உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளிவீதியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெள்ளிவீதியார் சங்ககாலப் பெண்புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் 13 பாடல்கள் இவரால் பாடப்பட்டவை.

சங்ககால ஔவையார் இந்த வெள்ளிவீதியாரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிவீதியார் பாடல்கள்

[தொகு]
அகநானூறு 45, 362
குறுந்தொகை 27, 44, 58, 130, 146, 149, 169, 386
நற்றிணை 70, 335, 348

ஔவையார் பாராட்டு

[தொகு]

தலைவன் பொருள்செயப் பிரியப்போவதைத் தோழி தலைவியிடம் சொல்கிறாள். தலைவி தானும் தலைவனுடன் செல்ல விரும்புவதாகக் குறிப்பிடுகிறாள். அப்போது வெள்ளிவீதி போலச் செல்ல விரும்புகிறேன் என்கிறாள். - அகம் 147

வெள்ளி வீதியார் செயல்

[தொகு]

ஔவையார் குறிப்பிலிருந்து வெள்ளிவீதியார் பொருளீட்டச் சென்ற தன் கணவனுடன் தானும் சென்றார் எனத் தெரியவருகிறது.

பாடல் சொல்லும் செய்திகள்

[தொகு]

அகம் 45

[தொகு]
திணை - பாலை

காட்டுவழியில் சென்றார்

உழிஞ்சில் நெற்று ஆடுகளப் பறை போல ஒலிக்கும் கோடையில் அவர் சென்றார்.
நீர் இல்லாத ஆற்றுவழி அது.
ஆள் நடமாட்டம் இல்லாத வழி அது.
உழுவைப்புலி களிற்றைக் கொன்று தின்றுவிட்டுத் துள்ளி விளையாடிக்கொண்டிருக்கும் வழி அது.

பசலை

அவர் சென்ற வழியை எண்ணிப் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன். அதனால் என் மேனியில் பசலை பாய்ந்துவிட்டது, என்கிறாள் தலைவி.

அலர்

குறுக்கைப் பறந்தலைப் போரில் திதியனின் காவல் மரமான புன்னையை அன்னி என்பவன் வெட்டிச் சாய்த்தபோது வயிரியர் யாழிசைத்து இன்னிசை எழுப்பியது போல ஊரெல்லாம் வாயினிக்கப் பேசுகிறது.

ஆதிமந்தி

(ஆதிமந்தியின் காதலன் ஆட்டனத்தி. நீராட்டு விழாவின்போது ஆட்டனத்தியைக் காவிரி என்பவள் காவிரி ஆற்றோடு கொண்டுசென்றாள். ஆதிமந்தி காதலனைத் தேடிக்கொண்டு காவிரியாற்று நெடுகிலும் ஊர் ஊராகச் சென்றாள்) ஆதிமந்தி போலக் காதலனைத் தேடிப் பித்துப் பிடித்து நான் அலையமாட்டேன் - என்கிறாள் தலைவி.

வானவரம்பன்

வானவரம்பன் தாக்கியபோது, ஒரே ஒரு மதிலரணும் உடையும்போது ஊரார் தூங்காமல் கிடந்தது போல நான் உறக்கமின்றிக் கிடக்கிறேன், என்கிறாள் தலைவி.

அகம் 362

[தொகு]
திணை - குறிஞ்சி

யாறு - பாம்பு விடரில் பாய்ந்தது.
வல்லியம் - யானை குத்திய வலியால் கல்லளை(குகை)யில் பதுங்கியது.
வல்லியப் பிணவு - முருக்கம் பூவின் அரும்பு போல் நகம் கொண்டது.

இப்படிப்பட்ட வழியில் என் காதலர் வெறுங்கையுடன் வருகிறார்.
(திங்கள் அவர் வருகையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது) என் சுணங்கணி மார்பிலுள்ள முத்தாரம் போலவும், சிலம்பில் வழியும் அருவி போலவும் திங்கள் தரும் நிலா வெளிச்சம் உள்ளது.
  • சுணங்கு = மகளிர் மேனியில் காதல் ஏக்கத்தால் பாயும் பசுமைநிறம்.

இவற்றையெல்லாம் எண்ணித் தலைவி கவலை கொள்வதாகத் தோழி, சிறைப்புறத் தலைவனுக்குக் கேட்கும்படி சொல்கிறாள்.

குறுந்தொகை 27

[தொகு]
திணை - பாலை

தலைவன் பிரிவைத் தலைவி தாங்கிக்கொள்ளமாட்டாள் எனக் கவலைப்பட்ட தோழிக்குத் தலைவி சொல்கிறாள்.

(நான் தாங்கிக்கொள்வேன்.) என் மேனி அழகு எனக்கும் பயன்படாது, என் தலைவனுக்கும் பயன்படாமல் பசலை தின்றுவிட்டுப் போகட்டும். கன்றுக் குட்டியும் குடிக்காமல், கறக்கும் பாத்திரத்திலும் விழாமல் நல்ல பசுவின் மடியிலுள்ள இனிய பால் நிலத்தில் கொட்டிவிட்டது போல என் அழகு பயனில்லாமல் போகட்டும்.

குறுந்தொகை 44

[தொகு]
திணை - பாலை

காதலனுடன் சென்றுவிட்ட தன் மகளைத் தேடிக்கொண்டு செவிலித்தாய் செல்பவள் சொல்கிறாள்.

  • பரி = எட்டடி

என் கால்கள் நடந்து நடந்து எட்டடி வைக்கும் திறத்தை இழந்துவிட்டன. கண்கள் தேடித் தேடி ஒளி மங்கிவிட்டன. வானத்திலுள்ள மீன்களைக் காட்டிலும் பலரை இந்த உலகில் பார்க்கிறேன். (என் மகளை மட்டும் காண முடியவில்லை)

குறுந்தொகை 58

[தொகு]
திணை - குறிஞ்சி

தலைவன் தலைவியை எண்ணிக் காமத்தால் துடிக்கிறான். பாங்கன் அவனை ஏளனம் செய்கிறான். தலைவன் அவனுக்குத் தன் நிலையை எடுத்துரைக்கிறான்.

காமத்தை நிறுத்தமுடியுமானால் நன்றுதான். முடியவில்லையே! கொளுத்தும் வெயில். கற்பாறைமேல் வெண்ணெய் கட்டி இருக்கிறது. அதற்குக் காவல் காக்கிறான் ஒருவன். அவனுக்குக் கைகள் இரண்டும் இல்லை. அதுமட்டும் அன்று. அவன் ஊமையும்கூட. அவன் வெண்ணெய் உருகுவதைத் தடுக்க முடியுமா? (நான் கை இல்லாத ஊமையன் நிலையில் காம வெண்ணெயைக் காக்க முடியாத நிலையில் இருக்கிறேன்.) - என்கிறான் தலைவன்.

குறுந்தொகை 130

[தொகு]
திணை - பாலை

தலைவன் பிரிவின்கண் தலைவிக்குக் கவலை. தலைவன் இருப்பிடத்துக்கே தூது அனுப்பித் தலைவனைக் கொணர்வேன் கவலைப்படாதே என்று தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.

தலைவன் நிலத்தைத் தோண்டி அதில் புகுந்துகொள்ளவில்லை. வானத்தில் ஏறி எட்டாத நிலையில் இருக்கவில்லை. கடலில் சென்று காற்று அடித்துச் செல்லவும் இல்லை. ஏதோ ஒரு நாட்டில் ஏதோ ஓர் ஊரில் இருக்கிறார். வீடு வீடாகத் தேடினால் அகப்பட்டுக்கொள்வார். கொண்டுவந்துவிடலாம் - என்கிறாள் தோழி.

குறுந்தொகை 146

[தொகு]
திணை - குறிஞ்சி

தலைமகன் தன் பெற்றோருடன் வந்து தலைமகளைப் பெண் கேட்கிறான். தலைமகள் தன் பெற்றோர் பெண் தர மறுத்துவிடுவார்களோ என்று கவலைப்படுகிறாள். தோழி அவளைத் தேற்றுகிறாள். பெண் தர மறுத்தால் ஊர்மன்றம் இருக்கிறது, (முறையிட்டுக்கொள்ளலாம்) என்கிறாள்.

முதியோர் மன்றம்

[தொகு]

வாழ்க்கையில் பிரிந்தோரைக் கூட்டிவைப்பதற்கென்றே முதியவர்கள் இருந்தனர். அவர்கள் கையில் தண்டூன்றி நடப்பவர்கள். வெள்ளைமுடியும் சிதவல் தலையும் உடையவர்கள்.

  • சிதவல் = கறையான், கறையான் தின்றது பொன்ற வழுக்கைத் தலை(-ஆகுபெயர்)

குறுந்தொகை 149

[தொகு]
திணை - பாலை

அந்தோ! என்னிடமுள்ள காமம் அளிது(இரக்கம் கொள்ளத் தக்கது). அருவித் துளிகள் படும்படி பூத்திருக்கும் மலர் தாங்கும் வரையில்தான் தாங்கும். வெள்ளம் மிகுந்து வந்தால் அடித்துச் செல்லப்படும். அதுபோல என் நாணமும் தாங்கும் வரையில்தான் தாங்கும். காமவெள்ளம் மிகுந்து வந்தால் தன் கைந்நில்லாது. வீழ்ந்துவிடும். - தலைவி கூற்று.

குறுந்தொகை 169

[தொகு]
திணை - மருதம்

தலைவியிடம் தலைவனின் பரத்தைமையைத் பாணன் மறைத்துப் பேசுகிறான். பொய் சொன்ன வாய்க்குத் தலைவி சாபம் இடுகிறாள்.

பாறையை (மண் எனக் கருதிக்) குத்திய யானையின் தந்தம் போலப் பல் உடையட்டும்!

குறுந்தொகை 386

[தொகு]
நெய்தல் திணை

'வாலிழை மகளிர்' (=தாலி அணிந்த பெண்கள்) மாலை வந்ததும் விழாக் கொண்டாடுவர். அவர் என்னைத் தணந்தில்லாக் காலத்தில் பூக்கள் பூக்கள் கொட்டிக் கிடக்கும் அந்தக் கானல்மணல் பரப்பில் நானும் அவர்களோடு கலந்துகொண்டு விழாக் கொண்டாடி மகிழந்தேன். இப்போது அவர் தணந்துள்ளார். தனிமையில் புலம்பிக்கொண்டிருக்கிறேன். - என்று எண்ணித் தலைவி வாடுகிறாள்.

நற்றிணை 70

[தொகு]
திணை - மருதம்

வெண்மையான மடித்துணி போன்ற சிறகினை உடைய 'சிறு வெள்ளாங் குருகே!' எம் ஊருக்கு வந்து கெளிறு மீனை வயிறார உண்டுவிட்டு அவர் ஊருக்குத் திரும்புகிறாய். அவ்வூரிலிருக்கும் என் மகிழ்நர்க்கு நான் இழை நெகிழ்ந்து துன்புறும் செய்தியை நீ சொல்லவில்லை. உனக்கு என்மீது அன்பில்லையா? அல்லது சொல்ல மறந்துவிட்டாயா? - என்று தலைவி குருகோடு பேசுகிறாள்.

நற்றிணை 335

[தொகு]
நெய்தல் திணை

திங்கள் வானை உழுதுகொண்டிருக்கிறது.
கடல் அலையால் உறங்கவில்லை.
கடலலை (ஓதம்) வந்து வந்து போய்க்கொண்டிருக்கிறது.
தாழை மணத்தைப் பரப்பிக்கொண்டிருக்கிறது.
தாழைமேல் இருக்கும் அன்றில் பறவையும் தன் துணையுடன் நரலுகிறது (ஒலித்துக்கொண்டிருக்கிறது.
என் யாழ் என் விரல் தடவாமல் ஏங்குகிறது.
என் காமம் மிகப் பெரியது. அதைக் களைபவர் இல்லை. (என் செய்வேன்?) - என்று கவலைப்படுகிறாள் தலைவி.

நற்றிணை 348

[தொகு]
நெய்தல் திணை

தன் நெஞ்சம் உலகத்தோடு போராடிக்கொண்டிருக்கிறது என்கிறாள் தலைவி.

நிலவு - கடலைப் பாலாக்கி பரந்திருக்கிறது.
ஊர் - மகிழ்ச்சிப் பெருக்கில் ஆரவாரத்தோடு விழாக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
கான் - பூத்துக் குலுங்கித் தன் துணை வண்டொடு மகிழ்ந்துகொண்டிருக்கிறது.
யான் - அணிகலன்கள் கழலத் தனிமையில் இரவிலும் கண்மூட முடியாமல் இருக்கிறேன்.
அதனால் என் நெஞ்சம் உலகத்தோடு போராடிக்கொண்டிருக்கிறது.



"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளிவீதியார்&oldid=3939718" இலிருந்து மீள்விக்கப்பட்டது