கொற்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொற்கை
Vazhavallan
கிராமம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
Languages
 • Official தமிழ்
நேர வலயம் இசீநே (ஒசநே+5:30)
Nearest city VAZHAVALLAN

கொற்கை என்பது பாண்டிய முடிக்குரிய இளவரசனின் இருப்பிடமாகும். பாண்டியர்களின் மூன்றாம் தலைநகரம் கொற்கை ஆகும். கடல் கொண்ட தென்னாட்டில் இருந்து மீண்ட பரதவர்கள் உருவாக்கியதே கொற்கை.கொற்கை பாண்டியர்களின் முத்து நகரம்,பாண்டிய நாட்டு வணிகத் துறைமுகமாகவும்,பாண்டியர்களின் கப்பற்படைத் தளமாகவும் இருந்தது.

 • சங்க இலக்கியங்களில் வங்கக் கடல் துறைமுகங்களாகக் காட்டப்பட்டுள்ளவை நான்கு. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும்போது அவற்றின் வரிசை இவ்வாறு அமையும்.
கொற்கை – பாண்டிநாட்டுத் துறைமுகம்.
புகார் என்னும் காவிரிப்பூம் பட்டினம் – சோழநாட்டுத் துறைமுகம் பட்டினப்பாலை
எயிற்பட்டினம் – ஓய்மானாட்டுத் துறைமுகம் சிறுபாணாற்றுப்படை [1]
நீர்ப்பெயற்று – தொண்டைநாட்டுத் துறைமுகம் பெரும்பாணாற்றுப்படை [2]

கொற்கை முத்து சிறந்த முத்தாக அக்காலத்தில் மதிக்கப்பட்டது.[3][4]
கொற்கை விறற்போர்ப் பாண்டியன், மறப்போர்ப் பாண்டியர், வெற்றிவேல் செழியன் [5] முதலான பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மதுரையில் இருந்துகொண்டு ஆண்டாலும் கொற்கை மக்களின் எதிர்பார்ப்புகளை யெல்லாம் நிறைவேற்றி வைத்தான்.[6]
கடலலை குவிக்கும் முத்துக்கள் செல்வர் ஏறிவரும் குதிரைக் குளம்புக்குள் மாட்டி அவற்றிற்கு இடையூறாக அமையும் அளவுக்குக் கொட்டிக்கிடக்கும்.[7]
கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வோர் தாம் உண்ணும் கள்ளுக்கு விலையாக முத்துக்களைத் தருவர்.[8]
முத்துக்குளிப்பது மட்டுமின்றி வலம்புரிச் சங்கு எடுக்கவும் அங்குள்ள ஆடவர் கடலில் மூழ்குவர்.[9]
அங்கு உப்பு விளைவிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த உமட்டியர் கிலுகிலுப்பையில் முத்துக்களைப் போட்டு ஆட்டித் தங்கள் குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டுவர்.[10]
இந்தக் கொற்கைத் துறையில் காலையில் மலரும் நெய்தல் பூப் போலத் தன் காதலியின் கண் இருந்தது எனக் காதலன் ஒருவன் பாராட்டுகிறான்.[11]
மறப்போர்ப் பாண்டியர் கொற்கையில் முத்துக்களைப் பாதுகாக்க வேங்கடமலைப் பகுதியிலிருந்து கொண்டுவந்த யானைகளைப் பயன்படுத்தினர்.[12]
கொற்கைப் பகுதியில் பழையர் எனப்படும் குடிமக்கள் வாழ்ந்துவந்தனர். அந்தக் குடியைச் சேர்ந்த மகளிர் முத்துக்குளிக்கும் துறையை வழிபட்டு விழாக் கொண்டாடும்போது தழையாடை உடுத்திக்கொண்டு முத்துக்களையும், கிளிஞ்சல்களையும் கொட்டிப் படையல் செய்து மகிழ்ந்தனர்.[13]

கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியா வந்த கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் கொற்கையைக் கொல்கி என்று குறிப்பிட்டு அது பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததாகவும் எழுதியுள்ளார்.[14]

இவற்றையும் பார்க்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

 1. அடி 146-163
 2. அடி 311-345
 3. ஈண்டுநீர் முத்துப்படு பரப்பின் கொற்கை முன்றுறை - நற்றிணை 23
 4. கொற்கை முன்றுறை இலங்கு முத்து உறைக்கும் - ஐங்குறுநூறு 185
 5. பாண்டியன் நெடுஞ்செழியன் கோவலனைக் கொன்ற தன் குற்றத்தை உணர்ந்து உயிர் துறந்த பின்னர் கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன் என்பவன் மதுரை வந்து அரியணை ஏறினான். சிலப்பதிகாரம் காதை 27 உரைபெறு கட்டுரை.
 6. நற்கொற்கையோர் நசைபொருந - மதுரைக்காஞ்சி 138
 7. இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம் கவர்நடைப் புரவிக் கால்வடுத் தபுக்கும் நற்றேர் வழுதி கொற்கை முன்றுறை - அகம் 130-11
 8. பரப்பில் பல்மீன் கொள்பவர் முகந்த இப்பி நார் அரி நறவின் மகிழ்நனைக் கூட்டும் - அகம் 296-10
 9. வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர் ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக் கலிகெழு கொற்கை எதிர்கொள - அகம் 350-13
 10. நளிநீர் முத்தம் வாள் வாய் எருத்தின் வயிற்று அகத்து அடக்கி – உமட்டியர் – புதல்வரொடு கிலிகிலி ஆடும் - சிறுபாணாற்றுப்படை 62
 11. கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை வைகறை மலரும் நெய்தல் போல – கண் - ஐங்குறுநூறு 188
 12. வடவயின் வேங்கடம் பயந்த வெண்கோட்டு யானை மறப்போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும் கொற்கை அம் பெருந்துறை முத்தின் அன்ன நகை - அகம் 27-9
 13. வினைநவில் யானை விறற்போர்ப் பாண்டியன் புகழ்மலி சிறப்பின் கொற்கை முன்துறை அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து தழையணி பொலிந்த – பழையர் மகளிர் பனித்துறை பரவ - அகம் 201-4
 14. 59. From Comari toward the south this region extends to Colchi, where the pearl-fisheries are; (they are worked by condemned criminals); and it belongs to the Pandian Kingdom. Beyond Colchi there follows another district called the Coast Country, which lies on a bay, and has a region inland called Argaru. At this place, and nowhere else, are bought the pearls gathered on the coast thereabouts; and from there are exported muslins, those called Argaritic. - The Periplus Maris Erythraei (or ‘Voyage around the Erythraean Sea’) is an anonymous work from around the middle of the first century CE written by a Greek speaking Egyptian merchant.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொற்கை&oldid=2434846" இருந்து மீள்விக்கப்பட்டது