காற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தக்குயினம் சனிட்டாட்டிசு என்னும் இடைக்கால நலம் பேணல் நூலொன்றில் காற்று வீசுவதைக் காட்டும் படம்

காற்று (wind) என்பது வளிமங்கள் பெருமளவில் ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்துக்கு நகரும் நிலையைக் குறிக்கும். புவியைப் பொறுத்தவரை, வளிமண்டலத்தில் வளி பெருமளவில் நகரும்போது காற்று எனப்படுகிறது. விண்வெளியில் சூரியனில் இருந்து வளிமங்கள் அல்லது மின்னேற்றம் அடைந்த துகள்கள் வெளியேறி வெளிக்குள் செல்வது சூரியக் காற்று (solar wind) எனவும், கோள்களில் இருந்து நிறை குறைந்த வளிமத் தனிமங்களின் வெளியேற்றம் கோட்காற்று (planetary wind) எனவும் அழைக்கப்படுகின்றன.

பெயர்கள்[தொகு]

தமிழில் பொது வழக்கில் வளி, காற்று என்னும் இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் பயன்படுத்துவது உண்டு. எனினும் அறிவியலில் இவை வேறுவேறான பொருள் கொள்ளப்படுகின்றன.

தட்பவெப்பவியலில், காற்றுக்களை அவற்றின் வலு, எத்திசையில் இருந்து வீசுகிறது ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிடுவது வழக்கம். குறுகிய நேரம் நிலைக்கும் மிகவும் வேகமாக வீசும் காற்று வன்காற்று (gust) எனப்படும். ஏறத்தாழ ஒரு நிமிட நேரம் போன்ற இடைத்தரக் கால அளவுக்கு வீசும் பலமான காற்று பாய்புயல் (squall) எனப்படுகின்றது. நீண்ட நேரத்துக்கு வீசும் பலமான காற்று பல பெயர்களில் குறிப்பிடப்படுகின்றது. புயல், சூறாவளி போன்ற பெயர்கள் இவ்வாறான காற்றுக்களுக்கு வழங்கும் பெயர்கள் ஆகும்.

தமிழிலும் பண்டைக் காலத்திலிருந்தே வெவ்வேறு திசைகளில் இருந்து வீசும் காற்றுகளுக்குத் தனித்தனியான பெயர்கள் இட்டு அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது.

இந்த அடிப்படையில் தென்மேற்கில் இருந்து வீசும் காற்று சோழகக் கச்சான் என்றும், தென்கிழக்கில் இருந்து வீசும் காற்று சோழகக் கொண்டல் என்றும் பெயர் பெறுகின்றன. தெற்கில் இருந்து வீசும் மென்மையான காற்றைத் தென்றல் என்பர்.

காற்று உருவாதல்[தொகு]

காற்றுக்கள் பல்வேறு வகையாகப் பல்வேறு மட்டங்களில் உருவாகின்றன. நிலப்பகுதிகள் வேறுபட்ட அளவுகளில் சூடாவதன் காரணமாக சிறிய நிலப்படுதிகளில் வீசும் காற்று உருவாகின்றது. கடல், நிலம் என்பவற்றின் வேறுபாடான சூடாகும் தன்மை காரணமாகவும் கடலிலிருந்தும், நிலப் பகுதியிலிருந்தும் மாறிமாறிக் காற்று வீசுவதைக் காண முடியும். இத்தகைய காற்றுக்கள் சில மணி நேரங்களுக்கு வீசுகின்றன. புவியின் வேறுபட்ட தட்பவெப்ப வலயங்கள் வேறுபட்ட அளவில் சூரிய ஆற்றலை உறிஞ்சுவதன் காரணமாக உலகு தழுவிய அளவில் காற்றோட்டங்கள் ஏற்படுகின்றன. பெரிய அளவில் காற்றோட்டம் ஏற்படுவதற்கான காரணங்கள் இரண்டு. நிலநடுக்கோட்டுப் பகுதிகளும், துருவப் பகுதிகளும் சூரியனால் வேறுபாடான அளவில் சூடாக்கப்படுவது ஒரு காரணம். புவி சுழல்வதன் காரணமாக ஏற்படும் காற்றோட்டம் இன்னொன்று. இது கொரியோலியசின் விளைவினால் (Coriolis effect) ஏற்படுகின்றது. வெப்பவலயப் பகுதிகளில், தாழ் வெப்பம் (thermal low) காரணமாக சமநிலங்களும், மேட்டுநிலப் பகுதிகளும் பருவப்பெயர்ச்சிக் காற்றோட்டங்களை ஏற்படுத்தலாம். கடற்கரையோரப் பகுதிகளில் கடற்காற்று நிலக்காற்றுச் சுழற்சிகள் குறித்த பகுதிகளின் காற்றோட்ட நிலைமைகளுக்குக் காரணமாகின்றன. வெவ்வேறு விதமான தரையமைப்புக்களைக் கொண்ட பகுதிகளில் மலைக் காற்று, பள்ளத்தாக்குக் காற்று என்பன அப்பகுதிகளின் காற்றோட்டங்களைத் தீர்மானிக்கின்றன.

பயன்களும், தீய விளைவுகளும்[தொகு]

ஐ,என்.எசு. தரங்கினி, இந்தியக் கடற்படையின் காற்று வலுவால் இயங்கும் பாய்க்கப்பல் ஒன்று.

மனித நாகரிக வரலாற்றில், காற்று பல தொன்மங்கள் உருவாவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. பல வரலாற்று நிகழ்வுகளின்மீதும், போக்குவரத்து, போர்முறைகள் என்பவற்றின் மீதும் காற்றின் செல்வாக்கைக் காண முடியும். இயந்திரங்களை இயக்கவும், காற்றுச் சுழலி மின்னுற்பத்திக்கும், ஆற்றல் மூலமாக விளங்கியுள்ளதுடன், பலவகையான பொழுதுபோக்குகளுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது. ஒரு காலத்தில் உலகின் கடல்கடந்த பயணங்களுக்குக் காற்றின் வலுவினால் இயங்கிய கப்பல்களே பயன்பட்டன. குறும் பயணங்களுக்குப் பயன்படும் வெப்பவளி பலூன்கள் காற்றின் ஆற்றலைப் பயன்படுத்துகின்றன. அதே வேளை காற்று கடுமையாக வீசும்போது மரங்கள் முதலிய இயற்கை அம்சங்களுக்கும், மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டிடங்கள் முதலிய அமைப்புக்களுக்கும் கடும் சேதங்களை உண்டாக்குகின்றது. காற்றினால் ஏற்படும் சீரற்ற காலநிலை வானூர்திகளின் பறப்புக்கும் ஆபத்தான நிலைமைகளை உருவாக்குகின்றது.

காற்றுத்தாக்க வழிமுறைகள் மூலம் நில அமைப்புக்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. வளமான மண் உருவாதலும் இவற்றில் ஒன்று. காற்று பெரிய பாலைவனப் பகுதிகளில் இருந்து தூசித் துகள்களை அது இருக்கும் இடத்திலிருந்து நீண்ட தொலைவு எடுத்துச் செல்கிறது. காற்றினால் காட்டுத்தீ விரைவாகப் பரவும் நிலையும் ஏற்படுகிறது. பல்வேறு தாவர வகைகளின் வித்துக்களை தொலை தூரங்களுக்கு எடுத்துச் சென்று பரப்புவதன் மூலம் அவ்வாறான தாவரங்கள் பெருகி வளர்வதற்கும் காற்றுத் துணை புரிகிறது. குளிரான வெப்பநிலைகள் இருக்கும்போது காற்று கால்நடைகள் மீது எதிர்மறையான தாக்கங்களை உண்டாக்குகின்றது. விலங்குகளின் உணவு சேமிப்பு, அவற்றின் வேட்டையாடல் முறை, தற்காத்துக்கொள்ளும் முறை என்பவற்றின் மீதும் காற்று தாக்கங்களை உண்டாக்குகிறது.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=காற்று&oldid=1668343" இருந்து மீள்விக்கப்பட்டது