இணைகேடயச் சுரப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேடய மற்றும் இணைகேடய சுரப்பிகள்

மனித உடலின் கழுத்துப் பகுதியில் தைராய்டு சுரப்பியின் பின்புறம் இணைகேடயச் சுரப்பிகள் (அ) பராதைராய்டு சுரப்பிகள் (Parathyroid glands) எனும் நான்கு (ஈவிரண்டு சோடிகள்) அகஞ் சுரப்பிகள் அமைந்துள்ளன[1]. உடலில் இரத்தத்தில் உள்ள கல்சியம் சத்தின் அளவை பராமரிப்பது இவற்றால் சுரக்கப்படும் பரா தைரொய்ட் ஓமோனின் பணி ஆகும். ஒருவேளை, இவை அதிகமாக சுரக்க நேரிட்டால் எலும்பில் உள்ள கல்சியம் சத்தினை குருதியில் சேர்த்துவிடும். இதனால் குருதியில் கல்சியத்தின் அளவு அதிகரிக்கும். இவற்றால் சுரக்கப்படும் பராதைரொய்ட் ஓமோனும், கேடயப்போலிச் சுரப்பியின் கல்சிட்டோனின் ஓமோனும் ஒன்றுக்கொன்று எதிரான வகையில் தொழிற்படுவதன் மூலம் குருதியில் கல்சியம் அயனின் செறிவை ஓர்சீர்த்திட நிலையில் பேணுகின்றன. இங்கு வழமை போல குருதியில் கல்சியம் அயன் செறிவு தூண்டலாகவும், நியம அளவு நோக்கிய அயன் செறிவின் நகர்வு தூண்டற்பேறாகவும், எதிர்ப்பின்னூட்டல் பிரதான பொறிமுறையாகவும் உள்ளது.

தொழிற்பாடுகள்[தொகு]

பிரதானமாக நரம்புத் தொகுதியும், தசைத் தொகுதியும், உடலின் ஏனைய தொகுதிகளும் சீராகத் தொழிற்படுவதற்கு, கல்சியம் அயனின் (Ca2+) செறிவும் பொஸ்பேற் அயனின் (PO43-) செறிவும் நியம அளவுக்கு அண்மித்த குறுகிய வீச்சினுள் பேணப்பட வேண்டும். இதில் பரா தைரொய்ட் சுரப்பிகள் முக்கிய பங்களிப்பு வகிக்கின்றன. இவற்றால் சுரக்கப்படும் பரா தைரொய்ட் ஓமோன் (PTH) ஒரு சிறிய புரதமாகும். இதன் இலக்கு கலங்களாக என்பின் என்புடைக்கும் கலங்களும், சிறுகுடலின் கம்ப மேலணிக் கலங்களும், சிறுநீரகத்தின் சேய்மை மடிந்த குழலுரு மேலணிக் கலங்களும் உள்ளன. குருதியில் கல்சியம் அயனின் செறிவு நியம அளவை விடக் குறையும் போது PTH சுரக்கப்படும். அது என்பில் கல்சியம் ஹைட்ரொக்சி அப்பட்டைட்டு கரைக்கப்பட்டு குருதியில் கல்சியம் விடுவிக்கப்படுவதையும், குடலில் அதிகளவாகக் கல்சியம் அகத்துறிஞ்சப்படுவதையும், சிறுநீரகத்தில் அதிகளவு கல்சியம் மீளகத்துறிஞ்சப்படுவதையும், பொஸ்பேற் மீளகத்துறிஞ்சல் குறைக்கப்படுவதையும் தூண்டும். குருதி கல்சியம் செறிவு நியம நிலையை அடையும் போது PTH சுரத்தல் எதிர்ப்பின்னூட்டல் மூலம் நிறுத்தப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Williams, S. Jacob ; dissections by David J. Hinchcliffe ; photography by Mick A. Turton ; illustrated by Amanda (2007). Human anatomy : a clinically-orientated approach (New ed. ). Edinburgh: Churchill Livingstone. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-443-10373-5. https://archive.org/details/humananatomyclin0000jaco. 

வெளி இணைப்புகள்[தொகு]

பாராதைராய்டு சுரப்பிகள், டாக்டர் கு. கணேசன், இந்து தமிழ் 2018 சூலை 18

"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைகேடயச்_சுரப்பி&oldid=3739662" இலிருந்து மீள்விக்கப்பட்டது