என். சங்கரய்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என். சங்கரய்யா
N.Sankaraiah
மாநிலக்குழு‍ செயலாளர்
பதவியில்
1995–2002
முன்னவர் ஏ.நல்லசிவன்
பின்வந்தவர் என்.வரதராஜன்
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 15, 1921 (1921-07-15) (அகவை 101)
ஆத்தூர், தூத்துக்குடி மாவட்டம்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
வாழ்க்கை துணைவர்(கள்) நவமணி
பிள்ளைகள் 2 மகன்கள், 1 மகள்
பெற்றோர் நரசிம்மலு‍-ராமானுஜம்
கல்வி இடைநிலை (வரலாறு)

என். சங்கரய்யா நூற்றாண்டு கண்ட சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு‍ மாநிலக்குழுவின் 15 ஆவது‍ மாநிலச் செயலாளராகவும், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவரும் ஆவார். மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து போலீசாரின் தடியடிகள், தலைமறைவு வாழ்க்கை மற்றும் போராட்டங்களில் பங்கேற்றவர்.[1] இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்‌க்சிஸ்ட்) உருவான போது‍ இருந்த 36 தலைவர்களில் என்.சங்கரய்யாவும் ஒருவர்.[2]

வாழ்க்கை வரலாறு‍[தொகு]

கல்லூரி வாழ்க்கை[தொகு]

இடைநிலை படிப்பிற்காக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1937 ஆம் ஆண்டில் சேர்ந்தார். வரலாறு‍ பிரதான பாடமாகும். அமெரிக்கன் கல்லூரியின் பரிமேலழகர் தமிழ்க்கழகத்தின் இணைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மதுரை மாணவர் சங்கம்[தொகு]

1938 ஆம் ஆண்டில் சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் சென்னை மாணவர் சங்கம் (Madras Student Organization) அமைக்கப்பட்டு‍ சுதந்திரப் போரட்டத்தில் ஈடுபட்டு‍ வந்தனர். இதேபோல் மதுரையிலும் மதுரை மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது. அதன் செயலாளராக என்.சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

பொதுவுடைமை இயக்கத்தில்[தொகு]

1940 ஆம் ஆண்டு‍ ஜனவரி மாதத்தில் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உருவாக்கப்பட்டது. அந்தக் கிளையில் காங்கிரஸ் சோசலிஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏ.செல்லயா, எஸ்.குருசாமி மற்றும் கே.பி.ஜானகி, எம்.ஆர்.எஸ்.மணி, எம்.எஸ்.எஸ்.மணி, எம்.ரத்தினம், என்.சங்கரய்யா உள்ளிட்ட 9 பேர் உறுப்பினர்கள் ஆவர்.[3]

1957 & 1962 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தல்களில் இவர் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி இழந்தார். 1967ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சங்கரய்யா, மதுரை மேற்குத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். இவர் 1977 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் மதுரை கிழக்குத் தொகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்டார். 1986 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மாநாட்டில் கட்சியின் இவர் மத்தியகுழுவிற்குத் தேர்வுசெய்யப்பட்டார். அப்போதிலிருந்து தொடர்ந்து மத்தியகுழுவில் இருந்து வருகிறார். 1995 இல் கடலூரில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், என்.சங்கரய்யா கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார். 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை அவர் அந்தப் பொறுப்பில் இருந்தார். 1982 முதல் 1991 வரை விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். [4]

தகைசால் தமிழர் விருது[தொகு]

தமிழ்நாடு அரசின் `தகைசால் தமிழர்' விருதைப் பெறும் முதல் தமிழ் ஆளுமையாக, என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2021 ஆகஸ்ட் 15-ம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது. இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, மாணவத் தலைவராகவும், சுதந்திரப் போராளியாகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் அரும்பணியாற்றியதுடன், தமிழகத்துக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி, சமீபத்தில் 100 வயதை அடைந்த தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவைப் பெருமைப்படுத்தும் வகையில், இவ்வாண்டுக்கான 'தகைசால் தமிழர்' விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு, அவருக்கு இவ்விருதினை வழங்க விருதாளர் தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது. [5]

ஆதாரம்[தொகு]

  1. "மண்டையன் ஆசாரி சந்திலிருந்து... - என்.ராமகிருஷ்ணனுடன் சந்திப்பு". 16 சூலை 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://cpim.org/
  3. 3.0 3.1 3.2 N, Ramakrishnan (September, 2011) (in Tamil). N.SANGKARAIAH VAZHALKKYUM IYAKKAMUM (Chennai ). Chennai: BHARATHI PUTHAKALAYAM. பக். 192. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0017013. 
  4. என். சங்கரய்யா: நூற்றாண்டு காணும் பொதுவுடமை சுடரின் அரசியல் வரலாறு
  5. என்.சங்கரய்யா தேர்வு! - தமிழ்நாடு அரசு அறிவிப்பு, 'தகைசால் தமிழர்' விருதுக்கு (29-07-2021). "'தகைசால் தமிழர்' விருதுக்கு என்.சங்கரய்யா தேர்வு! - தமிழ்நாடு அரசு அறிவிப்பு". Check date values in: |date= (உதவி)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._சங்கரய்யா&oldid=3658810" இருந்து மீள்விக்கப்பட்டது