பூங்கணுத்திரையார்
பூங்கணுத்திரையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.[1] இவரது பெயரைப் பூங்கண் உத்திரையார் என்று பிரித்துப் பார்க்கின்றனர்.[2] ஆதிரை என்பது போல உத்திரை என்பதும் ஒரு பெயர். உத்திரை நாள்மீன் 27 நாள்மீன் வரிசையில் 12ஆவது மீன். உத்திரை நாளில்(நட்சத்திரத்தில்) பிறந்த இவருக்கு உத்திரை என்று பெயரிட்டனர். புலவராக விளங்கியதால் இவரை உத்திரையார் என்னும் சிறப்புப் பெயரால் வழங்கலாயினர். இவரது கண்ணில் பூ விழுந்திருந்தது. அதனால் இவரைப் பூங்கண் உத்திரையார் என்றனர்.
சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் மூன்று இடம்பெற்றுள்ளன. குறுந்தொகை 48, 171, புறநானூறு 277 ஆகியவை அந்தப் பாடல்கள். அவை சொல்லும் செய்திகள்:
குறுந்தொகை 48
[தொகு]பனிப்பாவை காலைவெயில் பட்டதும் வருந்தும். அது போலத் தலைவி பகலில் தலைவன் தன்னுடன் இல்லாததை எண்ணி உருகுவதாகத் தோழி குறிப்பிடுகிறாள்.
பாவை விளையாட்டு
[தொகு]பூந்தாதுகள் பனிக்காலத்தில் கொட்டிக் கிடக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி மகளிர் பூந்தாதுகளை கையால் இறுக்கிப் பிடித்துப் பாவை செய்து விளையாடுவர். இதனை இப் பாடல் 'தாதில் செய்த தண்பனிப் பாவை' என்று குறிப்பிடுகிறது.
குறுந்தொகை 171
[தொகு]ஆற்றில் பாயும் பேரூற்றுப் புனலுக்குப் பக்கத்தில் இருந்த குளத்தில் மீன் பிடிக்கப் போட்ட வலையில் மான்விலங்கு மாட்டிக் கொண்டது போல் தலைவன் போட்ட வலையில் தான் விழுந்துவிட்டதாகத் தலைவி தோழியிடம் சொல்லி, இனித் தலைவன் என்ன செய்தாலும் அவன் பாடு என்கிறாள்.
புறநானூறு 277
[தொகு]மூங்கில் இலையில் தூங்கும் பனிநீர் போல தாயின் கண்ணில் மகிழ்ச்சிக் கண்ணீர்த்துளி தொங்குகிறது. அவள் தலைமுடி மீன் உண்ணும் கொக்கின் தூவி போல் வெளுத்திருக்கிறது. அவள் மகன் போருக்குச் சென்றான். போரில் மாண்டான். எனினும் பகைவனின் களிற்றை வெட்டி வீழ்த்திய பின் மாண்டான். இதனை அறிந்தபோது அந்தத் தாய் மகனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சி அடைந்தாளாம்.
- இது உவகைக் கலுழ்ச்சி. ஆனந்தக் கண்ணீர் என்னும் துறை ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ கா., கோவிந்தன் (1956). சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - V. பெண்பாற்புலவர்கள் (மறுபதிப்பு) (PDF). திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 63-65.
- ↑ பூங்கணூஉத்திரையார் விளக்கம்