குறுக்கைப் பறந்தலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறுக்கை என்னும் ஊரில் சங்ககாலத்தில் போர் நடந்த இடம் குறுக்கைப் பறந்தலை. போர்க்களத்தைச் சங்கநூல்கள் பறந்தலை என்று குறிப்பிடுகின்றன.

  • சிவன் கோயில்

அட்ட வீரட்டான சிவத்தலங்களில் குறுக்கை வீரட்டானம் என இது குறிப்பிடப்படுகிறது. மயிலாடுதுறைக்கு அண்மையில் உள்ள ஊர்.[1]

இந்தக் குறுக்கை இக்காலத்தில் திருக்குறுக்கைப் பள்ளி என்னும் பெயருடன் விளங்குகிறது. திருஞான சம்பந்தர் திருநன்னிப் பள்ளிச் சிவனடியார்களை வணங்கிய பின் திருக்குறுக்கைச் சிவனை வழிபட வந்தார் எனப் பெரியபுராணம் குறிப்பிடுகிறது.

  • சங்ககாலம்

எவ்வி என்னும் வள்ளல் மிழலை நாட்டை நீடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். மிழலை நாடு இப்போது திருவீழிமிழலை என்று வழங்கப்படுகிறது. இந்த ஊருக்கு அண்மையில் அன்னியூர் என்னும் திருத்தலம் உள்ளது. அன்னி என்னும் அரசன் இதனை ஆண்டுவந்தான். அவன் பெயரால் இந்த ஊரின் பெயர் அமைந்துள்ளது.

இந்த அன்னிக்கும் பொதியமலை நாட்டு மன்னன் திதியன் என்பவனுக்கும் இந்தக் குறுக்கைப் பறந்தலை என்னும் ஊரில் போர் நடந்தது. போரில் அன்னி கொல்லப்பட்டான். எவ்வி அறிவுரையைக் கேளாமல் போரிட்டு அன்னி மாண்டான்.

அன்னி கோசர் குடி மன்னன். அவனது காவல்மரம் புன்னை. இந்தக் காவல்மரம் போரின்போது வெட்டி வீழ்த்தப்பட்டது.

  • புலவர் காரி
இந்தக் குறுக்கையில் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரி என்னும் புலவர் கணக்கதிகாரம் என்னும் நூலைச் செய்துள்ளார்.

காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுக்கைப்_பறந்தலை&oldid=3402892" இலிருந்து மீள்விக்கப்பட்டது