முடத்திருமாறன்
முடத்திருமாறன் என்னும் முற்காலப் பாண்டியன் இரண்டாம் கடற்கோளுக்கு முன் வாழ்ந்தவன். இவன் கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். கடற்கோளுக்குப் பின் தமிழகத்தின் வடக்கே சென்று மணலூர் என்னும் இடத்தில் தங்கி பின்னர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். இம்மன்னனனின் தமிழ்ப்பாடல்கள் இரண்டு சங்க இலக்கியமாகிய நற்றிணையில் உள்ளன. ஆட்சியாண்டுகள் துல்லியமாய்த் தெரியவில்லை, வேறு உறுதிக்கோள்களும் செய்திகளும் கிடைக்கவில்லை.
- குறிப்பு
- கொல்லிமலைக் குட்டுவனைத் தன் பாடலில் குறிப்பிடும் இவன் கடைச்சங்க காலத்தவன். மேலே தரப்பட்டுள்ள செய்தியில், இறையனார் களவியலுரை அடிப்படையில் காட்டப்பட்டுள்ள முடத்திருமாறன் இவன் காலத்துக்கு முந்தியவன்.
இவனது பாடல்கள் சொல்லும் செய்தி
நற்றிணை 105
[தொகு]இவன் இந்தப் பாடலில் குட்டுவன் என்னும் சேர மன்னனின் குடவரையைக் குறிப்பிடுகிறான்.
குட்டுவன் குடவரை
[தொகு]குட்டுவன் குடவரைச் சுனையில் பூத்த குவளைப் பூவைச் சூடித் தலைவியின் கூந்தல் மணக்குமாம். குடமலை என்றால் மேலைமலைத்தொடர். குடவரை என்றால் கொல்லிமலை.
பொருள் தேடப் பிரிந்து சென்ற தலைவன் பாலைநிலத்து இடைவழியில் தன் காதலி தன் பிரிவால் படும் முன்பத்தை எண்ணுகிறான். கலங்குகிறான்.
அவன் சென்ற பாலைவழி
[தொகு]இலவமரத்து முள்ளைப் பற்றி ஏறிய கொடி, உலர்ந்து போனதை, கொடிய காற்று வீசி அதிரச் செய்யுமாம். அந்த வழி மூங்கில் காடுகள் நிறைந்ததாம். விரைந்து நடக்கும் யானைக் கூட்டமே இந்த வழியில் நடக்கும்போது துன்புறுமாம். நீரோ, நிழலோ இல்லையாம். (இப்படிப்பட்ட வழியில் இன்னலுறும்போது தலைவன் தன் தலைவியை நினைக்கிறான்)
நற்றிணை 228
[தொகு]தலைவிக்காகக் காத்திருக்கும் தலைவன் காதில் விழுமாறு தோழி தலைவியிடம் சொல்கிறாள்.
அவன் தன் இன்பத்தை மட்டுமே நினைக்கிறான். நம்மீது அவனுக்கு அருள் இல்லை. இருந்தால் அவன் நம்மைத் துன்புறச் செய்வானா?
அவன் வரும் வழியில் உள்ள இடையூறுகளை நினைக்கும்போது நமக்குத் துன்பம். மழை கொட்டித் தீர்த்த நள்ளிரவில் வருகிறான். கண்ணே தூர்ந்துபோகும் நள்ளிருளில் வருகிறான்.
கானவன் எய்த அம்பு பட்டு வெறிகோண்ட யானை எழுப்பும் ஒலி காதில் விழாதபடி அருவி ஒலிக்கும் நாட்டை உடையவன் அவன். (நம் சொல் அவன் காதில் விழுமா? என்பது தோழி சொல்லும் உள்ளுறை|உட்கருத்து).