உள்ளடக்கத்துக்குச் செல்

தேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திசையன்விளைக்கருகே தேரிக்காடு

செம்மண் மேடுகளும் சிறுகுன்றுகளும் கொண்டு நீரை மிகுதியாகத் தக்கவைக்க இயலாமல் வறண்டிருக்கும் நிலப்பகுதியை தேரி (Teri) என்றும் தேரிக்காடு (Teri dune complex) என்றும் அழைப்பர். தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், சாத்தான்குளம், திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி, இராதாபுரம் வட்டங்களில் கிடைவரை 8°00′ முதல் 9°30′ வடக்கிலும் நெடுவரை 77°18′ முதல் 79°00′ கிழக்கிலும் அமைந்துள்ள ஏறத்தாழ 390 சதுர கி.மீ. (150 சதுர மைல்) பரப்பில் தேரிநிலம் காணப்படுகிறது.

சொல்

[தொகு]

தேரி என்ற சொல் மணற்குன்றுகளையும் மண்மேடுகளையும் குறித்தது. இதன் இணைச்சொற்கள் மலையாளத்திலும் கன்னடத்திலும் படுகர் மொழியிலும் மேட்டு நிலம், வரப்பு போன்றவற்றைக் குறிக்கின்றன.[1] கல்வெட்டுக்களில் தெற்றி எனுஞ்சொல்லை மேட்டுநிலத்தைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளனர்.[2]

வரலாறு

[தொகு]
தமிழகத்தில் கிடைத்த குறுனிக்கற்காலக் கருவிகள்

தமிழகத்தில் இடைக்கற்காலம் அல்லது குறுனிக்கற்காலம் பொ.ஊ.மு. 10,000 முதல் பொ.ஊ.மு. 2,000 வரை நிலவியது.[3] நாசரேத்து, மெய்ஞானபுரம், சாயர்புரம் பகுதிகளில் தேரி மணல் மேடுகள் 20 - 50 அடி வரை உயரத்தில் காணப்படுகின்றன. இவை அக்கால கடல் மட்ட ஏற்ற இறக்கங்களைக் காட்டுவனவாய் அமைந்துள்ளன.[4] இவற்றில் காணப்படும் செம்மண் படிந்த கருவிகள் காலத்தால் முந்தியவையாகவும் வெண்மண் படிந்த கருவிகள் காலத்தால் பிந்தியவையாகவும் விளங்குகின்றன.[3] இத்தேரியில் இடைக்கற்கால ஆயுதங்கள் சிலவற்றிலும், இடைக்கற்கால மற்றும் புதிய கற்கால கருவிகளும் சேர்ந்தும் காணப்படுகின்றன.[5]

இடையன்குடி, நடுவக்குறிச்சி, அரசூர், குதிரைமொழி போன்ற ஊர்களில் சில மண்மேடுகளுக்கடியில் பழைய ஊர்கள் புதையுண்டிருக்கலாமென வாய்மொழிச்செய்திகள் தெரிவிக்கின்றன. சொக்கன்குடியிருப்பு என்ற ஊரில் மணலுக்கடியிலிருந்த மணல்மாதா கோவில் கண்டுபிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 1797-ஆம் ஆண்டில் இருந்து இப்பகுதிகளில் கிறித்துவ சமயம் வளரத்தொடங்கியது. கால்டுவெல், ஜி. யூ. போப் முதலானோர் இப்பகுதியில் பணியாற்றியுள்ளனர்.

பரமன்குறிச்சி பகுதியில் நெசவுத்தொழில் மேற்கொண்டிருந்த மக்கள் ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தால் தங்கள் தொழில் பாதிக்கப்பட்டு 1801-இல் ஊமைத்துரை நடத்திய போரில் இணைந்து பணியாற்றியுள்ளனர். பின்னர் அடுத்த நூற்றாண்டில் 1942-ஆம் ஆண்டு 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின்போது குரும்பூர் இருப்புவண்டி நிலையத்துக்கு நெருப்பு வைத்தனர். மெஞ்ஞானபுரம் அஞ்சல்நிலையத்தாக்குதல், குலசேகரன்பட்டினத்தில் உப்புத்துறை ஆய்வாளர் கொலை போன்ற போராட்டங்களும் நடைபெற்றன. கொலைவழக்கில் கைதான காசி, இராசகோபாலன் ஆகியோர் மரண தண்டனை விதிக்கப்பட்டும் மக்கள் எதிர்ப்பின் காரணமாக அதை நிறைவேற்றவில்லை.

புவியியல்

[தொகு]
முட்டம் அருகே தேரிநிலம்

கோடையின் வெம்மையால் முல்லையும் குறிஞ்சியும் திரிந்து பாலை உண்டாகுமென தொல்காப்பியம் கூறுகிறது. இருப்பினும் இன்றைய விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சில பகுதிகள் கரிசல் காடாகவும் ஒரு பகுதி தேரிக்காடாகவும் அமைந்து பாலை நிலத்தின் பண்புகளைப்பெற்றிருக்கின்றன. கருநிற மண்ணைக்கொண்ட கரிசல் நிலம் நீரைத்தக்கவைப்பதால் ஓரளவேனும் பயிர்செய்ய முடிகிறது. ஆனால் தேரிக்காடு என்பது நீரை ஈர்த்துவைக்காத செம்மண் மேடுகளைக்கொண்டது. இது திருச்செந்தூர், சாத்தான்குளம், நாங்குநேரி, இராதாபுரம் ஆகிய வட்டங்களில் 150 சதுர மைல் பரப்பில் உள்ளது.

செம்மண் மட்டுமில்லாது குன்றுகளும் மேடுகளும் நிறைந்து காணப்படுவதும் தென்மேற்குப்பருவக்காற்றில் இவை மாறி மாறி வேறு இடங்களில் மேடாவதும் தேரிக்காட்டின் குறிப்பிடத்தக்க கூறுகள். கிழக்கே பத்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடல் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சில இடங்களில் பசுமையான பகுதிகளும் இவற்றினருகே உள்ளன. ஆகையால் நெய்தலும் மருதமும் சந்திக்கிறது.

நீர்வளம்

[தொகு]
மழைநீரில் செம்மண் கரைந்தோடிச்சேர்ந்து உவரியில் கடலே சிவப்பாகத் தோன்றும் காட்சி

தேரியின் செம்மண் கரிசல் மண்ணைப் போலன்றி ஈரத்தை வெகுநேரம் தக்கவைக்க இயலாதது. பின்வரும் குறுந்தொகைப்பாடலில் உழவன் செம்மண் ஈரம் காயுமுன்னர் உழுதுமுடிக்கத் துடிப்பதுபோல தலைவியைக்காணவிழையும் தலைவனின் உள்ளமும் துடிப்பதாக வருகிறது.[6]

ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்
தோரே ருழவன் போலப்
பெருவிதுப் புற்றன்றோ னோகோ யானே
 
— குறுந்தொகை 131:4-6

இவ்வாறு இயல்பில் மழைநீரை இருத்திவைக்கமுடியாவிட்டாலும் பல சிற்றாறுகளும் ஓடைகளும் தேரிப்பகுதிவழியாக ஓடிக்கடலில் கலக்கின்றன. மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடங்கி பணகுடி, வடக்கன்குளம் வழியாக ஓடிப் பெருமணல் கடற்கரையில் கடலில் கலக்கும் குரங்காறு, ஆற்றங்கரைப் பள்ளிவாசல் வழியாக ஓடிக் கூத்தங்குழி அருகே கடலில் கலக்கும் நம்பியாறு, மணப்பாடு குலசேகரன் பட்டினம் என்ற துறைமுகங்களுக்கிடையில்சென்று கடலில் கலக்கும் கருமேனி ஆறு ஆகியவை குறிப்பிடத்தக்க ஆறுகளாவன. மழைபொழியும்போது காட்டாறுகளும் ஓடும். அந்நேரங்களில் வெள்ளப்பெருக்காக ஓடி செம்மண் அதில் கரைந்து செம்புலப் பெயனீர் போல[7] என்ற குறுந்தொகை உவமைபோலக் காட்சியளித்துக் கடலில் சேரும். கடலே அந்நேரத்தில் செந்நிறமாகக் காட்சியளிக்கும். பின்னர் செம்மண் கடலின் அடியில் சேறாகப்படியும். இச்சேறை மீனவர்கள் 'மடை' என்பர். இதில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். ஆகையால் இது மீன்வளம் பெருகுவதற்கும் துணைசெய்கிறது.

தென்மேற்குப்பருவக்காற்றில் மழைபெற்று நீர்வளம் கொண்ட காயாமொழி, பள்ளிப்பத்து, நாலுமாவடி, கச்சனாவினை, தென்மாவடிப் பண்ணை, அரசூர், படுகை, உடன்குடி, கொம்மடிக்கோட்டை, நடுவக்குறிச்சி, குட்டம் முதலிய ஊர்களும் தேரிப்பகுதியில் உள்ளன. தருவை என்ற குளங்களைக்கொண்ட புத்தன் தருவை, வைரவன் தருவை போன்ற ஊர்களும் உள்ளன.

அண்மைய நீர்ப்பாசனத் திட்டங்களினாலும் இறவை எந்திரங்களினாலும் இந்நிலங்கள் நீர்பெறுகின்றன. அதேவேளை அவை இந்நிலத்தின் இயல்புக்குப் புறம்பானவை என்று கருதவும் இடமுண்டு. கடலுக்கருகில் இருப்பதால் மிகுதியாக இறைப்பதால் உவர்நீர் உள்ளேவரவும் வாய்ப்பாகிறது.

சூழியல்

[தொகு]

நீர்ப்பிடிப்பு இல்லாத பகுதியென்பதால் தேரிக்காட்டில் பனைமரம், உடைமரம், கருவேலம், சீமைமுள், சவுக்கு, ஆவாரஞ்செடி, கொழிஞ்சி (கொள்ளுக்காய் வேளை) போன்றவையே மிகுதியாய் வளர்கின்றன. இருப்பினும் குதிரைமொழித்தேரியிலுள்ள குளத்தில் கைதை போன்றவையும் வளர்கின்றன. கோரைப்புல்லும் நெடுகவளர்ந்து ஆடுகளுக்குத்தீவனமாகிறது. எட்டி, வெள்ளைத்துவரை போன்ற மரங்கள் தேரிகளில் முன்பு செழித்திருந்திருக்கின்றன.

மயில்கள் இங்கு நல்ல எண்ணிக்கையிலுள்ளன. இங்கு புகழ்பெற்ற இரண்டாம் படைவீடான திருச்செந்தூரிலுள்ள முருகன் மயிலுடன் இருப்பது ஒப்புநோக்கத்தக்கது. ஒருவகையான அறுபுள்ளிப்பொரிவண்டு (Anthia sexguttata) இங்கு காணப்படுகிறது.[8] பாம்புகளில் சுருட்டை விரியன் அதிகமாகவுள்ளது. நல்ல பாம்பும் சிறிய எண்ணிக்கையில் காணப்படுகிறது. பனைமரங்களில் கட்டு விரியன் பாம்புகள் மிகுந்திருக்கும். 2010-ஆம் ஆண்டு நெல்லை கல்லிடைக்குறிச்சியில் சின்ன வக்கா என்றழைக்கப்படும் புதியதொரு விசிறித்தொண்டை ஓணான் இனம் கண்டுபிடிக்கப்பட்டது.[9] அது மருதமும் நெய்தலும் இணையும் இடமென்பதால் சித்தானா மருதம்நெய்தல் (Sitana marudhamneydhal) எனப்பெயரிடப்பெற்றுள்ளது.

மக்கள் வாழ்வியல்

[தொகு]
நுங்கும் பதநீரும் இறக்குவதற்காகப் பனையேறும் தொழிலாளி (இடம்), பனைபொருள்கள் விற்பனைக்கு (வலம்)

பனைசார் தொழில்களே தேரிக்காட்டின் மிகப்பரவலான தொழிலாகும். பனை மரமேறி நுங்கு, பதநீர், கள் முதலானவற்றை இறக்குவதும், பதநீரிலிருந்து கருப்புக்கட்டி என்ற கருப்பட்டி காய்ச்சுவதும், பனையோலைகளைக்கொண்டு பெட்டி, பாய் முதலானவற்றைச்செய்வதும், பனைநாரைக்கொண்டு கட்டில் கட்டுதல், நாற்காலி பின்னுதல், வடக்கயிறு செய்தல், மட்டையைச்சீவி விற்பது போன்ற தொழில்களே முதன்மையானவை. பேளப்பெட்டிகள் இன்றும் திருமணம், பரிசம் முதலிய சடங்குகளில் சீர்வரிசை எடுத்துச்செல்லவும் அன்றாட வாழ்விலும் பயன்படுகின்றன. இங்கு இறக்கும் பதநீரை சீனி ஆலைக்குக்கொண்டு செல்வதற்காக மிக முன்னதாகவே பத்தொன்பதாவது நூற்றாண்டில் 'குலசேகரன்பட்டினம் இலைட்டு இரயில்வே' என்ற நிறுவனம் தொடங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பதினேழாம் நூற்றாண்டில் ஒல்லாந்தர் ஆதிக்கம் செலுத்தியதால் மிளகுக்குப் போட்டியாக போர்த்துகீசர் மிளகாயை இப்பகுதியில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ஆங்கிலேயர் காலத்தில் பருத்தியை ஊக்குவித்துள்ளனர். இந்நாளில் பாசனத்தினாலும் இறவை எந்திரங்களாலும் சிறிது வேளாண்மையும் நடைபெறுகிறது. தென்னை, கொய்யா, முருங்கை, முந்திரி, மலர்கள் ஆகியனவும் இங்கு பயிராகின்றன.

பனையோலைப்பெட்டி செய்யும் மூதாட்டி (இடம்), ஆடு வளர்ப்பு (வலம்)

முன்னாளில் கொற்கையும் குலசேகரன் பட்டினமும் சிறந்த துறைமுகங்களாகத் திகழ்ந்தபோது இங்கு வணிகர் நடமாட்டம் மிகுதியாய் இருந்துள்ளது. அவர்களுக்கு தேரிக்காட்டில் வழிகாட்டுவதையும் பொருள்களைச் சுமந்துசெல்வதையும் தொழிலாகச் செய்திருக்கின்றனர். கொழும்புக்கு வெங்காய ஏற்றுமதிக்காக காற்றோட்டம்கொண்ட சிறப்பான கூடைகளையும் செய்திருக்கின்றனர். பின்வரும் பட்டினப்பாலைப்பாடலில் இத்துறைமுகங்கள் வழியாகவந்த செல்வத்தைப்பற்றி அறியமுடிகிறது.[10]

சொக்கன்குடியிருப்பு மணல்மாதா திருத்தலம்
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த வாரமு மகிலும்
தென்கடன் முத்துங் குணகடற் றுகிரும்
கங்கை வாரியுங் காவிரிப் பயனும்
ஈழத் துணவுங் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெளிய வீண்டி
 

பாலைத்திணைத் தொழிலான களவும் இருந்திருக்கிறது. மணல்மேடுகளில் மறைந்திருந்துதாக்கி வழிப்பறித்தலை சிலர் தொழிலாகவே மேற்கொண்டிருந்திருக்கின்றனர். சிலர் உள்ளூர்க்காரர்களைத்தாக்க முற்பட்டபோது ஊர்க்கூட்டத்தில் அவர்களது தலையை அறுத்திருக்கலாமென்றும் அதன் எச்சமாகவே இன்றும் கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர்வெட்டுத்திருவிழா கொண்டாடப்படுவதாகவும் கருதப்படுகிறது.

1796-ஆம் ஆண்டுமுதல் இங்கு கிறித்தவம் இருந்துள்ளபடியால் இங்கிருந்து பலர் அச்சமய அமைப்புகளில் பெரிய பொறுப்புக்களையடைந்துள்ளனர். இங்கு பின்பற்றும் கிறித்தவம் நிறைய உள்ளூர்வழக்குகளையும் இணைத்துக்கொண்டது. இப்பகுதியிலேயே முதலூர் என்ற பெயரில் முதல் கிறித்தவக்குடியிருப்பு அமைத்ததால் இப்பகுதி 'கிறித்தவத்தின் தொட்டில்' என்றும் அழைக்கப்படுகிறது.முதலூரிலிருந்து வளைகுடா நாடுகளுக்குச்சென்று திரும்பியவர்கள் அல்வாவை இங்கு அறிமுகப்படுத்தி இன்றும் இவ்வூரில் செய்யும் மசுக்கத்து அல்வா பெயர்பெற்றது. நாசரேத்து, சாயர்புரம் போல பல ஊர்களும் கிறித்தவப்பெயர் பெற்றன.

நெய்தல் நிலமக்களுடன் 'உயிரக்காரன்' என்ற பெயரில் உறவு கொண்டாலும் அவ்வப்போது முரண்பாடுகளும் தோன்றுகின்றன.

இலக்கியம்

[தொகு]

சங்க இலக்கியங்களில் குறுந்தொகை முதலிய இலக்கியங்களிலும் பாலைத்திணை பெற்றுவரும் பிற பாடல்களிலும் தேரிக்காட்டுச்சூழல் தென்படுகிறது. கால்டுவெல், சி. யு. போப்பு முதலானோர் பல தமிழிலக்கியங்களை இங்கிருந்து மொழிபெயர்த்துள்ளனர். மேலும் மேலைநாட்டவருக்காக சில இலக்கண நூல்களையும் எழுதியுள்ளனர். அண்மையில் சேக்கபு என்பவர் எழுதிய பனையண்ணன் என்ற புதினத்தில் தேரிக்காட்டு பனைத்தொழிலாளர்களின் வாழ்க்கை பின்னியிருக்கிறது. பனையைப்பற்றியும் பனைத்தொழிலைப்பற்றியும் பல செய்திகளை இந்நாவலின்வழியாக அறிந்துகொள்ள முடியும். தாமரைச்செந்தூர் பாண்டி, நெல்லை கவிநேசன் முதலானோரின் எழுத்துக்களிலும் தேரிக்காட்டைக்காணலாம்.

தாது மணற்கொள்ளை

[தொகு]
நிலவியல் நோக்கில் நவாப்பழ நிறத்தில் தேரிப்பகுதியைக் குறித்துள்ள படம்

கனிம வளம் கொண்ட பகுதியில் உள்ள மணலை அதிகமாக அள்ளுவது தாது மணற்கொள்ளை என அறியப்படுகின்றது. தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் கடலோரத் தேரிப் பகுதிகளில் பல ஆண்டுகளாக இந்த வகை மணற்கொள்ளை நடந்து பிரச்சனைக்குள்ளானது. தாது வளம் கொரியா, ஐக்கிய அரபு அமீரகம் (அபுதாபி), ஜெர்மனி, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா முதலான வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றது.[11]

2008-09 முதல் 2010-11 வரை தோண்டிப்பிரித்தெடுத்த கனிமங்களின் மொத்த அளவு[12]

கனிமங்கள் ஒரு டன்னின் விலை (ரூபாயில்) இந்தியா (டன்களில்) பணமதிப்பு (கோடிகளில்) தமிழ்நாடு (டன்களில்) பணமதிப்பு (கோடிகளில்)
கார்னெட்டு 5000 4790124 2395.062 4397359 2198.6795
இல்மனைட்டு 5000 1964949 982.4745 1050500 525.25
இரூட்டைல் 45000 64264 289.188 21434 96.453
சிர்கான் 40000 90416 361.664 57553 230.212
மொத்தம் 185000 6909753 4028.3885 5526846 3050.594

மேற்கோள்கள்

[தொகு]
  1. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி (நான்காம் மண்டலம் - மூன்றாம் பாகம்). செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககம். 2004. p. 78.
  2. வெ. கோபாலகிருஷ்ணன், மு. கண்ணன், ed. (2004). தேரிக்காட்டு இலக்கியங்கள். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
  3. 3.0 3.1 Sankalia HD (1974). Pre- and Proto-History of India and Pakistan. Poona University.
  4. Allchin B and Allchin F R (1982). The Rise of Civilization in India and Pakistan. Cambridge University.
  5. F B Zuener and Allchin B (1964). Madras State in Ancient India Vol 12. pp. pp 4 - 20. {{cite book}}: |pages= has extra text (help)
  6. ஓரேருழவனார். குறுந்தொகை 131:4-6.
  7. செம்புலப் பெயனீரார். குறுந்தொகை 40.
  8. Sarma, Akkaraju. "Upper Pleistocene and Holocene Ecology of Coastal Tamil Nadu". Journal of Tamil Studies. http://www.ulakaththamizh.org/JOTSpdf%5C009059086.pdf. பார்த்த நாள்: 2015-01-31. 
  9. Deepak, V.; Khandekar, Akshay; Varma, Sandeep; Chaitanya, R. (2016). "Description of a new species of Sitana cuvier, 1829 from southern India". Zootaxa 4139 (2): 167. doi:10.11646/zootaxa.4139.2.2. பன்னாட்டுத் தர தொடர் எண்:1175-5334. 
  10. "பட்டினப்பாலை 185-192". பார்க்கப்பட்ட நாள் 1 பெப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  11. http://tamil.thehindu.com/tamilnadu/கிராமங்களை-அழிக்கும்-துணிகர-கனிமக்-கொள்ளை/article5145013.ece
  12. க.கனகராஜ் (13 நவம்பர் 2013). "தறிகெட்டு நடக்கும் தாது மணல் கொள்ளை!". Archived from the original on 2014-09-17. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

உசாத்துணை

[தொகு]
  • வெ. கோபாலகிருஷ்ணன், மு. கண்ணன், ed. (2004). தேரிக்காட்டு இலக்கியங்கள். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேரி&oldid=4150657" இலிருந்து மீள்விக்கப்பட்டது