர கூட்டுறவு வங்கியையும், 1920ஆம் ஆண்டில் திராவிடர் பல்நோக்கு பொறியியல் நிறுவனத்தையும் (தற்போதைய மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக்), துவக்குவதற்கு முன்னோடியாக இருந்து செயல்பட்டார்.
- 1897ஆம் ஆண்டில் நடந்த முதல் சௌராஷ்டிர சமுக மாநாட்டில் கலந்து கொண்டு சமுக வளர்ச்சி குறித்து கருத்துகளை பதிவு செய்தார்.சௌராஷ்ட்ர மக்கள் செய்து வந்த சாயத் தொழிலில் 1985இல் நவீன தொழில் நுட்பங்களை புகுத்தினார். ஏழை கைத்தறி நெசவாளர்கள் பரம்பரையாகத் தெருக்களில் பாவு நீட்டும் உரிமையை அரசுடன் போராடி வாங்கித் தந்தார்.
மதுரை நகர வளர்ச்சிப் பணியில்
[தொகு]- மதுரை நகராட்சியில் தலைமைப் பதவி வகித்த காலத்தில்தான் 1921ஆம் ஆண்டில் மதுரை நகரத் தெருக்களில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டது.
- 1923ஆம் ஆண்டில் மதுரை நகரில் கழிவுநீர் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது.
பெற்ற விருதுகளும் சிறப்புகளும்
[தொகு]- நாட்டு மக்களுக்காக ஆற்றிய பணியை பாராட்டும் விதமாக, இவருக்கு மதுரை மக்கள் சார்பாக 1930ஆம் ஆண்டில் இராஷ்ட்ர பந்து எனும் பட்டம் வழங்கப்பட்டது.
- மதுரை மாநகராட்சி, துளசிராமின் மக்கள் பணியை நினைவு கூறும்படியாக திருமலை நாயக்கர் அரண்மனை முன்பாக உள்ள மாநகராட்சி பூங்காவிற்கு எல். கே. துளசிராம் பூங்கா என்று பெயரிட்டு சிறப்பு செய்தது.[2].
- தழிழார்வம் கொண்ட நல்ல வைணவராக விளங்கிய இவருக்கு, இவர் உருவாக்கிய மதுரை சௌராட்டிர மேல்நிலைப் பள்ளி, மதுரையின் நூற்றாண்டு விழாவின் போது, இவருடைய முழு உருவ வெண்கலச்சிலை நிறுவப்பட்டுள்ளது.[3].
- இவரது முயற்சியால் 1918ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மதுரை சௌராட்டிர கூட்டுறவு வங்கியில் இவரது மார்பளவு வெண்கல திருவுருவச் சிலை வங்கியில் அமைத்து, வங்கி நிர்வாகம் இவரது சமுதாயப் பணிக்கும், ஆளுமைக்கும் சிறப்பு செய்தது.
- கே. வி. இராமாச்சாரி மற்றும் எல். கே.துளசிராம் ஆகியவர்களின் சமுதாய பணியை நினனவு கூறுமுகமாக சௌராட்டிர மக்கள் இராமாச்சாரி, துளசிராம் என்று தங்கள் ஆண் குழந்தைகளுக்கு பெயரிட்டனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-01-22. பார்க்கப்பட்ட நாள் 2014-09-23.
- ↑ http://here.com/india/madurai/recreation/l-k-thulasiram-children-park--356jx7ps-cc10fc993b950da29c7251b8c9df2a31
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-01-20. பார்க்கப்பட்ட நாள் 2014-09-23.
உசாத்துணை
[தொகு]- ராஷ்ட்ரபந்து. எல். கே. துளசிராம்”, நூலாசிரியர், ஜெ. கே. இராமமூர்த்தி, மதுரை.
- சௌராட்டிரர்: முழு வரலாறு, குட்டின். கே. ஆர். சேதுராமன், சென்னை.