கருக்காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கருக்காலம் (Gestational Age) என்பது தாயின் கருப்பையினுள் இருக்கும் முளையம் அல்லது முதிர்கருவின் வயதாகும். இது தாயின் இறுதியான மாதவிடாயின் முதல் நாளிலிருந்து கணிக்கப்படும். அல்லது கருக்கட்டல் நாளிலிருந்து 14 நாட்கள் முன்னராக வரும் நாளிலிருந்தும் கணிக்கப்படலாம். பொதுவாக மாதவிடாயின் முதலாவது நாளிலிருந்து 14 நாட்களின் பின்னரே கருக்கட்டல் நிகழும் என்ற எடுகோளைக் கொண்டே மாதவிடாய் முதல் நாளிலிருந்தான கணித்தல் முறை பின்பற்றப்படுகிறது. இம்முறையின் இலகுவான தன்மையால், பொதுவாக இதுவே பயன்படுத்தப்படும் போதிலும், ஏனைய முறைகளும் பரிந்துரைக்கப்பட்டும், பயன்படுத்தப்பட்டும் வருகின்றன[1].

உண்மையில் கருவின் வயதானது கருக்கட்டல் நிகழும் நாளின் பின்னரே தொடங்குமாயினும், இயற்கையான கருத்தரிப்பின்போது, சரியான கருக்கட்டல் நாளைத் தெரிந்துகொள்வது முடியாது என்பதனாலேயே இம்முறை பயன்பாட்டில் உள்ளது. கருக்கட்டல் நிகழுமாயின் கருப்பையில் புதிய கருவணு தங்கியதும், இயக்குநீர் செயற்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக மாதவிடாய் ஏற்படல் தற்காலிகமாகத் தடைப்படும். மாதவிடாயானது 28 நாட்களுக்கு ஒருமுறை நிகழும். இறுதி மாதவிடாய் ஏற்பட்டு 14 நாட்களில் புதிய கருமுட்டை சூலகத்தில் இருந்து வெளிவரும். எனவே இறுதி மாதவிடாய் நிகழ்ந்து 14 நாட்களில், அதாவது 2 கிழமைகளில் கருக்கட்டல் நிகழ்வதற்கான சாத்தியம் ஏற்படுகின்றது. பெண்களில் கருக்கட்டல் நிகழ்ந்து 38 கிழமைகளில் பொதுவாக குழந்தை பிறப்பு நிகழும். எனவே மாதவிடாய் ஒழுங்காக நிகழும் பெண்களில், இறுதி மாதவிடாய் ஆரம்பித்த நாளில் இருந்து 40 கிழமைகளில் குழந்தை பிறப்பு நிகழும். இறுதி மாதவிடாய் வந்த காலத்தைக் கருத்தில் கொண்டே, குழந்தை பிறப்பதற்கான நாள் தீர்மானிக்கப்படுவதனால், இந்தக் காலமே, அதாவது 40 கிழமைகளே முழுமையான கருக்காலம் அல்லது கருத்தரிப்புக் காலம் எனக் கணக்கிடப்படுகின்றது.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Engle W, American Academy of Pediatrics Committee on Fetus and Newborn (2004). "Age terminology during the perinatal period". Pediatrics 114 (5): 1362–4. doi:10.1542/peds.2004-1915. பப்மெட் 15520122. http://aappolicy.aappublications.org/cgi/content/full/pediatrics;114/5/1362. பார்த்த நாள்: 2007-01-28. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=கருக்காலம்&oldid=1602791" இருந்து மீள்விக்கப்பட்டது