சிறுகுடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறுகுடல்
சிறுகுடலைக் காட்டும் படம்
இலத்தீன் intestinum tenue
கிரேயின்

subject #248 1168

நரம்பு கோலியாக் நரம்புத்திரள், வேகசு நரம்பு [1]
ம.பா.தலைப்பு சிறு+குடல்
Dorlands/Elsevier i_11/12456563

சிறுகுடல் (small intestine) என்பது, இரையகக் குடற்பாதையின் ஒரு பகுதியாகும். இரைப்பைக்கும் பெருங்குடலுக்கும் இடையில் சிறுகுடல் அமைந்துள்ளது. முன் சிறுகுடல், நடுச்சிறுகுடல், பின்சிறுகுடல் என மூன்று பகுதிகளாக இது பிரிக்கப்பட்டுள்ளது. இங்குதான் பெரும்பாலான உணவு இறுதியாக உறிஞ்சப்படுகிறது, சிறுகுடலின் உட் சுவரிலிருந்து நீட்டிக்கொண்டிருக்கும் விரலிகள் என்னும் குடல் நீட்சி அமைப்புக்கள் உணவிலிருக்கும் ஊட்டசத்துகளையும் கனிமங்களையும் உறிஞ்சி குருதிக்குள் அனுப்புகின்றன[2]. இங்கு சிறுகுடல் எனக் குறிக்கப்படுவது முதன்மையாக மனித இரைப்பை குடல் பற்றியது ஆகும். இதன் செயல்முறைகள் பற்றிய தகவல்கள் நஞ்சுக்கொடிசார் பாலூட்டிகள் அனைத்திற்கும் நேரடியாக பொருந்தும். அசைபோடும் விலங்கு வகைகளின் சீரணமண்டல சிறுகுடல், குறிப்பாக பசுக்களின் சீரணமண்டலம் மட்டும் இதற்கு விதிவிலக்கு ஆகும். முதுகெலும்பில்லாத உயிரினங்களான புழுக்களில் பெருங்குடல் என்பது ஒட்டுமொத்த முழு சீரண மண்டலத்தையும் குறிக்கிறது.

அமைப்பு[தொகு]

அளவு[தொகு]

சிறுகுடலின் நீளம் பெரிதும் வேறுபடுகிறது. குறைந்த அளவாக 2.75 மீட்டர் நீளம் (9.0 அடி) முதல் அதிக அளவாக 10.49 மீ (34.4 அடி) வரையில் இந்த அளவு மாறுபடுகின்றன .[3]. வாழும் மனிதர்களின் சிறுகுடல் சராசரியாக 3 மீட்டர் முதல் 5 மீட்டர் வரை வேறுபடுகிறது [4][5]. நபருக்கு நபர் காணப்படும் உயரத்தைச் சார்ந்தும், எவ்வாறு சிறுகுடல் நீளம் அளவிடப்படுகிறது என்பதைப் பொருத்தும் இந்நீள மாறுபாடுகள் அமைகின்றன [3]. பொதுவாக உயரமான மனிதர்களுக்கு நீண்ட சிறு குடல் காணப்படுகிறது. குடல் காலியாக உள்ள போதும், இறந்த பிறகு எடுக்கப்படும் அளவுகளும் பொதுவாகவே நீளமாக இருக்கும் [3]. சிறுகுடலின் விட்டம் சுமார் 2.5-3 செ.மீ (1 அங்குல) அளவுக்கு காணப்படுகிறது. இவ்விட்டத்தின் அளவு சுமார் 3 செ.மீ வரைக்கும் விரிவடைவதாக வயிற்று எக்சு கதிர் ஆய்வுகள் தெரிவிக்கின்றன [6][7]. சி.டி. நுணுகிநோக்கல் ஆய்விலும் 2.5 மீட்டர் அளவுக்கு இவ்விரிவு இருப்பதாக அறியப்படுகிறது [6][8]. மடிப்புகள், விரலிகள், நுண்விரலிகள் போன்றவற்றின் விரிவால், மனித சிறுகுடல் மென்சவ்வின் பரப்பளவு சராசரியாக 30 சதுரமீட்டர்கள் அளவுக்கு காணப்படுகிறது [9].

பகுதிகள்[தொகு]

முன்சிறுகுடல்[தொகு]

டியோடினம் என்று அழைக்கப்படும் முன்சிறுகுடல் சிறுகுடலின் ஆரம்பப்பகுதியாகும். இது ஆங்கில எழுத்து ‘C’ போன்று வளைந்து காணப்படும் [10]. இதன் ஆரம்பப் பகுதி வயிற்று வெளியுறைக்குள்ளும், எஞ்சியிருக்கும் மற்ற பகுதிகள் யாவும் இவ்வுறைக்கு பின்பகுதியிலும் காணப்படுகின்றன. முன்சிறுகுடலின் இரண்டாவது பகுதி வலது சிறுநீரகத்தை ஒட்டி கீழ்புறமாக இறங்குகிறது. மேலும் கணையத்தின் தலைப்பகுதியை ஒட்டியும் இது அமைந்துள்ளது. பின் நடுப்பகுதியில் கணையத்தின் நாளமும்,பித்த நாளமும் வாட்டரின் விரிவு அமைப்புடன் சேர்ந்து முன்சிறுகுடலுடன் இணைகிறது. கணையத்தின் கீழ் விளிம்புடன் முன்சிறுகுடலின் மூன்றாம் பகுதியும், மகா தமனியை ஒட்டி நான்காம் பகுதியும் மேலேறி முடிவில் சிறுகுடல் பகுதி ஆரம்பமாகிறது.

செரிமான நொதி திரவங்களான கணையநீர் மற்றும் பித்தநீருடன் வயிற்றிலிருந்து பெறப்படும் தொடக்கநிலை செரிமான உணவு முன் சிறுகுடலுக்கு வந்து சேர்கிறது. புரதங்கள், பித்தநீர், கொழுப்பு முதலியன இங்கு செரிமான நொதிகளால் சிறு மூலக்கூறுகளாக உடைக்கப்பட்டு கூழ்மம் ஆக்கப்படுகிறது. பைகார்பனேட்டு கொண்டுள்ள சளி நிறைந்த கார சுரப்பை உற்பத்தி செய்யும் பிரன்னர் சுரப்பிகள் முன்சிறுகுடலில் உள்ளன. இச்சுரப்புகள் கணையத்திலிருந்து வரும் பைகார்பனேட்டு காரத்துடன் சேர்ந்து தொடக்கநிலை செரிமான உணவிலுள்ள வயிற்று அமிலங்களை நடுநிலையாக்குகின்றன.

நடுச்சிறுகுடல்[தொகு]

சிறுகுடலின் மையப்பகுதியாகக் காணப்படுவது நடுச்சிறுகுடல் ஆகும். இப்பகுதி முன்சிறு குடலையில் இறுதிப்பகுதியான இலியத்தையும் இணைக்கிறது. 2.5 மீட்டர் நீளம் கொண்ட இப்பகுதியில் வட்டமடிப்பு திசுக்களும் விரலிகளும் அமைந்து இதன் பரப்பை அதிகரிக்கின்றன. சர்க்கரை, அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள் போன்ற செரிமான விளைபொருட்கள் இங்குதான் இரத்தத்தில் ஈர்க்கப்படுகின்றன. முன்சிறுகுடல் தசை நடுசிறுகுடலையும் முன் சிறுகுடலையும் பிரிக்கிறது.

பின் சிறுகுடல்[தொகு]

சிறுகுடலின் இறுதிப்பகுதி பின் சிறுகுடல் அல்லது இலியம் எனப்படுகிறது. 3 மீட்டர் நீளம் கொண்ட இது நடுசிறுகுடலில் இருப்பது போலவே விரலிகள் எனப்படும் குடல் நீட்சிகளைப் பெற்றுள்ளது. வைட்டமின் பி12, பித்த அமிலங்கள் மற்றும் ஏதாவது எஞ்சியுள்ள சத்துப் பொருட்கள் முதலானவற்றை இது ஈர்க்கிறது. பின் சிறுகுடல் சந்திப்பில் பின்சிறுகுடலும் பெருங்குடலின் பெருங்குடல் வாயும் இணைகின்றன. நடுசிறுகுடலும் இலியமும் வயிற்றுக்குழியில் தொங்கு சவ்வுகளால் இணைக்கப்பட்டுள்ளன. வயிற்றறை உறை, தமனிகள், நரம்புகள், நிணநீர் நாளங்கள் மற்றும் நரம்புகள் பயணம்செய்யும் நடுமடிப்பு ஆகியனவற்றின் பகுதியாக தொங்கு சவ்வுகள் உள்ளன [11].

இரத்த ஓட்டம்[தொகு]

சீலியக் தமனியிலிருந்தும் மேல்குழாய் தமனியிலிருந்தும் சிறுகுடல் இரத்தத்தைப் பெறுகிறது. இவையிரண்டும் மகாதமனியின் கிளைகளாகும். மேல்கணையச் சிறுகுடல் தமனி வழியாக சீலியக் தமனியிலிருந்தும், கீழ்கணையச் சிறுகுடல் தமனி வழியாக மேல்குடல் இணையத் தமனியிலிருந்தும் முன்சிறுகுடல் இரத்தத்தைப் பெறுகிறது.இந்த இரண்டு தமனிகளும் முன்புற மற்றும் பின்புற கிளைகளைக் கொண்டுள்ளன. மற்றும் இவ்விரு கிளைகளும் நடுக்கோட்டில் சந்தித்து பின்னிக் கொள்கின்றன. நடுச்சிறு குடலும், இலியமும் மேல்குடல் இணையத் தமனியிலிருந்து இரத்தத்தைப் பெறுகின்றன [12]. மேல்குடல் இணையத் தமனியின் கிளைகள் குடலுறைக்குள் பல வளைவுகளை உருவாக்குகின்றன. இவை பல அடுக்குகள் வரை ஆழமானவையாகும். நேரான குழல்கள் என்றழைக்கப்படும் நேர் இரத்தக் குழாய்கள் நடுசிறுகுடல் மற்றும் பின்சிறுகுடல் பகுதிகளுக்கு நெருக்கமான வளைவுகளில் பயனம் செய்கின்றன [12].

திசு அமைப்பியல்[தொகு]

சிறுகுடலின் நுண்வரைபடம். விரலி எனப்படும் குடல் நீட்சியையும், குடற் சுரப்பிகளையும் காட்டும் சீதமென்சவ்வு

முன்சிறுகுடல், நடுசிறுகுடல், இலியம் என்ற சிறுகுடலின் மூன்று பிரிவுகளும் நுண்ணோக்கியளவில் பார்ப்பதற்கு ஒன்று போலத் தோன்றினாலும் சில முக்கியமான வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. குடலின் பகுதிகள் இங்கு தரப்படுகின்றன.

அடுக்கு முன்சிறுகுடல் நடுசிறுகுடல் இலியம்
உணவுக்குழல் வெளிப்படலம் உணவுக்குழலின் முதல் பகுதி, 2வது–4வது குருதிக் குழாய் இயல்பு இயல்பு
தசை அடுக்கு இடையில் ஓபாக்கின் நரம்புவலையுடன் நீண்ட மற்றும் வட்ட அடுக்குகள் முன்சிறுகுடல் போலவே முன்சிறுகுடல் போலவே
சளிப்படல கீழடுக்கு பிரன்னர் சுரப்பிகள் மற்றும் சளிப்படல நரம்புவலை பிரன்னர் சுரப்பி இல்லை பிரன்னர் சுரப்பி இல்லை
சளிச்சவ்வு: சீதத் தசை இயல்பு இயல்பு இயல்பு
சளிச்சவ்வு: லாமினா புராப்பிரியா அடுக்கு பியரின் நிணநீர் முண்டுகள் இல்லை பியரின் நிணநீர் முண்டுகள் இல்லை பியரின் நிணநீர் முண்டுகள்
சளிச்சவ்வு: குடல் புறத்தோல் அடுக்கு எளிய தூண் புறத்தோலடுக்கு குடுவை செல்கள், பனேத் செல்களைக் கொண்டுள்ளது, முன்சிறுகுடல் போலவே ?

வளர்ச்சி[தொகு]

நடுகுடலின் பழமையான குடல் குழாயிலிருந்து சிறுகுடல் வளர்ச்சியடைகிறது [13]. கருவியல் வாழ்க்கையின் ஐந்தாவது வாரத்தில் இலியம் எனப்படும் பின்சிறுகுடல் மிக வேகமான விகிதத்தில் நீண்டு வளரத் தொடங்கி, U- வடிவ மடிப்பு கொண்ட சிறுகுடல் முதன்மை குடல் சுருளாக உருவாகிறது. இச்சுருள் மிக நீளமாக வேகமாக வளந்து வயிற்றுக்கு வெளிப்புறத்தில் தொப்புள் வழியாக துருத்திநிற்கிறது. 10 ஆவது வாரத்தில் இச்சுருள் மீண்டும் வயிற்றுக்குள் உள்ளிழுத்துக் கொள்ளப்படுகிறது. ஆறு மற்றும் பத்தாவது வாரங்களுக்கு இடையே வளர்கருவின் முன்னிருந்து பார்க்கையில், சிறு குடல் இடஞ்சுழியாக சுழல்வதை பார்க்கலாம். பிறகு அது மேலும் 180 டிகிரி சுழன்று திரும்பவும் வயிற்றுக்குள் செல்கிறது. இந்தச் செயல்முறையால் பெருங்குடலின் முறுக்கப்பட்ட வடிவம் உருவாகிறது [13].

செயல்பாடு[தொகு]

வயிற்றில் இருந்து வரும் உணவு குடல்வாய் வழியாக குடல் சுருங்குதசை மூலம் முன்சிறுகுடலினுள் அனுமதிக்கப்படுகிறது.

செரிமானவியல்[தொகு]

பெரும்பாலான இரசாயன செரிமான நிகழ்வுகள் நடைபெறும் இடமாக சிறு குடல் உள்ளது. சிறுகுடலில் செயல்படுவதற்கான பல செரிமான நொதிகளை கணையமும் கல்லீரலும் சுரக்கின்றன. இச்சுரப்புகள் கணையக்குழாய் வழியாக சிறுகுடலுக்குள் நுழைகின்றன. பித்தப்பையிலிருந்து வரும் கணைய நொதியும் பித்தநீரும் கோல்சிசுடோகினின் எனப்படும் கணையச்சுரப்பு ஊக்கநொதியின் உதவியால் சிறுகுடலுக்குள் நுழைகின்றன. ஊட்டச்சத்துகள் கோல்சிசுடோகினினை சிறுகுடலுக்குள் சுரக்கின்றன. செரிநீர் என்ற மற்றொரு இயக்குநீரும் சிறுகுடலுக்குள் சுரக்கப்படுகிறது. இது கனையத்தில் கூடுதலாக சில விளைவுகளை ஏற்படுத்துகிறது. முன்சிறுகுடலுக்குள் பைகார்பனேட்டு வெளியிடப்படுவதை இது ஊக்குவிக்கிறது. வயிற்றிலிருந்து வரும் அமிலத்தை நடுநிலையாக்கும் பணியை இப்பைகார்பனேட்டு மேற்கொள்கிறது.

கார்போவைதரேட்டு, புரதம், கொழுப்பு, உயிர்சத்து, கனிமசத்து, உயிர்சத்து போன்ற உடலுக்குத் தேவையான உயிர்சத்துகள் அனைத்தும் சீரணமண்டல் பாதை வழியாகவே உடலுக்குள் நுழைகின்றன. கார்போவைதரேட்டு, புரதம், கொழுப்பு முதலிய சத்துகள் சிறுசிறு அலகுகளாக உடைக்கப்பட்டு உட்கிரகிக்கப்படுதல் சிறுகுடலிலேயே நிகழ்கிறது. இங்கிருந்து கார்போவைதரேட்டும், புரதமும் இரத்தக் குழாய்கள் மூலமாகவும் கொழுப்பு நிணநீர் நாளங்கள் மூலமாகவும் உட்கிரகிக்கப்படுகின்றன.

புரதங்களின் செரிமானம்[தொகு]

புரதங்கள் உட்கிரகிக்கப்படுவதற்குமுன் சிறிய பெப்டைடுகளாகவும் அமினோ அமிலங்களாகும் சிதைக்கப்படுகின்றன[14]. புரதங்களின் செரிமானம் இரைப்பையில் தொடங்கி சிறுகுடலில் தொடர்கிறது. கணையத்தில் சுரக்கும் புரதச் செரிமான நொதிகளான டிரிப்சின் மற்றும் ஐமோடிரிப்சின், எலாசுடேசு போன்றவை புரதங்களை சிறிய பெப்டைடுகளாக சிதைக்கின்றன. சிறுகுடல் சளிச்சவ்வில் சுரக்கப்படும் அமினோபெப்டோடைசுகளும் டைபெப்டைடேசுகளும் புரதங்களை முற்றிலுமாக சிதைத்து அமினோ அமிலங்களாக மாற்றுகின்றன. சிறுகுடல், சிறுகுடல் மேற்பரப்பு, சைட்டோபிளாசம் போன்ற இடங்களில் அமினோ அமிலங்களின் இறுதிச் செரிமானம் நடைபெறுகிறது.

கொழுப்புகளின் செரிமானம்[தொகு]

இங்கு லிப்பிடுகள் கொழுப்பு அமிலங்களாகவும் கிளிசராலாகவும் சிதைக்கப்படுகின்றன. கணைய லைப்பேசு முக்கிளிசரைடுகளை கொழுப்பு அமிலங்களாகவும் ஒற்றை கிளிசரைடுகளாவும் உடைக்கிறது. கல்லீரலில் சுரந்து பித்தப்பையில் சேமித்து வைக்கப்படும் பித்தநீரிலிருந்து கிடைக்கும் உப்புகளின் உதவியுடன் கணைய லைப்பேசு பணியில் ஈடுபடுகிறது. ஏனெனில் லைப்பேசு நீரில் கரையக்கூடியதாக உள்ளது. ஆனால் முக்கிளிசரைடுகள் நீரெதிர்ப்பு பண்பைக் கொண்டுள்ளன. பித்த உப்புகள் நீர்ச்சூழலில் இருக்கும் முக்கிளிசரைடுகளுடன் இணைந்து லைப்பேசு நொதி அதை விரலிகளால் ஈர்க்கமுடியுமளவிற்கு சிறுசிறு துண்டுகளாக உடைக்கிறது. செரிக்கப்பட்ட கொழுப்பு மெல்ல ஊடுறுவல் முறையில் சளிச்சவ்வு உயிரணுக்களுக்குள் நுழைகிறது.

கார்போவைதரேட்டுகளின் செரிமானம்[தொகு]

உணவில் காணப்படும் கார்போவைதரேட்டுகளில் உள்ள ஒற்றை சாக்கரைடுகள் எளிய சக்கரைகளாக சிறுகுடலில் மாற்றப்படுகின்றன. உண்ணப்படும் உணவிலுள்ள சிடார்ச்சு ஆல்பா அமைலேசு நொதியால் உடைக்கப்பட்டு சிறுகுடலுக்கு வருகிறது இங்கும் இதே நொதியும் கணையத்தில் சுரக்கும் ஆல்பா அமைலேசும் உடைக்கப்பட்ட சிடார்ச்சை ஒலிகோசாக்ரைடுகளாக மாற்றுகின்றன. சிறுகுடலின் மேற்பரப்பு செல்களால் இவை குளுகோசாக மாற்றப்பட்டு சளிச்சவ்வு உயிரணுக்களால் உள்ளிழுக்கப்படுகிறது. மற்ற கார்போவைதரேட்டுகள் எல்லாம் செரிக்கப்படாமல் பெருங்குடலை அடைந்து அங்கு குடல் பாக்டீரியாக்களால் கையாளப்படுகின்றன. டெக்சுடிரினேசும் குளுக்கோ அமைலேசும் ஒலிகோசாக்ரைடுகளை சிதைக்கின்றன.

உள்ளீர்ப்பு[தொகு]

செறிக்கப்பட்ட உணவு ஊடுறுவல் அல்லது நேரடி இயக்கத்தின் மூலம் சிறுகுடல் சுவரில் உள்ள இரத்த நாளங்களுக்குள் செல்கிறது. உட்கொள்ளப்பட்ட உணவில் இருக்கும் பெரும்பாலான ஊட்டச்சத்துகள் ஈர்க்கப்படும் இடம் சிறுகுடலே ஆகும். சிறுகுடலின் உட்புறச் சுவர், அல்லது சளிச்சவ்வு உள்பக்கத்தில் வட்டச்சுருக்கு தசைகளும் வெளிப்புறத்தில் எபிதீலியல் திசுவுடன் எளிய நிரல் வரிசையில் நீளவாக்கிலும் அமைந்துள்ளது. இவையே சிறுகுடலின் நிரந்தர சுவர்களாகவும் கருதப்படுகின்றன. சுருக்க விரிவுகளை அனுமதிக்கும் நிலையற்ற அல்லது தற்காலிக சுருக்கங்களிலிருந்து இவை வேறுபட்டவையாகும். வட்டசுருக்குத் தசைகளிலிருந்து ஏராளமான நீண்டகுடல் நீட்சிகள் காணப்படுகின்றன. இவை விரலிகள் என அழைக்கப்படுகின்றன. தனிப்பட்ட எபிதீலியல் செல்களிலும் சிறிய குடல் நீட்சிகள் அல்லது நுண்விரலிகள் உள்ளன. தேவையான அளவுக்கு ஊட்டச்சத்துகளை உட்கிரகிப்பதற்காக, பரப்பளவை அதிகரிக்கச் செய்யும் பணியை வட்டச்சுருக்குத் தசைகள், விரலிகள், நுண்விரலிகள் முதலியன செயற்படுகின்றன.

ஒவ்வொரு குடல் உறிஞ்சி விரலியும் நுண்குழாய்கள் மற்றும் அதன் மேற்பரப்பபில் நெருக்கமாக நுண்பால்குழல்கள் எனப்படும் நிணநீர் கலன்களின் வலையமைப்பைக் கொண்டுள்ளன. விரலிகளின் எபிதீலியல் செல்கள் சிறுகுடலில் இருந்து வரும் அமினோ அமில, கார்போவைதரேட்டு உணவு அலகுகளை நுண்குழாய்களுக்குள் செலுத்துகின்றன. இவ்வாறு ஈர்க்கப்பட்ட ஊட்டச்சத்துகள் இரத்த நாளங்கள் வழியாக உடலின் பிற உறுப்புகளுக்கு செல்கின்றன. இங்கு உடலுக்குத் தேவையான புரதங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. செரிக்கப்பட்டாத, ஈர்க்கப்படாத உணவு பெருங்குடலை அடைகிறது.

பெரும்பான்மையான ஊட்டச்சத்துகள் பின்வரும் குறிப்பிடத் தக்க விதிவிலக்குகளுடன் உறிஞ்சப்படுவது நடுசிறுகுடல் பகுதியில் நடைபெறுகிறது:

  • இரும்பு முன்சிறுகுடலில் ஈர்க்கப்படுகிறது.
  • வைட்டமின் பி12 மற்றும் பித்த உப்புகள் பின்சிறுகுடல் இலியத்தில் ஈர்க்கப்படுகின்றன.
  • நீரும் லிப்பிடுகளும் சிறுகுடலில் பரவல் முறையில் ஈர்க்கப்படுகின்றன.
  • சோடியம் பைகார்பனேட்டு இயக்கமுறையிலும் குளுகோசும் அமினோ அமிலங்களும் இணை இயக்க முறையிலும் ஈர்க்கப்படுகின்றன. பிரக்டோசு எளிமையான விரவல் முறையில் ஈர்க்கப்படுகிறது.

நோய்த்தடுப்பாற்றல்[தொகு]

உடலின் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு சிறு குடல் பெரிதும் உதவுகிறது [15]. மனித இரைப்பையிலுள்ள உயிர்ப்பொருட்கள், நோயெதிர்ப்பு ஆற்றலுக்கு நேர்முகமாக பங்களிப்பதாக தோன்றுகிறது. சிறுகுடலின் இலியத்திலுள்ள திசுக்களும் உணவுப்பாதையின் நோயெதிர்ப்பு ஆற்றலில் முக்கியபங்கு வகிக்கின்றன. இவை நிணநீர் அமைப்பின் ஒரு பகுதியாகவும், தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்களை அல்லது பிற நுண்ணுயிர் எதிர்ப்பிகளாகவும் விளங்குகின்றன. மேலும் தொடர்ச்சியாக இத்தளத்தில் நோய் எதிர்ப்பையும் அளித்து வருகின்றன.

மருத்துவ முக்கியத்துவம்[தொகு]

சிறு குடல் ஒரு சிக்கலான உறுப்பு ஆகும், மேலும் சிறு குடலின் செயல்பாட்டை பாதிக்கும் சாத்தியக்கூறுகள் மிக பெரிய அளவில் உள்ளன. அவைகளில் சில இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன இவற்றில் சில பொதுவானவையாகும். 10% மக்கள் தங்கள் வாழ்வில் சில நேரத்தில் இப்பொது நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

சிறு குடல் அடைப்பு அல்லது தடை கோளாறுகள்

  • வாத குடல் அசைவிழப்பு அல்லது குடலடைப்பு
  • குடல்முறுக்கம்
  • குடலிறக்கம்
  • குடலேற்றம்
  • குடல் ஒட்டல்கள்
  • குடல் வெளிப்புற அழுத்தத் தடைகள்
  • குடல் உட்புற அலகுத் தடைகள்

குடல் நோய்த்தொற்றுகள்

  • கியார்டியா அழற்சி
  • அசுகரியேசிசு
  • வெப்பமண்டல வாந்தி
  • நாடாப்புழு
  • கொக்கிப்புழு
  • பாக்டீரியா தொற்றுகள்
  • ரோட்டா வைரசு போன்ற பல்வேறு வைரசு தொற்றுகள்
  • பல்வேறு வகைப் புற்றுக்கட்டிகள்

சிறுகுடல் நோய்கள்

  • வயிற்றுவலி
  • கணைய சுரப்புக்குறைவு
  • பித்த அமிலக் குறைவு
  • ஒத்திசைவற்ற இரைப்பை
  • லிம்போமா கட்டிகள்

பிற விலங்குகளில் சிறுகுடல்[தொகு]

வடிவமும் நீளமும் இனதிற்கு இனம் முரண்பட்டு மாறுபடுகின்றபோதும் அனைத்து நான்கு கால் உயிரினங்களிலும் கடினஎலும்பு மீன்களிலும் சிறுகுடல் காணப்படுகிறது. எலும்பு மீன்களில், சிறுகுடல் மிகவும் குட்டையானது ஆகும். சிறிய பைகள் போன்ற பல இரைப்பை பைகளை இவை பெற்றுள்ளன. இவையே செரிக்கும் உணவுக்காக எலும்புமீனின் சிறுகுடல் பரப்பை அதிகரித்து உதவும் அமைப்பாகும். மேலும் எலும்பு மீன்களில் சுருள்குடல்வாய் அமைப்பு கிடையாது. சிறுகுடலுக்கும் ஆசனவாய்க்கும் இடையில் எல்லையாக குறிக்கப்படுவது சீரண எபிதீலிய சுவரின் முடிவையே ஆகும் [16].

நான்குகால் விலங்குகளில் சுருள்குடல்வாய் அமைப்பு எப்போதும் பெருங்குடலில் திறக்குமாறு இருக்கிறது. எலும்பு மீன்களைவிட நான்கு கால் விலங்குகளின் சிறுகுடல் எப்போதும் பெரியதாகவே இருக்கும். ஆனால் தாவர உண்ணிகள்ம் பாலூட்டிகள், பறவைகளுக்கு உள்ளது போலவே இருக்கும். நீர்நில வாழ்வன அல்லது ஊர்வனவற்றின் வளர்சிதை மாற்ற விகிதத்தை விட இவற்றின் வளர்சிதைமாற்றம் அதிகமாகும். முதுகெலும்பிகளின் சிறுகுடல் பரப்பை அதிகரிக்க நுண்மடிப்புகள் காணப்படுகின்றன. ஆனால் பாலூட்டிகளில் மட்டும் இவை குடல் நீட்சிகளாக வளர்ச்சியடைகின்றன [16].

முன்சிறுகுடல், நடுசிறுகுடல், இலியம் இவற்றுக்கு இடையேயான எல்லைகள் மனிதர்களில் கூட ஓரளவுக்கு தெளிவாக இல்லை. பிற விலங்குகளின் உடற்கூறியலை விவாதிக்கும் போது இத்தகைய வேறுபாடுகள் புறக்கணிக்கப்படுகின்றன அல்லது அடிப்படையில் தன்னிச்சையானவையாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன [16].

சுறா போன்ற எலும்புமீனல்லாத மீனினங்களில் சிறுகுடல் கிடையாது. மாறாக, மலக்குடல் மற்றும் வயிற்றை இணைக்கும் ஒரு சுருள்குடல் குடலின் செரிமான பகுதியாக உருவாகி செயல்படுகிறது, இவ்வகை குடல் நாளங்கள் ஒப்பீட்டளவில் நேரானதாகவும், உட்புறத்தில் சுருள் வடிவில் நீண்ட மடிப்புகள் பெற்றும் காணப்படுகின்றன. சில வகைகளில் பனிரெண்டுக்கும் அதிகமான முறுக்கங்கள் கூட காணப்படுவதுண்டு. எலும்பு மீன்கள் மற்றும் பாலூட்டிகளல்லா நான்கு கால் உயிரினங்கள் போன்றவற்றுக்கு உள்ளது போல சுருள் குடல்கள் இவற்றுக்கும் உண்டு [16]

மஞ்சள் புழுக்களின் உணவுக்கு குறைந்த அளவு செரிமானம் தேவைப்படுவதால் சுருள் அடைப்பு சிறியதாக உள்ளது. விலாங்கு மீனையொத்த சிலவகை மீன்களில் சுருள்குடல் அடைப்பே இருப்பதில்லை. இவற்றில் சிறுகுடல் நீளத்திற்கும் செரிமானம் நடைபெறுகிறது. பல்வேறு பிரிவுகளாகவும் இவற்றின் சிறுகுடல் பிரிக்கப்பட்டிருப்பதில்லை [16].

மேற்கோள்கள்[தொகு]

  1. வார்ப்புரு:GeorgiaPhysiology
  2. human body | Britannica.com
  3. 3.0 3.1 3.2 DiBaise, John K.; Parrish, Carol Rees; Thompson, Jon S. (2016) (in en). Short Bowel Syndrome: Practical Approach to Management. CRC Press. பக். 31. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781498720809. https://books.google.ca/books?id=GBhjDAAAQBAJ&pg=PA31. 
  4. Tortora, Gerard (2014). Principles of Anatomy & Physiology. USA: Wiley. பக். 913. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-118-34500-9. https://archive.org/details/principlesofanat0000tort. "..its length is about 3m in a living person and about 6.5m in a cadaver due to loss of smooth muscle tone after death." 
  5. Standring, Susan (2016). Gray's Anatomy. UK: Elsevier. பக். 1124. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7020-5230-9. "..and has a mean length of 5 metres (3 - 8.5 metres) when measured intraoperatively in the living adult (Tietelbaum et al 2013)." 
  6. 6.0 6.1 Ali Nawaz Khan (2016-09-22). "Small-Bowel Obstruction Imaging". Medscape. பார்க்கப்பட்ட நாள் 2017-02-07.
  7. "Abdominal X-ray - Abnormal bowel gas pattern". radiologymasterclass.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2017-02-07.
  8. Gazelle, G S; Goldberg, M A; Wittenberg, J; Halpern, E F; Pinkney, L; Mueller, P R (1994). "Efficacy of CT in distinguishing small-bowel obstruction from other causes of small-bowel dilatation.". American Journal of Roentgenology 162 (1): 43–47. doi:10.2214/ajr.162.1.8273687. பன்னாட்டுத் தர தொடர் எண்:0361-803X. https://archive.org/details/sim_ajr-american-journal-of-roentgenology_1994-01_162_1/page/43. 
  9. Helander, Herbert F; Fändriks, Lars (2015). "Surface area of the digestive tract – revisited". Scandinavian Journal of Gastroenterology 49 (6): 681–689. doi:10.3109/00365521.2014.898326. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-5521. பப்மெட்:24694282. 
  10. Drake, Richard L.; Vogl, Wayne; Tibbitts, Adam W.M. Mitchell; illustrations by Richard; Richardson, Paul (2005). Gray's anatomy for students. Philadelphia: Elsevier/Churchill Livingstone. பக். 273. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8089-2306-0. https://archive.org/details/graysanatomyfors00unse. 
  11. Drake, Richard L.; Vogl, Wayne; Tibbitts, Adam W.M. Mitchell; illustrations by Richard; Richardson, Paul (2005). Gray's anatomy for students. Philadelphia: Elsevier/Churchill Livingstone. பக். 271. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8089-2306-0. https://archive.org/details/graysanatomyfors00unse. 
  12. 12.0 12.1 Drake, Richard L.; Vogl, Wayne; Tibbitts, Adam W.M. Mitchell; illustrations by Richard; Richardson, Paul (2005). Gray's anatomy for students. Philadelphia: Elsevier/Churchill Livingstone. பக். 295–299. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8089-2306-0. https://archive.org/details/graysanatomyfors00unse. 
  13. 13.0 13.1 Schoenwolf, Gary C.; Bleyl, Steven B.; Brauer, Philip R.; Francis-West, Philippa H. (2009). "Development of the Urogenital system". Larsen's human embryology (4th ). Philadelphia: Churchill Livingstone/Elsevier. பக். 237. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780443068119. https://archive.org/details/larsenshumanembr0000unse. 
  14. Silk DB (1974). "Progress report. Peptide absorption in man". Gut 15 (6): 494–501. doi:10.1136/gut.15.6.494. பப்மெட்:4604970. 
  15. "Intestinal immune cells play an unexpected role in immune surveillance of the bloodstream". Massachusetts General Hospital. 13 December 2012. Archived from the original on 16 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 1 மே 2017.
  16. 16.0 16.1 16.2 16.3 16.4 Romer, Alfred Sherwood; Parsons, Thomas S. (1977). The Vertebrate Body. Philadelphia, PA: Holt-Saunders International. பக். 349–353. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-03-910284-X. https://archive.org/details/vertebratebody0000rome_a5a9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுகுடல்&oldid=3661757" இலிருந்து மீள்விக்கப்பட்டது