அள்ளூர் நன்முல்லையார்
பாண்டிய நாட்டில் சிறந்து விளங்கிய அள்ளூர் என்னும் ஊரில் தெளிந்த புலமையுடன் விளங்கிய நன்முல்லை என்னும் இக்கவிஞர்
“கொற்றச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூ”
என்கிற அகநானூற்றுப் பாடலில் (பாடல்: 46) தனது ஊரின் புகழைத் தெரிவித்துள்ளார். இவரது பாடல்கள் அகநானூற்றில் ஒரு பாடல் (பாடல்:46), புறநானூற்றில் ஒரு பாடல் (பாடல்: 306)[1] மற்றும் குறுந்தொகையில் ஒன்பது பாடல்கள் பாடல் எண்கள் 32, 67, 68, 93, 96, 140, 157, 202, 237[2] என்று மொத்தம் 11 (பதினொன்று) பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
இணைப்பு
[தொகு]இவர் சங்ககால பெண் புலவர்.
இவரது பாடல் தரும் செய்திகள்
[தொகு]1 அகநானூறு 46 தரும் செய்திகள்
[தொகு]அவன் அவளை(தலைவி) நாடி அவள் இல்லம் சென்றான். தோழி அவளைத் தர மறுக்கிறாள். அப்போது தோழி சொல்கிறாள்;
எருமை இரவு வேளையில் வேலியை முரித்துகொண்டு சென்று, குளத்திலுள்ள வள்ளைப் பூக்களை மிதித்துக்கொண்டு தாமரைப் பூவை மேய்வது போல நீ பரத்தையை மேய்ந்து திரும்பியுள்ளாய். யார் நீ?
பாண்டிய மன்னன் கொற்றச் செழியனின் அள்ளூர் போலத் தலைவி அழகுள்ளவளாம்.
2 குறுந்தொகை 32 தரும் செய்திகள்
[தொகு](ஒரு நாளை ஆறு சிறுபொழுதுகளாகப் பகுத்துக் காண்பது தமிழ்நெறி.) பொருள் தேடச் செல்லலாம் என்று நினைத்த தலைமகன் தன் காதலியை எண்ணிப் பின்தங்கிவிட்டான். காலை, பகல், மாலை, யாமம், விடியல் என்று எந்த நேரத்திலும் காமம் பொய்யாகிவிடுகிறது. அது மெய்யாகிக் கிட்டுவதற்கு மடலேறலாம் என்றால் ஊர்மக்கள் பற்றிய நினைவு வருகிறது. ஊர்மக்கள் என்னைத் தூற்றினால் எனக்குப் பழி. ஊர்மக்கள் என்னை வாழ்த்தினால் என் காதலியின் பெற்றோருக்குப் பழி. எனவே மடலேறுதலும் தக்கதன்று. என்ன செய்வேன்? - என்று அவன் கலங்குகிறான்.
3 குறுந்தொகை 67 - பாலை - தரும் செய்திகள்
[தொகு]பொருள் தேடக் காட்டு வழியில் சென்றவர் அங்குப் பழுத்திருக்கும் வேப்பம்பழத்தைப் பார்க்கும்போது வேனில் காலம் வந்துவிட்டதே என்று எண்ணமாட்டாரோ? என்று தலைமகள் தன் தோழியிடம் கூறுகிறாள்.
மகளிர் அணியும் பொன்னாலான தாலி போல் வேப்பம்பழம் இருக்குமாம்.
4 குறுந்தொகை 68 - குறிஞ்சி - தரும் செய்திகள்
[தொகு]அற்சிரம் என்னும் பனிப்பருவத்தில் உழை என்னும் இனத்து மான் உழுந்தின் முதிர்ந்த காய்களை மேயும். அதைப் பார்த்தும் அவர் இல்லம் திரும்பவில்லை. என் நெஞ்ச நோய்க்கு அவர் வருகை அன்றி வேறு மருந்து இல்லை - என்கிறாள் இல்லக் கிழத்தி.
5 குறுந்தொகை 93 தரும் செய்திகள்
[தொகு]தலைவி தலைவனை 'அன்னையும் அத்தனும்' (தாயும் தந்தையும்) அவன்தான் என்கிறாள்.
6 குறுந்தொகை 96 - குறிஞ்சி - தரும் செய்திகள்
[தொகு]தோழி தலைவனைப் பழித்துக் கூறித் தலைவியோடு விளையாடுகிறாள். தோழி பழித்தது நகைவிளையாட்டு என்று சொல்லித் தலைவி மகிழ்கிறாள்.
7 குறுந்தொகை 140 பாலை - தரும் செய்திகள்
[தொகு]- காட்டில் வாழும் ஆண் ஓதி (ஓதி = ஓணான் வகையில் ஒன்றான பச்சோந்தி) தன் பெண் ஓதியை அழைக்கப் போடும் சத்தத்தைக்கூட நல்ல புள்
- (நல்ல சகுனம்) என்று கருதினர்.
8 குறுந்தொகை 157 மருதம் - தரும் செய்திகள்
[தொகு](மகளிர் மாதவிடாய் என்னும் பூப்பு எய்திய நாளிலிருந்து 12 நாள் கணவன் மனைவியுடன் இருக்கவேண்டும் என்பது தமிழர் நெறி. இதனைப் 'பூப்பின் புறப்பாடு ஈரறு நாளும் நீத்து அகன்று உறையார் என்மனார் புலவர்' என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.) பூப்பெய்திய மனைவி ஒருத்தி சொல்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
கோழி 'குக்கூ' என்றது. உடனே என் மனம் 'துட்கு' என்றது. காரணம், நாளை வாள் போல் அறுத்துக்கொண்டு விடியும் வைகறை வந்துவிட்டதே! அவர் வருவாரோ, மாட்டாரோ? என்று என் மனம் ஏங்குகிறது.
9 குறுந்தொகை 202 - மருதம் - தரும் செய்திகள்
[தொகு]தலைவன் வந்தான். தலைவியைக் கூட்டித் தருவதாகத் தோழி ஒப்புக்கொண்டாள். தலைவி மறுத்துச் சொல்கிறாள்.
நெருஞ்சிப் பூ இனிது. அது காய்த்து நெற்றான பின் நெருஞ்சி முள்ளாகிவிடுகிறதே! அவர் இப்போது நெருஞ்சிப் பூ. ஆனால் அவர் நெருஞ்சிமுள் ஆகிவிடுவாரே! எனவே ஒதுங்கிவிடுவோம் - என்கிறாள் தலைவி.
10 குறுந்தொகை 237 - பாலை - தரும் செய்திகள்
[தொகு]பொருள்தேடி முடிந்தபின் தேரில் இல்லம் மீளும் தலைவன் தன் தேர்பாகனிடம் சொல்கிறான்.
நம் நெஞ்சு நம்மைப் பிரிந்துவிட்டது. நம் இல்லத்துக்குப் போய்விட்டது. நமக்கும் நம் நெஞ்சுக்கும் இடையே நீண்ட இடைவெளி உள்ளது. நாம் இங்கே இடிபோலப் புலி உருமும் மலையில் இருக்கிறோம். நம் மனம் அங்கே போய் என்ன செய்கிறது?
11 புறநானூறு 306 தரும் செய்திகள்
[தொகு]இது மூதின்முல்லை என்னும் துறையைச் சேர்ந்த பாடல்.
அவள் தன் முன்னோரின் நடுகல் தெய்வங்களுக்கு விழாவெடுத்துப் பரவுகிறாள். தன் கணவன் வேந்தனின் பகையை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டு மீளவேண்டும் என்பது அவன் நடுகல்லிடம் அவள் வேண்டும் வரம். (இந்தப் பாடலின் அடிகள் சிதைந்துள்ளன)