இதயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இருதயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இதயமும் நுரையீரலும்

இதயம் (மாற்றுச்சொற்கள்: நெஞ்சு, நெஞ்சாங்குலை ) என்பது குருதிச் சுற்றோட்டத்தொகுதி கொண்டுள்ள எல்லா உயிரினங்களிலும் (முதுகெலும்பிகள் உட்பட) காணப்படும் ஒரு தசையாலான ஓர் உறுப்பாகும். இதன் தொழில் தொடர்ச்சியான சீரான முறையில் சுருங்கி விரிதலின் மூலம் உடல் முழுதும் குருதியைக் குருதிக்குழாய்களின் வழியாகச் செலுத்துவது ஆகும்.

முதுகெலும்பிகளில் இதயமானது இதயத்தசை என்னும் இச்சையில்லா இயங்கும் வரித்தசையால் ஆனது. இது இதயத்தில் மட்டுமே காணப்படுகிறது. சராசரி ஒரு மனிதனின் இதயத் துடிப்பானது நிமிடத்திற்கு 72 அடிப்புகள் ஆகும். ஒரு 66 வயது முதிர்ந்த ஒருவருக்கு அவரது வாழ் நாளில் ஏறக்குறைய 2.5 பில்லியன் தடவை துடிக்கும். இதயம் சராசரியாக பெண்களில் 250 – 300 கிராமும் (9 – 11 அவுன்ஸ்) ஆண்களில் 300 – 350 கிராம் (11 – 12 அவுன்ஸ்) திணிவையும் கொண்டுள்ளது.[1]

சுற்றோட்டத்தொகுதி உடைய முதுகெலும்பிலிகளில் (முள்ளந்தண்டிலிகள்) இதயம் ஒரு குழாய் வடிவில் அல்லது சிறுபை வடிவில் காணப்படும், இது புரதம், வெல்லம், கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துகள் அடங்கிய நீர்மத்தைச் செலுத்த உதவுகின்றது. பூச்சியினங்களில் வழமையாக "முதுகுக் குழாய்" என்று அழைக்கப்படுகின்றது, பூச்சிகளின் "குருதி" ஒட்சிசன் ஏற்றப்படாத நிலையில் காணப்படுகின்றது, ஏனெனில் அவை உடலின் மேற்பரப்பு மூலமாகவே சுவாசத்தை மேற்கொள்கின்றன, எனினும் சில கணுக்காலிகள் போன்ற பூச்சிகள் மற்றும் மெல்லுடலிகள் குருதிநிணநீரைக் (hemolymph) கொண்டுள்ளன, இவற்றுள் செம்பைத் தளமாக உடைய கீமோசையனின் (hemocyanin) ஒட்சிசனைக் காவுகின்றது, இது முதுகெலும்பிகளின் செவ்வணுக்களில் காணப்படும் இரும்பை தளமாக உடைய குருதிவளிக்காவியை ஒத்தது.

இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வரும் குழாய்கள் சிரைகள் எனவும் இதயத்தில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் தமனிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இதயமானது பெரிகார்டியல் நீர்மம் என்னும் நீர்மத்தினால் சூழப்பட்டுள்ளது. இந்நீர்மமானது இதயத்தை அதிர்ச்சிகளில் இருந்தும் இதயம் சுருங்கி விரியும் போது மற்ற பாகங்களுடன் உராய்வதைத் தடுக்கவும் உதவுகிறது.

அமைப்பு[தொகு]

இதயத்தின் அமைவிடம்
மனித இதயத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம்

இதயத்தின் அமைப்பு விலங்குகளுக்கு இடையில் வேறுபடுகின்றது, தலைகாலிகளில் இரண்டு "செவுள் இதயமும்" (gill hearts) ஒரு "தொகுதி இதயமும்" அமைந்துள்ளது. முதுகெலும்பிகளில் உடலின் முன் பகுதியில் சமிபாட்டுத்தொகுதிக்குப் பின்புறத்தில் இதயம் அமைந்துள்ளது. எப்பொழுதும் இதய வெளியுறை சுற்றுச்சவ்வினால் சூழப்பட்டிருக்கும்.இதயத்தைச் சுற்றி இருப்பது இதய உறை, இது இரண்டு அடுக்காக இருக்கும். இதயத்தை ஒட்டி இருப்பது உள்ளுறை, வெளிப் புறம் இருப்பது வெளியுறை. இரண்டு உறைக்கும் இடையே இருக்கும் இடைவெளியில் நீர் இருக்கும். இது, இதயம் இயங்கும்போது ஏற்படும் உராய்வைத் தடுப்பதுடன், இதயத்தைத் திடீர் அதிர்ச்சிகளில் இருந்தும் பாதுகாக்கும். இதயத்தின் உள்பக்கச் சுவர்தான் ரத்தத்தோடு நேரடித் தொடர்பு கொண்டுள்ளது. இந்தச் சுவர்ப் பகுதியில் இருந்துதான் இதய வால்வுகள் உருவாகின்றன. மேல்பக்கம் இருக்கும் இரண்டு ஆர்டிக்கிள் அறைகளை, மேல்புற இதயத்தடுப்புச் சுவரும், கீழ்ப்பக்கம் இருக்கும் இரண்டு வெண்டிரிக்கிள் அறைகளை, கீழ்ப்புற இதயத் துடிப்புச் சுவரும் பிரிக்கின்றன.

மாந்தரில்[தொகு]

மனித உடலில் இதயமானது மார்பின் இடதுப்பகுதியில் மார்பு எலும்புகளுக்குப் பின் பகுதியில் அமைந்துள்ளது. இடப்பகுதியில் இடது நுரையீரலானது வலது நுரையீரலை விட சிறியதாக இருக்கிறது.

வலது இதயத்தின் பணியானது அசுத்த இரத்தத்தைச் சேகரிப்பது ஆகும். அசுத்த இரத்தமானது வலது ஆரிக்கிளை அடைகிறது. பின் இது வலது வெண்ட்டிரிக்கிள் வழியாக குருதி நுரையீரல்களுக்கு அனுப்பப் படுகிறது. இங்கு கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றப்பட்டு இரத்தத்தில் ஆக்ஸிஜன் கலக்கிறது.

இதயத்தின் இடப்புறமானது தூய இரத்தத்தை பெறுகிறது. இது இடது ஆரிக்கிளை அடைகிறது. இங்கிருந்து குருதியானது இடது வெண்ட்டிரிக்கிளை அடைந்து அங்கிருந்து உடல் முழுவதற்கும் அனுப்பப் படுகிறது.

இதயத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள வெண்ட்டிரிக்கிள்கள் மேலே உள்ள ஆரிக்கிள்களை விட தடிப்பாக இருக்கின்றன. அதிலும் இடது வெண்ட்டிரிக்கிளானது இரத்தத்தை உடல் முழுவதும் செலுத்த அதிக வேகம் தேவைப்படுவதால் வலது வெண்ட்டிரிக்கிளை விட தடிப்பாக உள்ளது.

இதய நோய்கள்[தொகு]

பிறவியில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாகவும், இதய வால்வுகளில் ஏற்படும் நோய்கள் காரணமாகவும், இதய தசைகளில் ஏற்படும் நோய்கள் காரணமாகவும் இதயத்தின் கீழ் அறையில் இடது புறத்தில் இருந்து புறப்படும் பிரதான நாளங்கள் மற்றும் அதன் கிளை நாளங்களில் உள்ள நோய்கள் மூலமாகவும் இதய நோய்கள் ஏற்படலாம். இதயத்துக்கு இரத்தம் வழங்கும் நாளங்களில் ஏற்படும் நோய்களாலும் இதய நோய்கள் ஏற்படுவதுண்டு.

இதய அடைப்பிதழ் நோய்[தொகு]

இதய அடைப்பிதழ் நோய் (Valvular heart disease) என்பது இதயத்தின் அடைப்பிதழ்களில் ஏற்படும் குறைபாடுகளால் உண்டாகும் நோயாகும். இதய அடைப்பிதழ்க் குறைபாடுகள் பிறவிக்குறைபாடாகவோ அல்லது பிறப்பின் பின்னர் பெற்றதாகவோ இருக்கலாம். நோயின் தீவிரத்தைப் பொறுத்து மருந்துகள் மூலமாகவோ அல்லது திருத்தல் அறுவைச்சிகிச்சை அல்லது அடைப்பிதழ் மாற்று அறுவைச்சிகிச்சை மூலமாகவோ சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

மாரடைப்பு[தொகு]

இதயத்தின் பகுதிகளுக்குக் குருதியோட்டம் தடைப்படும்போது இதயத்திசு இறப்பு அல்லது இதயத்தசை இறப்பு (Myocardial infarction) ஏற்படுகிறது. இது பெரும்பாலும் முடியுருத் தமனியில் தடையோ குறுக்கமோ ஏற்படுவதால் உண்டாகிறது. இத் தமனிகளின் சுவர்களில் கொலஸ்டிரால் போன்ற கொழுப்புப் பொருட்களும் வெள்ளைக் குருதி அணுக்களும் சேர்ந்து உட்புறத்தில் வீக்கத்தழும்பு உருவாகுவதால் தமனி குறுகிவிடுகின்றது. தமனியில் உள்ள இத்தகைய நிலை தமனிக்கூழ்மைத் தடிப்பு என அழைக்கப்படுகின்றது. இதனால் இதயத் தசைகளுக்குக் குறைந்த அளவு குருதியே செல்வதால் உயிர்வளிப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்நிலை கொண்டுள்ளவர் கடினமாய் உழைக்கும் வேளையில் அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்படும். ஓய்வு எடுக்கும் போதும் நைட்ரேட்டு மாத்திரைகள் சாப்பிடும் போதும் இதய குருதியோட்டம் சீரடைந்து இந்த வலி குறையும். இதை மார்பு நெரிப்பு என்கிறோம். இந்த நிலைக்கான மருத்துவ உதவியை உரிய காலத்தில் தராவிட்டால் வீக்கத்தழும்பு வெடித்து குருதிக்குழாய்களுள் குருதி உறைந்து குழலியக்குருதியுறைமை ஏற்பட்டு நிரந்தரமான அடைப்பு உருவாகும். இந்நிலையில் குறிப்பிட்ட இதயத்தசைப் பகுதி குருதி பெறுவதை முற்றிலும் இழக்கின்றது. இதனால் இதயத் தசைகள் இறந்து விடுகின்றன. இந்த நேரத்தில் ஓய்வு எடுத்தாலும் வலி குறையாது. இத்தகைய சூழலே இதயத்தசை இறப்பு ஆகும்.

இதயம் கட்டுப்படுத்தப்படல்[தொகு]

இதயத்தைக் கட்டுப்படுத்த தனிப்பட்ட நரம்பு மண்டலம் உள்ளது. இதற்கு, தன்னியக்க நரம்பு மண்டலம் அல்லது பரிவு நரம்பு மண்டலம் என்று பெயர். இந்த நரம்பு மண்டலம் தவிர, உயிரி-ரசாயன சுரப்பு நீர்களும் இதயத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்து கின்றன.இதயத்தைக் கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒரு பிரிவு, இதயத்தின் செயல்பாட்டைக் குறைக்க உதவுகிறது. இன்னொரு பிரிவு, இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.

மேலும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kumar, Abbas, Fausto: Robbins and Cotran Pathologic Basis of Disease, 7th Ed. p. 556

"http://ta.wikipedia.org/w/index.php?title=இதயம்&oldid=1674382" இருந்து மீள்விக்கப்பட்டது