நரம்புத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நரம்புத் தொகுதி
மனிதனின் நரம்புத் தொகுதி
இலத்தீன் systema nervosum

நரம்புத் தொகுதி (Nervous system) அல்லது நரம்பு மண்டலம் என்பது விலங்குகளில் காணப்படும், இச்சைவழி (Voluntary), மற்றும் இச்சையின்றி (Involuntary) நிகழும் அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைப்பதற்கும், விலங்கிற்கு உள்ளேயும், வெளியிலான சூழலுடன் தொடர்புற்றும் தகவல்களையும், சைகைகளையும் விலங்கின் வெவ்வேறு பகுதிகளுக்கிடையில் கடத்துவதற்குமான சிறப்பாக்கம் கொண்ட ஒரு தொகுதியாகும். இது நரம்பு உயிரணுக்கள் (nerve cells) எனப்படும் உயிரணுக்களினாலும், அவற்றையெல்லாம் இணைக்கும் நரம்புகளாலும் (nerves) ஏற்படுத்தப்பட்ட ஒரு வலையமைப்பு ஆகும். இத் தொகுதியே உயிரினங்களின் உடற்செயல்கள் அனைத்தையும் ஒன்றிணைத்துக் கட்டுப்படுத்துவதாகவும், உடலின் பல பகுதிகளிலும் இருந்து பெறப்படும் சமிக்ஞைகளை கடத்துவதாகவும் இருக்கின்றது.[1]

இந் நரம்புத் தொகுதியானது தகவல்களின் மீது வினையாற்றி உடலின் பிற பகுதிகளில் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. நரம்புத் தொகுதியானது இரு வகையான உயிரணுக்களைக் கொண்டன. அவையாவன நியூரோன்கள் (Neurons) என அழைக்கப்படும் நரம்பணுக்களும் மற்றும் இவற்றின் செயற்பாட்டுக்கு ஆதரவும், பாதுகாப்பும் அளிப்பதுமான சிறப்புக் கலங்களான நரம்புக்கட்டிகளும் (glia) ஆகும்.[2] நரம்பணுக்கள் கூட்டமாக இணைந்திருக்கையில் நரம்புக்கலத்திரள் (ganglia) என அழைக்கப்படும்.[3]

நரம்புத் தொகுதி இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. இவை, மைய நரம்பு மண்டலம், புற நரம்பு மண்டலம், என்பனவாகும். நரம்புக் கலங்கள் இவ்விரு தொகுதிகளுக்கும் இடையேயும், அவற்றின் உள்ளேயும் கணத் தாக்கங்களை உருவாக்கிச் செயற்படுத்துகின்றன. மூளை, முண்ணாண் (spinal cord), என்பன முதுகெலும்பிகளின் மைய நரம்பு மண்டலத்தின் பகுதிகள். முதுகெலும்பிலிகள், முதுகுநாணிகளில் காணப்படும் நரம்பு நாண் (nerve cord) என்பது, முதுகெலும்பிகளின் மையநரம்புத் தொகுதிக்கு ஒப்பான பகுதியாகும். புற நரம்பு மண்டலமானது உணர் நரம்புக் கலங்களையும், அவற்றை மையநரம்புத் தொகுதியுடன் இணைக்கும் நரம்புக் கலங்களையும் கொண்டது. தூண்டல்களுக்கு மறுவினையாக உணர் நரம்புக் கலங்கள், சமிக்ஞைகளை உருவாக்கி, மைய நரம்பு மண்டலத்திற்கு அனுப்புகிறது. மைய நரம்பு மண்டலமானது இச் சமிக்ஞகளின் மீது தொழிற்பட்டு உரிய சமிக்ஞைகளைத் தசைநார்களுக்கும், சுரப்பிகளுக்கும் அனுப்புகின்றது.[4]

விலங்குகளில் காணப்படும் நரம்புத் தொகுதியின் நரம்புக் கலங்கள், சிக்கலான ஒழுங்கமைப்பில் ஒன்றுடன் ஒன்று தொடுக்கப்பட்டுள்ளன. இவை மின்வேதிச் சமிக்ஞைகளையும், உணர்வுக் கடத்திக் கலங்களையும் பயன்படுத்திக் கணத்தாக்குகளை ஒரு நரம்புக்கலத்திலிருந்து அடுத்த நரம்புக் கலத்துக்குக் கடத்துகின்றன. வேறுவேறான நரம்புக் கலங்களுக்கு இடையிலான இடைவினைகள், நரம்புச் சுற்றுக்களை உருவாக்கி, உயிரினத்தின் உலகம் பற்றிய நோக்கையும், அதன் உடலுக்குள்ளேயே நடை பெறுவனவற்றையும் ஒழுங்குபடுத்துவதன் மூலம், அவ்வுயிரினத்தின் நடத்தைகளையும் முறைப்படுத்துகின்றது. பல பல்கல உயிரினங்களில் நரம்புத் தொகுதிகள் காணப்பட்டாலும், அவை சிக்கல்தன்மையில் பெரும் வேறுபாடுகளைக் கொண்டவையாக உள்ளன.

நரம்புத் தொகுதியின் பிரிவுகள்[தொகு]

உடற்செயல்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஒரே தொகுதியான நரம்புத் தொகுதியின் இரு பிரிவுகளும் இணைந்தே நடத்தை, தொழிற்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றன. அவ் இரு பிரிவுகளும் கீழேதரப் பட்டுள்ளன அவையாவன.

மைய நரம்புத் தொகுதி (Central nervous system)[தொகு]

மைய நரம்புத் தொகுதி மூளையையும் முண்ணானையும் கொண்டுள்ளது. இதுவே மைய நரம்புத் தொகுதியின் மிகவும் முக்கியமானதும் பெரியதுமான உறுப்புக்களைக் கொண்டுள்ளது.

சுற்றயல் நரம்பு தொகுதி அல்லது புற நரம்பு மண்டலம் (Peripheral nervous system)[தொகு]

மைய நரம்புத்தொகுதியுடன் புலனங்கங்கள், விளைவுகாட்டி என்பவற்றை இணைத்து வைத்திருப்பது சுற்றயல் நரம்பு தொகுதி ஆகும். கண், காது போன்ற உணர் உறுப்புக்களையும், தசைகள், குருதிக் கலன்கள், சுரப்பிகள் போன்ற அனைத்து உடல் உறுப்புக்களையும் இணைக்கும் பகுதியாக புற நரம்பு மண்டலமானது அமைந்திருக்கின்றது.

நரம்புக் கலங்கள்[தொகு]

நரம்புத் தொகுதியின் கட்டமைப்பு அலகு நரம்புக் கலமாகும் (nerve cell). நரம்புக் கலங்கள் பிரதானமாக மூன்று வகைப்படும், அவையாவன.

புலன் நரம்புக் கலங்கள் (sensory neurons)[தொகு]

புலனங்களில் இருந்து மைய நரம்புத் தொகுதியை நோக்கிக் கணத்தாக்கங்களை எடுத்துச் செல்லும் நரம்புக் கலமே புலன் நரம்புக் கலம் (sensory neurons) ஆகும்.

இயக்க நரம்புக் கலங்கள் (Motor neurons)[தொகு]

மைய நரம்புத் தொகுதியில் இருந்து விளைவு காட்டிகளை நோக்கிக் கணத்தாக்கங்களை எடுத்துச் செல்லும் நரம்புக் கலமே இயக்க நரம்புக் கலம் (Motor neurons) ஆகும்.

இடைத்தூது நரம்புக் கலங்கள் (inter neurons)[தொகு]

புலன் நரம்புக் கலங்களில் இருந்து இயக்க நரம்புக் கலங்களுக்குக் கணத்தாக்கங்களை எடுத்துச் செல்லும் நரம்புக் கலமே இடைத்தூது நரம்புக் கலம் (inter neurons) ஆகும்.

நரம்புத் தொகுதியின் முக்கிய உறுப்புக்கள்[தொகு]

மூளை[தொகு]

மூளையின் விளக்கப்படம் (தமிழில்) மூளையின் நிலைக்குத்து வெட்டுமுகத் தோற்றம்

மூளை நரம்புத் தொகுதியின் முக்கிய உறுப்புக்களில் ஒன்றாகும். மனிதனில் அனைத்து நரம்புகளும் மூளையிலேயே சந்திக்கின்றன. விலங்கு இராசியத்தில் உடல் நிறை விகிதத்தில் மனிதனுக்கே மூளை அதிக எடையில் காணப்படுகிறது. மனிதனின் மூளையின் எடை 1350 கிராம் ஆகும். மூளையை பிரதானமாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம் அவையாவன,

மூளையம்[தொகு]

மூளையின் மிகப் பெரிய பகுதி மூளையம் எனப்படும். இதன் தொழில்களாவன, இச்சை வளி இயங்கும் செயல்களை கட்டுப் படுத்துதல், புத்தி, நினைவு, கற்றல், கேள்வி, சிந்தனை போன்ற உயர் செயற்பாடுகளை அறிதல் மற்றும் மணம், சுவை, பார்வை, தொடுகை, வலி ஆகிய புலன் உணர்வுகள் ஆளப்படல் என்பவையாகும்.

மூளி[தொகு]

மூளி மூளையின் பின் பகுதியில் அமைந்துள்ளது, இது கோழி முட்டையின் தோற்றத்தைக் கொண்டுள்ளது. தலையின் பின் பகுதி அடிபடும் போது சமநிலைக் குழப்பம் ஏற்படக் காரணம் மூளியே ஆகும். இதன் தொழில்களாவன, தசைத் தொழிற்பாட்டையும் உடற் சமநிலையையும் பேணுதல் மற்றும் தசைத் தொழிற்பாட்டை ஒருங்கிணைத்தல் போன்றவையாகும்.

நீள்வளைய மையவிழையம்[தொகு]

நீள்வளைய மையவிழையம் மூளையின் மிகப் பின் புறமாக அமைந்துள்ளது. தலையின் பின் பகுதி அடிபடும் போது இறப்பு ஏற்படக் காரணம் நீள்வளைய மையவிழையம் பாதிக்கப்படல் ஆகும். இதுவே குருதிக் கலங்களின் இயக்கத்தை ஆளுகிறது.

மூளைத்தண்டு[தொகு]

முகுளம், பான்சு, இடைமூளை ஆகிய மூன்று பகுதிகளும் மூளைத்தண்டு எனப்படுகின்றன. இப்பகுதி தண்டுவடத்தை மூளையுடன் இணைக்கிறது.

தண்டுவடம்[தொகு]

தண்டுவடமானது மண்டையோட்டின் பெருந்துளையிலிருந்து இரண்டாவது இடுப்பெலும்பு பகுதிவரை அமைந்துள்ளது. இப்பகுதி முதுகெலும்புத் தொடரினை விட நீளத்தில் குறைவானது. இரு இடங்களில் தண்டுவடம் அகன்றுள்ளது. அவை முறையே கழுத்துப் புடைப்பு(Cervical Enlargement), இடுப்புப் புடைப்பு(lumbur Enlargement) எனப்படும். இடுப்புப் புடைப்பின் கீழ், தண்டுவடம் குறுகலடைந்து கூம்பு வடிவில் உள்ளது. இப்பகுதி கோனசு மெடுல்லாரிசு எனப்படும்.

நரம்புத்தொகுதி கட்டமைப்புகள்[தொகு]

நரம்புத்தொகுதி என்னும் பெயரானது நரம்புகள் என்பதிலிருந்து வந்ததாகும். நரம்புகள் என்பவை உருளை வடிவிலமைந்த, ஒன்றாகப் பிணைக்கப்பட்ட நரம்பிழைகள் ஆகும். அதாவது நரம்பணுக்களின் (நியூரான்களின்) வெளிநீட்டமாக அமைந்திருக்கும் நரம்பிழைகள் (ஆக்சான்கள்) பல ஒன்றாகப் பிணைக்கப்பட்டு இருக்கும்போது அவை நரம்பு எனப்படுகிறது[5]. இவை மூளை மற்றும் தண்டுவடத்திலிருந்து தோன்றி உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் பரவிக் காணப்படுகின்றன. நரம்புகள் காண்பதற்கு பெரிய அளவில் இருப்பதால் பண்டைய எகிப்தியர்கள், கிரேக்கர்கள் மற்றும் உரோமானியர்களாலும் அறியப்பட்டிருந்தன. இருப்பினும் இவற்றின் உள்ளமைப்பு நுண்ணோக்கியால் ஆய்வு செய்யப்படாதவரை புரிந்துகொள்ள முடியாததாகவே இருந்து வந்தது.
1900களிலேயே நியூரான்கள் அல்லது நரம்பணுக்களே மூளையின் அடிப்படை அலகுகள் என்பது கண்டறியப்பட்டது (சாண்டிகோ உரோமன் ஓய் கஜால்). அதேபோல் மூளையின் வேதியல் கடத்துதல்களும் 1930 வரை அறியப்படவில்லை (என்றி ஹாலட் டேல் மற்றும் ஓட்டே லெவி). 1943 ஆம் ஆண்டில் வாரன் மெக்குல்லோச் (Warren McCulloch) மற்றும் வால்டர் பித்சு (Walter Pitts) ஆகியோர் ஒரு நரம்பிழையின் எளிமையான கணித நுண்கருத்தியலிலிருந்து செயற்கை நரம்பியல் பின்னலமைப்பைத் தோற்றுவித்தனர். அது உலகளாவிய கணிப்புத் திறன் உடையதாக அமைந்திருந்தது.[6] நியூரான்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள பயன்படுத்தும் அடிப்படை மின் நிகழ்வுகள், செயல்பாட்டு திறன் போன்றவை 1950களில் கண்டறியப்பட்டன (ஆலன் இலாயிட் ஹாட்கின், ஆண்டிரூ ஹக்சிலி மற்றும் ஜான் எக்கல்சு). 1960களில் டேவிட் இயூபல் மற்றும் டார்டசன் வீசல் நரம்புப் பிணைப்புகளின் குறியீடு தூண்டல்களை விளக்கினர், இதனால் அடிப்படை கருத்தாக்கங்கள் சாத்தியமானது. மூலக்கூறு புரட்சி அமெரிக்க பல்கலைக்கழகங்களில் 1980களில் தொடங்கியது. 1990களில் நடத்தை நிகழ்வுகளின் மூலக்கூறு செயல்முறை பரவலானது (எரிக் ரிச்சர்டு காண்டல்). நரம்புகளை நுண்ணோக்கி கொண்டு பகுப்பாய்வு செய்யும் போது, நரம்புகள் முதன்மையாக நரம்பிழைகளைக் கொண்டுள்ளன என்று தெரிகின்றன. நரம்பிழைகளைச் சூழ்ந்து அமைந்துள்ள பல சவ்வுகள் அவற்றை இழைகளாகப் பிரிக்கின்றன. நரம்புகளுக்குத் தூண்டல் அளிக்கும் நியூரான்கள் நரம்பில் மட்டும் முழுமையாக அமைந்திருக்கவில்லை. அதன் உடலங்கள் மூளை மற்றும் தண்டுவடம் போன்றவற்றில் உள்ளன.

பூஞ்சைகளை விட மேம்பாடு அடைந்த அனைத்து விலங்குகளும் நரம்புத்தொகுதியினைக் கொண்டுள்ளன. இருப்பினும், பூஞ்சைகள், ஒரு கல விலங்குகள் போன்றவற்றில் காணப்படும் உயிரணுக்களுக்கு இடையேயான சமிக்ஞை முறையானது நியூரான்களின் முன்னோடி ஆகும். ஆரச்சமச்சீர் கொண்ட உயிரினங்களான ஜெல்லி மீன்கள், ஐட்ரா போன்றவற்றில் நரம்புத்தொகுதியானது தனித்த செல்களை பரவலாகக் கொண்ட ஒரு நரம்பு வலையாக அமைந்துள்ளது. இப்போது பெருமளவுள்ள இருபக்கச் சமச்சீர் கொண்ட விலங்குகளில் எடுக்கோரியன் காலகட்டம் தொடங்கி (550 மில்லியன் ஆண்டுகள் முன்பு) நரம்புத்தொகுதியானது பொதுவான அமைப்பாக அமைந்துள்ளது.

நரம்புத் தொகுதியின் உயிரணுக்கள்[தொகு]

நரம்புத் தொகுதி இரண்டு முதன்மை வகைச் உயிரணுக்களைக் கொண்டுள்ளது. அவை நரம்பணுக்களும் மற்றும் இவற்றின் செயற்பாட்டுக்கு ஆதரவும், பாதுகாப்பும் அளிப்பதுமான சிறப்புக் கலங்களான நரம்புக்கட்டிகளும் (glia) ஆகும்.[2] நரம்பணுக்கள் கூட்டமாக இணைந்திருக்கையில் நரம்புக்கலத்திரள் (ganglia) என அழைக்கப்படும்.[3] நரம்புத் தொகுதியிலுள்ள நரம்பணுக்களை ஏனைய உயிரணுக்களிலிருந்து பலவழிகளில் வேறுபடுத்தி அறியலாம். அவற்றில் முதன்மையானது நரம்பணுக்கள் தங்களுக்கு இடையே நரம்பிணைப்பின் மூலம் தொடர்பு கொள்கின்றன. இந்தத் தொடர்பானது சவ்வுகளுக்கு இடையேயான இணைப்பின் மூலம் மின்வேதியியல் மாற்றங்களால் செய்திகளை விரைவாகக் கடத்துவதின் மூலம் நிகழ்கிறது.

நரம்பிணைப்புகளும் ஒருங்கிணைவும்[தொகு]

அடிப்படை நரம்பியல் செயற்பாடுகள் என்பது சமிக்ஞைகளை ஏனைய உயிரணுக்களுக்குக் கடத்துவதாக உள்ளன. ஏனெனில், நரம்பிழைகள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று சமிக்ஞைகளைப் பரிமாறிக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. அதுபோல், நரம்பிழைகள் ஒன்றோடோன்று பிணைக்கப்பட்ட தொகுப்பாக அமையப்பெற்று, நரம்புப் பின்னலமைப்புகளைத் தோற்றுவித்துப் பலவகைப்பட்ட செயல்களைச் செய்வதாகத் திறன் பெற்றுள்ளன. அவை, சிறப்புப் பண்பறிதல், மரபமைப்பு, காலம் ஆகியவற்றை உள்ளடக்கியனவாகக் காணப்படுகின்றன.[7] அதன் காரணமாகவே, எண்ணிலங்கா தகவல் செயலாக்கங்கள் நடைபெறுவதை அறிய முடிகிறது. நியூரான்கள் ஒன்றிணைந்த அமைப்பு நரம்புத்தொகுப்பாகும். இந்த நியூரான்கள் உணர்வு உறுப்புகளுக்கும் செயல்படும் உறுப்புகளுக்கும் இடையே மின்வேதிய மாற்றங்கள் மூலம் தூண்டல்களைக் கடத்த உதவுகின்றன. இந்த மின்வேதிய மாற்றங்கள் நியூரான்களின் உள்ளும் புறமும் நடைபெறும் சோடியம் மற்றும் பொட்டாசியம் அயனிகளின் இடம்பெயர்வால் நிகழ்கிறது. இந்த தொடர்நிகழ்வையே உணர்வு தூண்டல்கள் என்கிறோம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nervous System". U.S. National Library of Medicine. PubMed Health. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 10, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 "Neurons & Glial Cells". National Cancer Institute, SEER Training Modules. National Institutes of Health, USA.Gov. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 10, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. 3.0 3.1 "Nervous System: Facts, Function & Diseases". Live Science. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 10, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "How does the nervous system work?". PubMed Health. U.S. National Library of Medicine. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 10, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. Kandel ER, Schwartz JH, Jessel TM, தொகுப்பாசிரியர் (2000). "Ch. 2: Nerve cells and behavior". Principles of Neural Science. McGraw-Hill Professional. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8385-7701-1. https://archive.org/details/isbn_9780838577011. 
  6. McCulloch டபள்யூஎஸ் பிட்ஸ் டபிள்யூ (1943)."நரம்பு செயல்களில் உள்ள சிந்தனைகளின் தருக்கக் கணிப்பு". புல். கணித. Biophys . 5 (4): 115-133. டோய் :10.1007 / BF02478259 .
  7. Dayan P, Abbott LF (2005). Theoretical Neuroscience: Computational and Mathematical Modeling of Neural Systems. MIT Press. ISBN 978-0-262-54185-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரம்புத்_தொகுதி&oldid=3848709" இலிருந்து மீள்விக்கப்பட்டது