உள்ளடக்கத்துக்குச் செல்

கருமுத்து தியாகராசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருமுத்து தியாகராசர்
பிறப்புகருமுத்து முத்துக்கருப்பன் தியாகராசச் செட்டியார்
(1893-06-16)16 சூன் 1893
சிவகங்கை, தமிழ்நாடு
இறப்பு29 சூலை 1974(1974-07-29) (அகவை 81)
பணிதொழிலதிபர்
அறியப்படுவதுதமிழ்ப்பற்றாளர், கல்வி நிறுவனங்களை நிறுவியவர்
பெற்றோர்கருமுத்து முத்துக்கருப்பன் செட்டியார்

கருமுத்து தியாகராஜன் செட்டியார், (16 சூன் 1893 - 29 சூலை 1974) கலைத்தந்தை என்று அழைக்கப்பட்டவர். இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர். மதுரையில் புகழ்பெற்ற தியாகராசர் கலைக்கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களையும் நிறுவியவர்.[1][2][3]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

கருமுத்து தியாகராஜன் தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டத்தில் முத்துக்கருப்பன் செட்டியாருக்கு பத்தாவது கடைசி மகவாகப் பிறந்தவர். இவர் இலங்கையில் கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கையின் மலையகத் தோட்டத் தொழிலாளர் நலன்களுக்காக அங்கு பத்திரிகை ஒன்றையும் தொடங்கி நடத்தினார். இந்தியா திரும்பிய தியாகராஜன் 1925 ஆம் ஆண்டில் மதுரையில் மீனாட்சி மில் என்ற தொழில் நிறுவனத்தை நிறுவினார். நூல் ஆலையும், நெசவு ஆலையும் அமைத்தார்.

இவர் தமிழ் மீது தனி ஆர்வம் காட்டி வந்தார். இதன் காரணமாகத் தூய தமிழில் தமிழ்நாடு என்னும் நாளிதழைப் பல ஆண்டுகள் நடத்தி வந்தார். இந்து நாளிதழ் உரிமையாளர்கள் மதுரைப் பதிப்பு வெளியிட விரும்பி அதனோடு, அந்த ஏற்பாட்டை ஒப்புக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் இந்தியைத் தேசிய மொழியாக ஏற்பாடமாக இந்தி கற்பிக்கப்பட வேண்டும் என்று கொண்டு வந்த கொள்கைகளை எதிர்த்தவர்களுள் இவரும் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார். இதற்காக இளம் வயது முதல் தாம் இருந்து வந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிக் கொண்டார். சோமசுந்தர பாரதியாரும், பெரியார் ஈ.வெ.ராவும் இந்தி எதிர்ப்பு இயக்கம் நடத்திய போது அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார். இவர் இலங்கை கொழும்பு மாநகரிலிருந்து வந்த ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஆசிரியப் பிரிவில் இளமையில் பணிபுரிந்து வந்திருந்த போதிலும் ஆங்கிலம் கலவாது தமிழில் பேசியும் எழுதி வந்தார்.

இராம‌நாத‌புர‌ம் சேதுப‌தி, ப‌ண்டித‌ ம‌ணி, பேராசிரிய‌ர் இர‌த்தின‌ச‌பாப‌தி போன்ற‌ ப‌ல‌ருடைய‌ நூல் நிலைய‌ங்க‌ளை விலைக்கு வாங்கிக் கொண்டார். ஏராள‌மான‌ புல‌வ‌ர்க‌ளுட‌ன் நெருங்கிய‌ தொட‌ர்பு கொண்டு அவ‌ர்க‌ளுக்கு உறுதுணையாக‌வும் ஆத‌ர‌வாக‌வும் இருந்தார். அவ‌ர்க‌ளில் சிற்கைலாச‌ம்பிள்ளை, ப‌ண்டித‌ம‌ணி, நாவ‌ல‌ர் சோம‌சுந்த‌ர‌ பார‌தியார், வ‌ர‌த‌ந‌ஞ்ச‌ய‌ பிள்ளை, முனைவ‌ர் இல‌க்குவ‌னார், திருவாசக‌ம‌ணி பால‌சுப்பிர‌ம‌ணிய‌ம், க‌விய‌ர‌ச‌ர் க‌ம்ப‌ரை ஆத‌ரித்த‌ ச‌டைய‌ப்ப‌வ‌ள்ள‌ல் வ‌ழிவ‌ந்த‌ டி. ஏ. வி. நாத‌ன், ஒள‌வை துரைசாமிப் பிள்ளை, கி.ஆ.பெ.விசுவ‌நாத‌ம், ம‌.பொ.சி., அற‌நெறிய‌ண்ண‌ல் கி. ப‌ழ‌நிய‌ப்ப‌னார் ஆகியோர் குறிப்பிடத்த‌குந்த‌வ‌ர்க‌ள்.

நாட்டுப்பற்று

[தொகு]

1917ஆம் ஆண்டு காங்கிரஸில் சேர்ந்து தொழிலாளர் தலைவராகவும், சில முறை மாகாணக் காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகவும் இருநதார். நூற்பாலை தொடங்கிய போது ஆந்திரகேசரி டி. பிர‌காச‌ம் போன்ற‌ தேசிய‌த் த‌லைவ‌ர்க‌ள் மீனாட்சி ஆலையின் ஆர‌ம்ப‌ கால‌ இய‌க்குன‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர். மகாத்மா காந்தியடிகள் மதுரைக்கு வந்திருந்த போது அப்போது தியாகராசச் செட்டியார் வாழ்ந்த மேலமாசி வீதி வீட்டில் அவருடைய விருந்தாளியாகத் தங்கினார்.[சான்று தேவை] அப்போது காந்தியடிகள் விரிவான உடைகளையும் தலைப்பாகையையும் சட்டையையும் கைவிட்டு ஆடைகளைக் குறைத்துக்கொள்ள முடிவு செய்தார். தமிழ்நாடு நாடு அரசு கதர்க்கடை ஒன்றினை இப்பொழுது அவ்வீட்டில் நடத்தி வருகின்றது. அதன் மாடியில் பொதுமக்கள் காண ஒரு மகாத்மா காந்திஜி சிலையினை நிறுவி புகைப்படக் கண்காட்சியையும் நடத்தி வருகின்றது. அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி அரசாங்க அதிகாரிகள் அங்கு வருகின்றனர். 23.7.2008 தினமலர் மதுரை மலரில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது. 28.7.2008 தியாகராசர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் பாலாஜி அறிக்கை வெளியிட்டு உள்ளார். 20.7.1976 இல்லஸ்ட்ரடெட் வீக்லி இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது.

பிற ஆர்வங்கள்

[தொகு]
  • இசையில் அவ‌ர் ஆர்வ‌ம் காட்டி வ‌ந்தார்.
  • ஓவிய‌த்திலும் அவ‌ருக்கு ஈடுபாடு இருந்த‌து.
  • குதிரை ச‌வாரியில் அவ‌ர் விருப்ப‌ம் காட்டினார்.
  • எப்போதும் வெள்ளை உடை உடுத்தி வ‌ந்தார்.
  • கட்டிடக்கலையிலும் அவருக்குத் தனி ஆர்வம் இருந்தது. சென்னை, கொடைக்கானல், குற்றாலம், மதுரை, ஆ.தெக்கூர் போன்ற ஊரில் அவர் கட்டியுள்ள கட்டிடங்கள் சிறப்பு மிக்கவை.

சமயப் பற்று

[தொகு]

சைவசமயத்தில் அழுத்தமான பற்றுக் கொண்டிருந்தார். தம் மக்களுக்கு நாயன்மார்கள் பெயர்களை இட்டார். நாள்தோறும் திருவாசகத்தை ஓதி வந்தார். நகரக்கோயில் பிரிவுகளுள் கலைத்தந்தை மாத்தூர் கோயிலைச் சேர்ந்தவர். அக்கோயில் திருப்பணி 1972 ல் மிகவும் சிறப்பாக நிறைவேறக் காரணமாக இருந்தார். வள்ளலாருடைய கொள்கைகளிலும் இவருக்கு ஈடுபாடு இருந்தது. புலால் மறுத்தல், அவருடைய தலையாய பண்பாக இருந்தது. தியாகராசர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் விடுதிகளில் புலால் உணவு வேண்டிக் கிளர்ச்சி செய்தனர். அவர்களுடைய கோரிக்கைகளுக்குச் சென்னையில் கல்வித்துறை உயர் அலுவலர்கள் ஆதரவாக இருந்தனர். சமணர்கள் நடத்தும் கல்லூரிகளில் உங்களால் உயிரின இயல் போன்ற‌ பாடத்தைச் சொல்லிக்கொடுக்கும்படி கட்டாயப்படுத்த முடியுமா? என்று தியாகராசச்செட்டியார் கேட்டார்.[சான்று தேவை] சைவ உணவின் பெருமையைப் பரப்ப நடைபெறும் மாநாடுகளில் ஆண்டுதோறும் இவர் கலந்து கொண்டார்.

தொழில்

[தொகு]

இவருடைய குடும்பம் இலங்கையில் துணி வாணிகத்தில் ஈடுபட்டிருந்தது. இவருடைய அண்ணன் அருணாசலம் செட்டியார் துணியின் தரம் அறிவதில் ஆற்றல் பெற்றிருந்தார். இவருடைய மற்றொரு அண்ணன் இராமநாதன் செட்டியார் மான்செஸ்டர் ஆலைகளின் நடைமுறையை பற்றித் தெரிந்து கொள்வதற்காக 1907இல் இங்கிலாந்துக்குச் சென்றார். நகரத்தாருள் மேலைநாடுகளுக்கு முதலில் சென்றவர் அவரே ஆவார்.[சான்று தேவை] இந்தப் பரம்பரையில் வந்த தியாகராசச் செட்டியார் நூல் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு இந்தியாவின் தொழில் மேதைகளுள் ஒருவரானார்.

சிறப்புகள்

[தொகு]

இலங்கையில் மலையகத் தமிழர்களுக்கு உடலில் அடையாளச் சூடு போடும் பழக்கத்தினை தடுத்து நிறுத்தினார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Basu, Soma (3 January 2009). "Made for each other". தி இந்து இம் மூலத்தில் இருந்து 1 நவம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111101190953/http://www.hindu.com/mp/2009/01/03/stories/2009010353370800.htm. பார்த்த நாள்: 3 அக்டோபர் 2015. 
  2. "K.M. Thiagarajan passes away". தி இந்து. 3 அக்டோபர் 2015.
  3. "Thiagarajar College's golden jubilee". தி இந்து. 31 சனவரி 2007. பார்க்கப்பட்ட நாள் 3 அக்டோபர் 2015.
  4. மதராஸ் மாகாணகவர்னர் பெண்ட்லாண்ட் பிரபுவிற்கு 1916ல் கருமுத்து தியாகராசர் எழுதிய கடிதம் சென்னை எழும்பூர் ஆவணக்காப்பகத்தில் பேணப்பட்டு வருகின்றது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருமுத்து_தியாகராசர்&oldid=4056401" இலிருந்து மீள்விக்கப்பட்டது