அரிகேசரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நின்றசீர் நெடுமாற நாயனார்
பெயர்:நின்றசீர் நெடுமாற நாயனார்
குலம்:அரசர்
பூசை நாள்:ஐப்பசி பரணி
அவதாரத் தலம்:மதுரை
முக்தித் தலம்:மதுரை [1]

நின்றசீர் நெடுமாற நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[2]. அரிகேசரி கி.பி. 640 முதல் 670 வரை ஆட்சி செய்த பாண்டிய மன்னன் ஆவார். பாண்டிய மன்னன் செழியன் சேந்தனின் மகனான இவர் தன் தந்தையின் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக் கொண்டார். கி.பி.640 ஆம் ஆண்டளவில் மாறவர்மன் என்ற பட்டத்தினைப் பெற்றார். திருவிளையாடல் புராணத்தில் இவன் சுந்தர பாண்டியன், கூன் பாண்டியன், போன்ற பெயர்களினாலும் அரிகேசரி பராங்குசன் என்று பெரிய சின்னமனூர்ப் பட்டயங்களிலும் அழைக்கப்பட்டுள்ளான்[3][4].

அரிகேசரி ஆற்றிய போர்கள்[தொகு]

அரிகேசரி என்னும் இவர் பெயர் இவர் மேற்கொண்ட போர்களின் வெற்றியினைப் பறை சாற்றும் விதமாக அளிக்கப்பெற்ற பட்டம் ஆகும். சோழ நாட்டின் மீது படையெடுத்து உறையூரை முற்றுகையிட்டு அங்கு ஆட்சி செய்து வந்த மணிமுடிச் சோழனை போரில் வெற்றி பெற்றார். வெற்றிப்பரிசாக மணிமுடிச் சோழனது மகள் மங்கையர்க்கரசியினை மனைவியாகப் பெற்றார், அரிகேசரி[3]. மங்கையர்க்கரசி, பாண்டிய நாட்டின் அரசியாக முடிசூடிக்கொண்டாள். அதனைத் தொடர்ந்து, அரிகேசரி படையெடுத்து, சேர மன்னனொருவனோடு போர் செய்து வெற்றியும் பெற்றார். பரவரை புடைத்தான்; பாழி, செந்நிலம் குறுநில மன்னர்களை வென்றான். திருநெல்வேலியையும் வென்றான் என இவனை ஆற்றிய போர்களைப் பற்றி வேள்விக்குடிச் செப்பேடு கூறுவது குறிப்பிடத்தக்கது.

அரிகேசரியின் சமயப் பணிகள்[தொகு]

அரிகேசரி ஆரம்ப காலத்தில் சமணத்தினைப் பின்பற்றி பின் சைவ சமயத்தின் வழியில் நடந்தவர். இவர் மனைவி மங்கையர்க்கரசியார் நாயனார் மற்றும் இவரது அமைச்சர் குலச்சிறையார் சைவ சமயத்தைப் பின்பற்றியவர்கள். திருஞான சம்பந்தருடன் நட்புற்றிருந்தனர். இம்மூவருமே அரிகேசரியைச் சைவ சமயத்திற்கு மதமாற்றம் செய்து வைத்தனர்[3]. அரிகேசரியும் சிவனின்றி கதியில்லை என்று சைவ சமயத்திற்குப் பணி செய்ய முனைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமண முனிவர் எண்ணாயிரவர்க்கும்,திருஞான சம்பந்தர்க்கும் சிவன் முன்னிலையில் அனல் வாதமும், புனல் வாதமும் நடைபெற்றது எனவும் சிவபெருமானிடம் பேரன்பு கொண்ட அரிகேசரி, மங்கையர்க்கரசி, குலச்சிறையார் மூவரும் பெரிய புராணத்தில் இடம் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுந்தரர் இவரைத் திருத்தொண்டத் தொகையில்

என்ற பாடல் வரியின் மூலம் நெல்வேலிப் போரில் இம்மன்னன் வென்றவனெனவும்,சேரனும், பிற குறு நில மன்னர்களும் இவனுக்குத் திரைசெலுத்தியதாகவும் மன்னர் மன்னனாய் வாழ்ந்தான் எனவும் சம்பந்தர் தெரிவிக்கின்றார். அரிகேசரி, துலாபாரமும், இரணிய கர்ப்பதானமும் செய்தான் என்று வேள்விக்குடிச் செப்பேடு தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது. சீனப் பயணியான 'யுவான்சுவாங்' அரிகேசரியின் தந்தை காலத்தில் வரமுடியாமல், இவன் ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டிற்கு வருகை புரிந்தான். மேலும் அவனது நாட் குறிப்பில் அவன் கூறுவதாவது: "பாண்டிய நாட்டில் உப்பும் முத்தும் மிகுதி!அருகிலிருந்த தீவுகளில் இருந்து முத்துக்கள் கொண்டு வரப்படுகின்றன. இங்கு வேறு விளை பொருள் இல்லை! வெப்பம் மிக்க நாடு இது. இந்நாட்டு மக்கள் கருத்தமேனி உடையவர்கள்; உறுதியும் போர் வலிமையும் உடையவர்கள்; பாண்டி நாடு வணிகத்தில் வளம் பெறுகிறது. செல்வத்தால் சிறந்துள்ளது" எனப் பாண்டிய நாட்டினைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

சமய நூல்களில் மாறனார்[தொகு]

நின்றசீர் நெடுமாற நாயனார், பாண்டிய வேந்தரும், சைவ நாயன்மார்களுள் ஒருவரும் ஆவார். “நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகை குறிப்பிடுகிறது. நெடுமாறனார் பாண்டிநாட்டை ஆண்ட போது, வடநாட்டு மன்னர்கள், பாண்டி நாட்டின் மீது படையெடுத்து வந்தனர். அவர்களை நெல்வேலிப் போர்க்களத்தில் தோற்கடித்தார். அதனால், 'நெல்வேலிவென்ற நெடுமாறன்' எனப் பெயர் பெற்றார். நெடுமாறனார், சோழமன்னன் மகளான மங்கையற்கரசியாரைத் திருமணம் செய்தார். மாறனார் சமண சமயத்தைச் சார்ந்து தீப்பிணியுற்றார். சம்பந்தர் வந்தபொழுது தன்னையும் அறியாமல் தன் தலைப்பக்கமாக இருந்த பொற்றவிசில் அவரை அமருமாறு கையெடுத்துக் காட்டினார். அப்பொழுது ஆரவாரித்த சமணரை அடங்குமாறு சொல்லி தம் சுரநோயைத் தீர்ப்பதுவே இருசாராருக்குமாகிய வாது என உரைத்தார். சம்பந்தர் திருப்பதிகம் பாடி திருநீறு தடவியபோது அவர்தம் வலப்பக்கம், அமுத இனிமையும் சுவர்க்க இன்பமும் போல சுகம் செய்தது. மற்றைய பாகம், நரகத் துன்பமும் கொடுவிடமும் போல வருத்தியது. சமணரை “வாதில் தோற்றீர்” எனக் கூறிச் சம்பந்தரை மனதார வணங்கி வருத்தம் முற்றும் தீரும்படி வேண்டினார். முற்றும் தீர்ந்ததும் முடிமிசைக் கைகுவித்த கையராய் “ஞானசம்பந்தர் பாதம் அடைந்து உய்ந்தேன்” எனப் போற்றினார். சமணரை “என்னவாது உமக்கு” என ஏளனஞ்செய்தார்.

ஏளக்குறிப்பறியாத சமணர் அதனை ஒரு வினாவெனக் கொண்டு அனல் வாதத்திற்கும் எழுந்தனர். அனல் வாதத்தில் பச்சென்றிருந்த ஏட்டைப் பரசமய கோளரியார் காட்ட சமணர்கள் சாம்பரைக் கையினாற் பிசைந்துகொண்டு தூற்றிக்கொண்டு நின்றனர். அது கண்டு நகைசெய்த நெடுமாறர், ஏடு எரிந்த பின்னரும் “நீங்கள் தோற்றிலீர் போலும்” என்றார். அவ்வங்கதம் விளங்காத அமணர் அதனைப் பயன் மொழியாகக் கொண்டு புனல் வாதத்திற்கு எழுந்தனர். புனல் வாதத்தின்போது 'வாழ்க அந்தணர்' எனத் தொடங்கும் திருப்பாசுரத்தைச் சம்பந்தர் பாடினார். அத்திருப்பாசுரத்தில் அமைந்த வேந்தனும் ஓங்குக எனும் மந்திரமொழியால், கூன் நீங்கி, நின்றசீர் நெடுமாறன் ஆனார். வாதில் தோற்ற சமணரை “வெங்கழுவேற்றுவன், இவ்வேந்தன்” என அவர்கள் சொன்னதற்கேற்ப முறை செய்யுமாறு குலச்சிறையாரைப் பணித்தார். அமணர் கழுவேறத் தாம் திருநீறு பூசிச் சைவரானார். சம்பந்தருடன் ஆலவாய்ப்பெருமான் முன் நின்று, “திருவாலவாய் மன்னரே! அமணரின் மாயையில் மயங்கிக் கிடந்த என்னை ஆட்கொண்டருளினீர்" எனப் போற்றிச் செய்தார். சம்பந்தப் பிள்ளையாருடன் கூடிப் பாண்டிநாட்டுத் திருத்தலம் பலவும் பணியும் பாக்கியம் பெற்றார். சம்பந்தர் சோழ நாடு செல்ல நினைத்ததும் அவருடன் போகவே மனம் விரும்பினார். சம்பந்தர் “நீர் இங்கிருந்து சிவநெறி போற்றுவீர்” எனக் கூறிய மொழிக்கிணங்கி மதுரையில் இருந்து சிவநெறி தழைக்க அரசாண்டிருந்தார். இவ்வண்ணம் பகை தடிந்து, சிவநெறியிலே நெடுங்காலம் அரசாண்டு சிவலோகமுற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "நாயன்மார் பெருமக்கள் அவதாரத் தலங்கள் மற்றும் முக்தித் தலங்கள்". 2015-02-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-03-02 அன்று பார்க்கப்பட்டது.
  2. 63 நாயன்மார்கள், தொகுப்பாசிரியர் (01 மார்ச் 2011). நின்றசீர் நெடுமாற நாயனார். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php?id=1964. 
  3. 3.0 3.1 3.2 "4.2.3 மாறவர்மன் அரிகேசரி (கி.பி. 640-670)". தமிழ் இணையப் பல்கலைக்கழகம். 18 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. மகான்கள், தொகுப்பாசிரியர் (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php?id=39. 

உசாத்துணைகள்[தொகு]

  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிகேசரி&oldid=3684407" இருந்து மீள்விக்கப்பட்டது