உள்ளடக்கத்துக்குச் செல்

நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் - பாண்டியன் நெடுஞ்செழியன் புதினத்தில்
பாண்டிய மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பாண்டியர்கள்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன் நிலந்தரு திருவிற் பாண்டியன்
முதுகுடுமிப்பெருவழுதி பெரும்பெயர் வழுதி
கடைச்சங்க காலப் பாண்டியர்
முடத்திருமாறன் மதிவாணன்
பசும்பூண் பாண்டியன் பொற்கைப்பாண்டியன்
இளம் பெருவழுதி அறிவுடை நம்பி
பூதப் பாண்டியன் வெற்றிவேற் செழியன்
கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
உக்கிரப் பெருவழுதி மாறன் வழுதி
நல்வழுதி குறுவழுதி
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி நம்பி நெடுஞ்செழியன்
இடைக்காலப் பாண்டியர்கள்
கடுங்கோன் பொ.ஊ. 575-600
அவனி சூளாமணி பொ.ஊ. 600-625
செழியன் சேந்தன் பொ.ஊ. 625-640
அரிகேசரி பொ.ஊ. 640-670
இரணதீரன் பொ.ஊ. 670-710
பராங்குசன் பொ.ஊ. 710-765
பராந்தகன் பொ.ஊ. 765-790
இரண்டாம் இராசசிம்மன் பொ.ஊ. 790-792
வரகுணன் பொ.ஊ. 792-835
சீவல்லபன் பொ.ஊ. 835-862
வரகுண வர்மன் பொ.ஊ. 862-880
பராந்தகப் பாண்டியன் பொ.ஊ. 880-900
பிற்காலப் பாண்டியர்கள்
மூன்றாம் இராசசிம்மன் பொ.ஊ. 900-945
அமர புயங்கன் பொ.ஊ. 930-945
சீவல்லப பாண்டியன் பொ.ஊ. 945-955
வீரபாண்டியன் பொ.ஊ. 946-966
வீரகேசரி பொ.ஊ. 1065-1070
மாறவர்மன் சீவல்லபன் பொ.ஊ. 1132-1162
சடையவர்மன் சீவல்லபன் பொ.ஊ. 1145-1150
பராக்கிரம பாண்டியன் பொ.ஊ. 1150-1160
சடையவர்மன் பராந்தக பாண்டியன் பொ.ஊ. 1150-1162
சடையவர்மன் குலசேகர பாண்டியன் பொ.ஊ. 1162-1175
சடையவர்மன் வீரபாண்டியன் பொ.ஊ. 1175-1180
விக்கிரம பாண்டியன் பொ.ஊ. 1180-1190
முதலாம் சடையவர்மன் குலசேகரன் பொ.ஊ. 1190-1218
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பொ.ஊ. 1216-1238
இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் பொ.ஊ. 1238-1239
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பொ.ஊ. 1239-1251
சடையவர்மன் விக்கிரமன் பொ.ஊ. 1241-1254
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் பொ.ஊ. 1251-1271
இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் பொ.ஊ. 1251-1281
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் பொ.ஊ. 1268-1311
மாறவர்மன் விக்கிரம பாண்டியன் பொ.ஊ. 1268-1281
இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் பொ.ஊ. 1276-1293
தென்காசிப் பாண்டியர்கள்
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் பொ.ஊ. 1422-1463
மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் பொ.ஊ. 1429-1473
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் பொ.ஊ. 1473-1506
குலசேகர பாண்டியன் பொ.ஊ. 1479-1499
சடையவர்மன் சீவல்லப பாண்டியன் பொ.ஊ. 1534-1543
பராக்கிரம குலசேகரன் பொ.ஊ. 1543-1552
நெல்வேலி மாறன் பொ.ஊ. 1552-1564
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் பொ.ஊ. 1564-1604
வரதுங்கப் பாண்டியன் பொ.ஊ. 1588-1612
வரகுணராம பாண்டியன் பொ.ஊ. 1613-1618
தொகு

நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னராவார். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர், சிறு வயதிலேயே முடிசூட்டப்பட்ட இவர், தான் செய்த தலையாலங்கானத்துப் போரினால் சிறப்படைந்தவர். இவர் போருக்குச் செல்லும் போது, சிறுவர்கள் அணியும் ஐம்படைத் தாலியைத் தன் கழுத்தில் இருந்து கழற்றவில்லை என்பதை வைத்து, இவர் மிகச்சிறு வயதிலேயே போருக்குச் சென்றார் எனலாம்.

காலம்

[தொகு]

பொதுவாகச் சங்ககால வேந்தர்களின் காலக்கணிப்புகளில் பல கருத்து வேறுபாடுகள் காணப்படினும், இம்மன்னரின் காலத்தை அறிஞர்கள் இரண்டு வகையாகக் கணிக்கின்றனர். ஒன்று, இவர் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் தம்பியான வெற்றிவேற் செழியன் மகன் என்பது ஒரு கருத்து.[1][2]

மற்றொன்று இவர், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவருக்கு முன்னோர் என்ற கருத்து. இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, "இளைய ராயினும் பகையரசு கடியுஞ் செருமாண் தென்னர் குலமுத லாகலின்" என்ற ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப் புகழும் சிலம்பின் வரியை எடுத்துக்காட்டி, இளமையிலேயே பகைவரைப் பொருது வென்ற பாண்டிய மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்றவனே என எடுத்துக்காட்டுவார் முனைவர் வ. குருநாதன். இவர் கூற்றின் படி, ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் இளமையிலேயே இறந்ததும், அவரது மனைவி பெருங்கோப்பெண்டு உடன்கட்டை ஏறினாள். இந்தத் தலையாலங்கானத்துச் செருவென்றவனைக் குறிக்கும் பாடல்களும், இவர் இளமையிலேயே அரியணை ஏறியதாகச் சுட்டுகின்றன. அதன்படி இவர் பெற்றோரும் 30 வயதுக்குள்ளேயே மறைந்திருக்க வேண்டும். அதனால் இவர் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவருக்கு முன்னோர் என்று கூறுகிறார்.[3]

நெடுஞ்செழியனைக் குறிக்கும் அடைமொழித் தொடர்கள்

[தொகு]
அடுபோர்ச் செழியன்
மறப்போர்ச் செழியன்
வெம்போர்ச் செழியன்
இயல்தேர்ச் செழியன்
திண்டேர்ச் செழியன்
பொற்றேர்ச் செழியன்
கல்லாயானை கடுந்தேர்ச் செழியன்
கடும்பகட்டு யானை நெடுந்தேர்ச் செழியன்
கொய்சுவல் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
ஒளிறுவாள் தானை கொற்றச் செழியன்
வேல்கெழு தானைச் செழியன்
கைவண் செழியன்
முசிறி முற்றிய செழியன்

நெடுஞ்செழியன் வெற்றிகள்

[தொகு]

நெடுஞ்செழியன் இளையவன், வயது முதிராதவன், ஆற்றல் இல்லாதவன் என இகழ்ந்து சோழநாட்டை ஆண்ட இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேர நாட்டை ஆண்ட மாந்தரஞ்சேரல் இரும்பொறை, கொங்கு நாட்டினை ஆண்ட திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் போன்றோர் கூறினர். இவ்வனைவரும் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துத் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தாக்கினர். எதிர்த்துப் போரிட்ட நெடுஞ்செழியன் அனைவரையும் தோற்கடித்தார் என்பது வரலாறு. இதற்குச் சான்றாக இப்பாடல்கள் விளங்குவது குறிப்பிடத்தக்கது.[4]

வெற்றிக் குறிப்புகள்

[தொகு]
  • கூடல் பறந்தலையில் இருபெரு வேந்தரை வென்றது [5]
இருபெரு வேந்தரும் வேளிரும் சாயப் போரிட்டு வென்றவன் [6]
தன்னைத் தாக்கிய ஒன்றுமொழி வேந்தரின் முரசுகளைக் கைப்பற்றிக்கொண்டான்.[7]
  • பகைவர் நாட்டுக்கே துரத்திச் சென்று வென்றான்.[8]
  • சேரநாட்டு முசிறியில் சேரரை வென்றது [9]
குட்டுவர் (சேரர்) பலரை வென்றவன். “பல்குட்டுவர் வெல்கோவே” [10]
  • ஆலங்கானம் என்னும் தலையாலங்கானத்தில் எழுவரை ஓட்டியது [11]
இயல்தேர்ச் செழியன் ஆலங்கானத்து எழுவரை வென்றான்.[12]
எழுவரை வென்றோன் – புலவர் இவனைத் தழுவினார் குடபுலவியனார் [13]
நாடுகெழு திருவின் பசும்பூண் செழியன் – எழுவரைத் தனியனாக வென்றான்.[14]
இளமையிலேயே வென்றான்.[15]
செழியன் பாசறையில் வாள் மின்னியது[16]
கொடித்தேர்ச் செழியன் எழுவரை வென்றான்[17]
இவனைத் தாக்கியவர்கள் பலர்.[18]
  • மிழலை நாட்டு எவ்வியை வென்றது, முத்தூறு வேளிரை வென்றது [19]
  • ஆய் குலத்தவரின் கீழிருந்த குற்றாலத்தை வென்றான்[20]
  • நெல்லின் ஊர் பகுதியை வென்றான்[21]
  • முதுமலைப் பகுதியை வென்றது[22]
  • பலர் மதில்களை அழித்தது[23]
  • விடியும் பொழுதில் தன்னைத் தாக்கிய மழவர்களை ஓட ஓட விரட்டினான்.[26]

நெடுஞ்செழியனுக்கு அறிவுரை

[தொகு]
அடுபோர்ச் செழியன் – நீர்நிலைகளைப் பெருக்கவேண்டும் என இவனைப் புலவர் வேண்டுகிறார் [27]

அடிமைகொள் வேள்வி

[தொகு]
மன்னர் இவனுக்கு ஏவல் செய்யும் புதுமையான வேள்வியை இவன் செய்தான். புறம் 26,

வள்ளண்மை

[தொகு]
வாள் வீரர்களுக்கு
கொற்றச் செழியன் வாள்வீரர்களுடன் சென்று போரிட்டு வென்றபோதெல்லாம் பாணர்கள் களிறுகளைப் பரிசாகப் பெற்றனர்.[28]
புலவர் ஒருவர் இவனைப் பாடி இவன் கழுத்திலிருந்த முத்தாரத்தையும், இவன் ஏறிவந்த யானையையும் பரிசிலாகப் பெற்றார்.[29]
பாணர்க்கும் பாட்டியர்க்கும் தேரும் யானைகளும் வழங்கியவன் [30]
கருணை உள்ளம்
போர்ப் பாசறையில் இவனது படை காயம் பட்டுக் கிடந்ததைக் கருணை உள்ளத்தோடி இரவெல்லாம் தூங்காமல் தேற்றினான்.[31]

முன்னோர்

[தொகு]
  • கடல்வெள்ளம் கொண்ட முன்னோரின் வழிவந்தவன் “நல்லூழி அடி படரப் பல்வெள்ளம் மீக்கூற உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக” [32]
  • நிலந்தரு திருவின் பாண்டியன் வழியில் வந்து ஆண்டவர்களில் போர்யானை போன்றவன் [33]

ஆட்சி

[தொகு]
  • உழவர்க்குக் ‘காவுதி’ என்னும் பட்டம் வழங்கியவன் [34]
  • சிறந்த போர் வீரர்களுக்குப் பொன்னால் செய்த தாமரைப் பூ (இக்காலப் பத்மஸ்ரீ போன்றது) சூட்டிப் பாராட்டியவன் [35]
  • பழிக்கு அஞ்சுபவன். ஈகையால் வரும் புகழை விரும்புபவன்.[36]
  • அறங்கூறு அவையம் நிறுவி நீதி வழங்கியவன் [37]
  • ஆட்சிக்கு உதவியாக ‘நாற்பெருங்குழு’ வைத்திருந்தவன் [38]
  • ஐம்பெருங்குழுவாக ஐந்து அரசர்களை வைத்துக்கொண்டு அரசாண்டவன் [39]
  • கண்ணுள் வினைஞர் (ஓவியர்), கம்மியர் முதலான கலைஞர்களைப் போற்றியவன் [40]
  • மதுரையில் ‘ஓண நன்னாள்’ (திருவோணத் திருநாள்) கொண்டாடியவன் [41]

நாட்டுப் பரப்பு

[தொகு]
  • பண்டைய தமிழகம் முழுவதும் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.[42]
  • தந்தை மதுரையிலிருந்து ஆண்டபோது இவன் கொற்கையில் இளவரசனாக இருந்து தந்தைக்குப் பின் மதுரையில் முடிசூடிக்கொண்டான்.[43]
  • இவனது நாட்டுப் பரப்பில் இருந்தன எனச் சில ஊர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. முதுவெள்ளில் [44] பெருங்குளம் [45] நெல்லின் அள்ளூர் [46] சிறுமலை [47] பொதியில் [48] முதலானவை.

பாட்டுடைத் தலைவன் நெடுஞ்செழியன்

[தொகு]

பத்துப்பாட்டில் மாங்குடி மருதனார் பாடிய மதுரைக் காஞ்சிக்கும் [49],மதுரைக்கணக்காயர் மகனார் நக்கீரர் பாடிய நெடுநல்வாடைக்கும் பாட்டுடைத் தலைவன் நெடுஞ்செழியனான இவனே என்பது குறிப்பிடத்தக்கது. நெடுஞ்செழியனது அவைக்களப் புலவராகத் திகழ்ந்த மாங்குடி மருதனார் வீடு அடைய வேண்டிய அறநெறி கூறுவதற்காகவே இப்பாடலை நெடுஞ்செழியன் மீது பாடினார். நிலையாமையை எடுத்துச் சொல்லும் இந்நூல் இவனது முன்னோர்களின் சிறப்பும் செங்கோல் சிறப்பும், பாண்டிய நாட்டின் வளமும், மதுரையின் அழகும் கூறப்பட்டுள்ளன.[50] மேலும் முல்லைப்பாட்டு இவனின் மேல் பாடப்பட்டதாகக் கூறப்பட்டாலும் அந்நூலில் தலைவன் பெயர் குறிக்கப்படவில்லை.

புலவனாக

[தொகு]

இவன் புலவனாகவும் விளங்கினான். இவனது ஒரே ஒரு பாடல் புறநானூறு 72 எண்ணுள்ள பாடலாக உள்ளது. அதில் அவன் வஞ்சினம் கூறுகிறான். இது செய்யாவிட்டால் எனக்கு இன்னது நேரட்டும் என்று பலர் முன் கூறுவது வஞ்சினம்.

நாற்படை நலம் உடையவர் என்று தன்னைத் தானே புகழ்ந்துகொண்டு செருக்கோடு என்னைப்பற்றிச் சிறுசொல் கூறி, என்னோடு போரிடுவோர் எல்லாரையும் ஒன்றாகச் சிதைத்து, என் அடிக்கீழ் நான் கொண்டுவராவிட்டால்,

  • என் குடிமக்கள் என்னைக் கொடியன் என்று தூற்றுவார்களாக!
  • மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்ட என் புலவர்-சங்கம் என்னைப் பாடாது போகட்டும்!
  • என்னைப் பாதுகாப்போர் துன்பம் கொள்ள, இரவலர்களுக்கு வழங்கமுடியாத வறுமை என்னை வந்தடையட்டும்!

-இவ்வாறு இவன் கூறுவதில் இவனது நற்பண்புகள் வெளிப்படுகின்றன.

பாடிய புலவர் பட்டியல்

[தொகு]

இவனை

ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர்.

ஒப்பு நோக்குக

[தொகு]
  1. பசும்பூண் பாண்டியன் - இப்பெயருடன் சங்க இலக்கியங்களில் ஐந்து பாடல்களும் (அகம் 162, 231, 253, 338 குறு 393) தொல்காப்பிய பொருளதிகாரக் களவியலுக்கு நச்சினார்க்கினியார் உரையும் (நூற்பா 11), பசும்பூண் வழுதி என்னும் பெயருடன் நக்கீரர் பாடலிலும் குறிப்புகள் உண்டு. தலையாலங்கானத்துச் செழியன் இளமையிலேயே இவ்வெற்றியை பெற்றதால் அவனுக்கு பசும்பூண் பாண்டியன் என பெயர் அமைந்திருக்கலாம்.
  2. மேலும் தலையாலங்கானத்துச் செழியனை பாடிய இடைக்குன்றூர் கிழார் இவனை பசும்பூண் செழியன் எனப் பாடியுள்ளார். தலையாலங்கானத்துச் செழியனைப் பற்றிப் பல பாடல்கள் இயற்றிய நக்கீரர் இவனை பசும்பூண் பாண்டியன் (அகம் 253), பசும்பூண் வழுதி (நற் 358) என்றும் பாடியுள்ளார். நக்கீரர் தந்தையான மதுரை கணக்காயனார் (அகம் 253), பரணர் (அகம் 162, குறு 393) மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் (அகம் 231) இவனை பசும்பூண் பாண்டியன் எனப் பாடியுள்ளனர்.
  3. மேற்கண்டவற்றிலும் பரணர் செழியன் பெயரைக் குறித்து இவன் கூடற்பறந்தலை போரில் பெற்ற வெற்றியைப் பாடியதால் பசும்பூண் பாண்டியனும் தலையாலங்கானச் செழியனும் ஒருவனே என நிறுவுவார் முனைவர் வ. குருநாதன்.[3]
  4. பசும்பூண் பாண்டியன் என்னும் அடைமொழியைக் கொண்டு மட்டும் இவனை வேறு மன்னன் என்பது கூடாது எனவும் மதுரையை இவன் சிறப்பாக ஆட்சி செய்தும் இவனைப் பற்றிப் புலவர்கள் புறப்பாடல்கள் பாடவில்லை என்றும் எனவே பசும்பூண் பாண்டியனும் தலையாலங்கானச் செழியனும் ஒருவனே என நிறுவுவார் மயிலை சீனி. வேங்கட சாமி.
  5. மேலும் பாண்டிய நாட்டின் அறியனை கைப்பற்றவே பசும்ப்பூண் பாண்டியனும் தலையாலங்கானச் செழியனும் போர் புரிந்ததால் பசும்பூண் பாண்டியனும் தலையாலங்கானச் செழியனும் ஒருவனே என நிறுவுவார் மயிலை சீனி. வேங்கட சாமி. (அகம் 231)[51]

மேற்கோள்

[தொகு]
  1. V. Kanakasabhai Pillai (1979). The Tamils Eighteen Hundred Years Ago]. Asian Educational Services, noolaham.org (in web).
  2. கா. அப்பாத்துரை (1962). ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம். Colombo Apothecaries' Co., Ltd, noolaham.org (in web).
  3. 3.0 3.1 முனைவர் வ. குருநாதன் (2001). சங்ககால அரச வரலாறு. தஞ்சாவூர் - 613005: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம். pp. 162–177.{{cite book}}: CS1 maint: location (link)
  4. விளக்கம்:- தன்னை இளையவன் என்று இகழ்ந்து போருக்கு வந்த ஏழு அரசர்களையும் வெற்றி கொள்ள படை திரட்டினான். படை முன் நடக்க தேர் ஏறி வந்தான். ஏழு படைகளையும் தலையலங்கானம் என்ற இடத்தில் எதிர்த்தான். பகைவர் படைகளை முன்னிலைப்படுத்தினான். ஏழு அரசர்களையும் நோக்கி வீர சபதம் செய்தான்!.

    விளக்கம்:- "என் நாட்டை விரும்பி வந்த பகைவர்கள் எள்ளி நகையாடத்தக்கவர்கள். 'இளையவன் இவன்' என வந்தனர். யானையும், தேரும், குதிரைப் படையும் உடையவன் நான் என்பதை உணராது வந்தனர். என் வலிமை அறியாதவர்கள். என் கோபத்தை மூட்டினர். போரில் அனைவரையும் சிதைந்து ஓடுமாறு செய்வேன். முடியையும், முரசத்தையும் கைப்பற்றுவேன். இல்லாவிட்டால் என் மக்கள் என்னைக் கொடியவன் என்று பழி தூற்றட்டும். மாங்குடி மருதன் முதலான புலவர்கள் என்னைப் பாடாது நீங்கட்டும். என்னிடம் யாசிப்போர்க்கு ஈய முடியாத வறுமை உடையவன் ஆவேன்" என்று வஞ்சினம் கூறினான்.

    இடைக்குன்றூர் கிழாரும் இவனது வெற்றியைப்பற்றி (புறம்-76) இல் பாடுகின்றார்.

    சோழன் பெருநற்கிள்ளி, சேரன் மாந்தரஞ்சேரல், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய எழுவரும் பாண்டியனிடம் தோற்றவர்கள். தோற்று ஓடினார்கள். தொடர்ந்து சென்று உறையூரையும், வஞ்சியையும் வென்றான். அவ்வரசர்களின் உரிமை மகளிர் நாணமுற்று உயிர் துறக்குமாறு செய்தான். இவ்வாறு (புறம்-78) கூறுகின்றது.

    இருங்கோவேளின் மிழலைக் கூற்றத்தையும், வேளிரது முத்தூர்க்கூற்றத்தையும் வென்றான் என(புறம்-24) கூறுவது படி, தமிழகம் முழுவதினையும் வென்று ஆண்டார் என்பதனை அறிய முடியும்.

  5. மறப்போர்ச் செழியனைக் கூடல் பறந்தலையில் தாக்கிய இருபெரு வேந்தர் போர்க்களத்திலேயே தம் முரசுகளை எறிந்துவிட்டு ஓடிவிட்டனர். - அகம் 116
  6. “இருவெரு வேந்தரொடு வேளிர் சாயப், பொருது அவரைச் செரு வென்றும் – மதுரைக்காஞ்சி 55-56
  7. புறம் 25,
  8. புறம் 78,
  9. :கொடித்தேர்ச் செழியன் குதிரைப் படையுடன் சென்று, கடலோர முசிறியை முற்றுகையிட்டு சேரரின் யானைப்படையை வீழ்த்தினான். அகம் 57
  10. மதுரைக்காஞ்சி 105
  11. :கைவண் செழியன் ஆலங்கானத்து அமர் கடந்தான். அகம் 175
  12. அகம் 209
  13. – புறம் 19
  14. புறம் 76
  15. புறம் 77
  16. நற்றிணை 387
  17. அகம் 36
  18. புறம் 79,
  19. எவ்வியை வென்று மிழலை நாட்டையும், தொன்முது வேளிர் ஆட்சிக்கு உட்பட்ட முத்தூறு (முத்துக்கள் ஊறும் கொற்கை போன்றதோர் ஊர்) நாட்டையும் கைப்பற்றிக்கொண்டவன். புறம் 24,
  20. ஆய்நாட்டு மலை குற்றாலத்தில் போரிட்டு வென்றவன். “தென்னவன் பெயரிய துன் அருந் துப்பின் தொன்முது கடவுள் பின்னர் மேய, வரைதாழ் அருவிப் பொருப்பின் பொருந” – மதுரைக்காஞ்சி 40-43
  21. நாவாய்க் கப்பல்கள் தங்கும் நெல்லின் ஊர் துறைமுகப் பகுதியைக் கைப்பற்றியவன், மதுரைக்காஞ்சி 85-88
  22. முதுபொழில் எனப்பட்ட முதுமலைப் பகுதியை முற்றுகையிட்டு வென்றவன். மதுரைக்காஞ்சி 190
  23. :அடுபோர்ச் செழியன் – கூடல் அரசன், பகைவரின் ஆண்டலை மதிலை அழித்து அவரது முரசைக் கைப்பற்றினான் நற்றிணை 39
    பகைமன்னர் இவனை எண்ணி நாள்தோறும் நடுங்கினர் புறம் 23,
  24. தென்பரதவர் போர் ஏறே - மதுரைக்காஞ்சி 144
  25. "முதுவெள்ளிலை மீக்கூறும் வியன்மேவல் விழுச்செல்வத் திருவகையா னிசைசான்ற" - மதுரைக்காஞ்சி 111 - 120
  26. மாங்குடி மருதனார் – மதுரைக்காஞ்சி 687
  27. குடபுலவியனார் - புறநானூறு 18,
  28. அகம் 106
  29. கல்லாடனார் - புறம் 371, 372
  30. மதுரைக்காஞ்சி 748-753
  31. நெடுநல்வாடை,
  32. மதுரைக்காஞ்சி 21-23
  33. “நிலம் தந்த பேருதவிப் பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல்” – மதுரைக்காஞ்சி 60-61
  34. மதுரைக்காஞ்சி 499
  35. “பொலந்தாமரைப் பூச்சூட்டியும்” மதுரைக்காஞ்சி 103-105
  36. மதுரைக்காஞ்சி 205
  37. மதுரைக்காஞ்சி 493
  38. மதுரைக்காஞ்சி 506-510
  39. ‘பொலம்பூண் ஐவர்’ மதுரைக்காஞ்சி 775-778
  40. மதுரைக்காஞ்சி 511-522
  41. மதுரைக்காஞ்சி 590-591
  42. தென்குமரி வடபெருங்கல் இடைப்பட்ட நாடுகளின் அரசர்க்கெல்லாம் அரசன் - மதுரைக்காஞ்சி 70-74
  43. கடுந்தேர்ச் செழியன் – கொற்கைக் கோமானின் மதுரை சிறுபாணாற்றுப்படை 65
    பொற்றேர்ச் செழியன் கூடல் நற்றிணை 298
    நெடுந்தேர்ச் செழியன் கூடல் கம்பலை அகம் 296
    அடுபோர்ச் செழியன் மாடமூதூர் அகம் 335
    அடுபோர்ச் செழியன் கூடல் நகருக்கு மேற்கில் நெடியோன் குன்றத்துச் சுனையில் நீலமலர். அகம் 149
  44. முதுவெள்ளில் என்னும் கடல்சார் நிலமக்கள் இவனை வாழ்த்தினர் மதுரைக்காஞ்சி 117-119
  45. கடுந்தேர்ச் செழியன் பெருங்குளம் நற்றிணை 340
  46. கொற்றச் செழியன் பிண்ட நெல்லின் அள்ளூர் அகம் 46
  47. *கைவண் செழியன் மழை விளையாடும் சிறுமலை அகம் 47
  48. திண்டேர்ச் செழியன் பொருப்பில் (பொதியில்) மூங்கில் வளம். அகம் 137
  49. [1]
  50. என மதுரை சோமசுந்தரப் பெருமான் வழியில் தோன்றியவன் இவன் என மருதனார் கூறுகின்றார். இந்நூல் 782 அடிகளுடையதாகும். நெடுஞ்செழியன் போர் விரும்பும் இயல்பினன் என்பதனை

    என்ற அடிகளினால் குறிப்பிடுகின்றார்.

    நெடுநல்வாடையில் இவனது படைக்களம் விரும்பும் செய்தியினை நக்கீரர் "நள் என்ற யாமம்! பள்ளி கொள்ளாத நெடுஞ்செழியன் பாசறையில் திரிகின்றான். போரில் புண்பட்ட வீரர்கள் பாசறையில் படுத்துள்ளனர். அவர்களை நேரில் கண்டு ஆறுதல் கூற நலம் கேட்கச் செல்கின்றான். வேப்பம் பூ மாலை அணிந்த வேலுடன் வீரர் பின் தொடரச் செல்கிறான். குதிரைகள் கரிய சேற்றை பனித்துளியால் உதறும். பனிக்காற்று வீசும். தோளின்று நழுவிய வெற்றி வாளினை வலக்கையில் ஏந்தியவனாய், முத்துமாலை தொங்கும் (வெண்கெற்றக்) குடை அசைய சென்றான். புண்பட்ட வீரர்களின் முகம் மலர நலம் விசாரிக்கின்றான். புண் வலி நீங்கி புன்முறுவல் பூத்த வீரர்கள் நன்றியுடன் நோக்குகின்றனர். 'வேம்புதலையாத்த நோன்கால் எஃகமொடு' திரிகின்றான் பாசறையில்! பாண்டியன் மனைவி, நெடுஞ்செழியன் வருகைக்குக் காத்துக் கிடக்கின்றாள் மெல்லிய படுக்கையில். "பனிக்காற்று வீசுகிறது! அரசியின் காதல் உள்ளம் வெப்பம் அடைகிறது! சாளரங்களில் முத்து மாலைகளும், திரைச் சீலையும் மெல்ல அசைகின்றன! தூக்கம் வராத ஏக்கத்துடன் அரசி படுத்திருக்கின்றாள். இவளது ஏக்கத்தைப் போக்க அரசன் பாசறை நீங்கி வரவேண்டும். அரசனும் அரசியும் மகிழ்ந்திரவு நேரத்தைக் கழிக்க வேண்டும்" என்று நக்கீரர் நெடுநல்வாடையில் பாடுகின்றார்.

  51. மயிலை சீனி. வேங்கடசாமி (2007). சங்ககாலத் தமிழக வரலாறு. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். pp. (186 - 188)/232.

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் பாடல் புறநானூறு 72
  2. மாந்தரஞ்சேரலைச் சிறை கொண்டது
  3. நீரைத் தேக்குக - பாண்டரங்கனார் அறிவுரை
  4. எழுவரை வென்றது - குடபுலவியனார்
  5. தலையாலங்கானப் போரின் விளைவு
  6. மிழலை முத்தூறு கைப்பற்றியது
  7. போர்க்கள வேள்வி
  8. வெற்றிக்குப் பின்னர் கலங்கியது