கருவேலம்
| கருவேலமரம்
Acacia nilotica | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | Magnoliopsida
|
| வரிசை: | Fabales
|
| குடும்பம்: | |
| துணைக்குடும்பம்: | |
| சிற்றினம்: | Acacieae
|
| பேரினம்: | |
| இனம்: | A. nilotica
|
| இருசொற் பெயரீடு | |
| Acacia nilotica (L.) Willd. ex Delile | |
| கருவேலமர இனங்கள் காணபடும் பகுதி | |
கருவேலமரம், வேலமரம், வேல், நாட்டுவேலம், கருவமரம்[1] என்பது காடுகளில் வளரும் முள்மரம். (Acacia nilotica) இது ஆப்பிரிக்கா மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தை தாயகமாகக் கொண்டது. கருவேலமரம் தமிழகத்தில் பயனுள்ள மற்றும் பாரம்பரியம் மிக்க மரங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.
பெயர் குழப்பங்கள்
[தொகு]தமிழ் நாட்டில் இயற்கையாக வளரும் கருவேலமரத்தையும் (Acacia nilotica), சீமையில் (வெளியில்,பெயர் காரணமும் அதுவே) இருந்து அறிமுகப் படுத்திய சீமை கருவேலமரத்தையும் (Prosopis juliflora) ஒத்து இருந்ததாலும் இந்த குழப்பம். ஆனால் அடிப்படையில் இவ்விரண்டும் வெவ்வேறு மரங்களாகும்.
விளக்கம்
[தொகு]கருவேல மரம் 5-20 மீ உயரம்வரை வளரக்கூடிய ஒரு மரமாகும். இம்மரத்தின் மேற்பகுதி அடர்த்தியான கோள வடிவில் விரிந்து இருக்கும். ஆண்டு முழுவதும் இலை உதிராமல் பசுமையாக இருக்கும். வெளியில் அதிகமாக இருக்கும்போது இதன் இலைகள் மூடிக்கொள்ளும். இதன் தண்டுகளும், கிளைகளும் பொதுவாக கருப்பு நிறத்தில் காணப்படும். பட்டைகள் பிளவுபட்டவையாக இருக்கும். இதன் அடிமரத்திலிருந்தும், காயம்பட்ட பகுதிகளிலிருந்தும், சிவப்பு நிற குறைந்த தரம் வாய்ந்த பிசின் வெளியேறும். இளம் மரங்களில் 5 முதல் 7.5 செ.மீ (3 அங்குலம்) நீள முட்கள் காணப்படும். முதிர்ந்த மரங்கள் பொதுவாக முட்கள் இல்லாமல் இருக்கும். இலைகள் இரட்டைச் சிறகமைப்புக் கூட்டிலைகளை உடையவை. ஒரு குச்சியில் 3-6 ஜோடி சிறகமைப்பு இருக்கும். ஒவ்வொரு சிறகமைப்பிலும் 10-30 ஜோடி சிற்றிலைகள் இருக்கும். கருவேலம் பூக்கள் மஞ்சள் நிறமானவை. அவை 1.2-1.5 செ.மீ விட்ட கோள வடிவ மஞ்சரிகளைக் கொண்டவை. இதன் பூக்கள் நறுமணம் கொண்டவை. பூக்கள் சூன் - அக்டோபர் வரை இரண்டு முதல் ஆறுவரையிலான கொத்தாக பூக்கும். இதன் காய்கள் மணிகளை வரிசையாக கோர்த்ததுபோல இருக்கும். இதன் விதைகள் தோராயமாக 8000/கிலோ எடையுள்ளதாக இருக்கும்.[2]
பயன்கள்
[தொகு]- இதன் இலைகளையும், நெற்றுகளையும் வெள்ளாடுகள் விரும்பி உண்ணும்.
- இதன் உலர்ந்த நெற்றுகளை ஆட்டினால் அவற்றிலுள்ள விதைகள் கலகல என ஒலிக்கும். சிறுமியர் இதன் நெற்றுகளைக் கட்டிச் சலங்கை போல் கால்களில் கட்டிக்கொண்டு நடந்து மகிழ்வர்.
- இந்த மரத்தில் ஒழுகும் கோந்து (gum) எழுதுதாள்களை (paper) வன்மையாக ஒட்ட உதவும்.
- கருவக்காய்களைக் கொஞ்சம் நீர் ஊற்றி இடித்து வடித்துத் தேங்காய் உடைத்த கொட்டாங்குச்சிகளில் ஊறவைப்பர். ஊறிய நீரை வெய்யிலில் காயவைப்பர். அதன் சாறு கெட்டியானதும் எடுத்து நெற்றியில் இட்டுக்கொள்ளும் பொட்டுக்குப் பயன்படுத்துவர். நன்றாக உலர்ந்து கெட்டியான இதன் பாலில் சொட்டு நீர் ஊற்றிக் குழைந்தும் பொட்டாகப் பயன்படுத்துவர். இந்தப் பொட்டு நிழலாடும். அதாவது அந்தப் பொட்டுக்குள் அடுத்தவர் தன் முகத்தைப் பார்க்கலாம். இதைப் போலத் தமிழர் பயன்படுத்திய மற்றொரு பொட்டு வேங்கைப்பொட்டு. இது செங்கரு நிறம் கொண்டது. கருவம் பொட்டு கருகரு நிறம் கொண்டது.
- இந்த மரத்தில் இருந்துதான் விவசாயிகள் ஏர் உழுவதற்குண்டான கலப்பையைத் தயாரிக்கின்றனர். இந்த மரத்தைத் தண்ணீரில் சிறிது காலம் ஊறவைத்து எடுத்த பின்னர், அதில் பொருள்களைச் செய்தால் நூறாண்டுகள் தாண்டியும் அந்தப் பொருள்கள் உறுதியாக இருக்கும் எனப்படுகிறது. எந்தச் சூழ்நிலையிலும் இம்மரம் செல்லரித்துப் போகாது.
- கருவங்குச்சிகளை ஒடித்துப் பல் துலக்கப் பயன்படுத்துவர்.[3] ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்பது பழமொழி.[4]
- கருவமரம் வயிரம் பாய்ந்திருந்தாலும் அதனை வீடுகளுக்குப் பயன்படுத்தக்கூடாது எனக் கூறுவர். காரணம் காயக்காய இது முறுக்கிக்கொள்ளும்.
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ இது நம்ம கருவேலம்! | ஆயிரம் மலர்களே மலருங்கள் 11, ஆதி வள்ளியப்பன், இந்து தமிழ் திசை, 18 அக்டோபர் 2025
- ↑ "handbook on seeds of dry-zone acacias". www.fao.org. Retrieved 2017-08-03.
- ↑ Saurabh Rajvaidhya et al. (2012) "A review on Acacia Arabica, an Indian medicinal plant" பரணிடப்பட்டது 2013-08-24 at the வந்தவழி இயந்திரம் International Journal of Pharmaceutical Sciences and Research Vol 3(7) pp 1995-2005
- ↑
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.
நாலு = நாலடியார் என்னும் தமிழ்நூல்.
இரண்டு = இரண்டு அடிகளாலான திருக்குறள் என்னும் நூல்.
புகைப்படங்கள்
[தொகு]-
Vachellia nilotica, at village Chaparr Chirri, மொகாலி, பஞ்சாப் பகுதி, இந்தியா
-
Vachellia nilotica, Village Behlolpur, பஞ்சாப் பகுதி, இந்தியா
-
தமிழக கருவேல மரம்
-
கருவேலங்காய் நெற்றுகள்
-
கருவேலம் மரத்தின் இலை, பூ, காய், மற்றும் விதை
-
கருவேல மரப்பட்டை
-
கருவேலம் மரத்தின் இலைகளும் முட்களும்
-
கருவேலம் மரத்தின் காய்கள்