ந. சங்கரய்யா
ந. சங்கரய்யா | |
---|---|
மாநிலக்குழு செயலாளர் | |
பதவியில் 1995–2002 | |
முன்னையவர் | ஏ.நல்லசிவன் |
பின்னவர் | நா. வரதராஜன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆத்தூர், பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு) | 15 சூலை 1921
இறப்பு | 15 நவம்பர் 2023 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 102)
குடியுரிமை | இந்தியர் |
தேசியம் | தமிழர் |
அரசியல் கட்சி | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) |
துணைவர் | நவமணி |
பிள்ளைகள் | 2 மகன்கள், 1 மகள் |
பெற்றோர் | நரசிம்மலு-ராமானுஜம் |
கல்வி | இடைநிலை (வரலாறு) |
ந. சங்கரய்யா (N.Sankaraiah, 15 சூலை 1921 – 15 நவம்பர் 2023) நூற்றாண்டு கண்ட விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழுவின் 15 ஆவது மாநிலச் செயலாளராகவும், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவரும் ஆவார். மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து போலீசாரின் தடியடிகள், தலைமறைவு வாழ்க்கை மற்றும் போராட்டங்களில் பங்கேற்றவர்.[1] இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவான போது இருந்த 36 தலைவர்களில் என்.சங்கரய்யாவும் ஒருவர்.[2]
வாழ்க்கை வரலாறு
[தொகு]கோவில்பட்டியை சேர்ந்த நரசிம்மலு மற்றும் ராமானுஜம் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக 1921 சூலை 15 அன்று பிறந்தார்.
கல்லூரி வாழ்க்கை
[தொகு]இடைநிலை படிப்பிற்காக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1937 ஆம் ஆண்டில் சேர்ந்தார். வரலாறு பிரதான பாடமாகும். அமெரிக்கன் கல்லூரியின் பரிமேலழகர் தமிழ்க்கழகத்தின் இணைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
மதுரை மாணவர் சங்கம்
[தொகு]1938 ஆம் ஆண்டில் சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் சென்னை மாணவர் சங்கம் (Madras Student Organization) அமைக்கப்பட்டு சுதந்திரப் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதேபோல் மதுரையிலும் மதுரை மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது. அதன் செயலாளராக என்.சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
பொதுவுடைமை இயக்கத்தில்
[தொகு]1940 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உருவாக்கப்பட்டது. அந்தக் கிளையில் காங்கிரஸ் சோசலிஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏ.செல்லயா, எஸ்.குருசாமி மற்றும் கே.பி.ஜானகி, எம்.ஆர்.எஸ்.மணி, எம்.எஸ்.எஸ்.மணி, எம்.ரத்தினம், என்.சங்கரய்யா உள்ளிட்ட 9 பேர் உறுப்பினர்கள் ஆவர்.[3]
1957 & 1962 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தல்களில் இவர் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி இழந்தார். 1967ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சங்கரய்யா, மதுரை மேற்குத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். இவர் 1977 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் மதுரை கிழக்குத் தொகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்டார். 1986 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மாநாட்டில் கட்சியின் இவர் மத்தியகுழுவிற்குத் தேர்வுசெய்யப்பட்டார். அப்போதிலிருந்து தொடர்ந்து மத்தியகுழுவில் இருந்து வருகிறார். 1995 இல் கடலூரில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், என்.சங்கரய்யா கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார். 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை அவர் அந்தப் பொறுப்பில் இருந்தார். 1982 முதல் 1991 வரை விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.[4]
தகைசால் தமிழர் விருது
[தொகு]சென்னையில் 15 ஆகத்து 2021 அன்று நடைபெற்ற இந்திய விடுதலை நாள் விழாவில் தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் 'தகைசால் தமிழர்' விருது, முதல் முறையாக சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது.[5]
இறப்பு
[தொகு]என். சங்கரய்யா 2023 நவம்பர் 15 இல் சென்னை, அப்பலோ மருத்துவமனையில் தனது 102-ஆவது அகவையில் காலமானார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மண்டையன் ஆசாரி சந்திலிருந்து... - என்.ராமகிருஷ்ணனுடன் சந்திப்பு". பார்க்கப்பட்ட நாள் 16 சூலை 2014.
- ↑ http://cpim.org/
- ↑ 3.0 3.1 3.2 N, Ramakrishnan (September 2011). N.SANGKARAIAH VAZHALKKYUM IYAKKAMUM (in Tamil) (Chennai ed.). Chennai: BHARATHI PUTHAKALAYAM. p. 192.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ என். சங்கரய்யா: நூற்றாண்டு காணும் பொதுவுடமை சுடரின் அரசியல் வரலாறு
- ↑ என்.சங்கரய்யா தேர்வு! - தமிழ்நாடு அரசு அறிவிப்பு, 'தகைசால் தமிழர்' விருதுக்கு (29 July 2021). "'தகைசால் தமிழர்' விருதுக்கு என்.சங்கரய்யா தேர்வு! - தமிழ்நாடு அரசு அறிவிப்பு".
- ↑ "സിപിഎമ്മിന്റെ സ്ഥാപകനേതാക്കളില് ഒരാളായ എന്.ശങ്കരയ്യ അന്തരിച്ചു". www.manoramaonline.com (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-15.
வெளி இணைப்புகள்
[தொகு]- At 93, Sankaraiah still an 'untiring lion' - தி இந்து நாளிதழில் வெளியான ஒரு கட்டுரை.
- உள்ளத்தில் உண்மை ஒளி - தினமணி 15 சூலை 2014
- என்.சங்கரய்யா காலமானார்: சுதந்திரப் போராட்ட வீரர், முதுபெரும் இடதுசாரி தலைவரின் வரலாறு- பிபிசி தமிழ்
- `தகைசால் தமிழர்’... `செங்கொடிச் செம்மல்’ - மறைந்தார் சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் சங்கரய்யா!