குண்டாறு (ஆந்திரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குண்டாறு (Kundu River) என்பது குண்டேரு, குமுத்வதி என்றும் அழைக்கப்படும் ஆறு இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் இராயலசீமைப் பகுதியில் உள்ள பெண்ணாற்றின் துணை நதியாகும். கர்நூல் மாவட்டத்தின் ஓர்வகல் மண்டலத்தில் உள்ள உப்பலபாடு கிராமத்தின் அருகே நீரூற்றாக உருவாகி, கடப்பா மாவட்டம் கமலாபுரத்தில் உள்ள பெண்ணாற்றுடன் இணைவதற்கு முன்பு பல மாற்றங்களைச் சந்தித்து ஓடுகிறது. நந்தியால் மற்றும் கோயில்குந்த்லா பகுதிகளுக்கு அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக இது அறியப்படுகிறது. எனவே இது "நந்தியாலின் சோகம்" என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. ஆனால் தற்காலத்தில் நந்தியால் நகரம் அதிக மக்கள்தொகை கொண்ட பெரிய நகரமாக மாறியுள்ளது. இதனால் கழிவுநீர் முன் சுத்திகரிப்பு இல்லாமல் குண்டாற்றில் வெளியேற்றப்படுகிறது. தொழிலதிபர்கள் லாபத்தில் தங்கள் பார்வையைச் செலுத்தி ஆற்றை அதிகபட்ச அளவிற்கு மாசுபடுத்துகின்றனர். நந்தியாலா ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் கிராம மக்கள் பல்வேறு தோல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாசுபாடு விலங்குகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. பழங்காலத்தில் இந்த ஆறு குமுதவதி என்று அழைக்கப்பட்டது. குண்டாற்று நீரைக் குடிப்பவன் எதிரிகளை எதிர்கொள்ளும் அபார தைரியத்தைப் பெறுவான் என்று இராயலசீமாவில் கூறப்படும் பழமொழி. குண்டாற்றுப் பள்ளத்தாக்கு ரேநாடு என்று அழைக்கப்படுகிறது. இது "ரேனாதி பவுருஷம்" என்ற சொல்லின் அடையாளமாகும்.[1]

பாதை[தொகு]

குண்டு ஆறு சுமார் 6,000 ஏக்கர்கள் (24 km2) வடிநிலப் பகுதியினைக் கொண்டுள்ளது. இதன் வெள்ள சமவெளியில், 41 கிராமங்கள் உள்ளன. இது கர்நூல் மற்றும் கடப்பா மாவட்டங்களில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. கேலேறு, பாலேறு, நிப்புவாகு மற்றும் சங்கலவாகு உள்ளிட்ட பல ஓடைகள் வெள்ள நீரின் முக்கிய ஆதாரங்களாக உள்ளன. குறிப்பாக கலேறு மற்றும் பாலேறு நல்லமலா மலைப்பகுதியிலிருந்து அதிக வெள்ள நீரைக் கொண்டு வருகிறது. மழைக்காலத்தில், குறிப்பாகச் சூறாவளிகளின் போது குண்டு கால்வாயில் நீரோட்டம் மூர்க்கமாக இருக்கும்.[2]

வெள்ளம்[தொகு]

குண்டாற்றுக்கு அருகில் அமைந்துள்ள கிராமங்கள் மற்றும் நந்தியால் நகரம் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, சொத்துக்களுக்கும் விளைநிலங்களுக்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது. இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் அறுவடை செய்யும் வரை பயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை. ஏனெனில் வெள்ளத்தின் துல்லியமான வருகையை யாராலும் கணிக்க முடியாது. சூலை முதல் திசம்பர் வரை இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பல நிகழ்வுகள் உள்ளன. 1994-ல் வெள்ளம் சுமார் 60 கோடி ரூபாய் இழப்பினை ஏற்படுத்தியது. 20 ஆகத்து 2000 அன்று நள்ளிரவில் நந்தியால் நகரம் வெள்ள நீரில் மூழ்கியது. நகரத்தில் உள்ள அனைவரும் சில சொத்து இழப்புகளை அனுபவித்தனர். மேலும் 10 பேர் இறந்தனர். 2009ஆம் ஆண்டு முன்னறிவிப்புச் செய்யப்பட்ட கர்நூல் வெள்ளத்தின் போது நந்தியால் 5 நாட்கள் நாட்டின் பிற பகுதியிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. குண்டாற்று வெள்ளம் நகரம் முழுவதையும் சுற்றி வளைத்தது.[3][4]

எதிர்ப்புகள்[தொகு]

வெள்ளப் பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி நந்தியால் பகுதி மக்களும் குண்டாற்றுச் சமவெளி விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தியாலின் புறநகர்ப் பகுதியில் குண்டும் குழியுமான பாதையில் பாதுகாப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. கோயில்குண்ட்லாவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த கர்ரா சுப்பா ரெட்டி மற்றும் ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் பி.வி. ரெட்டி ஆகியோர் அரசுக்கு சில தீர்வுகளைப் பரிந்துரைத்தனர். ஆனால் பயனில்லை. காமினி வேணுகோபால ரெட்டி தலைமையில் குண்டாற்றுப் போராட்ட சமிதி, வாய்க்கால்களின் குறுக்கே தடுப்பணைகள் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகளை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இந்த முன்மொழிவின் தொழில்நுட்பம் இன்னும் பொறியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டுச் சான்றளிக்கப்படவில்லை.[5] நன்கு அறியப்பட்ட பொறியாளர் முனைவர் சிறீ ராமி ரெட்டி, ராயலசீமாவின் முழுப் பகுதிக்கும் வெள்ளத்தைத் தடுப்பதற்கும், தண்ணீரைத் திறம்படப் பயன்படுத்துவதற்கும் தீர்வுகளை மேற்கோள் காட்டி நிரந்தர திட்டம் முன்வரைவு ஒன்றைச் சமர்ப்பித்தார். குண்டாறு தொடர்பான சில பரிந்துரைகளையும் அவரது பரிந்துரை கொண்டிருந்தது.[6] குண்டாற்றுப் பள்ளத்தாக்கின் தனிச்சிறப்பு என்னவென்றால், 10 கி.மீ. வரை நிலத்தடி குடிநீர் இல்லை. இந்த வரம்புகளுக்குள் ஆழ்துளைக் கிணறு தோண்டினால், கிணற்றிலிருந்து அதிக புளோரைடு மற்றும் சல்பேட் கலந்த நீரே கிடைக்கின்றது.[7]

ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்திலிருந்து கிருஷ்ணா ஆற்றில் இருந்து திருப்பிவிடப்படும் வெள்ள நீர் குண்டாற்றுப் பள்ளத்தாக்கு வழியாக மட்டுமே பிரதான பெண்ணாற்றைச் சென்றடைகிறது. குண்டாற்றுச் சமவெளிகள் அதிக நீர் வெளியேற்றத்தில் வெள்ளப்பெருக்குக்கு ஆளாவதால், கிருஷ்ணா நதி வெள்ள நீரை பொதிரெட்டிபாடு தலைமை கலிங்கு வழியாகத் தண்ணீர் பஞ்சம் உள்ள பெண்ணாறுக்குத் திருப்பிவிடக் கட்டுப்படுத்தும் காரணியாக மாறியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Rayalaseema Mukha Chitram, a publication of Seema Sahithi.
  2. Manual of River Water Management, released by the Irrigation Department of Andhra Pradesh Government.
  3. Articles published in Eenadu Daily
  4. "Kundu river batters Nandyal". The Hindu. 4 October 2009. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/Kundu-river-batters-Nandyal/article16488537.ece. 
  5. Article published in Vaartha Daily in 2005
  6. Let the Deserts Blossom by Sri Rami Reddy
  7. Rayalaseema Kanneeti Gaadha by Dr. M. V. Ramana Reddy
"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டாறு_(ஆந்திரம்)&oldid=3788553" இலிருந்து மீள்விக்கப்பட்டது