பி. எஸ். இராமையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Bs ramaiah.jpg

பி. எஸ். இராமையா (B.S. Ramiah, மார்ச் 24, 1905 - மே 18, 1983) தமிழகத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். பல சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள் எழுதியுள்ளார். மணிக்கொடி கால எழுத்தாளர் எனப் போற்றப்படுகிறார். இவர் பல திரைப்படங்களுக்கு கதை உரையாடலை எழுதியும், சில படங்களை இயக்கியுமுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

தமிழ்நாட்டில் வத்தலகுண்டு என்ற ஊரைச் சேர்ந்த சுப்பிரமணிய ஐயர் - மீனாட்சியம்மாள் தம்பதிக்கு கடைசி மகனாக இராமையா பிறந்தார். படிப்பில் ஆர்வம் கொண்ட இராமையா, வாரச் சாப்பாடு சாப்பிட்டும், உபகாரச் சம்பளம் பெற்றும் நான்காவது படிவம் வரையில் படித்தார். திருச்சியில் ஒரு புடவைக்கடையில் வேலை கிடைத்தது. பிறகு கடலூரில் சிறு சிறு பணிகள் செய்தார். அதுவும் ஒத்துவராமல், மீண்டும் சென்னைக்குத் திரும்பி பற்பல இடங்களில் பணியாற்றி, ஆர்ய பவன் உணவுச்சாலையில் உணவு பரிமாறும் வேலையில் சேர்ந்தார்.

விடுதலைப் போராட்டத்தில் இணைவு[தொகு]

மகாத்மா காந்தி தொடங்கிய உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டதால், கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை பெற்றார். சிறையில், வ. இரா., ஏ. என். சிவராமன், சங்கு சுப்பிரமணியம் முதலியவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைத்தது.

சிறைத் தண்டனை முடிந்தவுடன் கதர் விற்பனை நிலையத்தில் வேலை கிடைத்தது. கதர் ஆடைகளைத் தோளில் சுமந்தபடி விற்பனை செய்தார். காந்தியின் நிர்மாணத் திட்டங்களில் ஈடுபாடு ஏற்பட்டது. தொண்டர் படை முகாமிலிருந்து தொண்டாற்றினார். ஓரணா விலையுள்ள சுதந்திர இயக்கப் புத்தகங்களை விற்பனை செய்தார். தூத்துக்குடி, இராஜபாளையம், திருநெல்வேலி, மதுரை, ஈரோடு முதலிய ஊர்களுக்குச் சென்று தொண்டர் படை முகாம்கள் அமைத்தார்.

எழுத்துலகில்[தொகு]

மணிக்கொடி இதழ் (டிசம்பர் 3, 1934) முதல் பக்கம்

1932இல் மீண்டும் சென்னைக்கு வந்த இராமையா காங்கிரஸ் இயக்கத்து ஈடுபாட்டைக் குறைத்துக்கொண்டார். படைப்பிலக்கிய ஆர்வம் காரணமாக ஆனந்த விகடன் சிறுகதைப் போட்டிக்கு அனுப்பிய "மலரும் மணமும்" கதைக்கு ஊக்கப்பரிசாக பத்து ரூபாய் சன்மானம் கிடைத்தது.

அதன்பிறகு, "ஜயபாரதி" இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். மணிக்கொடி இதழுக்குத் தொடர்ந்து எழுதினார். மணிக்கொடிக்கு விளம்பரம் சேகரித்துக் கொடுக்கும் பணியிலும் இறங்கினார். பல சிறுகதைகளை எழுதினார். இவர் மணிக்கொடி இயக்கத்தைப் பற்றி எழுதிய “மணிக்கொடி காலம்” என்ற இலக்கிய வரலாறு புத்தகத்திற்கு 1982ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. இராமையா 304 சிறுகதைகள், மூன்று நாவல்கள், ஆறு நாடகங்கள் எழுதினார். சி. சு. செல்லப்பா, "இராமையாவின் சிறுகதைப் பாணி" என்ற நூலை எழுதி வெளியிட்டார்.

திரைப்படத் துறையில்[தொகு]

"மணிக்கொடி"யிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் திரைப்படத் துறையில் கவனம் செலுத்தினார். நாடகம் எழுதினார். 1943 இல் குபேர குசேலா என்ற திரைப்படத்தை ஆர். எஸ். மணியுடன் இணைந்து தயாரித்தார். திரைத் துறையில் இருந்தாலும், தொடர்ந்து அவர் ஆனந்த விகடன், தினமணி கதிர், குமுதம் பத்திரிகைகளில் வாராவாரம் கதைகள் எழுதி வந்தார். 1957இல் "பிரசிடென்ட் பஞ்சாட்சரம்" என்ற நாடகம் எழுதினார். அந்த நாடகம், திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு பெரும் வெற்றிகண்டது. "போலீஸ்காரன் மகள்" என்ற நாடகம், மேடையில் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இந்த நாடகமும் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

பணியாற்றிய திரைப்படங்கள்[தொகு]

பி. எஸ். ராமையா பணியாற்றிய திரைப்படங்களின் பட்டியல் பின்வருமாறு[1]:

மறைவு[தொகு]

பி. எஸ். இராமையா, தொண்டையில் புற்று நோய் ஏற்பட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்டு, 1983ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி தனது 78வது அகவையில் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. கிருஷ்ணன் வெங்கடாசலம் (12 ஆகத்து 2015). "பி. எஸ். ராமையா". இது தமிழ். 30 அக்டோபர் 2016 அன்று பார்க்கப்பட்டது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எஸ்._இராமையா&oldid=3402035" இருந்து மீள்விக்கப்பட்டது