வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்னும் அரசன் சங்ககாலத்துக்கு முன் ஆண்ட அரசன். இவனை நெடியோன் எனவும் அழைப்பர்.
பல்லாண்டுகளாக ஆண்டதால் இப்பெயர் பெற்றதாகக் கருதுகின்றனர். 24 ஆயிரம் ஆண்டு அரசு புரிந்தான் என இவன் ஆண்ட 24 ஆண்டுக்காலத்தினை தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். கடற்கோளால் கொள்ளப்பட்ட குமரி நாட்டில் முந்நீர்க் கடல் தெய்வத்திற்கு இவன் விழா எடுத்ததாக அறியப்படுகின்றது.
மூன்று கடல்கள் கூடுமிடம் குமரி முனை. இன்றுள்ள குமரி முனைக்குத், தெற்கே பஃறுளி ஆறு என்று ஓர் ஆறு கடற்கோளுக்கு முன்னர் இருந்தது. இன்று ஓடும் பறளியாற்றின் தொடர்ச்சி ஆகலாம். இதன் கழிமுகத்தில் இவன் விழாக் கொண்டாடினான். அதனால் இந்த விழா முந்நீர் விழா எனப்பட்டது.[1] காவிரியாற்றுக் கழிமுகத்தில் புகார் நகரத்தில் இந்திர விழா நடைபெற்றதைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
வடிம்பு, சொல்விளக்கம்
[தொகு]வடிம்பு என்பது உள்ளங்கால், உள்ளங்கை முதலானவற்றின் விளிம்பு. கை, கால் வடிம்புகளில் (விளிம்புகளில்) குவளைப் பூக்களை நிறுத்தி, மகளிர் பொய்தல் விளையாடினர். நெடுந்தொடர்க் குவளை வடிம்பு உற அடைச்சி மணல் கமழ் மனைதொறும் பொய்தல் அயர மதுரைரைக்காஞ்சி 588 கால் வடிம்பால் (விளிம்பால்) குதிரைகளைத் தட்டி ஓட்டிச் சவாரி செய்தனர். மா உடற்றிய வடிம்பு பதிற்றுப்பத்து 70, கடுமா கடைஇய விடுபரி வடிம்பு புறம் 378 எருமைக் கடாவைக் காளி கால் வடிம்பால் மிதித்தாள். ஏற்றருமை நெஞ்சம் வடிம்பின் இடந்தாள் கலித்தொகை 103-44 என வரும் சொல்லாட்சிகளால் வடிம்பு என்னும் சொல்லின் பொருளை உணரலாம்.
அடிக்குறிப்பு
[தொகு]- ↑
முன்னீர் விழவின் நெடியோன்
நன்னீர் பஃறுளி மணலினும் பலவே (புறம்-9)}}