கருத்தரிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குழந்தை பிறக்கும் காலத்தை அண்மித்திருக்கும் ஒரு கருத்தரித்த பெண்ணின் தோற்றம்

கருத்தரிப்பு என்பது, பாலூட்டிகளில், கருக்கட்டல் நிகழ்வின்போது உருவாகும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்த சந்ததிக்கான உயிரி, முளைய விருத்தி மூலம் முளையமாக விருத்தியடைந்து, பின்னர் முதிர்கரு நிலையில் குழந்தை பிறப்புவரை, பெண்களின் இனப்பெருக்க உறுப்பான கருப்பையில் பதிந்து, தாங்கிக் கொள்ளப்படும் நிலையாகும். இந்தக் கட்டுரையில் மனிதரில் நிகழும் கருத்தரிப்பே விரிவாக ஆராயப்படுகின்றது.

மனிதரில், பருவமடைந்த ஆரோக்கியமான பெண்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சினை முட்டைகள் உற்பத்தியாகும். அந்த கருமுட்டைகள் கருக்கட்டத் தேவையான ஆணினது விந்து கிடைக்கப்பெறாத சந்தர்ப்பத்தில் அம்முட்டைகளுடன் கருவறை சுவர்களும் சுத்திகரிக்கப்பட்டு கழிவுகளாக வெளியேற்றப்படும். இச்செயற்பாடே மாதவிடாய் எனப்படுகிறது. மாறாக ஆண் பெண் கலவியினால் சினை முட்டையுடன் ஆணின் விந்து இணையுமாயின் அங்கு கருத்தரிப்பு இடம்பெறுகிறது. ஆண் பெண் கலவியற்ற செயற்கை முறையாலும், அதாவது வெளிச் சோதனை முறை கருக்கட்டல் அல்லது செயற்கை விந்தூட்டல் மூலமும் பெண் கருத்தரிக்க முடியும்.

கருக்கட்டல் நிகழுமாயின் கருப்பையில் புதிய கருவணு தங்கியதும், இயக்குநீர் செயற்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக மாதவிடாய் ஏற்படல் தற்காலிகமாகத் தடைப்படும். பெண்களில் கருக்கட்டல் நிகழ்ந்து 38 கிழமைகளில் பொதுவாக குழந்தை பிறப்பு நிகழும். மாதவிடாயானது 28 நாட்களுக்கு ஒருமுறை நிகழும். இறுதி மாதவிடாய் ஏற்பட்டு 14 நாட்களில் புதிய கருமுட்டை சூலகத்தில் இருந்து வெளிவரும். இது ஒழுங்காக நிகழும் பெண்களில், இறுதி மாதவிடாய் ஆரம்பித்த நாளில் இருந்து 40 கிழமைகளில் குழந்தை பிறப்பு நிகழும். இந்தக் காலமே கருக்காலம் அல்லது கருத்தரிப்புக் காலம் எனக் கணக்கிடப்படுகின்றது.

பொருளடக்கம்

கருத்தரிப்பு நிகழ்வின் ஆரம்பம்[தொகு]

மனிதரில் கருக்கட்டலும், அதன் பின்னர் கருப்பையில் கரு பதிதலும்.

ஒவ்வொரு மாதமும் ஒரு பெண்ணின் சூல்முட்டை வெடித்து வெளிவருகிறது. வெளி வந்து ஒரு நாள் அது உயிரோடு இருக்கும்.[1] அக்காலத்தில் ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபட்டால், ஆணின் விந்துக்கள் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பினூடாக நீந்தி கருமுட்டையைச் சென்றடைகின்றன. கலவியின்போது பெண்ணின் இனப்பெருக்க உறுப்பினுள் உட்புகும் விந்தானது, யோனி, அதைத் தொடர்ந்து கருப்பை வாய், கருப்பை வழியாக நீந்திச் சென்று பாலோப்பியன் குழாயை அடையும். அதேவேளை சூலகத்தில் இருந்து வெளியேறும் முட்டையும் பாலோப்பியன் குழாயை அடையுமாயின், விந்தானது அங்கே கருமுட்டையுடன் இணையும். அந்த விந்துக்களில் ஏதாவது ஒன்று சூல்முட்டைக்குள் உள்புகுந்தால் கருக்கட்டல் நிகழ்ந்து கருத்தரிக்கும். ஒரு விந்து சூல்முட்டைக்குள் போன பின்னர், வேறு விந்துக்கள் அந்த முட்டைக்குள் உள்ளே போக முடியாது.

வெளியேறும் விந்தானது உடனேயே கருக்கட்டக் கூடிய இயல்பை முழுமையாகக் கொண்டிருப்பதில்லை[2]. அவை நீந்திச் செல்லும்போது, பல மணித்தியாலங்களுக்கு அவற்றில் நிகழும் சில மாற்றங்களே, அவற்றைக் கருக்கட்டலுக்குத் தயார்ப்படுத்துகின்றன. கருக்கட்டலின்போது ஒருமடிய விந்தும், ஒருமடிய கருமுட்டையும் இணைந்து இருமடிய நிலையிலுள்ள கருவணுவை உருவாக்குகின்றது. கருவணுவானது பின்னர் கருப்பை நோக்கி நகர ஆரம்பிக்கும். அது கருப்பையை வந்தடைய 4-7 நாட்கள் எடுக்கும். அதேவேளை கருவணு தொடர்ந்து பல மாற்றங்களுக்கு உட்படும்.

ஆனாலும் கலவி நிகழாமலேயே செயற்கை விந்தூட்டல், வெளிச் சோதனை முறை கருக்கட்டல் போன்ற முறைகள் மூலம் கருத்தரிப்பு நிகழும் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுவாக இம்முறைகள் ஏதாவது காரணங்களால் மலட்டுத்தன்மை இருக்கும் நிலையில் மேற்கொள்ளப்படும்.

செயற்கை விந்தூட்டல் மூலம் சூல்முட்டை வெளிவரும் காலத்தில் விந்து பெண்ணின் இனப்பெருக்க உறுப்பினுள் உட்செலுத்தப்படுவதன் மூலம், கருக்கட்டல் நிகழ்வதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்படும். அங்கே கருக்கட்டல் வெற்றிகரமாக நிகழுமாயின் கருத்தரிப்பு நிகழும்.

வெளிச் சோதனை முறை கருக்கட்டல் ஆயின், வெளிவரும் முட்டைகள் பெண்ணின் உடலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு, வெளிச் சூழலில், அதாவது பரிசோதனைக் கூடத்தில், விந்துடன் கலக்கப்படும்போது, கருக்கட்டல் வெற்றிகரமாக நிகழுமாயின், கருக்கட்டப்பட்ட கருவணு அல்லது, முளைய விருத்திக்கு உட்படும் முளையம் மீண்டும் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பினுள் வைக்கப்பட்டு, கருத்தரிப்பு நிகழும்.

கரு வளர்ச்சி நிலைகள்[தொகு]

கருவளர் நிலைகள்
மனித முளைய விருத்தியின் ஆரம்ப நிலைகள்

கருக்கட்டல் நிகழ்ந்த பின்னர், தோன்றும் கருவணுவானது கிட்டத்தட்ட 24-36 மணித்தியாலங்களில் இழையுருப்பிரிவு என்னும் கலப்பிரிவுக்குள்ளாகும். கலப்பிரிவின்போது, உயிரணுக்களின் எண்ணிக்கை விரைவாகவும், இரட்டிப்படைந்து கொண்டும் அதிகரித்துச் செல்லும். கிட்டத்தட்ட 70-100 உயிரணுக்களைக் கொண்ட நிலையில், இளம்கருவளர் பருவம் (Blastocyst) என அழைக்கப்படும். பொதுவாக கருக்கட்டல் நிகழ்ந்து 5 நாட்களில் இவ்வாறு அழைக்கப்படும். இந்நிலையில் இது மூன்று படலங்களைக் கொண்டிருக்கும். இவை புறப்படலம் (ectoderm), இடைப்படலம் (mesoderm), அகப்படலம் (endoderm) எனப்படும். வளர்ச்சியுற்ற நிலையில் புறப்படலம் தோல், நரம்புத் தொகுதியையும், இடைப்படலம் தசை, எலும்புத் தொகுதியையும், அகப்படலம் சமிபாடு, சுவாசத் தொகுதி போன்றவற்றையும் உருவாக்க வல்லன. கருப்பையை வந்தடையும் இளம் கருவளர் பருவமானது கருப்பைச் சுவரில் பதிந்து உறுதியாக இருக்கும்.

இது மேலும் விருத்தியடைந்து செல்லும் நிலையில், அது முளையம் எனப்படும். அப்படி உயிரணுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும்போது உயிரணுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு, உயிரணு வேற்றுமைப்பாடு மூலம், வெவ்வேறு இழையங்கள் உருவாகும். இது முளைய விருத்தி எனப்படும். கருவின் வளர்ச்சிக்கு ஆதாரத்தைக் கொடுக்கும் சூல்வித்தகம், தொப்புள்கொடி போன்றனவும் விருத்தியடையும். இந்த விருத்தி நிலைகளின்போது உருவாகும் குழந்தைக்கு தகுந்த பாதுகாப்பை வழங்குவதற்காக, கருவை அல்லது முதிர்கருவைச் சுற்றி பனிக்குட நீர் அல்லது பனிக்குடப்பாய்மம் என்னும் திரவத்தைக் கொண்ட, பனிக்குடப்பை எனப்படும் ஒரு பையும் உருவாகியிருக்கும். தொடரும் விருத்தியின்போது கண், விரல்கள், வாய், காது போன்ற உடல் உறுப்புக்கள் தெரிய ஆரம்பிக்கும். உயிரணு வேற்றுமைப்பாடு கிட்டத்தட்ட 8 கிழமைகளில் நிறைவடைந்துவிடும். அந்நிலையில் முதிர்கரு என அழைக்கப்படும்.

முளைய விருத்தியில் விருத்தியடையத் தொடங்கிய உடல் உறுப்புக்கள், மற்றும் உடலியக்கத் தொகுதிகள் முதிர்கருவில் தொடர்ந்தும் விருத்தியடையும். கருத்திரிப்பின் மூன்றாவது மாதத்தில் பால் உறுப்புக்கள் வெளித்தெரிய ஆரம்பிக்கும். தொடர்ந்தும் முதிர்கருவானது நீளம், நிறை அதிகரித்துச் செல்லும். அதிகளவு நிறை அதிகரிப்பு கருத்தரிப்பின் இறுதி நிலைகளிலேயே ஏற்படும்.

இயற்கை கருத்தரிப்பு முறை[தொகு]

இயற்கையில் பெண்ணினது சூல்முட்டையும், ஆணினது விந்தும் கலவியினால் இணையும் போதே கருவணு அல்லது நுகம் உருவாகி அவைகள் 2-4-8-16-32 என கருவணுவை நூறு சதவீத ஒத்த பிரதிகளாக தொடர்ந்து பெருக்கமடைந்து முளையமாகிறது. கருக்கட்டல் நடந்த 9 ஆவது கிழமையில் அல்லது கருக்காலத்தின் 11 ஆவது கிழமையின் பின்னர், இம்முளையமானது முதிர்கரு என அழைக்கப்படுகிறது. முதிர்கருவானது ஒன்பது மாதங்கள் கருவறையில் வளர்ச்சியடைந்த பின்னர், இறுதியில் முழு உயிராக அல்லது குழந்தையாக குழந்தை பிறப்பு நிகழ்வின் மூலம் பிரசவிக்கின்றது.

செயற்கை கருத்தரிப்பு முறை[தொகு]

பரிசோதனைக்குழாய் குழந்தை[தொகு]

சில காரணங்களால் கலப்பின் போது ஆணின் விந்தும், பெண்ணின் முட்டையும் இணைந்து கருவணு உருவாக்கத்தை ஏற்படுத்தாத போது விந்தையும், முட்டையையும் Petridish எனப்படும் கண்ணாடி கிண்ணத்தில் வளர்ப்பூடகத்தில் இணைத்து கருவணுவை உருவாக்கி பெண்ணின் கருப்பைக்குள் வைத்து வளர்க்கும் முறை பரீட்சிக்கப்பட்டு எண்பதுகளில் இச்சோதனை வெற்றி பெற்று பரிசோதனைக்குழாய் குழந்தைகள் உருவாக்கத்திற்கு வழி அமைத்தது.

செயற்கை விந்தூட்டல் முறை[தொகு]

செயற்கையான முறையில் விந்தை பெண்ணின் இனப்பெருக்க உறுப்பினுள் உட்செலுத்தும் முறையாகும். இது குழந்தைப் பேற்றிற்காக செய்யப்படும் 'தூண்டிய இனப்பெருக்கத் தொழில்நுட்ப முறை'களில் ஒன்றாகும். பெண்ணின் ஆண் துணையிடமிருந்தோ அல்லது வேறு விந்து வழங்கியான ஒரு ஆணிடமிருந்தோ பெறப்படும் விந்தானது, இங்கே பயன்படுத்தப்படும்.

படியெடுப்பு[தொகு]

கருவணு உருவாக்கத்திற்கு ஆணினது விந்து தேவையென்ற நிலையை தகர்த்த புரட்சியே அடுத்த முக்கிய கட்டமான படியெடுப்பு இனப்பெருக்கமாகும். இதன் படி பெண்ணினது முட்டையிலுள்ள கரு நீக்கப்பட்டு சாதாரண உயிரணுவிலுள்ள கரு செலுத்தப்பட்டு கருவணுவை உருவாக்கி முளையமாக்கி பின்னர் கருவறையினுள் வளரச்செய்து பிரசவிக்கும் முறையாகும். இதுவே படியெடுப்பு (Cloning) எனப்படுகிறது.

மனிதரில் படியெடுப்பு என்பது மிகவும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் ஒரு விடயமாகும்]].[7][8][9]

Panayiotis Zavos என்ற கருக்கட்டல் செயல்முறையில் நிபுணத்துவம் பெற்ற, சர்ச்சைகளுக்கு உள்ளாகும், ஒரு அமெரிக்க மருத்துவர், புதிதாகப் படியெடுக்கப்பட்ட முளையம் ஒன்றை, தான் 35 வயது பெண்ணிற்கு மாற்றி இருப்பதாக 2004 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் திகதி ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தினார். அதே ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும், அந்தப் பெண் கருத்தரிக்கவில்லை என்றும் அறியக் கிடைத்தது[10][11].

ஒத்த குழந்தைகள்[தொகு]

பரிசோதனைக்குழாய் குழந்தைகளுக்கான முறையிலோ அல்லது படியெடுப்பு முறையிலோ கருவணுவை உருவாக்கி அதனை வளர்பூடகத்தில் வளர்க்கும் போது முதல் ஓரிரு நாட்களில் 2, 4, 8, 16, 32 என உருவாகும் முளையத்திலுள்ள குருத்தணுக்கள் எனப்படும் உயிரணுக்களை மீண்டும் தனித்தனியாகப் பிரித்தெடுத்து வெவ்வேறாக வளர்த்து பரீட்சிக்கப்பட்ட போது அவைகள் ஒவ்வொன்றும் தனித்தனி கருவணுவாகச் செயற்பட்டுத் தனித்தனி முளையங்களைத் தோற்றுவித்தது. அவைகளை வெவ்வேறு பெண்கள் மூலமாகக் கருத்தரிக்கச்செய்ய வைக்க முடியும் என்பது உறுதிசெய்யப்பட்டது(சான்று தேவை). இதன் மூலம் ஒரே நேரத்தில் இயல்பிலும் தோற்றத்திலும் ஒத்த பலரை வெவ்வேறு பெண்கள் மூலமாகப் பிரசவிக்கச்செய்ய முடியும் என்ற புரட்சியை அறிவியல் கொள்கையளவில் நிரூபித்தது. இக் குருத்தணுக்கள் முளையக் குருத்தணுக்கள் (Embryonic Stem Cells) என அழைக்கப்பட்டன. முளையக் குருத்தணு வளர்ப்பு தாவரவியலிலேயே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இரட்டைக் குழந்தைகள்[தொகு]

ஒன்று போலிருக்கும் இரட்டை (Identical Twins)

கருக்கட்டலின் பின்னர் தோன்றும் கருவணு, பிளவின் பொது (Clevage) சில சமயங்களில் இயல்புக்கு மாறாக, முழுமையாக இரண்டாகப் பிரிந்து விடும். இவ்வாறு இரண்டாகப் பிரிந்த கருவுயிர்க்கப்பட்ட முட்டை இரு குழந்தைகளாக உருவாகின்றன. ஒரு வேளை கருவுயிர்க்கப்பட்ட முட்டை சரியாக இரண்டாகப் பிரியவில்லையெனில் பிறக்கும் குழந்தைகள் ஒட்டிப் பிறக்கின்றன. இங்கு ஒரு சூல் முட்டையும், ஒரு விந்துமே இரு குழந்தைகளுக்கும் காரணமாக இருப்பதால் குழந்தைகளின் மரபுக்கூறும் ஒன்றேயாகும். எனவே இக் குழந்தைகள் எல்லாப் பண்புகளிலும் ஒன்று போலவே இருக்கின்றன. ஆனால் குழந்தையின் வளர்ச்சியில் சூழ்நிலையும் முக்கியப் பங்கு வகிப்பதால் சூழ் நிலை வேறுபாட்டால் இத்தகைய குழந்தைகளுக்கிடையே சிறிய வேறுபாடுகள் காணப்படலாம். சில சமயம் கருத்தரிப்புக் காலத்தில் தாயின் கருப்பையினுள் இருக்கும்போதே, அவர்களுக்கு கிடைக்கும் வேறுபட்ட அளவிலான ஊட்டச்சத்து காரணமாக இரு குழந்தைகளிடையேயும் வேறுபாடுகள் ஏற்படலாம்.

வேறுபாடுள்ள இரட்டை (Non Identical twins)

பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு சூல் பையிலிருந்து ஒரு சூல்முட்டை வெளிப்படும். அபூர்வமாக சில சமயங்களில் இரண்டு முட்டைகள் வெளிப்படும். அல்லது ஏதாவது காரணங்களால் சூல்முட்டை இரண்டாகப் பிளவுபட்டு விடும். இந்தச் சமயங்களில் ஆண், பெண் சேரும் போது இரண்டு முட்டைகளும் இரு வேறு விந்துக்களால் கருவுயிர்க்கப்பட்டு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. இங்கு எப்போதுமே விந்துக்களும் முட்டைகளும் வெவ்வேறாக இருப்பதால் பிறக்கும் குழந்தைகளின் மரபுக் கூறும் வெவ்வேறாக இருக்கும். எனவே குழந்தைகளுக்கிடையில் உருவ ஒற்றுமையோ, பிற பண்புகளில் ஒற்றுமையோ, ஒன்று போலிருக்கும் இரட்டைக் குழந்தைகள் போன்று, குறிப்பிடத்தக்கதாய் இருப்பதில்லை.

கற்பமுற்றதைத் தீர்மானித்தல்[தொகு]

22 வார கருத்தரிப்பில் பெண்களின் வயிற்றில் காணப்படும் Linea nigra என்றழைக்கப்படும் கருமையான கோடு

ஒரு பெண் கருப்பமுற்றிருப்பதைப் பல வழிகளில் கண்டுபிடிக்கலாம். மருத்துவ பரிசோதனகள் மூலமாகவோ, அல்லது அவ்வாறில்லாமலோ கருப்பத்தைக் கண்டறியலாம். மருத்துவ பரிசோதனையில் மருத்துவ தொழிலில் உள்ளவர்களின் உதவியுடனோ, அல்லது இல்லாமலோ கண்டறிய முடியும்.

கருத்தரித்திருக்கும் பெண்களில், அதற்கான பல அறிகுறிகள் தோன்றும்[12]. அவற்றில் குமட்டல், வாந்தி, அளவுக்கு மீறிய அசதி, களைப்பு போன்றன முக்கியமானவையாகும். அடிக்கடி, அனேகமாக இரவில் சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு ஏற்படும். சிலருக்கு குறிப்பிட்ட உணவுகளில் விருப்பம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இவை தவிர பல ஆரம்ப மருத்துவ அறிகுறிகள் தென்படும்[13][14]. பொதுவாக அவை கருத்தரித்து சில கிழமைகளில் கண்டுபிடிக்கக் கூடியதாக இருக்கும். இவற்றில் மிக முக்கியமானது குருதியிலும், சிறுநீரிலும் Human chorionic gonadotropin (HCG) என்னும் இயக்குநீர் காணப்படுதல். இதனை இலகுவாக மருத்துவச் சோதனைகள் மூலம் கண்டுபிடிக்கலாம்.

பொதுவாக கருத்தரிப்பின்போதுமாதவிடாய் நிகழ்வு நின்றுவிடும். ஆனாலும் சிலருக்கு, கருப்பையில் கரு பதியும்போது குருதிப்போக்கு ஏற்படக்கூடும். இது பொதுவாக இறுதி மாதவிடாய் வந்து 3ஆம், 4ஆம் கிழமைகளில் நடக்கக் கூடும். சூல் முட்டை வெளியேறும்போது அடிநிலை உடல் வெப்பநிலையில் ஏற்படும் அதிகரிப்பு வெளியேற்றம் நடந்து 2 வாரங்களின் பின்னரும் தொடர்ந்திருக்கும். கருப்பை வாய், யோனி, பெண்குறி போன்ற பகுதிகள் கருநிறமடையும். கருப்பை வாய், கருப்பையின் ஒடுங்கிய பகுதி, போன்றன மென்மையாகும். இயக்குநீர்களில் ஏற்படும் மாற்றத்தால் நிகழும் நிறமூட்டலினால் வயிற்றின் நடுக்கோட்டில் கருமையான கோடு தோன்றும். இந்தக் கோடு பொதுவாக கருத்தரிப்பின் நடுப்பகுதியில் பார்க்கக் கூடியதாக இருக்கும்.).[13][14] முலைகள் மிருதுத்தன்மையை அடையும். இது பொதுவாக இளமையான பெண்களில் தெளிவாகத் தெரியும்[15].

கருத்தரிப்பானது கருத்தரிப்பு பரிசோதனைகள்[16] மூலம் உறுதி செய்யப்படும். பொதுவாக இது புதிதாக கருப்பையினுள் உருவாகும் சூல்வித்தகத்திலிருந்து தோற்றுவிக்கப்படும் இயக்குநீரைக் கண்டறியும் சோதனையாக இருக்கும். குருதி, சிறுநீர் ஆகியவற்றில் செய்யப்படும் இந்த மருத்துவ சோதனையானது பொதுவாக கருப்பதிந்து 12 நாட்களின் பின்னர் செய்யப்படும்.[17]. சிறுநீரில் செய்யப்படும் சோதனையை விடவும் குருதியில் செய்யப்படும் சோதனையே நம்பகத்தனை கூடியதாக இருக்கும்[18]. வீட்டில் செய்யப்படும் சோதனையான சிறுநீர்ச் சோதனை மூலம் கருக்கட்டலின் பின்னர் 12-15 நாட்களின் பின்னரே முடிவைக் கண்டறியக் கூடியதாக இருக்கும். ஒரு அளவறி குருதிச் சோதனை மூலம் முளையம் பதிந்த நாளை அண்ணளவாக நிர்ணயிக்கலாம்.

உடல் மாற்றங்கள்[தொகு]

உளவியல் மாற்றங்கள்[தொகு]

சமூக விளைவுகள்[தொகு]

கருத்தடை[தொகு]

முதன்மைக் கட்டுரை: கருத்தடை

கருக்கலைப்பும், கருச்சிதைவும்[தொகு]

கருக்கலைப்பு என்பது முளையத்தை அல்லது முதிர்கருவைக் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றி அதனை அழித்துவிடுதல் ஆகும். வன்கலவி போன்ற சில காரணங்களினாலும், பொருளாதாரச் சிக்கல், சமூகப்பழி, மற்றும் பிற தனிப்பட்ட காரணங்களாலும் கருக்கலைப்பு செய்யப்படுவதுண்டு. இது பெரும்பாலான நாடுகளில் சட்டத்தால் அனுமதிக்கப்படுகிறது. எனினும் ஒரு கருவை அழிப்பது ஒரு உயிரைக் கொல்வதாகும் என்பது பலரின் நிலைப்பாடு. சிலசமயம் சில தாயின் உடல்நலத்தைக் காக்கும் நோக்கிலும், பிறக்கப்போகும் குழந்தை உடல்நலக் குறைபாட்டுடன் பிறக்கும் என்பது தெரியவந்தால், அதனைத் தவிர்ப்பதற்கும் கூட இவ்வாறாக கருக்கலைப்பு செய்யப்படுகின்றது.

கருக்கலைப்பு என்பது பொதுவாக வேண்டுமென்றே செய்யப்படுவது. சில சமயங்களில் தானாகவே இவ்வாறான நிலை ஏற்படுவது உண்டு. இது பொதுவாகக் கருச்சிதைவு எனப்படும்.

இவற்றையும் பாக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. பிரேமா கிருஷணசாமி. (2004). கருத்தரித்தல். உச்சி முதல் உள்ளங்காள் வரை. சென்னை: ஆனந்த விகடன்.
  2. "Fertilization". பார்த்த நாள் 2010-07-28.
  3. 3D Pregnancy (Image from gestational age of 6 weeks). Retrieved 2007-08-28. A rotatable 3D version of this photo is available here, and a sketch is available here.
  4. 3D Pregnancy (Image from gestational age of 10 weeks). Retrieved 2007-08-28. A rotatable 3D version of this photo is available here, and a sketch is available here.
  5. 3D Pregnancy (Image from gestational age of 20 weeks). Retrieved 2007-08-28. A rotatable 3D version of this photo is available here, and a sketch is available here.
  6. 3D Pregnancy (Image from gestational age of 40 weeks). Retrieved 2007-08-28. A rotatable 3D version of this photo is available here, and a sketch is available here.
  7. Joshua Lederberg. (1966). Experimental Genetics and Human Evolution. The American Naturalist 100, 915, pp. 519-531
  8. Watson, James. "Moving Toward a Clonal Man: Is This What We Want?" The Atlantic Monthly (1971)
  9. Lewis D. Eigen (2010). "Scriptamus, Human Clones May Be Among Us Now! Who Is Ready?".
  10. "Human clone attempt fails". Daily Mail (London). http://www.dailymail.co.uk/health/article-207372/Human-clone-attempt-fails.html. 
  11. "Human cloning attempt has failed". BBC News. 4 February 2004. http://news.bbc.co.uk/2/hi/health/3459009.stm. 
  12. "Pregnancy Symptoms". National Health Service (NHS) (11 March 2010). பார்த்த நாள் 11 March 2010.
  13. 13.0 13.1 "Early symptoms of pregnancy: What happens right away". Mayo Clinic (22 February 2007). பார்த்த நாள் 2007-08-22.
  14. 14.0 14.1 "Pregnancy Symptoms – Early Signs of Pregnancy : American Pregnancy Association". பார்த்த நாள் 2008-01-16.
  15. MedlinePlus > Breast pain Update Date: 12/31/2008. Updated by: David C. Dugdale, Susan Storck. Also reviewed by David Zieve.
  16. "NHS Pregnancy Planner". National Health Service (NHS) (19 March 2010). பார்த்த நாள் 19 March 2010.
  17. Qasim SM, Callan C, Choe JK (1996). "The predictive value of an initial serum beta human chorionic gonadotropin level for pregnancy outcome following in vitro fertilization.". Journal of Assisted Reproduction and Genetics 13 (9): 705–8. doi:10.1007/BF02066422. பப்மெட் 8947817. 
  18. "BestBets: Serum or Urine beta-hCG?".

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கருத்தரிப்பு&oldid=1422443" இருந்து மீள்விக்கப்பட்டது