உள்ளடக்கத்துக்குச் செல்

கல்வராயன் மலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்வராயன் மலையின் ஒரு பகுதி

கல்வராயன் மலைகள் தமிழ்நாட்டின், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள எல்லைகளை கல்ராயன்மலை என்றும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எல்லைகளை கல்வராயன்மலை என்றும் அழைப்படுகிறது. இம்மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் ஒரு பகுதி ஆகும். பச்சைமலை, ஜவ்வாது மலைகள், சேர்வராயன் மலைகள் ஆகியவற்றுடன் இவை காவிரி ஆற்று வடிநிலத்தை பாலாற்றின் வடிநிலத்திலிருந்து பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளன. 1,095 சதுர கிமீ பரப்பளவுள்ள இம்மலைகளின் உயரம் 2,000 முதல் 3,000 அடி வரை உள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள கல்ராயன் மலைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடபகுதி 'சின்னக் கல்ராயன்' மற்றும் தென்பகுதி 'பெரிய கல்ராயன்' என்று குறிப்பிடப்படுகின்றது. 'சின்னக் கல்ராயன்' மலைகள் சராசரியாக 2,700 அடி உயரமும், 'பெரிய கல்வராயன்' மலைகள் சராசரியாக 4,000 அடி உயரமும் கொண்டவை.[1][2][3]

மக்கள்

[தொகு]

இங்கு வாழும் மக்கள் மலையாளி எனப்படும் பழங்குடி காஞ்சிபுரத்தில் இருந்து இடம்பெயர்ந்த போர்வீரர்கள் என்று கூறப்படுகிறது.

அமைவிடம்

[தொகு]

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்தில் சவ்வாது மலையின் தெற்கு முனையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் கல்வராயன் மலைகள் உள்ளது. இது மலையாளி என்றழைக்கப்படும் மக்களின் பூர்வீக வாழ்விடமாகும். இம்மலையின் தென்மேற்கு பகுதி சேலம் மாவட்டத்தின் ஆத்தூர், மேற்குப்பகுதி சங்கராபுரம் வரையும், வடதிசையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் வரையிலும் பரவியுள்ளது.

கல்வராயன் மலையின் வடக்கே சாத்தனூர் அணைக்கட்டும், தெற்கே ஆத்தூர் கணவாயும், கிழக்கே மணிமுத்தாறு அணையும், மேற்கே சித்தேரி மலையும் அமைந்துள்ளன. கல்வராயன்மலையைச் சுற்றியுள்ள கிழக்குப் பகுதிகள் வடமேற்கு பருவகாற்றின் மூலமாக மழையைப்பெறுகிறது. கோமுகி ஆறு இம்மலையில் உற்பத்தியாகி காவிரிக்கு இணையாகப் பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது. இந்த மலை கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் காணப்படுகிறது. இந்த மலையின் மேற்கே சேலம், தருமபுரி மாவட்டம், கிழக்கே விழுப்புரம் மாவட்டம், வடக்கே திருவண்ணாமலை மாவட்டம் ஆகியவை எல்லைகளாக அமைந்துள்ளன.

சுற்றுலா இடங்கள்

[தொகு]

சேலத்தில் இருந்துவரும் வழியில் கல்ராயன்மலை அடிவாரத்தில் கரியகோயில் நீர்தேக்கமும், அதையொட்டி அழகிய பூங்காவும் உள்ளது. கள்ளக்குறிச்சியிலிருந்து வரும் வழியில் கல்வராயன்மலையடிவாரத்தில் மலைகளுக்கிடையில் கோமுகி அணையும், அதையொட்டி சுமார் 15 ஏக்கர் அளவில் அழகிய பூங்காவும் உள்ளது. பூங்காவில் பயணிகள் இளைப்பாறவும், கழிப்பிடம் செல்லவும் தனி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மான்கொம்பு நீர்வீழ்ச்சி,மேகம், பெரியார், பண்ணியப்பாடி போன்ற அருவிகள் காணப்படுகின்றன. குளியலறை வசதிகளும் அருவிக்கு அருகில் செய்யப்பட்டுள்ளன.மலையில் உள்ள ஓடையின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டு, படகு குழம் உருவாகியுள்ளது. சுற்றுலா பயணிகள் படகில் சென்று வரலாம். காட்டுப் பன்றி, செந்நாய், மான், கரடி போன்ற விலங்குகளைத் காணும் வாய்ப்பும் கிடைக்கலாம். கல்வராயன் மலைக்கு வரும் சுற்றுலாவாசிகளின் வசதிக்கு ஏற்ப, வனத்துறையினர் விடுதிகள் அமைத்திருக்கின்றனர். அங்கு தங்க முன் அனுமதி வாங்கிச் செல்ல வேண்டும். இல்லை என்றால் காலையில் சென்று, மாலையில் திரும்பலாம்.

கல்வராயன் மலைக்கு அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் ஏத்தாப்பூர், விழுப்புரம் மற்றும் சின்னசேலம் தொடர்வண்டி நிலையமாகும், அங்கிருந்து பேருந்தில் கல்வராயன் மலை செல்லலாம்.சேலத்திலிருந்தும், கள்ளக்குறிச்சியிலிருந்தும் அடிக்கடி பேருந்து வசதி இருக்கிறது.

குலம் மற்றும் தெய்வம்

[தொகு]

"குலம்" என்பது ஒருவர் தன்னை இன்னோர் வழி வந்தோர் என கூறிகொள்ளவும், உறவு முறைகளை அறிந்துகொள்வதற்கும் ஏற்படுத்தப்பட்டதாகும். இக்குலத்தை வைத்துதான் இன்னவன் நமக்கு திருமண உறவு அல்லது பங்காளி உறவு என்பதை தீர்மானிப்பார்கள். ஒரே குலத்தை சேர்ந்தவர்கள் திருமண உறவு வைத்துக்கொள்ளமாட்டார்கள்.

இவர்களிடமும் பலவகையான குலங்கள் காணப்பட்டாலும், பெரும்பாலும் திருமாலையும், சிவனையும் வழிபடுகின்றனர். இவர்களில் பரவலாக பட்டை (சிவனின் அடையாளம்) போடுபவர்கள் நாமம் (திருமாலின் அடையாளம்) போடுபவர்களிடம் மண உறவு வைத்துகொள்கிறார்கள். முதலில் இவர்கள் தம்மூவர்க்குள் திருமண உறவு வைத்துகொள்ளாமல் இருந்தாலும் தற்பொழுது மண உறவு கொள்கிறார்கள்.இவர்களின் குலங்களில் சில,

குலங்கள்

[தொகு]

துரை வீடு என்பதில் (அரையன் வீடு மற்றும் கல்ரியன் வீடு) இரு பிரிவு உள்ளது. இதில் அரையன் வீடு சார்ந்த நபர்கள் துரை பட்டத்தை கொண்டிருப்பர். நாட்டாண் வீடு (நாட்டார் பதவியை வகிப்பவர்கள்), மேலும் பண்ண வீடு, மங்களம் வீடு, கொக்கிரி வீடு, கருமலையான் வீடு, ஆடியன் வீடு, பள்ளையன் வீடு, மொழையான் வீடு, குரும்பன் வீடு என மேலும் பல குலங்களை சார்ந்து இம் மலையில் வசிக்கின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sakthivel, R.; Manivel, M.; Alagappa Moses, A. (2003). "Application of Remote Sensing data for Delineation of Ground Water potential zones in the Kalrayan Hills, Tamil Nadu". GISdevelopment.net. பார்க்கப்பட்ட நாள் 2007-03-16.
  2. "Pachaimalai Hills". Encyclopædia Britannica. (2007). Encyclopædia Britannica Online. 
  3. Nazer, M. (2004). A Study of Land Alienation and Indebtedness among Tribals in Tamil Nadu, Kerala and Karnataka states (PDF) (Report). Planning Commission, Government of India. Archived from the original (PDF) on 27 September 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-03-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்வராயன்_மலைகள்&oldid=4057051" இலிருந்து மீள்விக்கப்பட்டது