உள்ளடக்கத்துக்குச் செல்

பி. டி. ஆர். பழனிவேல்ராசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. டி. ஆர். பழனிவேல் ராஜன்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர்
பதவியில்
1996–2001
முன்னையவர்இரா. முத்தையா
பின்னவர்கா. காளிமுத்து
தொகுதிமதுரை மேற்கு
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்
பதவியில்
2006
தொகுதிமதுரை மத்திய
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1932-02-27)27 பெப்ரவரி 1932
தேனி, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு20 மே 2006(2006-05-20) (அகவை 74)
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிதிமுக
துணைவர்ருக்மணி
பிள்ளைகள்பழனிவேல் தியாகராஜன்
பெற்றோர்பி. டி. ராஜன்
கற்பகாம்பாள்
வேலைஅரசியல்வாதி, வழக்கறிஞர்

பி. டி. ஆர். பழனிவேல் ராஜன் (27 பிப்ரவரி, 1932-20 மே, 2006) தமிழ்நாட்டில் மதுரை மாநகரில் 1932ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27, தேதியன்று பி. டி. ராஜன் - கற்பகாம்பாள் தம்பதியருக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் சட்டப்பேரவைத் தலைவராகவும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.[1][2]

இளமைப்பருவம்[தொகு]

பி. டி. ஆர். பழனிவேல் ராஜன் 1938 ஆம் ஆண்டில் இலங்கை கண்டியில் உள்ள டிரினிடி பள்ளியில் சேர்க்கப்பட்டார். நான்காண்டுகள் அங்கு பயின்ற அவர் அதன் பின்பு தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம், குன்னூர் சூசையப்பர் பள்ளியிலும் அதன் பின்பு 1946 இல் சேலம் மாவட்டம், ஏற்காடு மாண்ட்போர்டு பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து சென்னை கிறித்துவக் கல்லூரியில் வேதியியல் பாடத்தில் இளம் அறிவியல் பட்டம் பெற்று, பின் சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்து 1954 இல் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றார். 1954 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டு, மதுரையில் வழக்கறிஞராகத் தொழிலைத் தொடங்கினார்.

திருமணம்[தொகு]

பி. டி. ஆர். பழனிவேல் ராஜன் தனது 31 ஆவது வயதில், 1963 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதியில் சேலம் சுப்பராய முதலியார் மகளான ருக்மணியம்மாளை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1966 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் தேதியில் ஆண் குழந்தை பிறக்க பி. டி. ஆர். பழனிவேல் ராஜன் மகனுக்குத் தியாகராஜன் என்று பெயர் சூட்டினார்.[3]

அரசியல்[தொகு]

பி. டி. ஆர். பழனிவேல்ராசன் அவருடைய தந்தையும் நீதிக்கட்சியின் நிறுவனருமான பி.டி.ராஜனைப் போலவே அரசியலில் ஈடுபடத் துவங்கினார். பல கூட்டுறவுச் சங்கங்களுக்குத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 1967 ஆம் ஆண்டில் தேனி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன்பின்பு 1972 முதல் 1976 வரை தமிழ்நாடு கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். 1974 இல் லண்டன் மாநகரில் நடந்த 24 ஆவது காமன்வெல்த் மாநாட்டில் கலந்துக்கொண்டார். 1977 இல் பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சொத்துப் பாதுகாப்புக் கழக உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1980 இல் மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1984 இல், தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக்கு பட்டதாரிகள் தொகுதியில் போட்டியிட்டு மேலவை உறுப்பினராகத் தெர்வு செய்யப்பட்டார். 1996 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார். 2001 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதன்பிறகு 2006 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

இதர பதவிகள்[தொகு]

இலங்கைத் தமிழருக்காக சிறை[தொகு]

1985 ஆம் ஆண்டில் இலங்கை யில் திரு. பாலசிங்கம் மற்றும் திரு. சந்திரசேகரன் ஆகியோரின் வெளியேற்ற உத்தரவை எதிர்த்து மறியல் செய்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மரணம்[தொகு]

2006 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரை மத்தி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று, மதுரைக்கு தொடர்வண்டியில் திரும்பிக் கொண்டிருந்த போது திண்டுக்கல் அருகே மே 20, 2006 அன்று அதிகாலை 4.30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tamil Nadu - Madurai Central 2016". இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 22 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
  2. "Elections Madurai Central Palanivel Thiagarajan". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
  3. "This American is part of the campaign for Madurai Central - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2016-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._டி._ஆர்._பழனிவேல்ராசன்&oldid=3958070" இலிருந்து மீள்விக்கப்பட்டது