வெற்றிவேற் செழியன்
வெற்றிவேற் செழியன் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்துவந்த பாண்டிய மன்னனாவான். இவன் நன்மாறன் எனவும் அழைக்கப்பட்டான். கொற்கையில் இளவரசனாகவிருந்த இவன் நெடுஞ்செழியனின் இறப்பிற்குப் பின்னர் பாண்டிய நாட்டை ஆளும் உரிமையினைப் பெற்றான். சேர மன்னன் செங்குட்டுவன் வட நாட்டுப் படையெடுப்பில் இருந்த வேளை வெற்றிவேற் செழியன் மதுரையில் முடிசூடிக் கொண்டான் என்பதனை சிலப்பதிகாரத்திலுள்ள நீர்ப்படைக்காதை (127-138) போன்றன கூறுவது குறிப்பிடத்தக்கது.
சிறப்புப் பெயர் பெற்ற வரலாறு
[தொகு]இவன் காலத்தில் பாண்டி நாட்டில் மழை வளம் இல்லாமல் இருந்தது. குடிமக்கள் ஆடு,மாடுகளினை வளர்க்க முடியாமல் துன்புற்றனர். வான் பொய்த்து, வைகை ஆற்றின் நீரும் பொய்த்தது. இதனைப் பார்த்த நன்மாறனும் கண்ணகியின் சாபமே இதற்குக் காரணமாக இருக்கலாம் என உணர்ந்து கண்ணகிக்கு விழா எடுத்தான். அவ்விழாவிற்குப் பின்னர் மழை பெய்து நாடு செழித்தது. வற்கடம் நீங்கியது. குடிமக்களும் நலமுடன் வாழ்ந்தனர். பாண்டியன் சித்திர மாடத்து உயிர் துறந்தான். சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்று புகழப்பட்டான்.
நன்மாறனின் சிறப்பைப் பற்றி மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் இவ்வாறு பாடுகின்றார்.
“ | "ஆரம் தாழ்ந்த அணிகிளர் மார்பின் தாள்தோய் தடக்கை தகை மாண்வழுதி வல்லைமன்ற! நீ நயந்து அளித்தல் தேற்றாய் பெரும! பொய்யே என்றும் காய்சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும் ஞாயிறு அனையை நின் பகைவர்க்கு திங்கள் அனையை எம்மனோர்க்கே! |
” |
— (புறம்-59) |
பாடாண் திணைப் பாட்டாக விளங்கும் இப்பாடலில் "அழகான கண்டோர் மயங்கும் மார்பை உடையவன். வெற்றி மாலை அணிந்தவன். நீண்ட கைகளை உடையவன். கை நீண்டிருப்பது ஆண்மைக்குரிய அங்க இலக்கணம்! தகுதியான நல்ல குணங்களை எல்லாம் பெற்றவன். வலிமையானவன். விரும்பி பிறர்க்களிப்பான். பொய் உரையாதவன். பகைவரிடம் கோபம் உடையவன். பகைவர்களுக்குச் சூரியன் போன்றவன். எங்களுக்குத் திங்கள் போன்றவன்" எனப் புகழ்ந்து பாடியுள்ளார் சீத்தலைச் சாத்தனார்.