பேயனார்
பேயனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். 105 பாடல்கள் இவர் பாடியனவாகச் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இவற்றில் சில பாடல்களில் பாடியவர் பெயர் பேயார் என உள்ளது. இதனைக் கொண்டு அப்பாடல்களைப் பாடிய புலவர் பெண்பால் புலவர் என எடுத்துக்கொண்டுள்ளனர்.
பேயனார் பாடல்கள்
[தொகு]- அகநானூறு 234
- ஐங்குறுநூறு - முல்லை - 100 பாடல்
- குறுந்தொகை 233, 339, 359, 400
ஐங்குறுநூறு-முல்லைத்திணைப் பாடல்கள்
[தொகு]- ஐங்குறுநூறு - முல்லை
அகம் 234
[தொகு]வினைமுற்றி மீளும் தலைமகன் தன் தேர்ப்பாகனிடம் சொல்கிறான். தேரோட்டும் வலவனை இவர் 'வலம் பெறுநன்' என்று குறிப்பிடுகிறார்.
என்னவளின் பசலைநோய் விடுபடக், காற்றைப்போல் தேரைச் செலுத்துக! எனினும் அன்னம் போல் மேனிமயிர் கொண்ட குதிரையை மெல்லத் தூண்டுக! ஆண்மான் பெண்மானோடு உறவுகொள்வதற்கு இடையூறு இல்லாமல் தேரைச் செலுத்துக! முல்லைப் பூக்களில் தேன் உண்ணும் வண்டுகளுக்கு இடையூறு இல்லாமல் செலுத்துக! ஊர்மக்கள் பேச்சுக்கு ஆளாகியிருக்கும் அவள் துன்பம் தீரட்டும்.
குறுந்தொகை 233
[தொகு]தலைவன் தலைவியின் ஊர்ப்பெருமையைத் தன் தேர்ப்பாகனிடம் சொல்கிறான்.
உவமை
[தொகு]- கவலைக் கிழங்கு ,மாவலிக் கிழங்கு தோண்டிய பள்ளத்தில் கொன்றைப் பூக்கள் உதிர்ந்து கிடப்பது செல்வர் வீட்டுப் பொற்பேழை மூடியைத் திறந்து வைத்திருபது போல் தோற்றமளிக்கும்.
பழக்கம்
[தொகு]- தலைவியின் தந்தை உயர்ந்தோர்க்கு நீருடன் சொரிந்தபின் தாரைவார்த்துக் கொடுத்தபின் உள்ள மிச்சத்தை யாவர்க்கும் வழங்குவான்.
குறந்தொகை 339
[தொகு]தலைவன் பிரிவைப் பொறுத்துக்கொள்ளுமாறு தோழி தலைவியை வற்புறுத்துகிறாள்.
காட்டில் எரியும் அகிலின் நறும்புகையை வாங்கிக்கொண்டு வரும் நாடன் அவன். மேனியில் பசலை பாயாவிட்டால் அவனை முயங்குவதும் இனிதுதான்.
குறுந்தொகை 359
[தொகு]நல்ல நிலா. குறுங்கால் கட்டில். பூப் போன்ற மெத்தை. அவள் புதல்வனுக்குத் தாய். அவள் தன் கணவனின் முதுகைத் தழுவினாள். அவன் தூங்கும் யானை உயிர்ப்பது போலப் பெருமூச்சு விட்டான். தன் பரத்தையை நினைத்தாள்.
குறுந்தொகை 400
[தொகு]தலைவன் தன் தேர்ப்பாகனுக்கு நன்றி சொல்கிறான்.
வலவோய்! இன்றே இல்லம் கொண்டுவந்துவிட்டாய். புதுவழி படைத்துக்கொண்டு தேரோட்டிய உன் மதி நுட்பத்தைப் பாராட்டுகிறேன்.
குறுங்கட்டுரை சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள்