உள்ளடக்கத்துக்குச் செல்

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் ஓர் அரசனாகவும் இருந்தவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அவையாவன அகநானூறு 25, புறநானூறு 71[1].

இவரது மனைவி பூதபாண்டியன் தேவி பெருங்கோப் பெண்டும் ஒரு புலவர். அவர் பாடிய பாடல் ஒன்றும் உள்ளது. இவர் தன் கணவன் இறந்தபோது தன் கணவனை எரிக்கும் தீயில் பாய்ந்து உயிர் துறக்கச் சென்றார். சான்றோர் பலர் தடுத்தனர். அப்போது தம் கருத்தை வெளிப்படுத்தும் ஒரு பாடலைப் பாடிவிட்டுத் தீயில் பாய்ந்து உயிர் துறந்தார். (புலவர் வரிசை எண் 326, பாடல் - புறநானூறு 246)

புலவர் பெயர்விளக்கம்

[தொகு]

இந்தப் புலவர் பெயரில் 'பூதப்பாண்டியன்' என்று ஒற்றெழுத்து மிகுந்து காணப்படுகிறது. மனைவி பெயரில் 'பூதபாண்டியன்' என்று ஒற்று மிகாமல் உள்ளது. இது ஏடெழுதுவோர் செய்த பிழையாக இருக்கலாம்.
ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் என்பவன் சிறந்த போர்வீரனாகவும், வள்ளலாகவும் விளங்கினான். அவன் இறந்ததை எண்ணிக் குடவாயில் கீரத்தனார் என்னும் புலவர் வருந்திப் பாடியுள்ளார். (புறநானூறு 242)
ஒல்லையூர் பாண்டியர் ஆட்சியின் கீழ் இருந்தது. அதனை ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் மீட்டுத் தனதாக்கிக்கொண்டான். பூதப்பாண்டியன் பெருஞ்சாத்தனோடு போரிட்டு வென்று மீண்டும் தனதாக்கிக்கொண்டான். இதனால் இவனை 'ஒல்லையூர் தந்த' என்னும் அடைமொழி தந்து மக்கள் வழங்கினர்.

அகநானூறு 25: (பாலைத் திணை)

[தொகு]

திரும்புவேன் என்று சொல்லிச் சென்ற பருவம் வந்தும் அவன் வராமையால் தலைவி வருந்துகிறாள். பொதியமலை அரசன் திதியன். அவன் போரிடுவோரையெல்லாம் வென்ற வில்லை உடையவன்.அத்துடன் மழைமேகம் போல, ஆனால் இன்னிசை முழக்கிக் கொடை வழங்குபவன். அந்தக் காட்டுக்குச் சென்றாலும் அவர் வந்துவிடுவார் என்று சொல்லித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.

புறநானூறு 71 ( காஞ்சித் திணை, வஞ்சினக்காஞ்சித் துறை)

[தொகு]

தானையோடு வந்து என்னுடன் போரிடுவதாகக் கூறுபவரை அலறும்படி தாக்கி, நான் அவரைப் புறமுதுகிட்டு ஓடச் செய்வேன். அப்படிச் செய்யாவிட்டான், என் அன்பு மனைவியைப் பிரிவேன் ஆகுக. அறநிலை திரியாத என் அவைக்களத்தில் திறமை இல்லாத ஒருவனை அமர்த்தி வலிமையற்ற ஆட்சி புரிபவன் ஆவேனாகுக. நான் வையைவளம் மிக்க என் தென்புலத்தை மையல் கோமான் மாவன், எயிலாந்தை, புலவர் அந்துவஞ்சாத்தன், ஆதன் அழிசி, இயக்கன் (என்னும் ஐம்பேராயமும்), பிறரும் என் கண் போன்ற உறவினரும் கூடி உதவக் காத்துவருகிறேன். அவரைப் புறமுதுகிட்டு ஓடச் செய்யாவிட்டால் இதிலிருந்து வழுவி வன்புலத்தை(சுடுகாட்டை)க் காக்கும் பிறவி அடைவேன் ஆகுக. என்றெல்லாம் இந்தப் பாண்டியன் தனக்குத் தானே உறுதிமொழி கூறும் வஞ்சினம் பேசுகிறான். இதனால் அவன் தன் மனைவியை மதித்த பண்புடைமை, செங்கோலாட்சி, அவைக்கள ஆட்சி முதலானவற்றை அறியமுடிகிறது.

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் பாடல் புறநானூறு 71