சுற்றோட்டத் தொகுதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சுற்றோட்டத் தொகுதி என்பது, ஊட்டப் பொருள்கள், வளிமங்கள், கழிவுகள் என்பவற்றைக் கலங்களுக்கும் கலங்களிலிருந்தும் கொண்டு செல்லும் உறுப்புத் தொகுதியாகும். இது, நோய்களை எதிர்ப்பதற்கும்; உடல் வெப்பநிலையையும், கார-அமிலத் தன்மையையும் சமநிலையில் வைத்திருந்து நீர்ச் சமநிலையைப் (homeostasis) பேணுவதற்கும் உதவுகிறது. இத்தொகுதியை ஒரு குருதி வழங்கு வலையமைப்பாக மட்டும் பார்க்க முடியும். எனினும் சிலர் இத் தொகுதி, குருதியைக் கொண்டுசெல்லும் குருதிக் குழாய்களையும், நிணநீரைக் கொண்டு செல்லும் நிணநீர்த் தொகுதியையும் உள்ளடக்கியது என்கின்றனர். மனிதரும், பிற முதுகெலும்பிகளும் மூடிய குருதிக் குழாய்த் தொகுதியைக் கொண்டுள்ளன. மூடிய குருதிக் குழாய்த் தொகுதியில் குருதி ஒருபோதும், நாடி, நாளம் மற்றும் நுண்துளைக் குழய்களைக் கொண்ட வலையமைப்பை விட்டு வெளியேறுவதில்லை. சில முதுகெலும்பிலிகளில் திறந்த குருதிக் குழாய்த்தொகுதி காணப்படுகின்றது. சில தொல்லுயிர்களில் சுற்றோட்டத் தொகுதியே இருப்பதில்லை. நிணநீர்த் தொகுதி எப்போதும் திறந்த தொகுதி ஆகும்.
[தொகு] மனிதச் சுற்றோட்டத் தொகுதி
மனிதச் சுற்றோட்டத் தொகுதியின் முக்கிய கூறுகள் இதயம், குருதி, குருதிக் கலங்கள் என்பனவாகும். ஒரு சுற்றோட்டத் தொகுதி, குருதியை ஒட்சிசனேற்றுவதற்காக நுரையீரலுக்குக் கொண்டுசெல்லும், ஒரு சுற்றைக் கொண்ட நுரையீரல் சுற்றோட்டத்தையும் (pulmonary circulation); ஒட்சிசனேற்றப்பட்ட குருதியை உடலின் பிற உறுப்புக்களுக்குக் கொண்டு செல்லும் தொகுதிச் சுற்றோட்டத்தையும் (systemic circulation) உள்ளடக்கியது.