உள்ளடக்கத்துக்குச் செல்

பொன்முடியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொன்முடியார் சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் பெண்புலவர்.[1] மறக்குடியில் பிறந்தவராக குறிப்புகள் கிடைகின்றன.இவர் சேரநாட்டின் ஒரு பகுதியான குட்டநாட்டின் வடக்குப்பக்கத்தில் பொன்முடி நல்லூர் என்னும் ஊரில் பிறந்தவர் ஆவார் .இவரின் பெருமையைப் பாராட்டி அரசர் எவரேனும் பொன்முடி பரிசளித்து இருக்கலாம் என்கிறார் உ.வே.சா .[2] இவரது பெயரால் புறநானூறு பாடல்கள் உள்ளன. அவை 299, 310, 312 வரிசை எண்களில் உள்ளன. இவரின் பெயரால் பொன்முடி என்ற ஊர் பெயர் உருவாகி, தற்பொழுது அது மருவி பொம்மிடி என மாறி இருக்கலாம்.

கடப்பாடு

[தொகு]

பாடல்

[தொகு]
ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே!
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!
ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே! (312)

செய்தி

[தொகு]
  • புலவர் பொன்முடியார் ஒரு தாய். அவர் சொல்கிறார்.
  • (மகனைப்) பெற்றுப் பேணிப் பாதுகாப்பது எனக்குக் கடமை
  • (அவனைச்) சான்றோனாக்குவது தந்தைக்குக் கடமை
  • (அவனுக்கு) நல்ல நடத்தையை அளிப்பது மன்னனுக்குக் கடமை
  • (அவனுக்கு) வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லனுக்குக் கடமை
  • ஒளிர்கின்ற வாளால் கடும்போரிலே யானையை வெட்டி மீள்வது (என் மகனாகிய) காளைக்குக் கடமை.

மகன், களிறு அட்டு ஆனான்

[தொகு]
  • திணை: தும்பை துறை : நூழிலாட்டு

பாடல்

[தொகு]

பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்,
செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியடு,
உயவொடு வருந்தும் மன்னே! இனியே
புகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான்,
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே,
உன்னிலன் என்னும், புண்ஒன்று அம்பு_
மான்உளை அன்ன குடுமித்
தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே. (310)

செய்தி

[தொகு]

இவன் குழந்தைப் பருவத்தில் பால் உண்ண மறுத்தபோது தாய் அடிக்க வந்த சிறு கோலுக்கு அஞ்சி ஓடி ஓடி நொந்துவோனான். இப்போது போர்க்களிற்றையே வெட்டி வீழ்த்திவிட்டு வீரனாகத் திகழ்கிறான். முதல்நாள் போரில் இவன் தந்தை மாண்டான். இன்று அம்பு ஒன்று இவன் தலையில் பாய, முன்னே சென்ற தோல்படைமீது இளந்தாடி வீரனாக இருமாந்து கிடக்கிறான்.

  • தோல் = முன்னே செல்லும் படை
  • அணல் = இளந்தாடி
  • தோல் = தோலால் செய்யப்பட்ட மார்புக் கவசம், கேடையம், கேடயம், கேடகம் [3]

குதிரை மறம்

[தொகு]
இவன் சிற்றரசன். இவனது சிற்றூருக்கு மதில்கூட இல்லை. வேலிப்பருத்திக்கொடி படர்ந்திருக்கும் முள்வேலிதான் அவன் மதில். இவனது குதிரைக்குக் கொள் உணவு இல்லை. உளுந்தின் கோதுதான் அதற்குத் தீனி.
இவனது பகையரசனின் குதிரைக்கு நெய்கலந்த உணவு வழங்கப்பட்டது. என்றாலும் அதனை தாற்றுக்கோலால் குத்தித்தான் ஓட்டினர். என்றாலும் அது ஓடவில்லை.

கலம் தொடா மகளிர்

[தொகு]
மகளிர் பூத்திருக்கும் நாட்களில் சமையல் பாத்திரங்களைத் தொடமாட்டார்கள். அத்துடன் முருகனை வழிபடும்போது கோயிலுக்கு வெளியே நின்றுதான் வழிபடுவர்.
கோயிலுக்கு வெளியே நிற்கும் இந்தக் கலந்தொடா மகளிரைப் போல பகைமன்னனின் யானைகள் போர்க்களத்துக்கு வெளியிலேயே நின்றுவிட்டனவாம். - புறநானூறு 299

மேற்கோள்கள்

[தொகு]
  1. கா., கோவிந்தன் (1956). சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - V. பெண்பாற்புலவர்கள் (மறுபதிப்பு) (PDF). திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 76-81.
  2. மது. சா., விமலானந்தம். தமிழ் இலக்கிய வரலாறு. p. 64.
  3. 'தோல் தா; தோல் தா' என்றி; தோலொடு
    துறுகல் மறையினும் உய்குவை போலாய் (புறம் 300)

உசாத்துணைகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்முடியார்&oldid=4121701" இலிருந்து மீள்விக்கப்பட்டது