பதாயூன் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பதாவுன் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

பதாயூன் மாவட்டம், இந்திய மாநிலமாகிய உத்தரப் பிரதேசத்தின் மாவட்டங்களில் ஒன்று. இது பரேய்லி கோட்டத்திற்கு உட்பட்டது. இதன் தலைநகரம் பதாவுன் நகரம் ஆகும். இதன் பரப்பளவு 5,168 சதுர கி.மீ. ஆகும். இங்குள்ள மக்களின் கல்வியறிவு சதவீதம் தேசிய சராசரியைவிடக் குறைவு. சாலைப் போக்குவரத்திற்கு மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன. இது ஆறு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பின்தங்கிய மாவட்டங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள மக்களின் எண்ணிக்கை 37 லட்சம் ஆகும். பிரித்தானிய வரலாற்றாசிரியர் ஜார்ஜ் ஸ்மித்தின் கூற்றுப்படி கோலி இளவரசர் பதா என்பவரின் பெயரால் பெயரிடப்பட்டது.[1]

வரலாறு[தொகு]

பிரித்தானிய இந்தியாவின் ஐக்கிய மாகணங்களின் ரோகில்கந்த் பிரிவில் இந்த நகரமும், மாவட்டமும் அமைந்திருந்தன. பதாவுன் நகரம் சோத் ஆற்றங்கரைக்கு இடது புறத்தில் அமைந்துள்ளது. 1223 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட குவிமாடத்துடனான அழகிய மசூதியினதும், கோட்டையின் இடிபாடுகளும் காணப்படுகின்றன. பாரம்பரியத்தின் படி பதாயூன் 905 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அநேகமாக 12 ஆம் நூற்றாண்டளவில் பதானில் ஆட்சி செய்த பன்னிரண்டு ரத்தோர் மன்னர்களின் பட்டியல் கல்வெட்டொன்றில் காணப்படுகின்றன. 1196 ஆம் ஆண்டில் குதுப்-உத்-தின் அய்பக் என்பவர் இப்பகுதியை கைப்பற்றினார். அதன் பின்னர் டெல்லி பேரரசின் வடக்கு எல்லையின் மிக முக்கிய இடத்தைப் பெற்றது. 13 ஆம் நூற்றாண்டில் இந்தப் பகுதியின் ஆளுநர்களில் இருவரான ஷம்ஸ்-உத்-தின் இலுட்மசும், அவரது மகனான ருக்னுத் தின் ஃபிரூஸ் ஆகியோர் ஏகாதிபத்திய அரியணையை அடைந்தனர். பதாவுன் நகரம் 1571 ஆம் ஆண்டில் எரிக்கப்பட்டது. சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஷாஜகானின் கீழ் வந்தது.

இந்த நகரம் பெடமூத் என்று பழங்கால கல்வெட்டொன்றில் பெயரிப்பட்டுள்ளதாக பேராசிரியர் கோதி ஜான் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கல்வெட்டு லக்னோ அருங்காட்சியகத்தில் காணப்படுகின்றது. பின்னர் இந்த பகுதி பஞ்சால் என்று அழைக்கப்பட்டது. முஸ்லிம் வரலாற்றாசிரியரான ரோஸ் கான் லோதி இந்தப் பகுதியில் அசோக மன்னரால் கட்டப்பட்ட பௌத்த விகாரையொன்று இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். புவியியல் ரீதியாக இந்த நகரம் கங்கை நதிக்கு அருகில் அமைந்துள்ளது.[2]

பொருளாதாரம்[தொகு]

2006 ஆம் ஆண்டில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் பதாயூன் மாவட்டத்தை நாட்டின் 640 மாவட்டங்களில் 250 சிறப்பு நிதியளிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது.[3] இந்த மாவட்டம் தற்போது பின்தங்கிய பிராந்திய மானிய நிதி திட்டத்திலிருந்து (பி.ஆர்.ஜி.எஃப்) நிதி பெறும் உத்தரபிரதேசத்தின் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்.[3]

பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டம் பதாவுன், பில்சி, பிசவ்லி , டடகஞ்ச் மற்றும் சஹாஸ்வான் ஆகிய ஐந்து தெஹ்சில்களைக் கொண்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் பிசவ்லி, சஹாஸ்வான், பில்சி, பதாவுன், ஷேகுபூர் மற்றும் டடகஞ்ச் ஆகிய ஆறு விதான் சபா தொகுதிகள் காணப்படுகின்றன. ஷோகுபூரும், டடகஞ்சும் அன்லா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகவும், ​​ஏனையவை பதாவுன் மக்களவைத் தொகுதியின் பகுதியாகும்.

புள்ளிவிபரங்கள்[தொகு]

2011 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி பதாயூன் மாவட்டத்தின் 3,681,896 மக்கள் வசிக்கின்றனர்.[சான்று தேவை] இநரத சனத்தொகை லைபீரிய தேசத்துக்கு அல்லது அமெரிக்க மாநிலமான ஓக்லஹோமாவுக்கு சமமானதாகும்.[4][5] இந்தியாவின் 640 மாவட்டங்களில் சனத்தொகை அடிப்படையில் 71 வது இடத்தைப் பெறுகிறது. மாவட்டத்தில் ஒரு சதுர கிலோமீற்றருக்கு (1,860 / சதுர மைல்) 718 மக்கள் அடர்த்தி காணப்படுகின்றது. 2001-2011 காலப்பகுதியில் சனத் தொகை வளர்ச்சி விகிதம் 20.96% ஆகும். பதாயூன் மாவட்டம் ஒவ்வொரு 1000 ஆண்களுக்கும் 859 பெண்கள் என்ற பாலின விகிதத்தை கொண்டுள்ளது. மக்களின் எழுத்தறிவு விகிதம் 52.91% ஆகும் உள்ளது.[சான்று தேவை]

பதாயூன் மாவட்டத்தில் சுமார் 27% வீதம் நகர்ப்புற மக்களும், 28% வீதம் புறநகரைச் சேர்ந்த மக்களும், ஏனைய 45% வீதம் கிராமப்புற மக்களும் ஆவார்கள். 2011 இந்திய சனத் தொகை கணக்கெடுப்பின் போது மாவட்டத்தில் 91.28% வீதமானோர் இந்தி மொழியையும் 8.64% வீதமானோர் உருது மொழியையும் முதன்மை மொழியாகப் பேசினார்கள்.[6]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதாயூன்_மாவட்டம்&oldid=3317282" இருந்து மீள்விக்கப்பட்டது